மொழிபெயர்ப்புப் புதுக்கவிதைகள் - முனைவர் இரா. மோகனா

Trending

Breaking News
Loading...
மொழிபெயர்ப்புப் புதுக்கவிதைகள்   - முனைவர்   இரா. மோகனா


                
மொழிபெயர்ப்புப் புதுக்கவிதைகள்


மனித இனத்தை வாழ்வித்த கலைகளில் ஒன்று மொழிபெயர்ப்பு. பிறநாட்டு நல்லறிஞர்  சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்திடல்  வேண்டும் என்பது பாரதியின் கூற்று. அவ்வகையில் பிறமொழியிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள கவிதைகளில் ‘கன்னடக்கவிதைகள்’, சாகித்திய அகாதமி புதுதில்லி, 2002, ‘சச்சிதானந்தன் கவிதைகள்’ தமிழில் சிற்பி, காவ்யா பதிப்பகம்,பெங்களுர் 1998 எனும் இரு நூலினை மூலமாகக் கொண்டு மொழிபெயர்ப்பின் தன்மை ஆராயப்படுகிறது.

நூலறிமுகம் :
இலக்கிய மொழிபெயர்ப்பு  பட்டறையில் வாசிக்கப்பட்ட பன்னிரண்டு கன்னடக்கவிதைகளில் (அப்துல் ரஷீத், சந்திர சேகர கம்பரா, நஸார் அகமது, இராமச்சந்திரசர்மா, பி.ஆர்.லஷ்மணராவ், வைதேகி, எச்.எஸ்.சிவப்பிரகாஷ், ஜி.எஸ்.சிவருத்ரப்பா, சர்வமங்களா, சித்தலிங்கய்யா கவிதைகள், தமிழ் மொழியில் மூத்த கவிஞர்களான சிற்பி, ஞானக்கூத்தன், இன்குலாப், புவியரசு, மா.இராமலிங்கம், எழில் முதல்வன் போன்றோரால் மொழிபெயர்க்கப்பட்டு கன்னடக்கவிதைகள் எனும் தொகுப்பு நூலுள் இடம்பெற்றுள்ளன. சச்சிதானந்தன் எனும் கவிஞரின்  மலையாளக் கவிதைகள் அனைத்தும் சிற்பியால் பெயர்க்கப்பட்டு சச்சிதானந்தன் கவிதைகள் எனும் தொகுப்பு நூலுள் இடம்பெற்றுள்ளன.

                பெண், சமூகம், இயற்கை போன்ற பாடுபொருள்களையும் குறியீடு, படிமம், உவமை போன்ற வெளியீட்டு உத்திகளையும் கொண்டு கவிதைகளின்  அமைப்பு பின்னப்பட்டுள்ளது. ஒரு பக்கம் முதல் மூன்று பக்க வரையிலான நீண்ட கவிதைகளாக எழுதப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கவிதைகளைப் படிக்கின்ற போது மொழிபெயர்ப்புப்  போலன்றி தமிழ்க்கவிதை நடையிலேயே உள்ளன.

 சான்றாக..என்மக்கள் புகுந்த வீட்டிற்குப் பயணம் புறப்படும் மகளுக்கு எனும் கவிதைகளைச் சுட்டலாம். சில கவிதைகள் கரடுமுரடான நடையில் எழுதப்பட்டிருப்பதோடு இருண்மைகளாக உள்ளன. சான்றாக பட்டுப்புழு, கள்ளிச்செடி, என்பவற்றைச் சுட்டலாம். வாசிப்பில் எளிமையும் புரிதலில் சிரமமும் காணப்படுகின்றன. கவிதைகளின் தலைப்பினை நோக்கும் போது மூலநூலாசிரியர்  இட்டதா அல்லது மொழிபெயர்ப்பாளர்  இட்டதா எனும் ஐயம் ஏற்படுகிறது. மூலநூல் மற்றும் ஆசிரியர் பற்றிய செய்திகள் தெளிவாக இடம்பெறாததே இதற்குக் காரணமாகும்.

 கன்னடக்கவிதைகள் எனும் நூலின் முகப்பில் முன்னுரை இடம்பெறவில்லை. சச்சிதானந்தன் கவிதையிலோ முகப்பில் எழுதப்பட்டுள்ள முன்னுரையில் கவிதைக் குறித்த விமர்சனங்கள் இடம்பெற்று கவிதை வரிகளே  சில கவிதைகளின் தலைப்பாகவும் வந்துள்ளன. சான்றாக சந்திரசேகர கம்பிரா எழுதியுள்ள மயிலே மயிலே, அப்துல் ரஷித் எழுதியுள்ள இதனை மறைத்துவை இங்கு எங்கேனும், என்பாட்டுக்கு நான், சர்வமங்களா எழுதியுள்ள அவன்குமரன் போன்றவற்றைக் கூறலாம்.
பாடுபொருள் :
             சமூகம், ஏழை மக்களின் நிலை, புரட்சி, பெண், சமத்துவம், காதல், இயற்கை, புராணம் போன்ற பாடுபொருட்கள் இவ்விரு கவிதை நூல்களிலும் காணப்படுகின்றன. சமூகத்தின் ஓர் அங்கத்தினராகிய இளைஞர்களின்  மெத்தனப்போக்கை காந்தி நனைவுகள் எனும் கவிதை எள்ளி நகையாடுகிறது.
மேன்மை கொழிக்கும் இந்த நேரத்தில்
ஓ! இளைஞனே!
காதை மூடிக் கண்ணை மூடி
நினைவுகொள் காந்தியை
(எந்த காந்தி என்று தெரியாதோ  பைத்தியக்காரா)
வாயை மூடு நினைவுகொள் காந்தியை”
                இதில் இன்றைய சூழலில் இளைஞர்கள் தன் முன்னால் எது நடந்தாலும் கண்டும் காணாதது போல்  இருந்தும், மறுமொழிகூறாமலும், பிறர்  கூறுவதைக் கேட்காமலும் திரிகின்றப்  போக்குச் சுட்டப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களிடமும் அயல்நாட்டாரின்  போக்குப் பெருகி வருகின்றமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இக்கவிதை வரிகளானது  காந்தி சுட்டிய குரங்கு பொம்மைகளுக்கு இன்றைய இளைஞர்களை  ஒப்புமைப்படுத்தியுள்ளது.

                 சமூகத்தில் முதலாளி வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டு நியாயமாகத் தனக்குக் கிடைக்க வேண்டியதையும் இழந்து நிற்கின்ற ஏழைமக்களின் நிலையினை, ‘கண்கவர் ஆடை நெய்தாலும் அம்மணமானவர்  என்மக்கள்’ எனும் கவிதை வரி  தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளது. ஏழைமக்கள் கோழைகளாகவே இருந்துவிடக்கூடாது என்பதை, ‘பல்லாயிரம் நதிகள்’எனும் கவிதை முதலாளி, தொழிலாளி எனும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிக்கும் பொருட்டு புரட்சிகரமாக எழுதப்பட்டுள்ளது.
தங்களை சவுக்காலடித்தவரின்
குரல்வளைகளை நெரித்தனர் ”
என்று சித்தலிங்கயா குறிப்பிட்டிருப்பது  புரட்சியின் வேகத்தைக் காட்டுகிறது. 
                சமூகத்தில் ஆண்வர்க்கத்தினரைப் பொறுத்தமட்டில் பெண் ஓருபோகப் பொருளாகவே கருதப்படுகிறாள் என்பது பொதுவான கருத்து. பெண்பார்வையிலும்  ஓர்  ஆண்பார்வையிலும்  பெண்நோக்கப்படும் விதத்தைச் சில கவிதை வரிகளில்  எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புகுந்த வீட்டிற்குப் போகின்ற மகளுக்குத்தாய், தந்தையர் கூறும் அறிவுரை
 போக்கில் அமைக்கப்பட்டுள்ள  கவிதை,.
இந்த உடல் காலத்தின் கொடை
இதுமுடிவல்ல
அப்பாலும் உலகங்கள் உண்டு
கரை அடையும் வரை
கனவுகளை ஓய்ந்திருக்க விடாதே!
உனக்குத் தெரியும் நிச்சயமாய்
அந்தக் கரை
அப்பால் அடிவானத்திற்கும்
நெடுந்தொலைவிற்கும் அப்பால்…..”

இக்கவிதை வரிகளில் பெண்ணே! உன்னால் முடியும். நீ சாதிக்க வேண்டியது நிறையவுள்ளது. உடல் காலத்தின் கொடை. திருமணம் என்பது வாழ்வின் முடிவல்ல. அதற்கு மேலும் நீ பயணிக்க வேண்டிய பாதைகள் நிறையவுள்ளன. ஆதலால் நீ பயணிக்கும் வெற்றிப் பாதையை ஒருபோதும் நிறுத்திவிடாதே  கனவுகளுக்கும் ஓய்வு கொடுத்துவிடாதே எனும் கருத்து பொதிந்துள்ளது.
                மீண்டும் வருவேன் பெண்ணே” எனும் கவிதை ஆண்பார்வையில் பெண்பற்றிய போக்கினை எடுத்துரைக்கிறது.
உன் வாளைமீன் மார்பில் இளமுலைகளில் துடிக்கும் சுவாசம்
உடலுக்குள் உள்ளுறுப்பில் புல்லரிப்பு
உன் உடல் வெப்பம்; வியப்பு வெம்மையாக
சோக காவியம் ஏதும் தராத கண்ணீர்  இன்பத்தை நாடி
கல்லாள மலையில் முந்திரிச்  சாராயம் உறிஞ்ச வருவேன்”
   ஆண்பார்வையிலும்  பெண் போகப் பொருளாக நோக்கப்படுவதை இவ்வரிகள் தெளிவாக்குகின்றன.
பெரும்பாலான மொழிபெயர்ப்புக்  கவிதைகளில் சூழ்நிலையில் சிக்கி  வேசியான பெண்ணின் அவல நிலை புலம்பல் சுட்டப்படுகிறது. ‘பசுவைப்போல’ எனும் கவிதையின் வரிகளில்  ஆண் இடித்துரைக்கப்படுவதோடு பெண்ணின் அழகும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் சமம் எனும்படியான சமத்துவம் கருத்தினைக்கொண்டு எழுதப்பட்ட கவிதை ‘அவன்குமரன்’ என்பதாகும்.
குமரனின் ஆண்மை எனும் நாணயம்
செலவாணியானது கமலத்தால் தானே”
 இதில் ஆண் எவ்வளவு தான் கர்வத்துடன் இருப்பினும் அவன் ஆண்மை ஒரு பெண்ணாலேயே முழுமை பெறுகிறது என்பது உணரப்பட்டுள்ளது.
நீ என்னைக்   காதலித்திருந்தால்
நான் வான்கோகின் சூரியகாந்தி வயலின்
பொன் மகரந்தங்களின் படுத்துறங்கி
கொகைனின் தவிட்டு நிறமுள்ள கந்தர்வத்தீவில்
நீலக்குருவிகளாய் விழித்தெழுந்திருக்கலாம்
இப்போது நான் மார்க்ரிட்டின்  ஓவியத்திலுள்ள
சூன்யத்துக்கு அழைத்துச் செல்லும் ஏணி மட்டுமே.”
என்பதில் காதலி ஒரு சக்தி என்றும் காதல் ஒரு இயக்கம் என்றும் அது மனிதனை மேன்மைப்படுத்தி உயிர்மைப் பெறச்செய்யும் மன உறவு என்கிறார் சச்சிதானந்தன். வான்கோக் கொகைகன், மார்க்ட்ரின் ஆகிய மேலைநாட்டு ஓவியர்களையும் கவிதையில் இயற்கையை மனிதனோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

என் உடல் துயரங்களின் கூர் அலகு நிறைந்த
ஒரு தென்னை மரமாகட்டும்
இளநீரின்  சிலிப்பூட்டும் மென்சுவையில்
தேங்காய் எண்ணெயின் அடையாளம் காணட்டும்
தன் தாத்தாவை
தன் சொந்த வம்சத்தை”

என்று முடித்திருப்பது மரமே மனிதனாகவும், மனிதன் மரமாகவும் தொடரும் தலைமுறையை அடையாளங் காட்டுகிறது. இயற்கை மீது கேரள மக்கள் கொண்டுள்ள ஈடுபாட்டை இது காட்டுகிறது.  சிலக் கவிதைகளில் புராணச்செய்திகள் காணப்படுகின்றன. சான்றாக ‘கண்ணன் வரவு’ பீமனின் பிரலாபம்’, ‘சடை’ போன்றவற்றைச் சுட்டலாம்.
புல்லாங்குழலை ஏந்திய விரல்களில்
அருச்சுன ரதத்துக் குதிரைக் கடிவாளம்
குழலூதிய குளிருதடுகளில்
பாஞ்ச சன்னிய முழக்கம்”
கண்ணன் வரவு’ எனும் இக்கவிதையில் மகாபாரதப் போர்க்காட்சி இடம்பெற்றுள்ளது.

வெளியீடு :
கவிதையைச் செறிவும் இறுக்கமும் கொண்டதாக அமையச்செய்வது புதுக்கவிதையின் வெளியீட்டு முறையில் பின்பற்றப்படக் கூடிய உத்தி முறையாகும். அலங்காரங்களுக்காகவோ அல்லது ஓசைக்காகவோ தேவையற்ற சொற்களைச் சேர்ப்பது புதுக்கவிதைக்கு மட்டுமில்லாமல் புதுக்கவிதை மொழிபெயர்ப்பிற்கும் பொருந்தாது. இக்கருத்திற்கு வலுசர்க்கும் வகையில் பாலாவின் கருத்தும்அமைந்துள்ளது.

 கருத்துப்புலமை, வெளியீட்டு உத்தி புதுமை இரண்டும் சேர்ந்துதான் இன்றைய கவிதையைப் பெற்றுத் தருகின்றன எனக் கூறுவர்.புதுக்கவிதையாளர்களின் இவ்விரு புதுமைகளையும் மொழிபெயர்ப்பிலும் கொண்டு வருகிற போதுதான் புதுக்கவிதை மொழிபெயர்ப்பு வெற்றி பெற இயலும் எனலாம்’. (கா.சாகுல் ஹமீது, தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு, என்.சி.பி.எச். ,சென்னை,2004)    எதுகை, மோனை, உவமை, இயைபு, கற்பனை, வருணனை, குறியீடு, படிமம், முரண் என்பன போன்ற வெளியீட்டு உத்திகளால் இவ்விரு கவிதை நூல்களும் பின்னப்பட்டுள்ளன. எதுகை, மோனை, உவமை, இயைபு எனும் யாப்பு வடிவங்கள் இருநூல்களிலும் ஆங்காங்குக் காணப்படுகின்றன.

பகலின் கழுத்தை நெரித்து
சூரியன் மீது ஏறி அதன் கதிர்களை ஒடித்து
சூரியத் துண்டுகளை உச்சியில் சுமந்து வந்து
தாக அடுப்பின் நெருப்பில் இட்டாள்.”

விராட்டி தட்டும் பெண்ணும் நிலவும்’ எனும் கவிதையில் இடம்பெற்றுள்ள இவ்வரிகளானது நடக்கவியலாத ஒன்றை கற்பனை நயத்தோடு சுட்டி சென்றுள்ளமையை மேம்போக்காக பார்க்கின்ற போது கற்பனையும் ஆழ்ந்து நோக்கும் போது புரட்சி குறியீடாகவும் தென்படுகிறது. கருத்த முகம் வெள்ளித்தாடி எரியும் கண்கள்” ‘பல்லாயிரம் நதிகள்’ எனும் கவிதையில் இவ்வருணனை அமைந்துள்ளது.
கதிரவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்
அவன் கடமை
அவன் ஒளியேற்ற வில்லையெனில்
அவனை மறந்துவிடு!
அவன் இல்லாவிட்டாலும் கூட
மரம் தெரிந்திருக்க வேண்டும்
காய்த்துப் பழுக்கும் அற்புதத்தை”

 புகுந்த வீட்டிற்குப் பயணம் புறப்படும் மகளுக்கு’ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ள இக்கவிதை வரிகளில் குறியீடு இடம்பெற்றுள்ளது. கதிரவன் என்பது கணவனைக் குறிப்பால் உணர்த்துகிறது. கணவன் தனக்குரிய கடமைகளை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி இருப்பானேயாகில் அவன் தேவையைத் துறக்க வேண்டும். அவன் இல்லாவிட்டாலும் வாழ்வில் தனித்து நின்று உயரும் அற்புதத்தைப் பெண்ணான நீ பெற்றிருக்க வேண்டும் என்னும் அறிவுரை குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.

வாசல் முற்றத்தில் தங்கை அலிமா உள்ளங்கைவிரித்து
மருதாணியில் வரைந்த சிவப்புக் குருவியைக் காட்ட
காதெல்லாம் வெள்ளியணி வரிசை
தலைமூடும் தாவணியில் பளிச்சிடும் ஜிகினா
முற்றத்துச் சகதியில் தாவிக் குதிக்கையில்
வெண்மல்லிகைக் கொத்து முடியில் குலுங்க”
ஹஜ்ஜீப்பெருநாள் நினைவு’ எனும் கவிதையில் இடம்பெற்றுள்ள இக்கவிதை வரிகளில் காட்சிப்படிமம் இடம்பெற்றுள்ளது.
என்காலில் உள்ள புண்ணைக்
கடிக்க வந்தால்
மீனே
கையில் ஏந்தி உன்னை முத்தமிடுவேன்”
 என்பாட்டுக்கு நான்’ எனும் கவிதையில் இடம்பெற்றுள்ள இவ்வரிகளில்  பொருள்
முரண் வந்துள்ளது. காதல் உள்ளுறையாகச் சுட்டப்பட்டுள்ளது.
                தமிழ்ப் புதுக்கவிதைகளுக்கும் மொழிபெயர்ப்பு புதுக்கவிதைகளுக்கும் இடையில் நடையில் சிறிதளவு வேறுபாடு காணப்படுகின்றது. மொழிபெயர்ப்புக் கவிதைகளில் மூலநூல் சொற்கள் ஒரு சில இடங்களில் காணப்படுகின்றன. அவற்றிற்கானப்  பொருளினை மொழிபெயர்ப்பாசிரியர்  குறியிட்டு விளக்கியுள்ளார். தமிழ்ப்புதுக்கவிதைகளில் இத்தகைய நிலை இல்லை. பெரும்பாலும் தமிழ்ப்புதுக்கவிதைகளும் மொழிபெயர்ப்பு புதுக்கவிதைகளும் வடிவில் ஒத்திருக்கின்றன.

முனைவர்   இரா. மோகனா
 உதவிப்பேராசிரியர்,
ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர்  கல்லூரி, சென்னை-40.

0 Response to "மொழிபெயர்ப்புப் புதுக்கவிதைகள் - முனைவர் இரா. மோகனா"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel