14.06.2021 - திங்கட்கிழமை - முக்கியச் செய்திகள்

Trending

Breaking News
Loading...
14.06.2021 - திங்கட்கிழமை -  முக்கியச் செய்திகள்

 


பிடிபி தலைவரின் பயங்கரவாத தொடா்பு: கூகுள் நிறுவனத்திடம் மின்னஞ்சல்களை கோரும் காவல்துறை*

 

பிடிபி கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெஹுபூபா முஃப்திக்கு நெருக்கமானவருமான வஹீத்-உா்-ரஹ்மான் பாராவின் மின்னஞ்சல் தகவல்களை அளிக்குமாறு கூகுள் நிறுவனத்திடமும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடமும் ஜம்மு-காஷ்மீா் காவல் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

 

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததாகக் கூறி ரஹ்மான் பாராவை தேசியப் புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கைது செய்தது. அவருக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜனவரியில் ஜாமீன் வழங்கியது.

 

இருப்பினும் முக்கிய அரசியல் தலைவா்கள், பிரிவினைவாதிகள் இடையே ரகசியத் தொடா்பில் இருந்ததாக அவரை காஷ்மீா் குற்றப் புலனாய்வு அமைப்பு(சிஐகே) கைது செய்தது. அப்போதிருந்து அவா் சிறையில் இருக்கிறாா்.

 

அவருக்கு எதிராக சிஐகே அமைப்பு, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் 19 பக்க அளவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

 

ரஹ்மான் பாரா தனது அரசியல் ஆதாயத்துக்காக, பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் அரசியல் எதிரிகளைக் குறிவைத்து தாக்குவது, ஆங்காங்கே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவது என்ற சதித் திட்டத்துடன் செயல்பட்டு வந்துள்ளாா். அவா் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன.

 

ரஹ்மான் பாரா, பயங்கரவாத அமைப்புகளுக்கு மின்னஞ்சல் வழியாக தகவல்களை பரிமாறியுள்ளாா். எனவே அவா் பயன்படுத்திய 3 மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து பரிமாறப்பட்ட தகவல்களை சட்ட விதிகளுக்கு உள்பட்டு அளிக்குமாறு கூகுள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் அவா் மீதான குற்றச்சாட்டுகளை மெஹபூபா முஃப்தி மறுத்துள்ளாா். தவறான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளுமாறு அவா் சித்ரவதை செய்யப்படுகிறாா் என்றும் கூறினாா்.

 

 *விண்வெளியில் 6 ஆண்டுகள் சேமிக்கப்பட்ட எலிகள் விந்தணு மூலம் 168 குட்டிகள் பிறந்தன: மரபணு மாற்றமின்றி எல்லாமே சுகம்*

 

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் 6 ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட எலிகளின் விந்தணுக்கள் மூலம் 168 குட்டிகள் பிறந்துள்ளன என்று ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் உள்ள யாமானாஷி பல்கலைக் கழத்தில் உள்ள முதன்மை ஆசிரியர் டெருஹிகோ வாகயாமா மற்றும் அவரது ஆராய்ச்சியாளர்கள் குழு, கடந்த 2013ம் ஆண்டு 3 பெட்டிகளில் தலா 48 குப்பிகளில் எலிகளின் உறைந்த உலர்ந்த விந்தணுக்களை நீண்ட கால ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியது. விண்வெளியில் உள்ள கதிர்வீச்சால் உயிரணுக்களில் மரபணு மாற்றம் ஏற்படுமா?

 

அதன்மூலம், உருவாகும் புதிய உயிரினங்களில் பாதிப்புகள், பிறழ்வுகள் ஏற்படுமா என்பதை கண்டறிய இந்த சோதனை செய்யப்பட்டது. இந்த ஒவ்வொரு தொகுதிகளாக பூமிக்குத் திரும்பின. முதலாவது ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதியானது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு திரும்பின. விந்தணு மீண்டும் பூமிக்கு வந்த பின் நீரிழப்பு செய்யப்பட்டதன் விளைவாக 168 குட்டிகள் பிறந்துள்ளன. இவை எதுவுமே விண்வௌியில் நிலவும் அதிகப்பட்ச கதிர்வீச்சால் பாதிக்கப்படவில்லை. சாதாரணமாக பூமியில் பிறக்கும் எலிகளை போன்றே உள்ளன. உருவத்திலும், அதன் அளவிலும் கூட மாற்றமில்லை.

 

இது குறித்து டெருஹிகோ வாகயாமா கூறுகையில், ‘‘விண்வெளியில் சோதனை செய்யப்பட்ட விந்தணுக்களில் இருந்து பிறந்துள்ள எலிகளுக்கும், பூமியில் உள்ள எலிகளுக்கும் சிறிய வித்தியாசம் கூட இல்லை. எல்லா குட்டிகளும் சாதாரண தோற்றத்தைக் கொண்டுள்ளன. உலர்ந்த விந்தணுக்களை விண்வெளி சுற்றுப்பாதையில் 200 ஆண்டுகள் வரை சேமிக்க முடியும். விண்வெளி யுகத்திற்கு மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு முன், உறைந்த பெண் சினை முட்டைகள் மற்றும் கருவுற்ற கருக்கள் ஆகியவற்ளை விண்வெளிக்கு எடுத்துச் சென்று கதிர்வீச்சின் விளைவுகளின் சோதனைக்கு உட்படுத்த வேண்டியது இன்றியமையாதது,’’ என்றார்.

 

 *கள்ளச்சாராயத்தை தடுக்கவே மதுக்கடைகள் திறப்பு: சிதம்பரம் சூசகம்*

 

சிங்கம்புணரி:தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கவே மதுக்கடைகள் திறக்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

சிங்கம்புணரியில் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பின் அவர் தெரிவித்ததாவது, தி.மு.க., அரசு கடந்த ஒரு மாத காலத்தில் சுறுசுறுப்பாக, நிதானமாக செயல்படுகிறது. அனைத்து கட்சிகளையும், அறிஞர்களையும் கலந்து முடிவெடுத்தால் அனைத்து துறைகளிலும் வேகமான, நிலையான வளர்ச்சி கிடைக்கும். தி.மு.க., அரசு இந்த பாதையை பின்பற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள். பின்பற்றுகிறார்கள் என்பதும் மகிழ்ச்சி.

 

தற்போது மதுக்கடைகளை திறக்காமல் வேறு என்ன செய்யமுடியும். மதுக்கடைகள் வேண்டாம், மது விலக்கு வேண்டும் என்பது எங்கள் கொள்கை. ஆனால் கள்ளச்சாராயம் பெருகாது என்று நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) உத்தரவாதம் கொடுத்தால் கடையை திறக்கக்கூடாது என்று நான் சொல்லத் தயார். கள்ளச்சாராயம் இருக்காது என்றால் கடையை மூடச் சொல்லலாம் அக்கடைகளைத் திறப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, ஆனால் அரசால் என்ன செய்ய முடியும், என்றார்.

 

 *இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது நியூசி.*

 

பர்மிங்காம்: இங்கிலாந்து அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ரன்னும், நியூசிலாந்து 388 ரன்னும் குவித்தன. 85 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்திருந்தது. ஸ்டோன் 15 ரன், ஆண்டர்சன் (0) இருவரும் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டோன் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் வேகத்தில் விக்கெட் கீப்பர் பிளண்டெல் வசம் பிடிபட, இங்கிலாந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நியூசி. பந்துவீச்சில் மேட் ஹென்றி, வேக்னர் தலா 3, போல்ட், அஜாஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

இதைத் தொடர்ந்து, 38 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசி. 10.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன் எடுத்து வென்றது. கான்வே 3, யங் 8 ரன்னில் வெளியேறினர். கேப்டன் டாம் லாதம் 23 ரன், டெய்லர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேட் ஹென்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அறிமுக தொடக்க வீரர் கான்வே தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். வரும் 18ம் தேதி இந்தியாவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தொடங்க உள்ள நிலையில், இந்த வெற்றியால் நியூசிலாந்து வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

 *பிரெஞ்ச் ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்*

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5வது இடத்தில் உள்ள கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ் மோதினர்.

 

நான்கு மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஜோகோவிச் 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக கோப்பை வென்றார். இதற்கு முன், 2016ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தவிர இது, ஜோகோவிச் கைப்பற்றிய 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

 

 *2024 தேர்தலிலும் பிரதமர் மோடியே மீண்டும் வெற்றி பெறுவார் - தேவேந்திர பட்னாவிஸ் உறுதி*

 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடந்தது.

 

இந்த சந்திப்பு நடந்த மறுநாள், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் பா.ஜ.க.வுக்கு எதிராக பெரிய கூட்டணி தேவைப்படுகிறது என்றார்.

 

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் என்ன திட்டம் போட்டாலும் 2024 தேர்தலிலும் பிரதமர் மோடி தான் வெற்றி பெறுவார் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

 

யார், யாரை சந்திக்க வேண்டும் என எந்த தடைகளும் கிடையாது. எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் அவர்களுக்கு ஏற்ற வகையில் வியூகங்களை அமைக்கலாம். நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

 

யார் என்ன வியூகங்களை வகுத்தாலும், இன்று மோடி உள்ளார். அவர் தான் 2024-லிலும் இருப்பார். பா.ஜ.க., பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வியூகங்கள் அமைத்தாலும் 2024-ல் பிரதமர் மோடியின் கீழ் தான் புதிய அரசு அமையும் என தெரிவித்தார்.

 

 *'சந்தர்ப்பவாதத்தின் உச்சம்.. மக்கள் நலனை சிந்திக்காமல் டாஸ்மாக் கடைகளை திறக்கமுடிவு..' சீமான் கண்டம்*

 

சென்னை: கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை உச்சத்திலிருக்கும் சூழலில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்து மக்கள் உயிரோடு விளையாடுவது என ஏன் கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திவிட்டு, இப்போது மதுபானக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டிருப்பது சந்தர்ப்பவாதத்தின் உச்சமாகும் என்றும் விமர்சித்துள்ளார்,

 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்திலிருந்ததால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

 

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவலால் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு, பல நூற்றுக்கணக்கான உயிர்களைத் தினந்தோறும் பலி கொடுத்துக் கொண்டிருக்கிற பேரிடர் மிகுந்த தற்காலச்சூழலில் மதுபானக் கடைகளைத் திறக்க முடிவெடுத்திருக்கும் தமிழ்நாடு அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது. நோய்த்தொற்றுப் பரவல் கட்டுக்குள் வராத இக்கட்டான நிலையில் மக்களின் நலனைத் துளியும் சிந்திக்காது அவசரகதியில் மதுபானக்கடைகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

 

கொரோனா நோய்த்தொற்றுப்பரவல் தடுப்புப் பணியில் இரவு பகல் பாராது ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான முன்களப் பணியாளர்களின் அரும் பணியினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தற்போது நோய்த்தொற்றுப்பரவல் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் பழையபடி பெருந்தொற்றுச் சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசே வாசல் திறந்துவிடுவதேன்? இத்தகைய செயல், கொரோனா எனும் கொடுந்தொற்றுக்கு எதிரான போரில் இவ்வளவு நாளாகத் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருந்த முன்களப் பணியாளர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தி, அவர்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் அவர்களது பணி மீதே ஒருவித சலிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசு அறியாமல் போனது ஏனோ?

 

கடந்த ஆட்சியில் நிகழ்ந்த முதலாம் அலைப் பரவலின் போது மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து, குடும்பத்தினரோடும், கூட்டணிக் கட்சியினரோடும் கறுப்புடைத் தரித்து வீட்டுவாசலில் நின்று முழக்கமிட்டுப் போராடிய ஸ்டாலின், இன்றைக்குத் தனது தலைமையிலான ஆட்சியில் மதுபானக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டிருப்பது சந்தர்ப்பவாதத்தின் உச்சமாகும். நோய்த்தொற்றுக் குறைந்துவிட்டதாகக் கூறி மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதை நியாயப்படுத்த முற்படும் முதல்வர் ஸ்டாலின் மூன்றாம் அலைப் பரவலுக்கு வாய்ப்பிருக்கிறதெனும் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாததேன்? கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் உயிரைவிடவும் மதுபானக் கடைகளினால் அரசுக்கு வரும் வருமானம்தான் பெரிதா என்று எதிர்க்கட்சித் தலைவராக அன்று நீங்கள் எழுப்பிய கேள்வி இன்று உங்கள் மனச்சான்றை உலுக்கவில்லையா?

 

ஒரு நாளைக்கு ஏறத்தாழ 500 பேர் நோய்த் தொற்றுக்குள்ளாகும்போது மதுபானக்கடைகளைத் திறக்கக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு, இன்றைக்கு அபரிமிதமாக 15,000 பேர் வரை நாளொன்றுக்குப் பாதிக்கப்படும்போது மதுபானக்கடைகளைத் திறக்க‌ வழிவகைச் செய்வது மக்களின் உயிரோடு விளையாடும் பேராபத்தில்லையா? நோய்த்தொற்றுப் பரவல் அதிகமிருக்கும் 11 மாவட்டங்களில் மதுபானக்கடையைத் திறக்க அனுமதி மறுத்துவிட்டு, மற்ற மாவட்டங்களில் அனுமதிப்பதனால் மதுவுக்காக ஒரு மாவட்டத்திலிருந்து பிற மாவட்டத்திற்கு, குடிநோயாளிகள் பயணப்பட்டால், நோய்த்தொற்று அதிகரிக்காதா? மதுபானக்கடையை அனுமதித்தால் தனிநபர் இடைவெளி, முகக்கவசம் போன்ற நெறிமுறைகள் தகர்க்கப்பட்டு, தொற்றுப் பரவல் இன்னும் பன்மடங்கு வேகமாகப் பெருகும் பேராபத்து ஏற்படும் என்பதை மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள முதல்வர் உணரத்தவறியதேன்?

 

தேநீர் கடைகளையும், பழச்சாறு கடைகளையும் திறக்கவே தயக்கம் காட்டிய அரசு, அத்தியாவசியக் கடைகளின் இயங்குதல் நேரம்கூடக் குறைக்கப்பட்டுள்ள தற்காலச்சூழலில், எவ்வித நெருடலோ, குற்றவுணர்வோ இன்றி மதுபானக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டிருப்பது மிக மோசமான நிர்வாகச் செயல்பாடாகும்.

 

அதிகாரத்தில் இல்லாதபோது மதுபானக்கடைகளையும், அதன் வழியே வரும் வருவாயையும் கடுமையாக விமர்சித்து, எதிர்த்து அரசியல் செய்துவிட்டு, அதிகாரத்திற்கு வந்தவுடன் அதிமுக அரசை அடியொற்றி அதே வழியில் மதுக்கொள்கையைப் பின்பற்றுவது மோசடித்தனமில்லையா?

 

நோய்த்தொற்று எவரது உயிரையும் பறிக்கலாமெனும் கொடுஞ்சூழல் நிலவுகையில் அதனைப் பற்றிக் கவலைப்படாது மதுபானக்கடைகளை வருமானத்திற்காகத் திறந்து வைப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. 'மதுவை விற்று வருமானம் ஈட்டித்தான் ஆட்சியைத் தொடர வேண்டுமானால் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டுவேன். மதுபானக்கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவது குஷ்டரோகிகளின் கைலிருக்கும் தேனை நக்கிச் சுவைப்பதற்கு ஒப்பாகும். மது விலக்குக்காக இந்தியா முழுவதும் பரப்புரை செய்யவும் தயார் ' என மதுப்பானக் கடைகளுக்கெதிராக முழக்கமிட்ட அறிஞர் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டு அவரது நிலைப்பாட்டுக்கு எதிராக மதுபானக்கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவது அண்ணாவை அவமதிப்பதற்கு ஒப்பாகும்.

 

ஊரடங்கால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது, வேலைவாய்ப்பும், தொழிலும் முடங்கியுள்ள நிலையில், தொற்றுப் பரவல் குறைந்தால் குறைந்தப்பட்சத் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்படும், இயல்பு வாழ்க்கையைத் தொடரமுடியாவிட்டாலும் அன்றாடப் பிழைப்பையாவது நகர்த்தமுடியும் என்ற ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களின் சிறு நம்பிக்கையையும் மதுபானக்கடைகளை அவசரகதியில் திறப்பதன் மூலம் முற்றாகச் சிதைத்துள்ளது திமுக அரசு.

 

ஆகவே, நாடெங்கிலும் மதுபானக்கடைகளின் திறப்பிற்கு எதிராக எழுந்திருக்கும் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொண்டு, மக்களின் நலனை மனதில் வைத்து கடந்த காலப்படிப்பினைகளை முன்மாதிரியாகக் கொண்டு, மதுபானக்கடைகள் திறக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 *வெள்ளி வென்றார் ஷங்கர் * உயரம் தாண்டுதலில்...*

 

ஈகுனே: ஒலிம்பிக் தகுதி உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஷங்கர் வெள்ளி வென்றார்.

 

அமெரிக்காவில் ஈகுனே நகரில் ஒலிம்பிக் தகுதி என்.சி.ஏ.ஏ., தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் கன்சாஸ் பல்கலை., அணிக்காக களமிறங்கினார் இந்தியாவின் தேஜஸ்வினி ஷங்கர் 22, இரண்டாவது முயற்சியில் 2.23 மீ., தாண்டி, இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர்.

 

தற்போது உலக 'சி' தர வரிசையில் 55வது இடத்தில் உள்ளார் ஷங்கர். அடுத்து இந்தியாவின் பாட்டியாலாவில் ஜூன் 25 ல் துவங்கவுள்ள தடகள போட்டியில் ஷங்கர் 2.33 மீ., உயரம் தாண்டினால், டோக்கியோ ஒலிம்பிக் செல்லலாம்.

 

 *போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் செயல்படும் - போலீஸ் கமிஷனர் பேட்டி*

 

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னையில் திறக்கப்படுகிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் போது போலீஸ் உதவியை எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து, நேற்று மாலை டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பெரியமேடு, எழும்பூர், ஐஸ்அவுஸ் ஆகிய இடங்களில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினார்.

 

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:-

 

டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மது வாங்க வருபவர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும். முக முகவசம் அணியாமல் வருபவர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட மாட்டாது. மதுக்கடைகள் முன்பும் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீசார் உதவி செய்வார்கள். கடைகள் முன்பு தடுப்பு வேலிகள் போடப்படும். போதிய இடைவெளி விட்டு வட்டம் போடப்படும். அந்த வட்டத்திற்குள் நின்று வரிசையாக சென்றுதான் மது வாங்க முடியும். கூட்டம் அதிகமாக இருந்தால் சாமியானா பந்தல் போடப்பட்டு அதில் மதுவாங்க வருபவர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்.

 

கூட்டம் சேர்க்காமல் உரிய விதிமுறைகளுக்குட்பட்டு மதுபாட்டில்களை வாடிக்கையாளர்கள் வாங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது-

 

டாஸ்மாக் கடைக்குள் இருக்கும் ஊழியர்கள் முககவசம் அணிந்திருப்பார்கள். கைகளில் உறையும் போட்டிருப்பார்கள். வாடிக்கையாளர்களை காத்திருக்க விடாமல் விரைவாக விற்னை செய்ய ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 2 ஊழியர்கள் கடைக்கு வெளியில் நின்று கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசாருக்கு உதவி செய்வார்கள்.

 

தடை உள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்குள் சென்று மதுபாட்டில் வாங்க கட்டுப்பாடு ஏதும் இல்லை. இதை போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்து வீடுகளுக்கு சென்று மதுபாட்டில்கள் வினியோகிப்பது குறித்து அரசுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 *ஜி7 நாடுகள் 1 பி. தடுப்பூசி நன்கொடை*

 

கார்­பிஸ் பே, இங்­கி­லாந்து: அடுத்த ஆண்­டுக்­குள் ஒரு பில்­லி­யன் கொவிட்-19 தடுப்­பூ­சி­களை வழங்க ஜி7 நாடு­கள் தீர்­மா­னித்து உள்­ளன. வரும் மாதங்­களில் இந்­தப் பங்­­ளிப்பை மேலும் உயர்த்த தனி­யார் துறை, ஜி20 நாடு­கள், இதர நாடு­கள் போன்­­வற்­றோடு இணைந்து பணி­யாற்­­வும் அவை முடிவு செய்­துள்­ளன. ஜி7 மாநாட்­டில் கிட்­டத்­தட்ட இறு­தி­செய்­யப்­பட்ட வரைவு அறிக்­கையை மேற்­கோள் காட்டி ராய்ட்­டர்ஸ் இச்­செய்­தியை வெளி­யிட்­டுள்­ளது.

 

இந்த அறிக்­கைையை இறுதி செய்ய சனிக்­கி­ழமை இர­வில் பேரா­ளர்­கள் பணி­யாற்­றி­­தாக இருவேறு தக­வல்­கள் தெரி­வித்­தன. இருப்­பி­னும் அறிக்­கை­யின் ஒரு சில பகு­தி­களில் மாற்­றங்­கள் செய்­யப்­­­லாம் என்று அவர்­கள் கூறி­யி­ருந்­­னர். உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட தடுப்­பூ­சி­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்டு நன்­கொ­டை­­ளாக வழங்­கப்­படும் விவ­ரத்தை அந்த அறிக்கை உள்­­டக்கி உள்­ளது. குறைந்­­பட்­சம் 700 மில்­லி­யன் முளை போடப்­­டக்­

 

கூ­டிய தடுப்­பூ­சி­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளன அல்­லது ெசய்­யப்­பட உள்­ளன. இவற்­றில் குறைந்­தது 50% ஜி7 அமைப்­பில் பங்­கு­பெ­றாத நாடு­­ளுக்கு உரி­யவை என்­றது வரைவு அறிக்கை. வளர்ந்த பொரு­ளி­­லைக் கொண்ட உல­கின் ஏழு நாடு­கள் ஒன்று சேர்ந்து ஜி7 என்­னும் அமைப்­பில் செயல்­­டு­கின்­றன. அமெ­ரிக்கா, பிரிட்­டன், பிரான்ஸ், ஜெர்­மனி, இத்­தாலி, கனடா, ஜப்­பான் ஆகிய நாடு­கள் அதில் அங்­கம் வகிக்­கின்­றன. ஜி7 நாடு­கள் ஆண்­டு­தோ­றும் ஒன்­று­கூடி மாநாடு நடத்­து­வது வழக்­கம். இவ்­வாண்டு மாநாடு வெள்­ளிக்கிழமை தென்­மேற்கு லண்­­னில் தொடங்­கி­யது.

 

கொரோனா தொற்­றுப் பர­வல் தொடங்­கி­­தற்­குப் பிறகு உல­கின் பெரிய பொரு­ளி­யல் நாடு­­ளின் தலை­வர்­கள் நேருக்கு நேர் சந்­திந்­தி­ருப்­பது இதுவே முதல் முறை.

 

மாநாட்­டின் இரண்­டாம் நாளில், உள்­கட்­­மைப்­பு­களை விரி­வு­­டுத்த வள­ரும் நாடு­­ளுக்கு உத­வு­வது என்று அந்­நா­டு­கள் தீர்­மா­னித்­தன. இந்த முடிவு சீனா­வின் பல டிரில்­லி­யன் டாலர் மதிப்­புள்ள, ‘பெல்ட் அண்ட் ரோடு திட்­டத்­திற்கு சவால் விடு­­து­போல அமைந்­துள்­ளது.

 

மேலும், வளர்ந்து வரும் சீனா­வின் செல்­வாக்­கைச் சமா­ளிக்­கும் நோக்­கில் தென்­மேற்கு லண்­­னில் ஒன்­று­கூ­டிய ஜி7 நாடு­­ளின் தலை­­ர்­கள் முடி­வு­களை எடுத்து வரு­கின்­­னர். மாநாட்­டுக்­குத் தலைமை வகித்த கன­டிய பிர­­மர் ஜஸ்­டின் டுருடே, சீனா­வால் உரு­வாகி இருக்­கும் சவால்­­ளைச் சமா­ளிக்க உறுப்பு நாடு­­ளின் ஒருங்­கி­ணைந்த அணு­கு­மு­றைக்கு அழைப்பு விடுத்­தார். பிரிட்­டிஷ் பிர­­மர் ஜான்­சன், “உலகை மீண்­டும் சிறப்­பாக வழி­­டத்­து­வோம்,” என்­றார்.

 

 *கொரோனா பாதிப்பு; குடும்பம் கைவிட்ட உடல்களுக்கு தன்னார்வல குழு இறுதி சடங்கு*

 

தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் (ஞாயிற்று கிழமை நிலவரப்படி) 1,280 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. 2,261 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதேபோன்று 15 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.

 

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,03,369 ஆக உயர்ந்து உள்ளது. 5.78 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 21,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,484 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தினர் கண்டு கொள்ளாமல் கைவிடப்படும் சூழலும் காணப்படுகிறது. போதிய வசதியின்மை, தகனம் செய்யவோ அல்லது அடக்கம் செய்யவோ இடம் கிடைக்காத நிலை ஆகியவற்றால் உறவினர்கள் இந்த உடல்களை விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

 

இதுபோன்ற உடல்களுக்கு தன்னார்வலர்கள் குழு ஒன்று தங்களது சொந்த செலவில் இறுதி சடங்குகளை செய்து அனைவரையும் கவனம் ஈர்க்க செய்துள்ளது.

 

இதுபற்றி அந்த அமைப்பின் குழு உறுப்பினர் ஜாகித் கூறும்பொழுது, கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடல்களுக்கு கண்ணியமுடன்

 

இறுதி சடங்குகளை நடத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

 

குடும்பத்தினரால் கைவிடப்படும் உடல்களை நாங்கள் எடுத்து வந்து இறுதி சடங்குகளை மேற்கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 *அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது வியட்நாம் அரசு*

 

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் முழுவதும் பரவியது.

 

தற்போது உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியுள்ளது.

 

இந்த கொடிய வைரசை ஒழிப்பதற்கு தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்த உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கின. தற்போது உலக ஆராய்ச்சியாளர்கள் போராடி, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர்.

 

இதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

 

இந்நிலையில், வியட்நாமில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 

 *இந்தியாவில் இதுவரை 25.31 கோடி தடுப்பூசிகள் பயன்பாடு: 20 கோடி பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டது*

 

இந்தியாவில் இதுவரை 25.31 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் 20 கோடி பேருக்குமுதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம்தேதி கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

 

கடந்த மார்ச் மாதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஏப்ரலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிபோடும் பணி தொடங்கியது. கடந்த மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

கடந்த 24 மணி நேரத்தில் 34 லட்சத்து 84,239 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.இதுவரை 25 கோடியே 31 லட்சத்து95,048 தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.

 

இதில் 20.46 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

சுகாதார பணியாளர்களில் ஒரு கோடி பேருக்கு முதல் தவணையும் 69 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

 

முன்கள பணியாளர்களில் 1.67 கோடி பேருக்கு முதல் தவணையும், 88 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது.

 

60 வயதுக்கு மேற்பட்டோரில் 6.24 கோடி பேருக்கு முதல் தவணை, 1.98 கோடிபேருக்கு 2-ம் தவணை, 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டோரில் 7.53 கோடி பேருக்கு முதல் தவணை, 1.19 கோடி பேருக்கு 2-ம் தவணை, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோரில் 4 கோடி பேருக்கு முதல் தவணை, 6.74 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டுஉள்ளது.

 

மகாராஷ்டிராவில் இதுவரை 2 கோடி பேருக்கு முதல் தவணையும், 51 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

 

உத்தர பிரதேசத்தில் இதுவரை 1.91 கோடி பேருக்கு முதல் தவணையும் 37 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

 

அதிக தடுப்பூசிகளை பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்கம், கர்நாடகா ஆகியவை அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.

 

மாநிலங்களுக்கு தடுப்பூசி

 

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 26 கோடியே 64 லட்சத்து 84,350 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மாநில அரசுகளின் கையிருப்பில் சுமார் 1 கோடியே53 லட்சத்து 79,233 தடுப்பூசிகள்உள்ளன.

 

அடுத்த சில நாட்களில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 4 லட்சத்து 48,760 தடுப்பூசிகள் வழங்கப்படஉள்ளன. இவ்வாறு சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 *சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்*

 

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து, அரசு நிர்வாகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் 24 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

 

இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:

 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீடுகள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் ஜே.விஜயராணி சென்னை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

பொதுத்துறை இணை செயலாளர் ஏ.ஆர்.ராகுல் நாத் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

 

தமிழ்நாடு சிமெண்ட் கழகம் மேலாண்மை இயக்குனர் எம்.ஆர்த்தி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

 

பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஸ் திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

 

டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குனர் டி.மோகன் விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

 

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல இணை கமிஷனர் (மத்தியம்) பி.என்.ஸ்ரீதர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

 

கோவை மாநகராட்சி கமிஷனர் பி.குமாரவேல் பாண்டியன் வேலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

 

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் பி.முருகேஷ் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஆனார்.

 

ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனர் அமர் குஷாவா திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

 

விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) ஷ்ரேயா சிங் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆனார்.

 

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனர் கவிதா ராமு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

 

தமிழ்நாடு குடிசைகள் மாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் எஸ்.கோபால சுந்தரராஜ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

 

வேளாண்மை சந்தையியல் மற்றும் வேளாண் தொழில்கள் இயக்குனர் கே.வி.முரளிதரன் தேனி மாவட்ட கலெக்டர் ஆனார்.

 

தமிழ்நாடு சாலை பிரிவு திட்டங்கள் இயக்குனர் ஏ.அருண் தம்புராஜ் நாகை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

 

மதுரை மாநகராட்சி கமிஷனர் எஸ்.விசாகன் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

 

தென்காசி மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

 

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (டான்–ஜெட்கோ) இணை மேலாண்மை இயக்குனர் எஸ்.வினீத் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

 

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் பி.ரமண சரஸ்வதி அரியலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குனர் பி.பிரபுசங்கர் கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

 

பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) ஜே.மேகநாத ரெட்டி விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆனார்.

 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக செயல் இயக்குனர் ஜி.யு.சந்திரகலா தென்காசி மாவட்ட கலெக்டர் ஆனார்.

 

தேனி மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணன் உன்னி ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனார்.

 

வணிக வரிகள் (மாநில வரிகள்) இணை கமிஷனர் பி.காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

*🔷🔶ஜூன் – 14*

 

*உலக இரத்தக் கொடையாளர்கள் தினம்* *(World Blood Donor’s Day)*

 

இரத்தத்தில் உள்ள வகைகளை முதன்முதலில் கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் 1901ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.

 

இதன்மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது.

 

இரத்த தானம் செய்வதன்மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.

 

இரத்தத்தை பணம் பெறாமல் தானம் வழங்குபவர்கள் உள்ளனர்.

 

அவர்களை கௌரவிக்கவே உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

 

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,818,867 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 176,698,397 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 160,729,378 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 85,083 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.97.69,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.92 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

*வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு*

 

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும்.

 

இதன் காரணமாக 14, 15-ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய இதரமாவட்டங்கள் (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி), ஈரோடு,தருமபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

 

16, 17-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும்.

 

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று தெரிவித்தார்.

 

*46 ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு*

 

சென்னை எழும்பூர் - மன்னார்குடி, கொல்லம் உட்பட 46 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு ரயில்களின் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, வரும் 17-ம் தேதி முதல் மன்னார்குடி - சென்னை எழும்பூர் ரயில் (06180) நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு இனி இரவு 10.53-க்கு வரும். காரைக்கால் - எர்ணாகுளம் ரயில் (06187) நாகூருக்கு மாலை 4.48 மணிக்கு வரும்.இதேபோல, புனலூர் - மதுரை (06730), சென்னை எழும்பூர் - கொல்லம் (06101), நாகர்கோவில் - கோயம்புத்தூர் (06321/06322), விழுப்புரம் - மதுரை (02867), நாகர்கோவில் - கோயம்புத்தூர் (02667), சென்னைஎழும்பூர் - புதுச்சேரி (06025/06026) உட்பட மொத்தம் 46 சிறப்பு ரயில்களில் இடைப்பட்ட சில ரயில் நிலையங்களில் புறப்பாடு அல்லதுவருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 

பெரும்பாலான ரயில்களில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

*🔷🔶இன்றைய சிந்தனை*

...........................................

 

*''பொறுப்பும்...! கடமையும்...!!"*

..........................................

 

*🏵பொறுப்பு' மற்றும் 'கடமை' ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை பெரும்பாலானோர் அறிவதில்லை...*

 

*🏵️''உண்மையில் பொறுப்பேற்பது என்றால்'' என்ன என்பதையும், ‘நான் பொறுப்பு என்ற உணர்வுடன் இருக்கும்போது உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது என்ன என்பதையும் பாருங்கள்...*

 

*🏵பொதுவாகவே, 'பொறுப்பு' என்றால், சுமைகளைச் சுமப்பது என்று பொருளாக்கிக் கொள்பவர்கள்தான் அதிகம். கடமையைச் செய்வதாக நினைத்து எதைச் செய்தாலும், உங்களுக்குக் களைப்புதான் மிச்சமாகும்...*

 

*🏵பொறுப்பு என்பதைக் கடமை என்று தவறாக நினைப்பதால்தான் இப்படி சுமையாகத் தோன்றுகிறது...*

 

*🏵ஒரு தொழிலாளி அட்டைப் பெட்டியை எடுத்து அதன் மீது அடையாளச் சிட்டை (லேபிள்) ஒட்டினார். அடுத்தவருக்குத் தள்ளினார். அவர் அந்தப் பெட்டியில் ஒற்றைக் காலணியைப் போட்டார்...*

 

*🏵அவரை அடுத்திருந்தவர் அந்தப் பெட்டியை மூடி ஒட்டினார். அந்தப் பெட்டி விற்பனை பிரிவுக்கு செல்லும் வண்டியில் ஏற்றப்பட்டது...*

 

*🏵️“என்ன நடக்கிறது இங்கே...? செருப்புகளை சோடியாகத்தானே தயாரிக்கிறோம்...? ஏன் ஒற்றைச் செருப்பை மட்டும் பெட்டியில் போடுகிறீர்கள்...? என்று உரிமையாளர் பதறினார்...*

 

*🏵️“அய்யா!, இங்கே எந்தத் தொழிலாளரும் வாங்கிய சம்பளத்துக்குத் தங்கள் கடமையைச் செய்யத் தவறுவதில்லை. சிக்கல் என்னவென்றால், இடது கால் செருப்பை எடுத்து பெட்டியில் போட வேண்டியவர் மட்டும் இன்று விடுமுறை என்று மேலாளரிடமிருந்து பதில் வந்தது...*

 

*🏵தங்கள் கடமையிலிருந்து தவறாத தொழிலாளர்கள் இருந்தாலும், அந்த முதலாளியின் வியாபாரம் என்ன ஆகும்...? என்று ஆலோசித்துப் பாருங்கள்...*

 

*🏵முழுமையாகப் பொறுப்பேற்காமல், கடமையைச் செய்வதாக மட்டுமே நினைத்து செயல்பட்டால், அது உங்கள் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது. விரைவிலேயே சலிப்பும், வெறுப்பும், விரக்தியும் கொண்ட இயந்திரமாக மாறிப் போவீர்கள்...*

 

*🏵யார் சொல்லியோ செய்யாமல், அதை நீங்களாக பொறுப்புடன் விரும்பிச் செய்தால் மட்டுமே இந்த வேதனை இருக்காது...*

 

*😎ஆம் நண்பர்களே...!* 🟡 *முதலில் பொறுப்பு என்பதைச் செயலாக மட்டுமே நினைப்பதை விடுங்கள். பொறுப்பு என்பதை உணர்வாக கவனிக்கப் பழகுங்கள்...!*

🔴 *எதுவாக இருந்தாலும் ஏதோ ஒன்றுக்கு நீங்கள் உணர்வுபூர்வமாக, முழுமையாக பொறுப்பு ஏற்கும்போது, “இது என்னுடையது என்ற உணர்வு ஏற்படுகிறது...!!*


0 Response to "14.06.2021 - திங்கட்கிழமை - முக்கியச் செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel