"பாராட்டி மகிழ்வோம் "
இந்த உலகையே
நமக்குக் கீழே உட்கார வைக்க முடியுமென்றால் அது பாராட்டு உரையால்
மட்டுமே முடியும். பாராட்டுக்கு மயங்காதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை.
ஆதலால், எல்லோரையும் பாராட்டிப் பேசும் வழக்கத்தை நாம் உருவாக்கிக்
கொள்வோம்.
அதே வேளையில், யாரை எப்போது பாராட்ட வேண்டும் என்று
வரையறை செய்திருக்கிறார் நம் ஔவை பிராட்டியார்.
" நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல் ;
ஆசானை எவ்விடத்தும் அப்படியே ; - வாச
மனையாளைப் பஞ்சணையில் ; மைந்தர்தமை நெஞ்சில் ;
வினையாளை வேலைமுடி வில். "
( தனிப்பாடல் திரட்டு - ஔவையார் பாடல் - 59)
1 . நண்பனை எப்போதுமே அவன் இல்லாத நேரத்தில் பாராட்டிப்
பேச வேண்டும். ஏனென்றால், அவன் இருக்கும்
போது பாராட்டிப் பேசினால் நம்மிடம் எதையோ எதிர்பார்த்து பேசுகிறானோ என்று அவன்
நம்மை சந்தேகிப்பான். ஆதலால், நண்பனை அவன்
இல்லாத இடத்திலும், அவனைப் பற்றி யாரேனும்
புறம்பேசும் இடத்திலும் அவனை நெஞ்சாரப் பாராட்டிப் பேச வேண்டும்.
2. நமக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரைக் காணும்
இடத்தில் மட்டுமல்ல, அவர் இல்லாத
இடத்திலும் நாம் அவரைப் பாராட்டிப் பேச வேண்டும். நமக்கு வாழ்க்கை தந்தவர்கள்
ஆசிரியர்கள். ஆதலால், நாம் வாழும்
காலமெல்லாம் அவரைப் பாராட்டிப் பேச வேண்டும்.
3. வாசனையான கூந்தல் கொண்ட மனைவியைப் பஞ்சணையில் மட்டுமே
பாராட்டிப் பேச வேண்டும். மற்ற இடங்களில் பாராட்டிப் பேசினால் நம்மைப் "
பொண்டாட்டி தாசன் " என்று சொல்லி இந்த உலகம் நம்மைப் புறம் பேசும்.
4. நம் பிள்ளைகளை மனத்துக்குள் வைத்துப் பாராட்ட வேண்டும். வெளிப்படையாகப் பாராட்டினால்,
"நம் பெற்றோர் நம்மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள். நாம் என்ன
சொன்னாலும் அவர்கள் அதை செய்வார்கள்" என்று எண்ணிக் கொண்டு ஆணவத்தில்
ஆடுவார்கள். அதுவே அவர்களை அழித்துவிடும்.
அதனால், பிள்ளைகளை நெஞ்சில் வைத்துப் பாராட்ட வேண்டும்.
5. நமக்காக வேலை செய்யும் பணியாட்களை அவர்கள் வேலையைச் செய்து முடித்த
பிறகு பாராட்ட வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஊதியத்தை விட பன்மடங்கு
உயர்வானது எது தெரியுமா? அவர்கள் செய்த வேலையை நாம்
அங்கீகரித்து பாராட்டிப் பேசும் ஒற்றைச்சொல்தான். ஆதலால், எந்த ஒரு
பணியாளரும் தங்கள் பணி முடிந்து செல்லும் போது அவர்களை அழைத்து, உங்கள் பணி
சிறப்பாக இருந்தது " என்று தோளைத் தட்டிப் பாராட்டுங்கள். அவர்கள்
உங்களுக்காக ஆயிரம் மடங்கு உழைப்பார்கள். உலகிலேயே " அலுவலக மேலாண்மை "
பற்றி முதன்முதலில் இலக்கணம் வகுத்தது ஔவையார்தான். இந்த இலக்கணத்தைக்
கடைப்பிடித்தால் தொழிலாளர் போராட்டங்கள் ஒருபோதும் நடக்காது.
நமக்கு யார் என்ன உதவி செய்தாலும் உடனே அவர்களுக்கு
நன்றி சொல்லுங்கள். அவர்கள் செய்த செயலைப் பாராட்டிப் பேசுங்கள்.
ஒருவர் செய்த நற்செயலுக்கு பொன்னையோ, பொருளையோ கொட்டிக்
கொடுக்க வேண்டாம். " அருமையாக
செய்தீர்கள் " என்று அன்பாகச் சொல்லி அவர்கள் தோளைத் தட்டிக் கொடுத்தாலே
போதும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 130. பாராட்டி மகிழ்வோம் ஆ.தி.பகலன்"
Post a Comment