"ஆறறி வதுவே அவற்றொடு மனனே "
தமிழர்களின் அறிவுக் கொடை
"
திருக்குறள்.
தமிழர்களின் அறிவியல் கொடை " தொல்காப்பியம் "
உலக வரலாற்றில் கிடைக்கப் பெற்ற முதல் நூல், காலத்தால்
முந்தைய நூல் " தொல்காப்பியம் "
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூலே " தொல்காப்பியம் "
தொல்காப்பியத்தில் உள்ள
" மரபியல் " மனித சமுதாயத்திற்கு கிடைத்த வரம்
என்றே சொல்லலாம். உலக நிலப்பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட
இடங்களில் உயிரினங்களே தோன்றாத காலகட்டத்தில் "உயிரினங்களின் பாகுபாடு "
பற்றி பேசிய முதல் நூல் இது. இந்நூலில்
உயிரினங்களின் இளமைப் பெயர்கள், ஆண் பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்கள்
சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தியதைக் கண்டு உலகமே வியக்கிறது.
" புறக்காழ் எனவே புல் என மொழிப
அகக்காழ் எனவே மரம் என மொழிப "
வெளிப்புறம் காழ்த்தும் உட்புறம் மென்மையாயும்
காட்சியளிப்பதை புல் என்கிறது . இவை கிளைகள் இன்றி நேராக வளரும். தென்னை,
பனை போன்றவை புல் வகையைச் சேர்ந்ததாகும். இவை மரங்கள் அல்ல.
உட்புறம் காழ்த்தும் (வைரம் பாய்ந்தது) வெளிப்புறம்
மென்மையாக இருப்பதும் , கிளைகள் கொண்டு வளர்வதும் " மரம்" என்கிறது தொல்காப்பியம் . ஐயாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு அறிவா ? என்று இன்றைய தாவரவியல் அறிஞர்கள் தடுமாறி
நிற்கிறார்கள்.
மேலும் இலை, காய், பழம் முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களையும் தொல்காப்பியம் சுட்டுகிறது. உலகத்தை அந்தக் கடவுள் படைத்தார் , இந்தக் கடவுள் படைத்தார் என்று கதை சொல்பவர்களுக்கு, உலகத்தை எந்தக் கடவுளும் படைக்கவில்லை நிலம், தீ,நீர்,வளி, விசும்பு என்னும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானதுதான் "உலகத்தின் தோற்றம் " என்று பதிலடி கொடுக்கிறது தொல்காப்பியம்.
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட தொல்காப்பியம் , உலக உயிரினங்களை அவற்றின் செயல்திறன் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளதைக் காண்போம்.
" ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே " ( தொல்காப்பியம் - 1516)
1. ஓரறிவு உயிர்கள்.
தொடுதல் உணர்வு மட்டுமே உடையவை.
புல், மரம், செடிகொடி போன்றவை. தொட்டாற் சிணுங்கி என்ற செடியைப் பார்த்திருப்போம். அதை நாம் தொட்டதும் தன் இலைகளை மடக்கிக் கொள்கிறது. தாவரங்களுக்கு உயிர் உண்டு. அவை தங்கள் உடம்பினால் அறிவைப் பெறும் ஓரறிவு உயிர்கள் என்பதையே இச்செயல் காட்டுகிறது. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை முதன்முதலில் எடுத்துக் காட்டியது தொல்காப்பியமே .
2. ஈரறிவு உயிர்கள் .
தொடுதல் உணர்வுடன் நாவினால் சுவைத்தறியும் அறிவு
பெற்றவையே " ஈரறிவு உயிர்கள்" ஆகும்.
சிப்பி, நத்தை, சங்கு, கிளிஞ்சல், மண்புழு போன்றவை " ஈரறிவு உயிர்கள் " ஆகும்.
3. மூவறி உயிர்கள்.
தொடு உணர்வு, சுவை உணர்வு இவற்றோடு மூக்கால் முகர்தல் அறிவு பெற்றவையே " மூவறி உயிர்கள் "
ஆகும்.
கரையான், எறும்பு, செல், ஈசல் , தம்பாப் பூச்சி, பட்டுப்பூச்சி போன்றவை " மூவறி உயிர்கள் " ஆகும்.
4. நான்கு அறிவு உயிர்கள்.
தொடு உணர்வு, சுவை உணர்வு, மூக்கால் முகர்தல் இவற்றோடு
கண்ணால் காண்டல் (காணுதல் ) அறிவு
பெற்றமையே " நான்கு அறிவு உயிர்கள் " ஆகும்.
நண்டு, தும்பி, ஈ, குளவி போன்றவை " நான்கு அறிவு
உயிர்கள் " ஆகும்.
5. ஐயறிவு உயிர்கள்.
தொடு உணர்வு, சுவை உணர்வு, மூக்கால் முகர்தல், கண்ணால் காண்டல் இவற்றோடு
செவியால் கேட்கும் அறிவு பெற்றவையே " ஐயறிவு உயிர்கள் " ஆகும்.
பறவைகள், விலங்குகள் , பாம்புகள், மீன்கள், முதலை, ஆமை போன்றவை " ஐயறிவு உயிர்கள் " ஆகும்.
6. ஆறறிவு உயிர்கள்.
தொடு உணர்வு, சுவை உணர்வு, மூக்கால் முகர்தல், கண்ணால்
காண்டல், செவியால் கேட்டல் இவை ஐந்தும்
ஐம்பொறிகளால் அறியும் ஐம்புல அறிவுகள். அவற்றுடன் ஆறாவதாகிய மனத்தால் பகுத்தறியும்
அறிவு பெற்றவையே " ஆறறிவு உயிர்கள் "
ஆகும்.
மனிதன் மட்டுமே ஆறறிவுயிராக
அறியப்படுகின்றான்.
உலக உயிரனங்களின்
உணர்வு நிலையைக் கொண்டு அதன் அறிவுநிலையை வகைப்படுத்தி இருக்கிறது "
தொல்காப்பியம் " .
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வகைப்படுத்தப்பட்ட இந்த வகைப்பாட்டை தவறென்று சொல்ல எவராலும் முடியவில்லை. காரணம் தமிழர்கள் அறிவு அவ்வளவு நேர்த்தியானது. பிறப்பால், இனத்தால், மொழியால், அறிவால் உலக மக்களுக்கு முந்தியவர்கள் தமிழர்கள் என்பதற்கு இந்தப் பாடல் ஒன்றே சான்று.
உலகில் உள்ள
எந்தவொரு அறிவார்ந்த சமுதாயமும் உயிரினங்களின் அறிவுநிலை பற்றி இவ்வளவு விரிவாக
ஆய்வு செய்ததில்லை. தொல்காப்பியம் மட்டுமே செய்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த
"தமிழர்களின் அறிவியல் கொடை " யான
தொல்காப்பியத்தை உலகெங்கும் கொண்டு செல்வோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! 178. ஆறறி வதுவே அவற்றொடு மனனே ஆ.தி.பகலன்"
Post a Comment