தமிழ் அறிவோம்! 180. ஏழாம் அறிவு ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...
தமிழ் அறிவோம்!  180.   ஏழாம் அறிவு  ஆ.தி.பகலன்

 


" ஏழாம் அறிவு "

"இயற்கையை ஆள்வது ஆறாம் அறிவு " 

" இயற்கையாய் ஆவது ஏழாம் அறிவு " 

நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திற்கே மீண்டும் சேர்வதே இயற்கைக் கோட்பாடு. மழைநீரால்தான் கடல்நீர் உருவாகிறது. அந்தக் கடல்நீர் மீண்டும் ஆவியாகி மழைநீராக மாறுகிறது. இதுபோலத்தான் உயிர்களின் வாழ்க்கைச் சுழற்சியும் அமைந்துள்ளது. இயற்கையினால் படைக்கப்பட்டவனே  மனிதன். தான் இயற்கையால் படைக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து, தனக்கு வாழ்வளித்த இயற்கையோடு  இயைந்து வாழ்ந்து, அந்த இயற்கையோடு இரண்டறக் கலத்தலே "ஏழாம் அறிவு " ஆகும். இயற்கையோடு இரண்டறக் கலந்துவிட்டாலே அந்த இயற்கையைப் போல நமக்கும் மரணம் இல்லாமல் போகும். இயற்கையைப் போல மனிதனும் மரணம் இல்லாப் பெருவாழ்வு அடைவான். 

தன்னை அறிதலே "ஏழாம் அறிவு ". தன்னை அறிந்தவனே இயற்கை நிலையை (இறை நிலை)  அடைவான். இயற்கை நிலையை அடைந்தவன், இயற்கையைக் காப்பான். இயற்கை அவனைக் காக்கும். 

" எல்லாம் அறியும் அறிவுதனை விட்டு

எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கில்லை

எல்லாம் அறிந்த அறிவினை நான்என்னில்

எல்லாம் அறிந்த இறைஎனல் ஆமே " ( திருமந்திரம் - 2596) 

இவ்வுலகில் எல்லாவற்றையும் அறிகின்ற அறிவு அறிவாகாது. பலவற்றை அறிவதால் பயன் ஒன்றும் இல்லை. தன்னை அறியும் அறிவே அறிவு. தன்னில் இறைவனை (இயற்கையை)  உணர்வதே மெய்யறிவு. இயற்கையே இங்குக் கடவுள். இயற்கையே நம்மை வழிநடத்துகிறது. இயற்கையின் ஒரு துளிதான் நாம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த நிலையை உணர்ந்து கொண்டவன் " ஏழாம் அறிவைப் பெற்றவன் " ஆகிறான். " நான் கடவுள் " என்ற நிலையை ஒருவனுக்கு உணர்த்துவதே அவன் பெற்ற. ஏழாம் அறிவுதான் . ஏழாம் அறிவைப் பெற்றவன் கடவுள் நிலையை அடைவான். உலக உயிர்களைக் காக்கும் தொழிலையும் அவன்  அறிவான். 

நமக்கெல்லாம் " ஏழாம் அறிவு " என்றவுடன் " போதி தருமர்தான் நினைவுக்கு வருவார். ஏழாம் அறிவுக்கும் போதி தருமருக்கும் உள்ள தொடர்பைக் கொஞ்சம் காண்போம். 

காஞ்சியில் பிறந்த போதி தருமர் சீன நாட்டுக்குச்  செல்கிறார். அங்கே உள்ள மக்களைக்  கொள்ளைநோய் தாக்குகிறது. அந்த  நோயினால் மக்கள் கொத்து கொத்தாக உயிர் இழப்பதைக் கண்டு, தன் மருத்துவ அறிவால் அந்நோயிலிருந்து அந்த மக்களைக் காக்கிறார். கொஞ்ச காலம் கழித்து அந்த மக்களை கொள்ளையர்கள் தாக்குகிறார்கள். அதிலிருந்தும்  அந்த மக்களைத் தான் கற்று வைத்திருந்த தற்காப்புக் கலை மூலமாகக் காக்கிறார். கொள்ளை நோயில் இருந்தும், கொள்ளைக் கூட்டத்தில் இருந்தும் சீன மக்களைக் காத்து,   சீன மக்களின்  மனங்களைக் கொள்ளை கொள்கிறார் போதி தருமர். 

தங்களுக்கும் தற்காப்புக் கலையைக் கற்று கொடுக்கும்படி சீன மக்கள் கேட்க, தனக்குத் தெரிந்த கலைகளை எல்லாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, சீனர்களுக்குக் கடவுள் ஆகிறார் போதி தருமர். தன் கடமை முடிந்ததும்  காஞ்சிக்கு மீண்டும் திரும்ப நினைக்கிறார்.  ஆனால், சீனர்களோ போதி தருமர் இறந்து அவரது உடல் சீனாவில் புதைக்கப்பட்டால் நாடு செழிப்படையும் என்று நம்புகின்றனர். அதனால் அவர் உணவில் நஞ்சு கலந்து  கொடுக்கின்றனர்.  அவர் இறந்ததும் அவர் உடலைப் புதைத்து விடுகின்றனர். இதுவே திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிகள். 

அதன்பின் நடந்த காட்சி என்ன தெரியுமா? அவர் உடலைப் புதைத்த சில நாள்கள் கழித்து சீனாவின் எல்லையில் போதி தருமர்  நடந்து செல்வதை எல்லைக் காவல்காரன் காண்கிறான். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு, அதற்கானக் காரணத்தைக் கேட்கிறான்.

மடாலயத்திற்க்குப் போய் நீ என்னை இந்தக் கோலத்தில் பார்த்ததாகச் சொல் . விவரம் உனக்கே விளங்கும் " என்று அவனிடம் கூறிவிட்டு எல்லையைக் கடந்து  இமயமலைக்குச் சென்றுவிட்டார் போதி தருமர். 

அந்தக் காவல்காரன் மடாலயத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறுகிறான். அவர்கள் உடனே சென்று போதி தருமனின் கல்லறையைத் திறந்து பார்த்தார்கள். அதனுள் அவருடைய மற்றொரு செருப்பு மட்டுமே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள். உண்மையிலேயே போதி தருமர் கடவுள் நிலையை அடைந்துவிட்டதை எண்ணி இன்றுவரை போதி தருமரைக் கடவுளாய்க்  கொண்டாடுகிறார்கள் சீன மக்கள். 

ஏழாம் அறிவைப் பெற்று இயற்கை நிலையை அடைந்ததால்தான் பல்லாயிரம் மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றார். எண்ணியதை நிறைவேற்றவும் செய்தார். தன் மக்களைக் காத்த ஒருவனை நஞ்சு கொடுத்துக்  கொல்ல இயற்கை எப்படி வாய்ப்பளிக்கும். வாய்ப்பளிக்காமல் போதி தருமருக்கு வாழ்வளித்தது. அதுதான் இயற்கை. 

இயற்கையை உணர்ந்து  இயற்கையையும், இயற்கைப் படைத்த உயிர்களையும் எவன் ஒருவன் உயிருக்கு  உயிராய் நேசிக்கிறானோ அவன்  மட்டுமே ஏழாம் அறிவைப் பெறுவான். அந்த ஏழாம் அறிவைப் பெற்றவனை இயற்கைக் காக்கும். அவர்கள் மரண்த்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பெறுவார்கள். அவர்களை யாராலும் கொல்ல இயலாது. ஒளிநிலையை அடைவார்கள். 

உள்ளுணர்வால் மற்றவர்கள் உள்ளத்தில் இருப்பதை உணர்வார்கள். இதற்கெல்லாம் சான்றாக இருப்பவர்தான்

" போதி தருமர் "

 " மனிதா!

இயற்கையை நாடு.

அதுவே உனக்கு பேரின்பம் தருகின்ற பேரின்ப வீடு!

இன்னா செய்தார்க்கும் இனியவை செய்வது இங்கு இயற்கை மட்டுமே!

இருக்கின்ற கடவுள்களை எல்லாம் இனி மறந்து விடு!

இயற்கையே கடவுள் என்பதை

இனியேனும் அறிந்து விடு! 

இனியாவது யோசிப்போம்!

இயற்கையை நேசிப்போம்!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

(அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 180. ஏழாம் அறிவு ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel