தமிழ் அறிவோம்! 183. தமிழில் பெயர் சூட்டுவோம் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...
தமிழ் அறிவோம்! 183. தமிழில் பெயர் சூட்டுவோம்  ஆ.தி.பகலன்

 


"தமிழில் பெயர் சூட்டுவோம் "
 

உலக வரலாற்றிலேயே புகழ்பெற்ற நாடகம் எது தெரியுமா?

நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அரங்கேற்றிய "இந்தி எதிர்ப்பு" நாடகம்தான்.  கடந்த ஐம்பது ஆண்டு காலமாக இவர்கள் இந்தியை எதிர்த்ததால் என்ன மாற்றம் நிகழ்ந்தது?

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைத் தவிர மற்ற எல்லாப் பள்ளிகளிலும் இந்தி நுழைந்துவிட்டது. இந்தி படித்தால்தான் நடுவண் அரசுப் பணி கிடைக்கும் என்ற எண்ணமும் மக்களிடையே வந்துவிட்டது. " இங்கு இந்தி கற்றுத்தரப்படும் " என்ற பெயர் பலகையும் வீதிக்கு வீதி வந்துவிட்டது. இந்தியை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போது இஞ்சி தின்ன குரங்குபோல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

"இந்தியை எதிர்க்கிறோம் " என்று அரசியல் செய்தார்கள். ஆட்சியைப் பிடித்தார்கள். அதிகாரத்தில் அமர்ந்தார்கள். இவர்கள் ஏன் இந்தியை எதிர்த்தார்கள்? "இந்தி உள்ளே வந்தால், கூடவே வடமொழியும் வந்துவிடும். இந்தியும், வடமொழியும் கூட்டு சேர்ந்து தமிழை அழித்துவிடும். தமிழ் தழைக்க வேண்டும் என்றால், இந்தியை எதிர்க்க வேண்டும்" என்று கதை சொன்னார்கள்.  " தமிழ் என்ன தக்காளிச் செடியா? போகிற போக்கில் பிடுங்கி எறிவதற்கு?  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் வேரூன்றி நிற்கும் ஆலமரம் அது. அதன் இலை அசைந்தாலும், கிளை அசைந்தாலும் விழுதுகளாய் நின்று தாங்குவதற்கு உலகெங்கும் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இங்குள்ள தமிழர்களை நம்பி தமிழ்மொழி இல்லை. அது ஈழத்தமிழர்களை நரம்புகளில்  இருக்கிறது. 

இந்தியை எதிர்ப்பதில் காட்டிய வேகத்தைக் கொஞ்சம் தமிழை வளர்ப்பதில் காட்டியிருந்தால் தமிழ் தழைத்திருக்கும்.. இவர்களுக்கு உண்மையிலேயே தமிழ்மீது பற்று இருந்திருந்தால், ஆட்சியில் அமர்ந்தவுடன் என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?

1. தமிழ்நாட்டில் பிறக்கின்ற  குழந்தைகளுக்கு தமிழில்தான் பெயர் சூட்டவேண்டும். தமிழில் பெயர் சூட்டினால் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்  என்று சட்டம் இயற்றி இருக்க வேண்டும்.

2. தமிழ்நாட்டில்  திறக்கின்ற  கடைகளுக்கு எல்லாம் தமிழில்தான்  பெயர் சூட்டவேண்டும். அப்போதுதான் அங்கீகாரம் வழங்கப்படும் என்று சட்டம் இயற்றி இருக்க வேண்டும்.

3. பள்ளிக் கல்வி முழுவதும் தமிழ்வழியில் கற்க வேண்டும் என்று சட்டம் இயற்றி இருக்கவேண்டும். .

4. தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு அரசுப் பணியில் 50 விழுக்காடு முன்னுரிமை வழங்க சட்டம் இயற்றி இருக்க வேண்டும்.

இந்த நான்கு சட்டங்களை அவர்கள் இயற்றி இருந்தால் தமிழ் வளர்ந்திருக்கும். வாழ்ந்திருக்கும். இதையெல்லாம் செய்தார்களா?

இல்லையே.  ஏன் தெரியுமா? அவர்கள் தமிழுக்காக உழைக்க வந்தவர்கள் இல்லை. தமிழை வைத்துப் பிழைக்க வந்தவர்கள்.  அவர்களை வாழவைத்த தமிழை, அவர்கள் வாழ வைக்கவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் இன்று தமிழர்களின் பெயர்களில்  தொண்ணூறு விழுக்காடு வடமொழியிலும் , கடைகளின் பெயர்களில் தொண்ணூறு விழுக்காடு ஆங்கிலத்திலும் உள்ளன. இவர்கள் இந்தியை எதிர்க்கிறோம் என்று சொல்லி தமிழ்நாட்டை " குட்டி இங்கிலாந்து " ஆக மாற்றிவிட்டார்கள். கடைத்தெருவில் கால்வைத்தாலே இங்கிலாந்தில் இருப்பதுபோல இருக்கிறது. 

தமிழ்நாட்டில்

தமிழை எங்கடா காணோம்?

தமிழா!

உனக்கு எப்படா வரும் ஞானம்?  என்று வேதனையில் துடிக்கிறது தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சம்.  "தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை " என்று பாவேந்தர் பாடியது உண்மையாகிவிட்டது.  அன்று இந்தி எழுத்துகளில் கரியைப் பூசினார்கள். இன்று தமிழர்களின்  முகங்களில் கரியைப் பூசிவிட்டார்கள்.

உன் வயிற்றுக்குச் சோறுபோடுகின்ற  தமிழ்மொழியில் பெயர் சூட்டாமல், உன் இனத்திற்கும், உன் மொழிக்கும் வாய்க்கரிசி ( வாக்கரிசி ) போடுகின்ற  வடமொழியில் பெயர் சூட்டுகிறார்கள். என்ன கொடுமை இது?  தமிழை அழிக்க தமிழர்களே போதும். வேறு யாரும் வெளியே இருந்து வரவேண்டாம். 

தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு  வடமொழிப் பெயர்களைச்  சூட்டுவது இன்று வாடிக்கையாகி விட்டது. சில வடமொழி  பெயர்களையும் அதன் பொருளையும் பார்ப்போம்.

பிருத்வி - மண்ணாங்கட்டி.

கோபிகா - பால்காரி.

யாசிகா - பிச்சைக்காரி.

நந்தினி - மாடு

அஸ்வினி - குதிரை

மகிஷா - எருமை

இப்படியெல்லால் பெயர் வைத்து அழைக்கலாமா? இதுபோல எவ்வளவோ பெயர்கள் பொருள் சொல்ல முடியாத அளவுக்கு கொச்சையாக உள்ளன. பொருள் தெரியாமல் பெயர் சூட்டுவது பொறுப்பற்ற செயலன்றோ? 

ஒரு புலியிடம் சென்று " உன் பெயர் புலி " என்று சொன்னால் அதற்கு என்ன தெரியும்? ஒரு யானையிடம் சென்று " உன் பெயர் யானை " என்று சொன்னால் அதற்கு என்ன தெரியும்? தனக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள். எந்த மொழியில் வைத்திருக்கிறார்கள்.  அந்தப் பெயருக்கு என்ன பொருள் என்று தெரியாமல் வாழும் விலங்குகளைப் போல , தமிழ்நாட்டில் பலபேர் இருக்கிறார்கள். 

ஒருவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அழைத்தவனுக்கும், அழைக்கப் படுபவனுக்கும், அருகில் இருப்பவர்களுக்கும் அந்தப் பெயர் என்ன மொழி? என்ன பொருள்? என்று தெரிய வேண்டும் .அப்படித் தெரியவில்லை என்றால், அவர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரிய வேறுபாடு எதுவும்  இல்லை.

உலகிலேயே ஒரு மொழியின் பெயரை மனிதர்களுக்கு  வைக்கும் வழக்கம் உடையவர்கள் தமிழர்கள் மட்டுமே.  தமிழரசன், தமிழரசி, தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி , தமிழ்மாறன், தமிழன்பன்,  தமிழழகன் இப்படி நூற்றுக்கணக்கில் பெயர்கள் உள்ளன.  இதுபோல, உலகில் வேறு மொழியில் இருக்கிறதா? ஆங்கில அரசன், மலையாள மாறன், இந்தி அரசி, தெலுங்குச் செல்வன்,  கன்னடச் செல்வி இப்படி  யாராவது பெயர் வைத்திருக்கிறார்களா? இல்லை. தமிழால் மட்டுமே முடியும். அதுதான் தமிழின் சிறப்பு. 

உலகின் முதல் மொழியான தமிழ்மொழியில் பெயர் சூட்டுவதை விட பெரும்பேறு வேறு உண்டோ? தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகார கதைமாந்தர்களின்  பெயர்களைப் பாருங்கள். கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை, ஆதிரை, நெடுஞ்செழியன், கோப்பெருந்தேவி இப்படி எவ்வளவோ அழகானப் பெயர்கள் உள்ளன. உலகிலேயே அழகான, அறிவான, பொருளார்ந்த பெயர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ்மொழி மட்டுமே.

செழியன், வளவன், மணிமாறன், தமிழ்நாடன், இன்பத்தமிழன், அன்பழகன், அறிவழகன்,  பனிமலர், மகிழினி, யாழ்மதி, யாழினி, நிறைமதி, இளமதி, தேன்மொழி, கனிமொழி என்று எண்ணில் அடங்காப் பெயர்கள்  தமிழில் உள்ளன. இந்தப் பெயர்களை எல்லாம் சூட்டலாமே?

அழகான தமிழ்ப்பெயர்கள்  இருக்க, அவலமான அயல்மொழி பெயர்கள் எதற்கு?

கனி இருக்க காய் எதற்கு? மாமரத்தில் காய்த்தால்தான் அது மாம்பழம். அதுபோல,  தமிழில் பெயர் சூட்டியிருந்தால்தான் அவர்கள் தமிழர்கள். மற்றவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ள தகுதியற்றவர்கள்.  வாயில் நுழைய மறுக்கும் 

வடமொழியில் பெயர் சூட்டினால், வடமொழி  வழக்கொழிந்து போனது போல அவர்கள் வாழ்க்கையும் விரைவில் ஒழிந்து போகும். அதுவே, தமிழில் பெயர் சூட்டினால் காலத்தை வென்று நிற்கும் கன்னித் தமிழ்போல, அவர்களின் பெயரும் புகழும் காலத்தைக் கடந்து நிற்கும்.

குழந்தைக்குப் பெயர் சூட்ட தமிழாசிரியர்களையோ , தமிழறிஞர்களையே தேடிச் செல்லுங்கள். வடமொழிக்கு வால்பிடிப்பவர்களைத் தேடிச்செல்லாதீர்கள்.

தங்கமா?

தகரமா? முடிவு செய்யுங்கள்.

"தமிழா!

பெயர் சூட்டுவதில்கூட இல்லையே உன் தமிழ்ப்பற்று?

பெயரளவுக்குத்தான் இருக்கிறதா உன் தமிழ்ப்பற்று?"

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

(அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 183. தமிழில் பெயர் சூட்டுவோம் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel