கார்த்திகை தீபமெனக்
காடெல்லாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடீ - கிளியே
பார்வை குளிருமடீ!
காடு பொருள்கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே - கிளியே
குளிர்ந்த நிழல்கொடுக்கும்
குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனிபறிக்கும்
மரங்கள் வெயில்மறைக்கும் - கிளியே
வழியில் தடையிருக்கும்.
பச்சை மயில்நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர வங்கலங்கும் - கிளியே
நரியெலாம் ஊளையிடும்.
அதிமது ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை போடுமடீ - கிளியே
பூங்குயில் கூவுமடி!
சிங்கம் புலிகரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடீ - கிளியே
இயற்கை விடுதியிலே!
-சுரதா
சொல்லும் பொருளும்:
ஈன்று - பெற்று
களித்திட - மகிழ்ந்திட
கொம்பு - கிளை
நச்சரவம் - விடமுள்ள
பாம்பு
அதிமதுரம் - மிகுந்த
சுவை
விடுதி - தங்கும் இடம்
Video வைப் பார்க்க இங்கே சொடுக்கவும் 👇👇👇
காடு - சுரதா|| பா.மோகனபாலா - காட்சிப்பதிவு Video
பாடலின் பொருள்
கார்த்திகைத்தீப விளக்குகள் போலக் காடு முழுவதும்
மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல
வகையான பொருள்களைத் தரும். காய்கனிகளையும் தரும். எல்லாரும் கூடி மகிழ்ந்திட
குளிர்ந்த நிழல் தரும். அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த
காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய்
இருக்கும்.
பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள்
காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள்
கலக்கமடையும். நரிக் கூட்டங்கள் ஊளையிடும். மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும். பூக்கள்
பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில்
சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.
0 Response to "ஏழாம் வகுப்பு - தமிழ் || இயல் 2 கவிதைப்பேழை|| காடு - சுரதா|| பா.மோகனபாலா - காட்சிப்பதிவு மற்றும் எழுத்துப் பதிவு "
Post a Comment