தர்ப்பண சுந்தரி, எஸ்.வி. வேணுகோபாலன் - நூல் அறிமுகம் - முனைவர் இரா. மோகனா.

Trending

Breaking News
Loading...
தர்ப்பண சுந்தரி,  எஸ்.வி. வேணுகோபாலன் - நூல் அறிமுகம் - முனைவர் இரா. மோகனா.

 


வறுமையின் உச்சமும் ஆதங்கத்தின் நகைச்சுவையும்

தமிழ் இலக்கிய உலகில் புனைவு இலக்கியங்களான கவிதை, சிறுகதை, நாவல் எழுதுவோர் வரவு அதிகரித்திருந்தாலும் அனைவருடைய படைப்புகளும் நூலாக்கம் பெறுவதில்லை. பலரின் தூண்டுதலாலும் ஊக்குவிப்பாலுமே இத்தகு படைப்புகள் எழுத்துரு பெறுகின்றன. அவ்வகையில் மேனாள் வங்கி ஊழியரான                   எஸ். வி. வேணுகோபாலன் அவர்கள் சிறுவயது முதலே எழுத்திலும் வாசிப்பிலும் பேரார்வம் உடையவராக இருந்துள்ளார். இவருடைய முதல் எழுத்தாக்கம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நிகழ்ந்துள்ளது. அறிஞர் அண்ணா நிறுவிய பத்திரிக்கையில்தான் சுகந்தன் என்ற புனைபெயரில் இவருடைய முதல் கவிதை வெளியானது.

கல்லூரி படிப்பிற்காகச் சென்னை வந்தபோது சந்திரமவுலி என்கின்ற அழகியசிங்கர்தான் இவருக்கு இலக்கிய வாசிப்பின் சாளரங்களைத் திறந்து தந்தவர் என்று ஆசிரியர் தன்னுடைய என்னுரையில் கூறியுள்ளார். நன்றி மறப்பது நன்றன்று என்பதற்கிணங்க தன்னை ஏற்றிவிட்ட ஏணிகளான தோழர்களை நினைவு கூறியுள்ளமை சிறப்பிற்குரியது. இத்தகைய பண்பு மாறா   எஸ்.வி. வேணுகோபாலன் அவர்களால் எழுதப்பட்ட ’தர்ப்பண சுந்தரி’ என்ற இந்நூலை பாரதி புத்தகாலயம் டிசம்பர் 2019 இல் வெளியிட்டுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள 16 சிறுகதைகளும் மலர்த்தும்பி, கணையாழி, செம்மலர், ஆனந்த விகடன், தினமணிக்கதிர், அமுதசுரபி, புதிய ஆசிரியன் மற்றும் வண்ணக்கதிர் ஆகிய எட்டு பத்திரிக்கையில் வெளிவந்தவையே ஆகும்.

கோடையின் தாக்கத்தில் உழன்ற நகரவாசிகள் பொழுதுபோக்குவதற்காக  கடலுக்குச் செல்கின்றனர்.  இவர்கள் பேருந்தில் பயணிக்கின்றபோது கோடையின் புழுக்கம் குழந்தையையும் விடாத காரணத்தால், அழுகின்ற குழந்தையைச் சமாதானப்படுத்த பல்வேறாக முயற்சிக்கின்றனர். இறுதியில் குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பதாகக் கூறி முதற்கதையாகிய கோடை’ என்ற கதையை முடித்துள்ளார் ஆசிரியர். இக்கதையில் எவ்வளவுதான் அவசரகதி ஆனாலும் குழந்தை மீது மக்கள் காட்டுகின்ற அன்பு அழகாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

 கடைசிநாள் படுக்கை என்ற கதையில் வாழ்விற்கும் மரணத்திற்குமான மனப்போராட்டம் பேசப்பட்டுள்ளது. இக்கதையில் வரும் புனிதா பிறந்தவீடு மற்றும் புகுந்தவீட்டில் அன்பானவாளாகக் காட்டப்படுகிறாள். வீட்டிலோ தம்பியோடு இருக்கும்போது குறும்புத்தனமான பேச்சுகள் கணவன் வீட்டிலோ வெகுளித்தனத்தோடு கணவனின் அப்பாவித்தனத்தைக் கொண்டாடி இருபத்தைந்து ஆண்டுகள் இன்பமாக தாம்பத்தியம் நடத்தி வருகிறாள் என்பதை வெள்ளிவிழா ஆண்டுவரை வண்டி ஓட்டத்தில் பெரிய கஷ்டம் நஷ்டம் இல்லை, இருபத்தாறாம் வருடத்திலோ இப்படி ஒரு இடியை அந்த அப்பாவி கணவனின் தலையில் இக்கப் போகிறாள் என்று ஆசிரியர் எழுதியுள்ள இடம் வாழ்வின் நிலையாமை தத்துவத்தைக் கூறுவதோடு வாசகரின் நெஞ்சில் ஈரத்தை உண்டாக்குகிறது.

இக்கதையில் வருகின்ற வேலு அண்ணன், மாமா, அப்பா, பாஸ்கர் மாமா, டாக்டர் ரமணன், ஜலஜா எனப் பல நல்ல மனிதர்களைக் கதையில் உலவ விட்டுள்ளார். நள்ளிரவில் ஆறுதல் சொல்லவரும் டாக்டர் ரமணன், ஜலஜா ஆகியோர் வாசகர் மனதில் நிற்கின்றனர். புனிதாவின் வாழ்க்கையோடு நம்மையும் பயணிக்க வைக்கின்ற தன்மை சிறப்புடையது.

விருப்பின் பொருள் வெறுப்பு என்ற கதையில் சரியான நேரத்தில் கிடைக்காத எந்த வாய்ப்புகளும் நமக்கு வெறுப்பையே உண்டுபண்ணும் எனும் கருவோடு எழுதப்பட்டுள்ளது. சிறுவனான நரசிம்மன் தீபாவளிக்காக ங்கியதும் பண்டிகைக்கு முதல்நாள்தான் தந்தை துணி, பட்டாசு வாங்கித்தரும் செய்தியும் அதுவும் தந்தையின் எண்ணத்திற்கு ஏற்பவே அனைத்தும் நிகழும் என்ற கருத்தையும் அழகாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

நரசிம்மனின் தந்தைக்குப் பட்டாசு வெடிப்பது என்பது காசைக் கரியாக்குகின்ற செயலாகும்.  காந்தி, புத்தன் பிறந்தநாட்டில் எதுக்கு வெடிகுண்டு போடணும் என்று குதிப்பார்.  ஒருமுறை தீபாவளி ன்று பாட்டி இறந்து நரசிம்மனை அன்றைய வருடம் தீபாவளி இல்லாமல் ஏமாற்றிவிட்டார். ஒருமுறையோ வேண்டுதல் என்று, தீபாவளின்று திருப்பதிக்கு அவருடைய தந்தை அழைத்துச் சென்றார். இப்படியாக ஒவ்வொரு தீபாவளியாகக் கழிய தான் வேலைக்குப் போய் கொண்டாடும் தீபாவளி வரவே அது அவனுக்கு வெறுப்பைத் தந்தது என்பதாகக் கதையை முடித்துள்ளார்.

சூடாமணி மாமி’ ’முட்டுச்சந்து இரண்டு கதைகளும் அன்பு என்ற ஆணிவேரை வைத்து எழுதப்பட்டுள்ளது. சூடாமணிமாமி கதை ஒரு காவியம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனைக் குழந்தைகளோடும் பரிவோடு கவனித்த கரிசனம் மாமியிடம் உண்டு. தன்னுடைய மைத்துனரையே குழந்தை போல் பாவித்து வளர்த்த கைகள் அவளுடையவை. அவளது ரசனைமிக்க மொழியில் சிறிதுகூட கள்ளம்கபடம் இருக்காது. அவள் விளையாட்டாகக் கோபம் கொள்வதுகூட ஒரு கவிதை போல இருக்கும். தயக்கமற்ற பேச்சின் வேகம் புதிய மனிதர்களைக் கூட உறவுக்காரர் போல உணர வைத்துவிடும் என்று மாமியைப் பற்றியும் அவருடைய குணாதிசயங்களையும் பற்றியும் சிறுகதைகளில் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

                அப்பேர்பட்ட மாமி கடைசியில் முதியோர் இல்லத்தில் விடப்படும் அவலம் படிப்பவர் நெஞ்சில் பெரிய பாரமாக இறங்குகிறது. முதியோர் இல்லத்தை அத்தனை யதார்த்தமாக ஏற்கும் பக்குவம் மாமியிடம் தோன்றியதாக பிச்சப்பா எழுதியிருந்தான்.  குறைகளைப் பேசி அறியாத  இயல்பு கொண்டவர் என்று ஆசிரியர் கோடிட்டுக் காட்டியுள்ளார். மாமியின் மரண வேதனையை வாசகரின் நெஞ்சில் ஒரு கோடாக குறிப்பதாக இச்சிறுகதை வடிக்கப்பட்டுள்ளது.

சூடாமணி மாமியின் முதுமையைப் பற்றி இந்தச் சிறுகதையில் தள்ளாமை ததும்பும் முதுமை, மாநகர ஓட்டத்தில் கரை ஒதுங்கி நின்று ஏங்க வைத்துவிடுகிறது. பாதசாரிகளுக்கே வழிவிடாத நெரிசல் போக்குவரத்து போன்ற வாழ்க்கையில் நடக்கவே முடியாதவர்களுக்குக் கூட இடம் கிடைக்காது போய்விடுகிறது என்று முதியோர் இல்லத்தில் சேர்வதற்குச் சில வரம்புகள் வேண்டும் என்பதை இந்தச் சிறுகதையில் சொல்லிச் சென்றுள்ளார்.

சூடாமணி மாமி தன் வாழ்க்கையின் இறுதி நாள்களை ஒரு வாரம் போராடிப் போராடி கழித்திருக்கிறார். போராட்டம் விடுதலைக்காக அடர்ந்த காட்டில் எத்தனை தூரம் நடக்கலாம் என்ற கேள்விக்குப் பாதிதூரம் என்பதே பதில். அதற்குப் பிறகு நாம் காட்டின் அடுத்த முனை நோக்கி வெளியேறி கொண்டிருக்கிறோம் என்று பொருள். வாழ்வின் நுழைவாயில் அடுத்த நொடியில் வெளியேறுதலாக மாறிவிடுகிறது என்கின்ற ஆத்மார்த்த தத்துவத்தை ஆசிரியர் இக்கதையில் சொல்லிச் சென்றுள்ளார்.

முட்டுச்சந்து என்ற கதையில் கணவன் மனைவி அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். பிள்ளைகள் இருவரும் ஆளுக்கு ஒருவராக தன் தாய் தந்தையரைப் பிரித்து தங்கள் வீட்டில் தங்க வைத்துள்ளனர். இக்கருத்தை எதிரெதிர் சாரிகளில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளிடம் பங்குவைக்கப்பட்ட அந்தப் பெரியவர்களின் வாழ்க்கையை ஒன்றுமே சொல்லாமல் ஓரிரு வரிகளில் கூறியுள்ளவிதம் அருமை. பாட்டியின் மரணச்செய்தியைத் தெருவில் நிறுத்தி அவரிடம் கூறுகிறார்கள். அச்செய்தியை அவர் விளங்குகின்ற கணம் உண்மையிலேயே வாசகர் நெஞ்சில் குத்தியது போன்று உள்ளது. பெரியவர் அப்படியே நிற்கின்றார். ஒரு நொடிப்பொழுது. ஒரே ஒரு நொடிப்பொழுது றைந்தவண்ணம் நிற்கிறார். தழுதழுத்த குரலில் போயிட்டாளா? என்று வினாவினார். நல்லதுக்குத்தான் என்று அடுத்தக் கணம் மெதுவாக நடக்கத் தொடங்கினார். பெரியவரின் மனப் போராட்டத்தையும் அவரது மனைவி அடைந்த துன்பத்தையும் நான்கைந்து வரிகளில் ஆசிரியர் அழகாகக் காட்டியுள்ளார்.

வயதான தாய் தந்தையரை உயிரற்ற பொருட்கள் போல பங்கீடு செய்து நடத்துகின்ற குழந்தைகளுக்குச் சவுக்கடி கொடுத்தார் போன்று கதையை எழுதியுள்ளார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் முட்டுச்சந்து மனதில் ஓர் இறுக்கமான உணர்வைத் தருகிறது .

மாநகர் புதைகுழி என்ற கதையில் நடுத்தரவர்க்கத்தின் வாழ்வு, மன உலகு, அற்ப சந்தோஷம், ஆழமான குற்ற உணர்வுகளை இயல்பாகக் காட்டியுள்ளார். தினந்தோறும் இயந்திர உலகில் உலவுகின்ற எத்தனையோ சண்முகங்களைச் சற்று ஆதங்கத்தோடு எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

பிளம்பர் பையன் வீட்டுக்கு முன்னால் இறந்துபோக மறுநாள் காலையில் அவனைப் பெற்ற தாய்வந்து கதறும் காட்சி  படிப்பவர் மனதை உருக்குகிறது. அதேசமயம் அந்தப் பையன் தன்வீட்டு குழாய் ரிப்பேர் செய்ய வரும்பொழுது இவ்வாறு இறந்துவிட்டான் என்பதை வெளியில் சொல்ல முடியாமல் சண்முகம் படுகின்றபாடு நடுத்தரவர்க்கத்தின் வாழ்வைச் செம்மையாக எடுத்துக்காட்டுகிறது. படுக்கை அறையின் ஜன்னல் வழியே இரண்டாவது மாடியிலிருந்து கீழே பார்த்தார்கள் இருவரும் என்ற ஒரு வரியில் அந்த நடுத்தரவர்க்கத்தின் இயல்பினை ஆசிரியர் சிறப்பாக சொல்லி டக்கின்றார். இறந்த குழந்தையின் தாய் சண்முகத்திடம் வந்து நியாயம் கேட்பது போன்று அவன் மனசாட்சி அவனை அவனுடைய குற்ற உணர்வை முன்னிறுத்திக் செல்வதாகக் கதை முடிக்கப்பட்டுள்ளது.

’தர்ப்பண சுந்தரி என்ற கதையிலும் சாதி உணர்வை இலைமறைகாய் போல் வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் மிக மென்மையாகக் சொல்லிச் சென்றுள்ளார் ஆசிரியர்.  இளநீர் வெட்டும் நாகலட்சுமியை ஒரு தட்டிலும் கோவில் வழிகாட்டியான கேசவா ஐயங்காரை இன்னொரு தட்டிலுமாக சமமாக வைத்து கதையை நகர்த்திச் சென்று இருக்கின்ற தன்மை சிறப்புடையது. ஆணவக்கொலைகள் காலத்தில் கலை அழகுடன் எழுதப்பட்ட கதை இது. கேச அய்யங்கார் தன் பேத்தியைச் சரியாக அடையாளம் காண்பதும் ஆனால் பேத்தி நான் உன்னுடையவள் அல்ல என மறுத்து ஜாதியில் உழன்று கொண்டிருக்கும் தாத்தாவை நிராகரித்து, தாழ்த்தப்பட்டவரான தன் நாகலட்சுமி அத்தையிடம் சென்று நிற்கின்ற மாசாட்சியைக் காட்டுகிறது.  இக்கதையைச் சிறிதுகூட தொய்வில்லாமல் எழுதி இருக்கின்றவிதம் பாராட்டுதற்குரியது. இக்கதை ஒரு குறு நாவலாக வந்திருக்க வேண்டிய கதை அந்த அளவிற்கு விரிவான பார்வையை ஆசிரியர் இதில் செலுத்தியுள்ளார்.

கொஞ்சம் மேலே வரட்டும் என்ற கதையில் ஆசிரியரின் சொந்த அனுபவம் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கதையில் சுய எள்ளலும் ஆசிரியரின் திறமையான நடையும் சிறுகதையை மிக அழகாக நகர்த்திச் செல்கின்றது. இக்கதையின் கதாப்பாத்திரமான சிம்மனின் தந்தை அவருடைய மரணத்தை ஒட்டிய சுகந்தனின் செயல்பாடுகள் படிப்பவர் மனதைக் கரைய வைக்கின்றது. இவர்களைத் தவிர டாக்டர் சுரேந்திரன், டாக்டர் பாஸ்கரன் எல்லோருமே நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள். இப்படி நல்ல மனிதர்களை ஒரு கதையில் கொண்டு வருவதால் அது வாசகனுக்கு ஒரு நேர்மறையான ஆறுதலை அளிக்கின்றது. இன்னும் கொஞ்சம் மேலே என்பது ஒரு குறியீடு போல நின்று வாழ்க்கையின் யதார்த்தத்தை மிக அழகாக சொல்லிச் செல்கின்றது.

அம்மாவின் மகன் சோறு’ ’நெருப்பின் அருகே’ ’சக்கரங்களின் மீட்சியில்’ இந்த நான்கு கதைகளும் வறுமை, சாதிக் புறக்கணிப்பால் வருகின்ற கோபம் இவற்றை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. அம்மாவின் மகன் என்ற கதையில் தாய் மற்றும் மகனின் பாசப்போராட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. சிறுவயதுமுதல் தாயை நல்லநிலையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த மகனின் எண்ணமே கதையின் கருவாக உள்ளது. அதிகப்படியான யதார்த்தத்தை இக்கதையில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இக்கதையில் வருகின்ற மூர்த்தி தனக்கு உரிமையான ஒரு வீடு, ஒரு வாழ்க்கை, தன் தாய்க்கு வளமான ரூபாய் கட்டுகள், அவளுக்குப் பிடித்தமான வெளிர் நீலத்தில் தரமான ஒரு சேலை என்று இதுவே தன்னுடைய கனவு என்பதாகச் சொல்லி மூர்த்தியின் கதாபாத்திரத்தை உயர்த்தி இருக்கின்றார் ஆசிரியர்.

இலவச ஹாஸ்டல் குறித்த பார்வை சிறப்பாக உள்ளது. இரவு விடுதிக்குப் போகின்ற வழியில் உணவு சாப்பிடுவதற்காக மூர்த்தியும் அவருடைய நண்பரும் ஹாஸ்டலுக்குச் செல்ல, அங்கே பாதி உயரத்திற்கு உடைந்துபோன பழைய பிளாஸ்டிக் வாளியில் சோறு கொண்டு வரப்படுகிறது. அதைப் பார்த்தவுடன் அங்கு பயின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு கல்லூரி மாணவர்கள் கோபத்தில் சண்டையிட அங்கே உள்ளே நுழைந்த அதிகாரவர்க்கம், ஓசி சோத்துக்கே இத்தனை முழக்கமா?  உனக்கு வைக்கிற இடத்தில் வெச்சிருக்கணுண்டா பன்னீங்களா, அப்பன் பேரே தெரியாத வேத்தாளுக்குப் பிறந்தவர்களா என்று அந்த மாணவர்களை அறையப் போகிறான். அதுவரை அமைதிகாத்த மூர்த்தியும் அடிக்கிறதுன்னா எல்லாத்தையும் அடி. உடம்புல அடி. அம்மாவோட கர்ப்பத்தில் அடிச்சே செத்தீங்கடா ஒவ்வொருத்தனும் என்று இரண்டு கைகளையும் காற்றில் வீசிக்காட்டி பெருங்குரலெடுத்து கத்திக் கொண்டே செல்கிறான். இந்த இடத்தில் அம்மாவின் மீது பாசம் கொண்ட ஒவ்வொரு மகனையும் கண்ணீர் சிந்த வைத்திருக்கின்றார் ஆசிரியர்.

                நெருப்பின் அருகே என்ற கதையில் நெசவாளியின் வாழ்வை மையமாகக் கொண்டு எழுதி இருக்கின்றார். தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது. எந்தச் சோகத்தையும் தனக்குள்ளே வைத்துக் கொள்ளக்கூடாது என்ற கருத்தைக் கதைக் கருவாக கொண்டுள்ளார். தாயின் மனக்குமுறல் இக்கதையில் வெளிச்சமிட்டு காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண் குழந்தையின் மீது தந்தை கொண்டிருக்கின்ற பாசமும் உள்ளீடாக உள்ளதையும் ஆசிரியர் மிக அழகாக எழுதியுள்ளார். தன் மகள் படிப்பதற்காக மெட்ராஸ் சென்று இருக்கின்றார். அதைத் தன் மனைவியிடம் கூறுகின்ற வைரவேல், ஊர் இருக்கிற இருப்பு சரியில்ல. ஒரு கிராமத்து பொண்ணு எப்படி மெட்ராஸ்ல தங்கிப் டிக்கும். அதுவும் ஹாஸ்டல் சோறு ஒருவேளை கஞ்சினாலும் வீட்டுச்சோறு மாதிரி வருமா. கறிக்குழம்பு வச்சா எப்படி ருசிச்சு திண்ணுவா குழந்தை. என்ன திண்கிறாளோ, எப்படி தூங்குகிறாளோ, தெரியலையே என் தெய்வமே என்று தேம்பித்தேம்பி அழுவது சிறுகதை வரிகளை வலிகளாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். இதைப் படிக்கின்ற ஒவ்வொரு தகப்பனும் தன் மகள்மீது கொண்டிருக்கின்ற பாசத்தில் உறைந்து போவது உண்மை.

சோறு என்ற சிறுகதையில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கிணங்க அரசாங்கத்தின் அலட்சியத்தை ஆணி அடித்தார்போல் தந்தி அடித்து அம்பலப்படுத்தி, அவசரஅவசரமாக தேவையை நிறைவேற்றிய செயலைப் பதிவுசெய்துள்ளார். ஆண்டியும் அரசனும் தன் தேவையைக் கேட்டால் மட்டுமே கிடைக்கும் என்ற நிதர்சனம் இக்கதையில் சொல்லப்பட்டுள்ளது. ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கப் போயிருந்த தற்காலிக ஊழியர் சீனிவாசன் பதட்டமாக ஓடிவந்து சார் ஹாஸ்டல் வார்டனை சஸ்பெண்ட் செஞ்சுட்டாங்க சார். நோட்டீஸ் அடித்து சுவரில் ஒட்டிட்டாங்க. ஒரே கூட்டம் ஜீப்பில் யாராரோ அதிகாரிகள் வந்து இருக்காங்க. அவங்களே ஹாஸ்டல் பசங்களுக்கு மார்க்கெட் போய் காய்கறி, முட்டை, பழம் எல்லாம் வாங்கி சூடா சமையல் வேலை நடக்குது.  என்ன நடக்குதுன்னே தெரியலை சார் என்று தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவரின் வார்த்தையைக் கேட்டவுடன் தன் வயிறு நிறைந்தால் மட்டும் போதாது ஏழையின் வயிறும் நிறைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட குமரனின் உயரிய எண்ணம் நிறைவேறியதோடு அவனுடைய வயிறும் நிறைந்ததாக ஆசிரியர் காட்டுகின்றார் .

சக்கரங்களின் மீட்சியில் என்ற கதையில் 14 குடும்பங்கள் சேர்ந்து ஏழு நாட்கள் பயணம் மேற்கொள்கின்றனர். அந்தப் பயணத்தின் அனுபவமே ஒரு கதையாக எழுந்துள்ளது. மகிழ்ச்சியாக துவங்கிய பயணம் பேருந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடையில் நின்றுவிட, வண்டியில் வந்த 14 குடும்பங்களும் வெறுத்துப்போய் மரத்தடியிலும் கடைவாசலிலும் கிடைக்கிற இடம் பார்த்து உட்கார்ந்து வெறுத்துப் போயிருந்தனர். எப்படியும் ஒரு மணி நேரத்திற்குள் ஆள் வந்து சரிபார்த்து பேருந்தைச் சரிசெய்து விடலாம் என்று சமாளித்து பேசிக் கொண்டிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் நேரம் கடந்தபடி இருக்க கடையின் உள்ளே கண் மறைவாய் எங்கோ போய் உட்கார்ந்து விட்டனர்.

 ஓய்வுபெற்ற பெருசுகள் ஒருவர் மெல்லிய குரலில் ஆளப் பாத்தியா எல்லாம் கோட்டாவில் வந்தவனாய் இருக்கும் என்று தனித்த குரலில் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்ததாக கண்ணனிடம் அவனது மனைவியும் மிகவும் கோபத்தோடு சொல்லுகின்ற செய்தியை ஆசிரியர் இந்தச் சிறுகதையில் பதிவு செய்துள்ளார்.

 பலர் சேர்ந்து செல்லுகின்ற பயணத்திலும் கூட ஜாதி உணர்வு தலைதூக்கியது. முதலில் சாடி பின்பு முடிவிலும் சரியான அடி கொடுத்துள்ளார் ஆசிரியர். அனைவரும் சிக்கித் தவித்த அந்த நேரத்தில் கோட்டாவில் வந்த அந்த மிகப் பெரிய மனிதர்தான் சகதியில் மாட்டியிருந்த சக்கரத்தை மேலேதூக்கி அனைவரையும் மூச்சுவிடச் செய்தார். அவ்வாறு செய்த மனிதரைப் பார்த்து கோட்டா கமெண்ட் கொடுத்த தாத்தா குற்ற உணர்வில் நெளிந்தார் என்றும் அந்தக் கோட்டாவில் வந்த அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் குணசீலன். அவரைக் கண்ணன் உங்கள் குடும்பத்தோடு இன்றைக்கு இரவு உணவு எங்கள் வீட்டில்தான் என்று சொல்ல வேண்டாம் சார் காலம் காலமாக அதெல்லாம் நாங்க செஞ்சுகிட்டு இருக்க வேலைதானே என்று நாசுக்காக சொல்ல கண்ணனும் அதிர்ச்சியில் உறைந்தார்.

 உங்க ட்ரீட் தானே காலாகாலத்துக்கும் நாங்க சாப்பிட்டு வர சாப்பாடு. இன்னைக்கு மட்டுமாவது உங்களுக்கு மத்தவங்க கொடுத்து பார்த்து உணர்ந்துகட்டுமே என்றாள் கண்ணனுடைய மனைவி என்பதாகக் கதையை முடித்திருக்கிறார்.  இந்த வரிகள் படிப்பவர் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இச்சிறுகதை ஜாதி உணர்வில் மூழ்கிவனுக்குச் சவுக்கடி தந்தார் போல் இருக்கின்றது.

எஸ். வி. வேணுகோபாலன் நடையைப் பற்றி கூறவேண்டும் என்று சொன்னால் பாமரரும் படிக்கின்ற விதத்தில் மிக எளிமையான நடையாக உள்ளது.  கதையினைப் படிக்கின்றபோது சலிப்பு, தொடர்பின்மை காணப்படவில்லை. சிறுகதைக்குரிய இலக்கணத்தில் சிறிதும் மாறாமல் எழுதியுள்ள ஆசிரியரின் போக்கு பாராட்டுதற்குரியது. இந்நூலை நன்முறையில் நூலாக்கம் செய்த பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள்.

தர்ப்பண சுந்தரி,

எஸ்.வி. வேணுகோபாலன்,

டிசம்பர் – 2019, ரூ. 110, பக்கம் – 120.

பாரதி புத்தகாலயம்.

 

0 Response to "தர்ப்பண சுந்தரி, எஸ்.வி. வேணுகோபாலன் - நூல் அறிமுகம் - முனைவர் இரா. மோகனா."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel