தமிழ் அறிவோம்! 185. ழகரத்தின் சிறப்பு ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...
தமிழ் அறிவோம்! 185.  ழகரத்தின் சிறப்பு  ஆ.தி.பகலன்

 


"ழகரத்தின் சிறப்பு "
 

"தமிழுக்கும் அமுதென்று பேர் " என்றார் பாரதிதாசன். அமிழ்து அமிழ்து அமிழ்து என்று தொடர்ந்து சொன்னால்  அது தமிழ் தமிழ் தமிழ் என்று ஒலிப்பதைக் காணலாம். தமிழ் வேறு, அமிழ்தம் வேறு  அல்ல. அமிழ்தத்தை உண்டவர்கள் எப்படி நீண்டநாள் வாழ்வார்களோ அதுபோல, அமிழ்தினும் இனிய தமிழை பேசுபவர்களும் நீண்டநாள் வாழ்வார்கள். அதற்கான காரணம் , தமிழின் சிறப்பு எழுத்தான " ழகரம் ". உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு எழுத்து தமிழ் மொழியில் மட்டுமே இருந்து தமிழைச் சிறப்பித்து வருவதால் இது " சிறப்பு ழகரம்" என அழைக்கப்படுகிறது. 

"குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர். ( குறள் - 66) 

இனியது என்று  சுட்டப்படுவது குழலும், யாழும் ஆகும். அதைவிட இனியது மழலைச்சொல். இவை எல்லாவற்றையும் விட இனியது இந்தச் சொற்களுக்கு எல்லாம் இனிமை சேர்க்கின்ற  " சிறப்பு ழகரம் " 

மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால்  " ழகரம் " பிறக்கிறது. " ழகரம் " பிறக்கும்  ஒவ்வொரு முறையும் நம் உடலும், உள்ளமும் சிறக்கிறது. நாம் ஒவ்வொரு முறையும் ழகரத்தை உச்சரிக்கும் போதெல்லாம் நம் உடலில் உள்ள கூம்புச் சுரப்பி (பீனியல் ) யும்,  அகஞ்சுரக்கும் சுரப்பி (பிட்யூட்டரி) யும் தூண்டப்படுகிறது என்று இன்றைய மொழியியல் துறை ஆய்வாளர்களும்,  அறிவியல் அறிஞர்களும் கண்டறிந்துள்ளனர். 

மனிதனின் மூன்றாவது கண் என அழைக்கப்படும் "கூம்புச்சுரப்பி" மூளையின் (புருவத்தின்)  நடுவே காணப்படுகிறது. இந்த சுரப்பி சிறிய பட்டாணி அளவில் கூம்பு வடிவில் இருக்கும். இந்தச் சுரப்பி தூண்டப்படுவதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது. நுண்ணுயிர்களைக் கொல்லும் வலிமையை உடலுக்குத் தருகிறது. உடல் நன்முறையில் செயல்படுவதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. 

மனித மூளையின் அடிப்பகுதியில் கொண்டைக் கடலை வடிவில் இருப்பது "அகஞ்சுரக்கும் சுரப்பி" ஆகும் .பெரிய அறிவாளிகளை  பார்த்து இவர்கள் எல்லாம்  " மண்டைச்சுரப்பு  அதிகம் உள்ளவர்கள் " என்று கூறுவதைக் கேட்டிருப்போம். அகஞ்சுரக்கும் சுரப்பி மூலம் இயக்குநீர் அதிகமாக சுரப்பதை வைத்தே இவ்வாறு சொல்கிறார்கள்.  மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள்தான். அவற்றையெல்லாம் ஆள்வதும், உடல்சமநிலையை ஒழுங்குபடுத்துவதும்,ஒருங்கிணைப்பதும் " அகஞ்சுரக்கும் சுரப்பியே "  ஆகும்.  இதவே "உடலின்  முதன்மைச் சுரப்பி " ஆகும்.  இது தூண்டப்படுவதால் வாழ்க்கை நிலைத்தன்மை அடைகிறது. அறிவுக்கூர்மை வெளிப்படுகிறது. நாம் அறிவோடும், நீண்ட ஆயுளோடும் இருப்பதற்கு காரணமாகிறது. உலக மக்களில் தமிழர்கள் மட்டும் உடல் வலிமையோடும், மன வலிமையோடும் இருப்பதற்கான காரணம் என்னவென்று இப்போது தெரிகிறதா?

 "ழகரம்" தமிழின் சிறப்பெழுத்து மட்டுமல்ல. தமிழர்களின் உடலையும், உள்ளத்தையும் சீர்படுத்தும் எழுத்து. 

அதற்கெல்லாம் காரணம்,  நம் முன்னோர்கள்  வாழ்வை உயிரோட்டம் உள்ளதாக்கும் சொற்களை " ழகரச் சொற்களாக " அமைத்திருப்பதே. தமிழ், அமிழ்தம், மொழி, வாழ்த்து, வாழ்க்கை, வாழை, மழை, உழவு, உழவர், தொழில், அழகு, குழந்தை,  மகிழ்ச்சி, கூழ், புகழ், தோழமை, பழம், விழி, வழி, எழுச்சி என்று எவ்வளவோ சொற்களில்  ழகரம்   இடம்பெற்றுள்ளன. இவையாவும் நாம்  அடிக்கடி  பயன்படுத்துபவையே . 

தமிழையும், ழகரத்தையும் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்ல தமிழ் என்னும் சொல் முன்னொட்டாக உள்ள பெயர்களையும், ழகரம் உள்ள பெயர்களையும் மட்டுமே  இந்த உலகிற்கு புது உறவாய் வரும் உங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழுங்கள்.

தமிழி, தமிழரசி, தமிழ்ச்செல்வி, தமிழ்மதி, தமிழ்நிலா, யாழினி, யாழ்மதி, மகிழினி, மகிழ்மதி, புகழினி, பூங்குழலி, மதியழகி, மலர்விழி, கவிமொழி , தமிழமுதன், தமிழ்நிலவன், தமிழ்வாணன், தமிழ்மகிழ்நன் , அன்பழகன், அறிவழகன், மதியழகன், புகழேந்தி, செழியன், குழகன்,ழகரன்  என்று எண்ணிலடங்காப் பெயர்களில் ழகரம் இடம்பெற்றுள்ளது. இதுபோல ழகரம் உள்ள பெயர்களையே நம் குழந்தைகளுக்குச் சூட்டுவோம். 

 ழகர எழுத்துகள் கொண்ட பெயர்களை உடைய நம் குழந்தைகளை யாராவது பெயர் சொல்லி அழைக்கும்போது அவர்களுக்கு  அறிவும், ஆயுளும் கூடும். நாம் செய்யும் இந்தத் தமிழ்த்தொண்டால், தமிழ்போல் அழியாப் புகழும்,  நீண்ட ஆயுளும் பெற்று நம் குழந்தைகள் வாழ்வாங்கு வாழ்வார்கள். ழகரம் உள்ள பெயர்களைச் சூட்டுவது என்பது தமிழுக்குச் செய்யும் தொண்டு மட்டுமல்ல.  ஒருவன் தனக்குத்தானே செய்து கொள்ளும் தொண்டு ஆகும். இதனால் தமிழும் வாழும். தமிழால் நாமும் வாழ்வோம். 

நீங்கள் மற்றவர்களுடன்  அலைபேசியிலோ, நேரிலோ பேச நினைத்தால்,  "வாழ்க தமிழ் " என்று தமிழை வாழ்த்திவிட்டு பேசத் தொடங்குங்கள். எதிர்முனையில் (எதிரே) இருப்பவர்கள் ஆணாக இருந்தால் 

" சொல்லுங்கள் தோழர் " என்றும், பெண்ணாக இருந்தால்

" சொல்லுங்கள் தோழி " என்றும் விளித்துப் பேசுங்கள்.  பேச்சை நிறைவு செய்யும்போது

 " வாழ்க வளமுடன் " என்று அவர்களை வாழ்த்துவிட்டு விடைபெறுங்கள். இப்படி நாம் பேசும் போது ழகரத்தைப் பலமுறை பயன்படுத்தும் வாய்ப்பு நமக்குக் கிட்டும். 

"வாழ்க வளமுடன் " என்பது ஒரு சிறந்த மந்திரச்சொல் ஆகும். நாம் ஒவ்வொரு முறையும் "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது நம் அறிவும், ஆயுளும் வாழ்க்கை பெறுகிறது. காரணம்,  'வாழ்க ' என்ற சொல்லில் உள்ள "ழகரம்தான்" . மற்றவர்களை " வாழ்க வளமுடன் " என்று வாழ்த்தும்போது, அவர்கள் வாழ்த்து பெறுகிறார்கள். நாம் வாழ்க்கை பெறுகிறோம் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். 

திருஞான சம்பந்தர் சீர்காழி பெருமான்மீது பாடிய பதிகம் ஒன்றின் 12 ஆவது பாடலில் 22 முறை ழகரத்தைப் பயன்படுத்திப் பாடியிருக்கிறார். 

" ஒழுகலரி தழிகலியில் உழியுலகு

பழிபெருகு வழியைநினையா

 முழுதுடலில் ஏழுமயிர்கள்

தழுவுமுனி குழுவினொடு

கெழுவுசிவனைத்

தொழுதுவுலகில் இழுகுமலம்

அழியும்வகை கழுவுமுரை

கழுமலநகர்ப்

 பழுதிலிறை

எழுதுமொழி தமிழ்விரகன்

வழிமொழிகள் மொழிதகையவே " 

இப்பாடலை   அடிக்கடி பாடுவதன் மூலம் ழகரத்தை உச்சரிப்பதால் கிடைக்கும் பலனை நாம் பெறலாம். 

 "வாழைப் பழத்திற்காக குழந்தை விழுந்து விழுந்து அழுதது "

இத்தொடரை குழந்தைகளை  அடிக்கடி சொல்ல வைத்து  ழகர உச்சரிப்பு பயிற்சி அளிக்கலாம். 

தமிழர்களுக்கு இனி மருந்து வேண்டாம். 

"ழகரம்" போதும். 

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு நாவால்

ழகரத்தைப் போற்றி உரை ".

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

(அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! 185. ழகரத்தின் சிறப்பு ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel