தமிழ் அறிவோம்! 186. ஒளி வழிபாடு ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...
தமிழ் அறிவோம்! 186. ஒளி வழிபாடு  ஆ.தி.பகலன்

 


"ஒளி வழிபாடு "
 

உலகில் உள்ள சாதி சமயங்களையும்,  உருவ வழிபாட்டையும் ஒழித்து, சமரச சுத்த சன்மார்க்கப் பாதையில் மக்களை கொண்டு செல்லவே,   ஒளி வழிபாட்டைக் கொண்டு வந்தார் வள்ளல் பெருமான்.  அந்த ஒளியையே "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் " என்று அழைத்தார். அந்த " அருட்பெருஞ்ஜோதியும் ஓர் அனுபவம் " என்றார். 

" தனு கரணாகதிகள் தாம்கடந்து அறியும்ஓர்

அனுபவ மாகிய அருட்பெரும்ஜோதி " 

தனு என்பது உடல். அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இந்திரியங்கள் ஆகும்.  கரணாதிகள் என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவை ஆகும். இந்திரியங்களும்,  கரணங்களும் கடந்த நிலையில் கிடைப்பதே அருட்பெருஞ்ஜோதி அனுபவமாகும். அந்த அனுபவத்தை அனைவரும் பெற்று பேரின்ப வாழ்வை அடையவே வடலூரில்  ஞானசபையை உருவாக்கினார். தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல்,  பக்குவம் வருவித்தல்,  விளக்கம் செய்வித்தல் ஆகிய ஐம்பெரும் தொழில்களை இயற்றுகின்ற அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரை ஒளிவடிவில் வழிபடச் சொன்னார். அதற்காகவே ஞான சபையில் அணையா விளக்கை ஏற்றி வைத்தார். 

சத்திய ஞான சபையில் 1872 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் வியாழக்கிழமை தைப்பூச நாளில் முதன்முறையாக அருட்பெரும்ஜோதி வழிபாட்டை தொடங்கி வைத்தார். அன்றுமுதல்  ஆண்டுதோறும் தைப்பூச நாளில் இந்த விழா கொண்டாடப் படுகிறது. தைமாதத்தில் வரும் முழுநிலவும் பூச விண்மீனும் ஒன்று சேரும் நாளே தைப்பூச விழாவாகும்.

அன்று கடகத்தில் திங்களும் , மகரத்தில் ஞாயிறும் அண்டத்தில் நேருக்கு நேராக நிற்கும். காலை 6.30 மணிக்கு கிழக்கில் ஞாயிறும், மேற்கில் திங்களும் நடுவில் ஞான சபையின் ஜோதியும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அப்போது  முச்சுடரையும் வழிபடலாம். 

" முச்சுடர் களும்ஒளி முயங்குற அளித்தருள்

அச்சுடர் ஆம்சபை அருட்பெருஞ்ஜோதி " 

இயற்கை படைத்த முச்சுடர்களும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தரும் இந்த நன்னாளில் 7 திரைகளை நீக்கி ஜோதியைக் காட்டுவர். இந்த நேரத்தில் வலப்பக்கம் ஞாயிறும், இடப்பக்கம் திங்களும் நேர்க்கோட்டில் இருக்கும். நமது உடலில் வலக்கண் ஒளியும் ( ஞாயிறு  ஒளி) , இடக்கண் ஒளியும் ( திங்கள்  ஒளி) உள்சென்று கனல்கலையில் சேர்வதைக் குறிக்கவே இந்த ஏற்பாடு. 

வள்ளல்பெருமான் ஏன் ஒளி வழிபாட்டைத் தேர்ந்தெடுத்தார்? 

ஆதிமனிதனின்  முதல் அறியியல் கண்டுபிடிப்பு நெருப்பைக் கண்டுபிடித்ததுதான். அதன் பின்புதான் அவன் வாழ்க்கைக்கு ஒளி கிடைத்தது. அவன் வாழ்வதற்கு வழி கிடைத்தது. அன்றுமுதல் அவன் ஒளியையே வணங்கத் தொடங்கினான்.  எல்லா வழிபாடுகளில் முதல் வேளையாக விளக்கை ஏற்றுவதும் , இறைவனை ஒளியாக வழிபடுவதும் பழந்தமிழர் மரபு. தமிழர்களின் முதன்மை விழாவான பொங்கல் விழாவில் யாரை வழிபடுகிறார்கள் ? ஞாயிற்றைத்தானே. தன் ஒளியைக் கொடுத்து இரவு பகலை உண்டாக்கி, உலக உயிர்களைக் காத்து நிற்பது ஞாயிறுதானே . அதனால்தான் தமிழர்கள் தங்கள் முதல் வழிபாட்டை ஞாயிறு வழிபாட்டில் இருந்து தொடங்கினார்கள்.

ஞாயிற்றின் அடையாளம் ஒளி. ஒளி என்பது அறிவின் குறியீடு. இருள் என்பது அறியாமையின் குறியீடு. 

அறியாமை என்னும் இருளில் இருந்து பார்த்தால் எது நல்லது? எது கெட்டது?  என்று தெரியாது. அதனால் இருளில் இருந்து, ஒளியை நோக்கி வாருங்கள். ஏனெனில் இந்த உலகம் அறிவு என்னும் ஒளியால் ஆளப்பட வேண்டும். அறிவுதான் அனைத்துவித வேறுபாடுகளையும் போக்கும். சமரச வாழ்வைக் காட்டும். ஐம்பூதங்களில் எதையும் தன்வயப்படுத்தும் ஆற்றல் நெருப்புக்கு மட்டுமே  உண்டு.  ஒரு பொருளை நீரிலோ, நிலத்திலோ, காற்றிலோ, வான்வெளியிலோ போட்டால் அது தன்நிலை மாறாமல் அப்படியே இருக்கும். அதுவே அந்தப் பொருளை நெருப்பில் போட்டுப் பாருங்கள். அது எரிந்து நெருப்பின் வடித்தைப் பெற்றுவிடும். இப்படி எல்லாப் பொருட்களையும் தனதாக்கும் நெருப்பைப் போலவே ,அறிவும் தன்னை நோக்கிவரும் அனைத்தையும் தனதாக்கிவிடும். அதனால்தான் அறிவின் குறியீடாக   ஒளி  பார்க்கப்படுகிறது. 

ஒளி ஏற்ற விளக்குப் பயன்படுகிறது. அந்த அகல்விளக்கு மண்ணால் செய்யப்படுகிறது. மண் என்பது நிலத்தில் இருந்து பெறப்பட்டது. விளக்கு எரிய பயன்படுத்தப்படும் எண்ணெய், நீரின் தன்மை கொண்டது. நெருப்பு எரிய உயிர்வளி என்னும் காற்று தேவைப்படுகிறது. நெருப்பு சுடர்விட்டு எரிய  வெளி தேவைப்படுகிறது. வான்வெளியை நோக்கியே எப்போதும் சுடர் எரியும். சுடர் என்பது நெருப்பின் வடிவம். ஐம்பூதங்களின் ( நீர், நிலம், காற்று, நெருப்பு, வான்வெளி)  சேர்க்கையால்தான் அகல்விளக்கில் ஒளி தோன்றுகிறது. ஆக, ஐம்பூதங்களின் வடிவமே அகல்விளக்கில் ஒளி ஆகிறது. ஐம்புலன்களை வென்றவர்களிடமே அறிவு தோன்றுகிறது. இப்படி அறிவும், ஒளியும் ஒத்தத்தன்மை உடையதாக விளங்குவதால்தான் " அறிவொளி " என்ற சொல் உருவானது. 

ஐம்பூதங்களே தமிழர் போற்றிய இறைவழிபாடு. ஐம்பூதங்களின் சேர்க்கையாய் இருக்கும் அகல்விளக்கு ஒளியே இறை வடிவம். அறிவுக்கும்,   அறிவால் உணரக்கூடிய இறைவனுக்கும் வடிவாய் இருப்பது ஒளி என்பதால்  அந்த அறிவொளியையே " அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  " என்று பெயரிட்டு அழைத்தார்  வள்ளல் பெருமான்.

"எரிகின்ற நெருப்பு எப்போதும் மேல்நோக்கியே எரியும் " என்பது பழமொழி. ஐம்பூதங்களில் நெருப்பு மட்டுமே மேல்நோக்கி செல்லும் தன்மை கொண்டது. மலையில் நிலச்சரிவு ஏற்படும்போது புவியீர்ப்பு விசையால் அது பள்ளத்தை நோக்கியே மண் சரியும். நீரின் தன்மையும் அதுதான். பள்ளத்தை நோக்கியே செல்லும். அழுத்தம் குறைந்த இடத்தை நோக்கியே காற்று செல்லும். வான்வெளி அறிய முடியாத ஒன்று. ஆக, நெருப்பு மட்டுமே மேல்நோக்கி செல்லக் கூடியதாக இருக்கிறது.  நெருப்பைப் போலவே,  அறிவும் மேல்நோக்கிச் செல்லக் கூடியது. தன்னை அணைத்துக் கொண்டவர்களை மேல்நோக்கி அழைத்துச் செல்லக் கூடியது. அறிவால் உணரப்படும் இறைவனை ஒளியால் கண்டு உணரவே ஒளி வழிபாட்டைத் தொடங்கினார் வள்ளல் பெருமான்.

எதையும் தன்வயப்படுத்தும் ஆற்றல் ஒளிக்கு உண்டு. ஆதலால், இனிவரும் காலங்களில் எல்லா சமயங்களையும் தன்வயப்படுத்தி உலகின் ஒப்பற்ற வழிபாடாக,  ஒரே வழிபாடாக " ஒளி வழிபாடு " விளங்கும். மனித சமுதாயத்தின் முதல் வழிபாடு  எப்படி ஒளிவழிபாட்டில் தொடங்கியதோ, அதைப்போலவே இறுதியிலும் ஒளி வழிபாட்டில்தான் முடியும். தம் அறிவால் உணர்ந்து வள்ளலார் கண்ட ஒளிபாட்டை அறிவுடைய மக்கள் ஏற்றுக் கொள்வர். அப்போது சாதி, சமயம், இன, மொழி வேறுபாடுகள் எல்லாம் வேரோடு அழிந்துபோகும். ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமரச உலகம் மண்ணில் மலரும். அறியாமை அகலும். அறிவொளி மட்டுமே இவ்வுலகை வழிநடத்தும். இவை அனைத்தையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நடத்திக் காட்டுவார்.

" அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி "

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

(அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! 186. ஒளி வழிபாடு ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel