தமிழ் அறிவோம்! 187. காவல் மரம் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...
தமிழ் அறிவோம்!  187. காவல் மரம்  ஆ.தி.பகலன்

 

"காவல் மரம் "

"காவல் மரம் என்பது தமிழ் மன்னர்களின் தலைநகரத்தில் அவர்களின் வீரத்தின் அறிகுறியாய்   விளங்கியவை. காவல் மரத்தினை வீரர்கள் இரவு பகலாக காத்து வந்தனர். அரசனின் அடையாள மரமாகவும், வீரத்தின் அறிகுறியாகவும் போற்றினர். அம்மரத்திற்குத் தீங்கு வராமல் பாதுகாத்தனர். அப்படி தீங்கு வந்தால் அரசர் குலத்திற்கே தீங்கு வரும் என்று நம்பினர்.

சேரர்கள் பனைமரத்தையும், சோழர்கள் அத்தி மரத்தையும், பாண்டியர்கள் வேப்ப மரத்தையும் காவல்மரமாகக் கொண்டிருந்தனர். இதைப்போலவே, எல்லா மன்னர்களுமே தங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்தனர். அவை கடம்பு, புன்னை, மா, வாகை போன்றனவாகும்.

காவல் மரத்தை வெட்டுவதோ, குறை ஏற்படுத்துவதோ இலை, தழைகளைப் பறிப்பதோ கூடாது. கிளை, இலை, காய், கனி போன்ற அனைத்துமே புனிதமாகப் போற்றப் பட்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் காவல் மரத்தைக் " கடி மரம் " என்று குறிப்பிடுகின்றன.

காவல் மரத்தை ஊறு செய்வதன் மூலம் மன்னனை இழிவுபடுத்தியுள்ளனர் என்பதை சில இலக்கியங்கள் மூலமாக அறிய முடிகிறது. காவல் மரத்தை வேரோடு வெட்டுதல், அந்த மரத்தில் யானையைக் கட்டுதல், அந்த மரத்தை வெட்டி முரசு செய்தல்  இத்தகைய செயல் எல்லாம் எதிரி தோற்றமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும். எந்த ஒரு மன்னனும் தன் காவல் மரத்தைக் காக்க இயலாமல் போனால் அவன் மானம் இழந்தவனாகக் கருதப்பட்டான்.

மன்னனை இழிவு செய்வதாக எண்ணி மரத்தை வெட்டுவதும், அதற்கு ஊறு செய்வதும் பெருந்தவறென புலவர் பெருமக்கள் உணர்ந்தனர். அதை மன்னர்களிடமும் உரைத்தனர்.

 "அரசனாக அரசு மரபுப்படி நீ செய்ய வேண்டிய எதனையும் உன் எண்ணம்போல் செய்துகொள். ஆனால்,  எக்காரணம் கொண்டும் மரத்தின் சிறு துண்டையும் வெட்டாதே " என்ற பாடத்தை பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்குக் காவிரிப் பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் என்ற புலவர் அறிவுறுத்துவதைப் புறநானூற்றுப்  பாடல்வழி காண்போம்.

" வல்லார் ஆயினும் , வல்லுந‌ர் ஆயினும்

புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன ,

உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!

நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின் ,

நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை , அவர்நாட்டு

இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;

நனந்தலைப் பேரூர் எரியும்  நைக்க ;

மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்

ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்

கடிமரம் தடிதல் ஓம்பு! நின்

நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே " (புறநானூறு - 57)

"திறமையற்றவரோ,  திறமை உள்ளவரோ யாராக இருந்தாலும் தன்னைப் புகழ்ந்தவர்க்கு எல்லாம் மாயவன் வேண்டியனவற்றை எல்லாம் வழங்குவான். அவனைப் போல வழங்கும் மாறனே! உனக்கு ஒன்று கூறுவேன். நீ பிறரது நாட்டைக் கைப்பற்றும் காலத்தில் அந்நாட்டு விளைச்சல் நிலங்களை உன் மறவர்கள் கைப்பற்றினாலும் கைப்பற்றட்டும். பகைவர் ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினாலும் கொளுத்தட்டும். வேல்  மறவர்களைக் குத்திக் கொன்றாலும் கொல்லட்டும். எது செய்தாலும் பகைவர் நாட்டுக் காவல்  மரங்களை  வெட்டுதலை மட்டும் கைவிடுக.  அவை உன் யானைகளைக் கட்டி வைப்பதற்கு உதவும். அவற்றை ஒருபோதும் அழிக்காதே . உன் சினத்தை மனிதர் மீது காட்டு. மரத்தின் மீது காட்டாதே "  என்று வேண்டுகிறார் புலவர்  காரிக்கண்ணனார்.

அரசர்கள் காவல் மரத்தைப் பாதுகாத்ததன் காரணம் என்ன? அது பொருளாதாரத்தையும் நாட்டையும் காப்பதால்தான். ஒரு நாட்டின் காவல் மரம் எதுவோ, அதுவே அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவியது.  எடுத்துக் காட்டாக புன்னை மரம் காவல் மரமாக இருப்பின் அதன் மரப்பலகை வள்ளமாக, தோணியாக,  நாவாயாக மாறி கடற்படையாகவும் , மீன்பிடித் தொழிலுக்கும் கைகொடுத்தது . புன்னை விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்  வீடுகளிலும், வீதிகளிலும், கோவில்களிலும் விளக்கின் ஒளியாகியது. புன்னை மலர்த்தேன் உணவாகியது. இதுபோலவே வேம்பின் இலை, பூ, பட்டை மருந்தாகியது. பனை மரம் தமிழர்களுக்குப் பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது.  மாமரம் நம் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவிபுரிந்து வருகிறது.

இவ்வாறு அந்தந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்   பெரும்பங்காற்றும்  மரங்களில் ஒன்றையே அந்த நாட்டின் காவல் மரமாகப் போற்றிக் காத்தனர். ஒவ்வொரு நாட்டு மன்னரும் தங்கள் நாட்டு காவல் மரத்தைத் தலைமுறை தலைமுறையாகக் காப்பதைக்  கடமையாக எண்ணீனர். காவல் மரம் நாட்டையும் மக்களையும் காக்கும் என்று நம்பினர்.  காவல் மரங்களின் எச்சமாக நிற்பதே இன்றைய கோவில் மரங்கள்.

பண்டைய காலம் முதல் இன்று வரை மரவழிபாடானது தமிழர்களின் முதன்மை வழிபாடாக உள்ளது. மரங்கள் தெய்வத்தன்மை வாய்ந்ததாக கருதியமையால் மரங்களையே தெய்வமாக வணங்கினர். அரச மரம்,  ஆல மரம் , வேப்ப மரம், பனை மரம், வேங்கை மரம், வில்வ மரம் போன்ற மரங்களை மக்கள் வழிபட்டனர்.

மரங்களை காசாக (விற்று பொருள் ஈட்ட)  பார்த்த சமூகங்களுக்கு நடுவில், மரங்களை கடவுளாகப் பார்த்த சமூகம்தான் நம் தமிழ்ச் சமுதாயம்.

" அசோகர் மரம் நட்டார் " என்று

போதித்தது போதும்!

"அறிவுள்ளவன் மரம் நடுவான் " என்று எல்லோர்க்கும் போதியுங்கள்!

வீட்டுக்கு ஒரு மரம் - அதுவே

நாட்டுக்கு நல்வரம்!


இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

(அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 187. காவல் மரம் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel