கவிஞர் சுகிர்தராணியின் இப்படிக்கு ஏவாள் கவிதை நூல் மதிப்புரை

Trending

Breaking News
Loading...

கவிஞர் சுகிர்தராணியின் இப்படிக்கு ஏவாள் கவிதை நூல் மதிப்புரை

கவிஞர் சுகிர்தராணியின்  இப்படிக்கு ஏவாள் கவிதை நூல் மதிப்புரை
நூல் மதிப்புரை
மயிலம் இளமுருகு
இப்படிக்கு ஏவாள்
நூல் இப்படிக்கு ஏவாள்
ஆசிரியர்- சுகிர்தராணி
 பதிப்புஜுலை 2017
பதிப்பகம்காலச்சுவடு பதிப்பகம்
பக்கம் – 72 ரூபாய் – 75.
                தமிழ் இலக்கிய வரலாற்றுப் பதிவுகளில் பெண் படைப்பாளர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. அப்பதிவுகளில் தன்னைப்பாடுதல் , அரசருக்குத் துணையாக இருந்து கவிதை எழுதுவது ,கோபம் ,நட்பு ,காதல் ,சமூகச்சாடல்கள் என பல்வேறு பொருண்மையில் கவிதைகள் அமைந்திருந்தன. அதன் தொடர்ச்சியின் நீட்சியாக சமகால பெண் கவிஞர்கள் ஆகச்சிறந்த படைப்புகளைத் தந்து தன் இயல்பை நிலைநிறுத்திக் கொண்டு வருகின்றனர். ஆசிரியராகவும் , கவிஞராகவும் அறியப்படும் சுகிர்தராணி அவர்களின் ஆறாவது கவிதைத்தொகுப்பே இப்படிக்கு ஏவாள் என்ற கவிதை நூலாகும்.
                பெண் எழுத்து , தலித்தியம்  சமூகத்தோலுரிப்பு , காதல் ,நட்பு ,அரசியல் ,இயற்கை , வறுமை ,பெற்றோர் குறித்தான அன்பு  என பல்வேறு கருத்துகளை கொண்டுள்ளதாக இக்கவிதை நூல் காட்சி தருகின்றது. இதனுள் 58 தலைப்புகள் கொண்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
 தனக்கு எது சரியெனப்படுகின்றதோ அதனைத் தெளிவுபட தேர்ந்த சொற்களால் கடுமையாக ,கவித்துவமாக வெளிபடுத்திய விதம் அருமை. இவருடைய கவிதைகள் பல்பொருள் பொதிந்து சிந்திக்க வைப்பதாக உள்ளது. அதிக இடத்தில் உவமைகளை அழகாகப் பயன்படுத்தி சொல்ல வரும் கருத்தினை எளிமையாக விளக்குகின்றார். படிமம் ,குறியீடு என பல்வேறு உத்திகளை இக்கவிதையைப் படிப்போரால் அறிந்து கொள்ள முடியும். இவருடைய கவிதைகளில் பச்சை,நீலம் நிறம் அதிகமாக இடம்பெற்றுள்ளன. இவை அரசியல் சார்ந்தும் யோசிக்க வைக்கிறது.
தூலிப் மலர்களை காவல் காப்பவள் நானில்லை
கூண்டிலடைக்கப்பட்ட பறவைகளுக்கு
இடுக்கு வழியாக உணவு தருபவள் நானில்லை
நான் வேறு என் சொற்கள் வேறு. “
என பேருருவானவள் குறித்து பேசியிருப்பதன் கவனத்தை நாம் பெற முடிகின்றது.  அம்மா ,அப்பா குறித்து பேசுகின்ற கவிதைகளில் மனிதத்தை பார்க்க முடிகின்றது. அம்மா மகளிடத்து கேட்கிறாள் ,அதற்கு மகள் சொல்லும் பதிலாக இக்கவிதை
முதிர்ந்த இலையின் நரம்பென
பிரசவத்  தழும்புகள் பிணையும்
அடிவயிற்றைப் பற்றி செல்லேன்
தோண்டித் தீர்த்தாலும்
உயிர்களை முளைக்க வைக்கும்
ஆதிநிலம் அது
என பிரபஞ்சத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் கருத்தை கவித்துவ வரிகளின் வழி கவனப்படுத்துகின்றன.  பெண்ணுடல் , சமூகச்சிக்கல்கள் ,பெண்ணுக்கு எதிராக நடந்தேறிய வன்முறைக்கு தன்னுடைய கவிதைகளின் மூலமாக கேள்விக்கணை விடுப்பதை உணர முடிகின்றது. வாழ்க்கை வறுமையால் கயிற்றின் மேல் நடக்கும் பெண்ணின் வறுமை வாழ்க்கையை
பல்பிடுங்கப்பட்ட பாம்பென
சுருண்டிருக்கிறது வாழ்க்கை
என்றும் குறிப்பிட்டுள்ளார். வித்தியாசமாக முரண் சொற்கள் இவருடைய கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. “ அவன் உமிழ்நீர்க் குளத்திலிருந்து / பெருகுகிறது ஒரு நதி / கருத்த தோலிலிருந்து வெண்ணிறத்தில்/ பட்டாம்பூச்சிகள் உதிர்கின்றன. உதடு குவிக்கையில் ,சத்தமின்றி முத்தம் பிறப்பதாக காட்சிப்படுத்தியது அழகு. நூற்றாண்டுகளின் ஒற்றைக் கேள்வி என்னும் கவிதை ஒரு சிறுகதை பாணியில் அமைந்து  பாடலடியின் இறுதியில் நம் மனம்  பிசைவதை தடுக்க முடியவில்லை.
அதே கேள்வியைக் கேட்கிறாள் என்னிடம்
சேரி ஊராகாதா அம்மா ? “
மேலும் தேவதைகள் சாட்சியளிப்பதில்லை என்னும் கவிதையில்
  ஒரு துர்தேசத்தின் கொடுஞ்சிலையாய்
புன்னகை உறைந்த தேவதைகள்
ஒருபோதும் சாட்சியாவதில்லை
என நறுக்கென்று சொல்லி சென்றுள்ளதை படிப்பவர் உணரமுடிகின்றது.  நிறைவேறாக் காதலின் முத்தம் துப்பப்படுவதாக கூறுகின்றார். இசைப்பிரியா குறித்த கவிதையின் கரு நெருப்பாகி காத்திரமாகிறது . இயற்கை சார்ந்த விடயங்களையும் கவிதை ஆக்கியுள்ளார்.
ஆகச்சிறந்த காடே என் தேவதை
தேவதையே என் ஆதித்தாய்
என்றும் பூக்கள், காளான், சூரியன்,இரவு மேலும் குவளை நிறைய முத்தம் என்ற கவிதையில்
   நானே பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எனக்கான வீடு மலை , காடு, ஆறு, சமவெளி
எல்லாமே உன் வடிவிலிருக்கின்றன. “
 என நவின்றுள்ளார்.
                கொலையும் செய்வாள் பறச்சி என்னும் கவிதை ஆதிக்கவாதிகளுக்கு தன்னுடைய எதிர்ப்பை எழுத்தின் வழியாக சமர்பித்துள்ளார் கவிஞர். காமத்தின் நிறம் நீலமாகவும் ,பச்சை இரத்தம் என பல்வேறு பொருண்மைகளில் விரிந்து செல்கின்றன கவிதைகள். சாதியம் காதலுக்கு தடையாக இருப்பது , சிலவற்றிற்காக பிரிந்து செல்வது என சமூகச்சிக்கல்களை கவிஞர் பதிவு செய்துள்ளார்.
 சாணை  பிடிக்கப்பட்ட சாதியின் கூர்வாளால்
வெட்டப்படதாத உனதுயிர் வேண்டியே
கைவிடுகிறேன் நம்முடைய காதலை
 அப்பா , அம்மா , குழந்தைகள் சார்ந்த செய்திகளையும் இவருடைய கவிதைகளில் காணமுடிகின்றது. குவளை நிறைய முத்தம் என்ற கவிதையில் மனிதப்பண்பை காணமுடிகின்றது .  பல்வேறு கவிதைகளில் பச்சை நிறம் குறியீடாகவே இடம்பெற்று வந்துள்ளது. சிலவற்றை உற்றுநோக்கி தன் கவிதைகளில் பதியன் செய்துள்ளார் கவிஞர்.
  வார் கட்டப்பட்ட ஒரு நாயென
முதுகில் ஏறிக் கொள்கிறது என் சேரி. “
தேடல் என்னும் கவிதையில் பாடற்பொருள் வித்தியாசமானதாக உள்ளது . நூலின் தலைப்பான இப்படிக்கு ஏவாள் என்னும் கவிதையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி இறந்துள்ள பெண்களுக்காக கவிதையில் கோபங்களாக வெளிப்பட்டுள்ளன. சமூகத்தை சாடுவதாக இவை தோற்றம் கொள்கின்றன.
  இருபுறமும் கூராக்கப்பட்ட வாளைப்
பரிசாகத் தருகிறேன்
வெட்டி எறிந்துவிடு உன் விரைகளை
என சினத்தோடு ,சமூகப்புரிதலோடு ,சமூகப் பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை அருமை. பெண் வலி, ரத்தமும் சதையுமான கருத்துகள் என்ற வகையில் பல்வேறு கவிதைகள் படிப்பவர் மனதை கேள்விகேட்கின்றன. மனதின் கணங்கள் , ஆதிக்கச்சாதிக்கெதிரான பதிவுகள்,  ஒரு கதையை விளக்கும் பாணியில் காலராட்டிணம் கவிதை அமைந்துள்ளது. கவிதையின் இறுதி
விழித்துப் பார்க்கையில்
கைகால்கள் கட்டப்பட்டிருக்கும் என்மீது
பரவியிருக்கிறான்
பாழாய்ப்போன ஆதாம்
என முடித்து படிப்பவருக்கு புதுவித அனுபவத்தை ஏற்படுத்துகின்றார். மல உருண்டை, காதல் வேறொரு உலகம் ,முத்தத்தை வேறொன்றாகப் பார்த்தல் அப்பா மீது விமர்சனம் இருந்தாலும் அவர்தான் தன்னுடைய ஹீரோ என கூறியுள்ளார். அவன் என் கதாநாயகன் / நான் அப்பாவின் மகள் .மேலும் கவிதை குறித்து கூறும்போது மீன்கொந்திய உடலாக ,நுகரப்படும் பெருங்காமமாக ,இரத்தமாய் வெளியேறும் சிறுநீர் , கடைசி மூச்சு , ஒற்றை வியர்வை,   ஓரங்குல நாக்கு , சாக்கடை நீர் , மலத்தின் ஒரு கவளம் என்று தன்னுடைய கவிதைகள் எதைக் குறித்தும் பேசும் என்பதாக ஒரு கவிதை இடம்பெற்றுள்ளது.
                இயல்புகளை உற்றுநோக்கி அருமையாக அதனை கவிதையில் தந்துள்ளார். அன்பு எப்படி இருக்க வேண்டும்,ஆசை மற்றும் சௌதி அரேபிய அரசால் தலை துண்டிக்கப்பட்ட இலங்கைப்பெண் ரிசானா நஃபீக் கொலை குறித்து கவிதையில்,  மக்கள் மீது அவர் கொண்டுள்ள கோபத்தை காட்டுகிறது. உங்கள் இதயங்களில் இரத்தம்/ ஒரு துளியேனும் சுத்திகரிக்கப்படவில்லை ..என கேள்வி கேட்கிறார். கனவு சார்ந்த ,அன்பு சார்ந்த ,வர்க்கபேதங்கள் சார்ந்த ,உடல் பற்றிய , இயற்கை சார்ந்த , எதிர்கால எண்ணங்கள் , கவிதையோடு கொண்டுள்ள உறவு ,பெண் சார்ந்து என பல்வேறு பரிமாணங்களை இவருடைய கவிதைகள் நமக்கு புலப்படுத்துகின்றன.
                வீடு திரும்புதல் என்னும் கவிதையில் என்னதான் பேசினாலும் நடப்பினை , இயல்பினை கேள்வி கேட்டு நகர்ந்துள்ளவிதம் அருமை.
நாமிருவரும் கீழிறங்குகிறோம்
வரிசை தப்பி மக்கள் கலைகிறார்கள்
நீ  ஊருக்குள் போகிறாய்
நான் சேரிக்குச் செல்கிறேன்
என இப்படி இருக்க ஏற்படுத்திய சமூக கட்டமைப்பை , மனிதத்தை பாடிய தொகுப்புநூலான இதனை அனைவரும் படிக்க வேண்டியது அவசியம். கவிஞருக்கும் அழகான முறையில் பதிப்பித்த காலச்சுவடு பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள் ..
  

0 Response to "கவிஞர் சுகிர்தராணியின் இப்படிக்கு ஏவாள் கவிதை நூல் மதிப்புரை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel