சிற்பக்கலை- காலமும் நயமும் - கட்டுரை

Trending

Breaking News
Loading...

சிற்பக்கலை- காலமும் நயமும் - கட்டுரை

சிற்பக்கலை- காலமும் நயமும் - கட்டுரை

சிற்பக்கலை- காலமும் நயமும்
வெ.பாலமுருகன் (மயிலம் இளமுருகு)
தமிழாசிரியார்
அரசு மேல்நிலைப்பள்ளி
ஆரம்பாக்கம்,திருவள்ளூர் மாவட்டம்.
கலை விளக்கம்
சங்க இலக்கியங்களில் கலை என்னும் சொல் ART என்னும் பொருளில் குறிக்கப்பெறவில்லை. மாறாக விலங்குகளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் கலை என்னும் சொல் மானைக் குறிக்க பயன்பட்டுள்ளது. கலைகள் 64 என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. காப்பியங்களில் கலைகள் பொதுப்பெரால் அழைக்கப்படுகின்றன. நாகரிகம் பண்பாடு என்பவைகள் கலைகளின் வாயிலாக பிறந்தவை. இன்றைய மனித வளர்ச்சியில் கலைகள் மரபுக்கு உட்படாது உள்ளன. நாகரிகத்தின் புலப்பாடாகவும் பண்பாட்டின் செல்வமாகவும் அழகின் இருப்பிடமாகவும் மனதைக் கவர்வதாகவும் இருக்கும் ஆக்கப் படைப்புகளே கலை எனப்படுகிறது.
மனித அறிவு இயற்கையோடு ஒன்றியும் உறழ்ந்தும் நின்றதால் கலை தோன்றியது. காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் விலங்குகளைக் கொல்ல கல்லைக் கூர்மையாக்கி ஆயுதமாக்கினான். இதுதான் மனிதனின் முதல் கலைப்படைப்பு. இவ்வாறாகவே கலை மனித வாழ்வில் புகத்துவங்கியது.
இந்தியச் சிற்பங்கள்
இந்தியக் கலைச்செல்வங்கள் எல்லாம் ஆத்மா அநுபூதியின் உருவகத் தோற்றம்தான். இந்திய மண்ணில் எங்கு பார்த்தாலும் கலையம்சம் வாய்ந்த கோயில்களும் கலைகளும் நிறைந்து இருக்கின்றன. இந்தியச் சிற்பம் அரச பரம்பரையோடும் சமய வளர்ச்சியோடும் ஒட்டி வளர்ந்திருக்கிறது. மன்னர்களும் சமயங்களும் மறைந்து போனாலும் சிற்பங்கள் நிலைநிற்கின்றன. அசோகர் காலத்திற்கு முன்னுள்ள மகதச்சிற்பம் குஷானர்கள் காலத்திய அமராவதி மத்துராசிற்பம் விக்கிரமாதித்தன் காலத்திய சாஞ்சி ஸ்தூபம் எல்லோராவில் ஒரே கல்லில் அமைந்த கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் இலங்கையிலுள்ள பௌத்த சிற்பங்கள் தஞ்சை ,சிதம்பரச் சிற்பங்கள், தென்பாண்டி சிற்பங்கள் எனப் பலச் சிற்பங்கள் இந்தியர்களின் சிற்பத்திறனையும் நுணுக்க உத்தியையும் காட்டுகின்றன.
இந்தியச் சிற்ப வடிவங்களைப் பற்றி ரசனை, குணதோசங்கள் ,தத்துவங்கள் குறித்து ஆங்கிலத்தில் பல நூல்கள் வந்துள்ளன. இந்தியச்சிற்பம் இதயப்பண்பினால் உயர்ந்திருக்கிறது. ஆனால் கிரேக்க சிற்பத்தில் இதுபோன்றதொரு உணர்வு நிலையை நம்மால் காண இயலவில்லை.
அயல்நாட்டு சிற்பங்களும் நம்நாட்டு சிற்பங்களும்
அயல்நாட்டு சிற்பங்கள் உருவங்களில் உள்ளவாறே கண்ணுக்குத் தோன்றுகின்றபடி அமைக்கப்படுவன. நம்நாட்டு சிற்பங்கள் உள்ளதை உள்ளபடி காட்டும் நோக்கம் உடையது அல்ல. சிற்பங்களின் மூலம் ஏதேனும் கருத்தை அல்லது உணர்ச்சியைக் காட்டும் நோக்கமுடையன. நமது சிற்பங்கள் வெறும் காட்சிபொருளாக மட்டுமில்லாமல் அதற்கு அப்பாலும் சென்று உணர்ச்சிகளைத் தூண்டவல்லன. இந்த இயல்பு சிற்பக் கலைக்கு மட்டுமின்றி நம்நாட்டின் ஓவியக்கலைக்கும் பொருந்தும். கிரேக்கச் சிற்பங்களில் வரும் தெய்வவடிவங்கள்கூட மனித உருவில் இருக்கின்றன. நல்ல கட்டுமஸ்தான உடல் வீரம், அழகு பொருந்திய உருவங்களை அவர்கள் படைத்திருக்கிறார்கள். அயல்நாட்டு சிற்பங்கள் எல்லாம் பிரகிருதி நிலைக்கு மேல் உயராதது. சுருக்கமாக கூற வேண்டுமெனில் மேல்நாட்டார் இயற்கைக்கு விரோதமின்றி நகலெடுத்து தன் உயிரை மட்டும் தருகிறார்கள். ஆனால் நம்மவர்களோ இயற்கையைத் தம்முடையதாக்கிறார்கள்.
சிற்பக்கலை வளர்ச்சி
தமிழகம் சிற்பக்கலையில் தனக்கொரு சிறப்பிடத்தைப் பெற்று திகழ்கிறது. இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் சிற்பங்களின் பொற்காலமாக கருதப்பட்டது. இக்காலச் சிற்பங்களுள் மிகச் சிறந்தது அஜந்தா,சாரநாத், பூமரா, தியோகர் போன்ற இடங்களில் காணப்படும் சிற்பங்களாகும். தமிழகத்தில் சிற்பங்கள் செய்யும் வழக்கம் இருந்துள்ளமைக்கு ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள செப்புத்திருவுருவங்கள் சான்றாகுகின்றன. மாமல்லபுரம் பல்லவர்களின் கலைக்கருவூலமாகத் திகழ்கின்றன. பாண்டியர் காலச் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடு இன்றி எளிமையாக உள்ளன. சோழர்கள் சிற்பக்கலையைப் பெரிதும் வளர்ச்சி அடையச்செய்தனர். இக்காலச் சிற்பங்களைக் கலைப்பாணி அடிப்படையில் முற்கால, இடைக்கால, பிற்கால சிற்பங்கள் எனப் பிரித்துள்ளனர்.
பிற்கால பாண்டியர்களின் சிற்பங்கள் அம்பாசமுத்திரம் ,சின்னமனூர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. நாயக்கர் காலச் சிற்பங்கள் மண்டபத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தவர் மனித உடலின் சிறப்பம்சங்களை மிடுக்குடனும் இயல்புடனும் எடுத்துக்காட்டும் புதிய முறையைக் கையாண்டுள்ளனர். இவ்வாறாக வளர்ந்து வந்த சிற்பக்கலை ஐரோப்பியர்களின் வரவால் பழைய சிறப்பினை இழந்தது.
சிற்பம் வடிக்கப்பயன்பட்ட பொருட்கள்
சங்ககாலத் தமிழர்கள் மண், மரம், தந்தத்தாலான சிற்பங்களைச் செய்தனர். இக்காலத் தச்சர்கள் நிலைப்படியில் திருமகள் உருவத்தைப் பதித்தனர். சங்கம் மருவிய காலத்தில் மண், கல், மரம், சுவர் போன்றவற்றில் அழகியச் சிற்பங்களைச் செய்தனர். பல்லவர் காலத்திற்கு முன்பு மண் ,சுதை உருவங்களால் சிற்பங்கள் செய்யப்பட்டன. மண், கல், மரம் போன்றவற்றோடு மெழுகு ,அரக்கு,பஞ்சலோகம் போன்றவற்றாலும் சிற்ப உருவங்கள் வடிக்கப்பட்டன. காஞ்சி, அரிக்கமேடு போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சி நடந்தபோது பல்வேறு சிற்பங்கள் மண் உருவங்கள்  அக்காலச் சிற்பத்திற்குச் சான்றாக விளங்கின.
சிற்பத்தின் மறைபொருட்கள்
நமது தெய்வத் திருவுருவங்கள் குறிப்புப் பொருளைப் புலப்படுத்துகின்றவை. அதாவது மறைபொருளைத் தம்முள் வைத்திருக்கின்ற தன்மையை உடையனவாகும். சைவ, வைணவர்கள் எந்த தெய்வத்திற்கு முதன்மைக் கொடுத்தார்களோ அத்தெய்வங்களுக்குக் கரங்களை மிகுதியாகக் கொடுத்தனர். இவ்விடத்தில் ஆற்றல் மிகுதியை மறைபொருளாகச் சுட்டியுள்ளனர்.
சிற்பக்கலையின் சிறப்பம்சங்கள்
சிற்பங்களை வடிப்பதில் சிற்பிகள் இயற்கைக்காட்சிகளைப் புறக்கணிப்பது இல்லை. அகத்தே தோன்றிய உணர்ச்சிகளைச் சிறப்பாக படைப்பர். சிற்பங்கள் எந்நிலையிலிருந்தாலும்- நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் அவை ஆடல் தன்மையைச் சார்ந்தனவாக இருக்கின்றன.
தமிழ் சிற்பக்கலையில் தெய்வ வடிவங்களைத் தவிர விலங்குகளின் வடிங்களையும்  இலைகள், பூக்கள், கொடிகள் ஆகியவற்றையும் ஆராய்ந்து நம் சிற்பிகள் அழகுறப் படைத்துள்ளனர். பறவை இனங்களின் வடிவங்களும் சிற்பியின் கரங்களில் தனித்தன்மையோடு மிளிர்கின்றன. தெய்வங்களின் வடிவங்களைக் காட்டும்போது ஆடை அணிகலன்களை உடலோடு ஒட்டியவாறு அமைக்கின்றனர். இறைவியின் முகத்தைத் தீட்டும்போது சிற்பிகள் முகத்தை முழுமதியிலும், கண்களை மலர்களிலும், கூந்தலை மயிற்றோகையிலும், தொடையை யானையின் துதிக்கையிலும் கண்டு ஒப்பற்ற பொலிவுடன் கூடிய சிற்பத்தை அமைக்கின்றனர்.
பல்லவர் காலத்து சிற்பங்களில் திருச்சிராப்பள்ளியின் குகைக்கோயிலும், மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களும் மிகப்புகழ் வாய்ந்தனவாகும். இதில் மகிஷாசுரமர்த்தினி சிற்பமும் அர்ச்சுனன் தவத்தைக் குறிக்கும் சிற்பமும் கோவர்த்தன மலையைத் தூக்கி கண்ணன் கோகுலத்தைக் காத்த சிற்பமும் சிறப்பு வாய்ந்தவை. சோழர்கால சிற்பங்களில் கங்கைகொண்ட சோழபுரத்து சிற்பங்களும் குடந்தை நாகேசுவரன் கோயில் சிற்பங்களும் அரங்கநாதர் கோயில் சிற்பங்களும் இவர்தம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
சிற்பம் வடிவம் உள்ளடக்கம்
சிற்ப வடிவக் கூறுகளுள் முக்கியமானவை வெளி ,பருண்மை ,கொள்ளளவு, கோடு, இயக்கம், ஒளியும் நிழலும், பொருளின் புறத்தன்மை நிறம், ஆழம், உயரம் ,அகலம் போன்றனவாகும். இவற்றுள் ஆழம் ,உயரம் ,ஆகியன தவிர ஏனைய ஓவியத்திற்கும் பொருந்துமாயினும் சிற்பம் முப்பரிமாண படைப்பாக உள்ளது. வெளியிடத்தில் உருவங்களைச் சிற்பி தோற்றுவிப்பதால் அவை பருண்மையும் உயரமும் அகலமும் உடையனவாக தோன்றுகின்றன. இவ்வாறு அமையும் சிற்பங்களுக்குக் கட்புலன் சார்ந்த அனைத்தும் உள்ளடக்கப் பொருளே ஆகும். கட்புலன் சாராத பொருளையும் கட்புலன் சார்ந்ததாய் உருவமைத்து காட்டல் சிற்ப மரமாகும்.
பல்லவர்காலச் சிற்பங்கள்
சிற்பக்கலையின் பொற்காலம் பல்லவர் காலத்திலிருந்தே தொடங்குகிறது.  மகேந்திரவர்ம பல்லவன் வல்லம் ,தளவானுர் ,மகேந்திரவாடி ,முதலான இடங்களிலும் மாமல்லையிலும் கற்கோயிலை அமைத்து சிற்பக்கலையின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உறுதுணை புரிந்தார். ஒருகல்லை முழுமையாக சிற்பமாக வடிக்கின்ற முறை இவர் காலத்தில் தோன்றியது. மாமல்லபுரம் பல்லவர்களின் கலைக்கருவூலமாகத் திகழ்கிறது. இங்குள்ள குகைக்கோயிலும் பாறைப்புடைப்புச் சிற்பங்களும் ஒற்றைக்கற் கோயில்களும் கடற்கரைக் கோயில்களும் பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றுகளாகும்.
பல்லவர்காலச் சிற்பக்கலையில் மகுடமாகத் திகழ்வது காஞ்சி கைலாயநாதர் கோயிலாகும். இங்குள்ள சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியனவாக அமைந்துள்ளன. இவர்கள் காலத்துச் சிற்பங்கள் சிறப்புடையதாக இருப்பதற்கு ஆதிச்சநல்லூர் கல்வெட்டு சான்றாக உள்ளது. மாமல்லபுரம் சிற்பங்களுள் அர்ச்சுனன் தபசு என்ற சிற்பம் குறித்து மயிலை சீனி.வேங்கடசாமிமகாபலிபுரத்து ஜைன சிற்பம்என்ற தம் நூலில் புகைப்படங்களோடு அவரது எண்ணங்களையும், பரவலாக அச்சிற்பம் குறித்து புழங்கி வரும் கதைகள் பற்றியும் மிக விரிவாக எழுதியுள்ளமை கவனிக்கத்தக்கது.
சோழர்காலச் சிற்பங்கள்
ஆலயங்கள் அமைக்கும் பணி சோழர்காலத்தில் தமிழகம் முழுவதும் விரைவாக நிகழ்ந்தன. பாடல்பெற்ற பலத் திருத்தலங்கள் இக்காலத்தில்தான் தோற்றம் பெற்றன. கருவறை, அர்த்த மண்டபம் ,மகா மண்டபம், முன்மண்டபம் பிரகாரம் என்ற முறையில் கோயிலின் அமைப்புமுறை வளர்ச்சி அடைந்தது. கோயிலின் பல்வேறு இடங்களில் தூண்கள், கோட்டங்கள், மாடங்கள் முதலான இடங்களில் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. திருவாரூர், தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் முதலான இடங்களில் அமைந்த கோயில்களில் உள்ள சிற்பங்கள் கலைநுணக்கம் மிக்கவை. இக்காலகட்டத்தில் சிற்பங்களின் முகம் வட்டவடிவில் இருக்கும். மகுடம் கூம்பு வடிவத்தில் காணப்படும். ஆயுதங்கள் கைகளின் விரல்களுக்கு இடையே வைக்கப்பட்டதாகத் தோன்றும். பூணூல் விரிவாக காணப்படும்.
நாயக்கர்காலச் சிற்பங்கள்
கி.பி.14.15 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்கள் சிற்பக்கலையின் வளர்ச்சிக்குச் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். மதுரை, திருவண்ணாமலை முதலிய இடங்களில் உள்ள சிற்பங்கள் சிறப்பு மிக்கவை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுள்ள ஆயிரங்கால் மண்டபம் அதன் நுழைவாயிலில் உள்ள அரிச்சந்திரன், சந்திரமதியின் சிற்பம் முதலியன நாயக்கர்கள் சிற்பக்கலையைச் சிறப்பாக  வளர்த்தமைக்குச் சான்றுகளாகுகின்றன. திருவாலங்காட்டிலுள்ள சிவனின் ஊர்த்தவ தாண்டவம் காரைக்காலம்மையாரின் பேய்வடிவச் சிற்பம் ஆகியன கலைநுணக்கத்தின் உச்சம் எனலாம். மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்துச் சிற்பங்கள் உலகப்புகழ் பெற்ற நாயக்கர்காலச் சிற்பத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
விஜயநகரச் சிற்பங்கள்
கி.பி.14-15,16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்கள் பலச் சிற்ப செழுமை வாய்ந்த மண்டபங்களைத் தோற்றுவித்துள்ளனர். விஜயநகர காலத்திற்கு முன்னர் தமிழகச் சிற்பங்களில் மாதர்களின் மார்பகங்கள் திறந்தே வடிக்கப்பட்டுள்ளன. புடவையால் மூடப்பட்டிருக்காது. இவர்கள் காலத்திலிருந்துதான் புடவையைக் கொண்டு மறைத்தநிலையில் இருக்கின்ற சிற்பங்களைக் காணமுடிகின்றன. இக்காலச் சிற்பங்களில் சிற்பத்தின் முகத்தில் எவ்வித உணர்வும் வெளிப்படவில்லை. மூக்கு கூர்மையாகவும் முகவாய்க்கட்டை செங்குத்தாகவும் செதுக்கப்பட்டுள்ளன. அடிவயிறானது வட்டமாகவும் சரிந்தும் காணப்படும். அக்கால சிற்பங்களில்திரிவலிஎன்று கூறப்படுகின்ற மூன்று நேர்க்கோடுகளை அடிவயிற்றிற்கு மேல் காணலாம். இக்காலத்தில்தான் நாமம் என்ற நெற்றிச்சின்னங்கள் தோன்றின.
சிற்பக்கலையின் பயன்
நாயக்க மன்னர்களால் செய்யப்பட்ட கோயில் சிற்பங்களில் குறிப்படத்தக்க மாற்றத்தைக் காணமுடிகிறது. திருமால் கோயில்களில் சிவன் தொடர்பான சிற்பங்களும் சிவன் கோயில்களில் திருமால் சார்ந்த சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. சௌந்தரராச பெருமாள் கோயில் மண்டபத்தில் திருமால் சார்ந்த சக்கரத்தாழ்வார் ,மகாவிஷ்ணு ,உலகளந்த பெருமாள் சிற்பங்களுடன் நடராஜர் ,காளி,அகோரவீரபத்திரர் போன்ற சிவன் தொடர்புடைய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் திருக்கோயிலில் பிச்சாடனர்கதை சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் வைணவ தொடர்பான ராமாயண மகாபாரத நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன. தாரமங்கலம் கைலாயநாதர் கோயிலில் ராமர் வாலியை அம்பெய்தும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் கர்ணன் அர்ச்சுனன் முதலிய பாரத கதாபாத்திரச் சிற்பங்கள் உள்ளன. குடிமிநாதர் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமாலின் பத்து அவதாரங்களும் ராமாயண கதைமாந்தர்களின் சிற்பங்களும் அனுமனின் சிற்பமும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறாக சமய ஒருமைப்பாட்டு நோக்கம் அன்றைய சிற்பங்களில் இடம்பெற்றுள்ளமையை அறிய முடிகின்றன.
முடிவாக
இக்கட்டுரையில் கலைகள் குறித்தும் ,இந்தியச்சிற்பத்தின் வளர்ச்சி நிலை, அயல்நாட்டு சிற்பத்திற்கும் நம்நாட்டு சிற்பத்திற்கும் உள்ள வேறுபாடு போன்றன சொல்லப்பட்டுள்ளன. நம் முன்னோர்கள்  எதைக்கொண்டு சிற்பங்கள் செய்தனர் என்பதும் விளக்கப்பட்டுள்ளன. சிற்பக்கலையில் இருக்கும் சிறப்பம்சம் பல்வேறு காலங்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ளன. பல்லவர் ,சோழர், விஜயநகர காலச் சிற்பங்கள் குறித்த தகவல்களும் கூறப்பட்டுள்ளன. சிற்பக்கலையில் இருந்த பயனாக சமய ஒருமைப்பாடு என்ற தகவலும் கொடுக்கப்பட்டுள்ளன. நம் தமிழரின் கலைத்திறனில் உயர்ந்த இடத்தில் இருக்கும் சிற்பக்கலை குறித்து அறிவதும் வளர்ப்பதும் இக்காலகட்டத்தின் கட்டாயம் என்று கூறுதல் பொருத்தமாகும்.
பயன்பட்ட நூல்கள்
1.   அறுபத்துநான்கு கலைகள் ,கற்பகம் கலை அறிவியல் கல்லூரி ,2005

2.  ஆய்வுக்கதிர் ,சென்னைப் பல்கலைக்கழகம் பன்னாட்டு கருத்தரங்கம் ,     மெய்யப்பன், 2006
3தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி.வேங்கடசாமி,          நாம்தமிழர் பதிப்பகம், சென்னை,2003
4. தென்னிந்திய கோயில், பி.ஆர்.ஶ்ரீநிவாசன், தென்னிந்திய மொழிகள்         புத்தக டிரஸ்ட் ,சென்னை
5தொல்தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும் ,சி.இளங்கோ        அலைகள் வெளியீட்டகம் ,2015
6நாயக்கர்கால கலைக்கோட்பாடுகள், சா.பாலுசாமி ,காலச்சுவடு,2013
7. மகாபலிபுரத்து ஜைனசிற்பம், மயிலை சீனிவேங்கடசாமி, தமிழ்நாடு      ஜைனசங்கம், சென்னை.1974.

குறிப்பு

(உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா கற்க அறக்கட்டளை, சிங்கப்பூர் மற்றும் கானல்வரி கலை இலக்கிய இயக்கம், விருத்தாசலம் இணைந்து நடத்திய  தமிழர் சிற்பங்கள் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு (13.04.2018) எழுதிய  - கட்டுரை 

3 Responses to "சிற்பக்கலை- காலமும் நயமும் - கட்டுரை "

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel