10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 6. கம்பராமாயணம் - கவிதைப்பேழை - வினா விடைகள்

Trending

Breaking News
Loading...

10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 6. கம்பராமாயணம் - கவிதைப்பேழை - வினா விடைகள்

10  ஆம்  வகுப்பு - தமிழ் - இயல் 6. கம்பராமாயணம் -  கவிதைப்பேழை -  வினா விடைகள்

 


கற்பவை கற்றபின்
 
 
வினா 1.
கம்பராமாயணக் கதைமாந்தர்களுள் எவரேனும் ஒருவர் குறித்து வகுப்பில் உரையாற்றுக.
விடை
 
கதைமாந்தர் :குகன்
 
தன் மனைவி சீதையுடனும், தம்பி இலக்குவனுடனும் இராமன் காட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் கங்கைக் கரையை அடைந்தான். அங்கே அன்பே வடிவான வேட்டுவத்தலைவன் குகன் இராமனைச் சந்தித்தான்.
 
போர்க்குணமிக்க குகனானவன் ஆயிரம் படகுகளுக்குத் தலைவன்; கங்கையாற்றுத் தோணித் துறைக்குத் தொன்றுதொட்டு உரிமையுடையவன்; பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்; மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்; துடி என்னும் பறையை உடையவன்; வேட்டை நாய்களைக் கொண்டிருப்பவன்; தோல் செருப்பு அணிந்த பெருங்கால்களை உடையவன் ; கரிய நிறத்தவன். கரிய மேகக் கூட்டம் திரண்டு வந்தாற்போல் மிகுதியான படைபலம் உடையவன்.
 
 
இத்தகைய குகன் கங்கைக் கரையின் பக்கத்திலுள்ள சிருங்கிபேரம் என்னும் நகரில் வாழ்பவன். அவன் முனிவர் தவச்சாலையில் உள்ள இராமனைக் காண தேனும் மீனும் கொண்டு சென்றான் (அரசன், குரு, தெய்வம் ஆகியோரைக் காணச் செல்லும் போது வெறுங்கையோடு செல்லலாகாது என்பது தமிழ் மரபு).
 
இராமனைக் கண்டதும் இருள் போன்ற நீண்ட முடியுடைய தலை மண்ணில் படியக் கீழே விழுந்து வணங்கினான். பின், எழுந்து வாயை கையால் பொத்தி, உடலை வளைத்து அடக்கமாய் நின்றான். இராமன் அவனை தன் அருகில் அமருமாறு கூறியும் மரியாதை நிமித்தமாக அவன் அமரவில்லை .
 
 
 
குகனின் அன்பு மற்றும் மரியாதையைக் கண்ட இராமன் குகனிடம், உள்ளத்து அன்பு முதிர்வினால் நீ கொண்டு வந்த இந்தப் பொருட்கள் எத்தன்மையதாய் இருந்தாலும் அமுதத்தைவிட சிறந்தனவே. அன்பு கலந்ததனால் தூயனவே. நான் இதை ஏற்றுக் கொண்டதே விரும்பி உண்டதற்குச் சமம் என்றான்.
 
மேலும் குகனிடம், முன்னர் நாங்கள் உடன்பிறந்தோர் நால்வராய் இருந்தோம் ; விரிந்த அன்பினால் உன்னோடு ஐவரானோம் என்றான் இராமன்.
 
பாடநூல் வினாக்கள்
 
பலவுள் தெரிக
 
வினா 1.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
விடை
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
 
 
குறுவினா
 
வினா 1.
உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்
காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
விடை
 
கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.
வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.

சிறுவினா
 
வினா 1.
கடற்கரையில் உப்புக்காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதியில் மலைப்பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன – காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும் பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

விடை


 
நெடுவினா
 
வினா 1.
சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொகுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட…
 
இவ்வுரையைத் தொடர்க.
விடை
தண்டலை மயில்களாட தாமரை விளக்கத் தாங்கக்,
கொண்டல் கண் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத், தேம்பிழி மகரயாழின்
வண்டுகளி னிதுபாட மருதம் வீற்றி ருக்கும்மாதோ.
 
 
 
தண்டல மயில்கள் ஆட என்னும் பாடலில் கம்பரின் கவித்திறம்,
சோலையை நாட்டிய மேடையாகவும்
மயிலை நடன மாதராகவும்
குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும்
தாமரை மலரை விளக்காகவும்
மேகக்கூட்டங்களை மத்தளமாகவும்
வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும்
பார்வையாளர்களைக் குவளைமலர்களாகவும் சித்தரித்து
தன் கவித்திறனைச் சான்றாக்குகிறார்.
 
 
இந்தப் பாடலில் கம்பனின் சொல்லாட்சி மாண்புறச் செய்கின்றன. கம்பனின் கவித்திறம், தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உத்திகள் அனைத்தையும் நாம் நினைத்துப் பார்த்தால் கம்பன் தமிழுக்குக் கிடைத்த வரம் எனலாம்.
 
படைப்பாளி தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, தான் வீழ்ந்த பின்னரும் வாழ்கின்றான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் கம்பன் இன்றும் தன் சந்தக் கவிதையோடு வாழ்ந்து வருகின்றான்.
 
 
 
காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும் சாகாது
கம்பனவன் பாட்டு, அது
தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு
 
எனக் கண்ணதாசன் கம்பனைப் பாடுகிறார். இது அவரது கவித்திறனுக்குச் சான்று.
 
கம்பன் கவிகளை எழுதுவதற்கு முன்னர் அவன் ரசிக்கிறான். ரசித்ததை அனுபவித்து, அதனுள் கரைந்து விடாமல் படிக்கும் வாசகனை உள்ளே இழுத்து வருகிறான். தன் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓசை நயத்தை உருவாக்குகிறான். தம்மை உச்சிக்குக் கொண்டு சேர்க்கிறான்.
 
 
உதாரணமாக,
தாடகை என்ற அரக்கியைக் கம்பர் உருவாக்குகிறார்.
இறைக்கடை துடித்த புருவங்கள் எயிறு என்னும்
பிறைக்கிடை பிறக்கிட மடித்த பிலவாயள
மறக்கடை அரக்கி – என எவ்வளவு அழகாக தன் கவித்திறனைப் பதிவு செய்கிறார்.
 
கம்பனின் கவிதை மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ அதில் ஒன்று சந்தம். ஓசை தரும் இன்பம் ஒரு கோடி இன்பம் என்பதற்கு ஏற்ப,
கம்பர் கங்கை காண் படலத்தில்,
 
 
 
ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ
வேழ நெடும் படை……..
 
எனத் தொடங்கும் பாடல் உலக்கையால் மாறி மாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம் இடிக்கும் காட்சியைக் கம்பர் கண்முன் எழுப்புகிறார்.
 
உறங்குகின்ற கும்பகன்ன! வுங்கண் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!
 
 
மேற்சொன்ன கவிதைகளை உற்று நோக்கும்போது சந்தக் கவிதையில் சிறகடித்துப் பறக்கும் தமிழ் நெடிய உலகில் கம்பனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அறியமுடிகிறது.
 
கூடுதல் வினாக்கள்
 
இலக்கணக் குறிப்பு.
 
தண்டலை, வெய்யோன், நெடுந்திரை, நெடும்படை, புதுமணல் – பண்புத்தொகைகள்
சண்பகக்காடு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கிடந்து, கடந்து, விழித்து – வினையெச்சங்கள்
நோக்க – பெயரெச்சம்
மறிகடல், விரிசோதி – வினைத்தொகைகள்
எழுந்திராய்! எழுந்திராய்! – அடுக்குத்தொடர்
உறங்குவாய்! உறங்குவாய்! – அடுக்குத்தொடர்
காலதூதர் – உருவகம்
 
பகுபதஉறுப்பிலக்கணம். உறுப்பிலக்கணம்.


 
பலவுள் தெரிக
 
வினா 1.
பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?
அ) சரயு ஆறு
ஆ) கங்கை ஆறு
இ) நர்மதை ஆறு
ஈ) யமுனை ஆறு
விடை
அ) சரயு ஆறு
 
 
வினா 2.
கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?
அ) செண்பகம்
ஆ) கமுகு
இ) குருக்கத்தி
ஈ) கொன்றை
விடை
இ) குருக்கத்தி
 
வினா 3.
கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் எது?
அ) இராமகாதை
ஆ) இராமாயணம்
இ) கம்பராமாயணம்
ஈ) இராமாவதாரம்
விடை
ஈ) இராமாவதாரம்
 
 
 
வினா 4.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்
ஆ) அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம், கங்கை காண் படலம்
இ) யுத்தகாண்டம் – கும்பகருணன் வதைப் படலம்
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்
விடை
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்
 
 
வினா 5.
கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று பெருமைப்படுபவர் …………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) கம்பதாசன்
விடை
அ) பாரதியார்
 
வினா 6.
கம்பர் பிறந்த ஊர் …………….
அ) திருவழுந்தூர்
ஆ) திருக்கடையூர்
இ) திருவாரூர்
ஈ) திருவெண்காடு
விடை
அ) திருவழுந்தூர்
 
வினா 7.
கம்பராமாயணத்திலுள்ள காண்டங்கள்…………….
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) ஒன்பது
விடை
அ) ஆறு
 
 
வினா 8.
கம்பர் பிறந்த நாடு …………….
அ) பாண்டிய நாடு
ஆ) சோழ நாடு
இ) சேரநாடு
ஈ) பல்லவ நாடு
விடை
ஆ) சோழ நாடு
 
வினா 9.
சடையப்ப வள்ளலின் ஊர் …………….
அ) தென்காசி
ஆ) திருவெண்ணெய் நல்லூர்
இ) திருநெல்வேலி
ஈ) திருவழுந்தூர்
விடை
ஆ) திருவெண்ணெய் நல்லூர்
 
 
 
வினா 10.
விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்று புகழப்பட்டவர் …………….
அ) புகழேந்தி
ஆ) செயங்கொண்டார்
இ) கம்பர்
ஈ) ஒட்டக்கூத்தர்
விடை
இ) கம்பர்
 
 
வினா 11.
கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) சரசுவதி அந்தாதி
ஆ) பதிற்றுப் பந்தாதி
இ) திருக்கை வழக்கம்
ஈ) ஏரெழுபது
விடை
ஆ) பதிற்றுப் பந்தாதி
 
வினா 12.
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்ற புலவர் …………….
அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்
விடை
அ) கம்பர்
 
வினா 13.
உறங்குகின்ற கும்பகன்ன! என்னும் பாடல் இடம் பெற்றுள்ள காண்டம் …………….படலம்…………….
அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
ஆ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
இ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
ஈ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
விடை
அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
 
வினா 14.
தாதுகு சோலைதோறுஞ் – என்று ஆற்றின் அழகை வர்ணிக்கும் கம்பராமாயணத்தின் காண்டம் எது? படலம் எது?
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்
விடை
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்]
 
வினா 15.
ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது …………….
அ) சரயு
ஆ) யமுனை
இ) பிரம்மபுத்திரா
ஈ) கங்கை
விடை
அ) சரயு
 
 
 
வினா 16.
தண்டலை மயில்களாட – என்று இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதால் தோற்றமாகக் கம்பன் எடுத்தியம்பும் காண்டம்…………….
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப்படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்
விடை
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
 
 
வினா 17.
வண்மையில்லை என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது…………….
அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
ஆ) பலவற்றின் இருப்பால் சிலவற்றைக் காண இயலாமல் போவதை
இ) அல்வழி நல்வழி அறிதல்
ஈ) இயற்கைக் காட்சிகளை மனிதர்களோடு ஒப்பிடல்
விடை
அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
 
வினா 18.
ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவா ரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?’ இப்பாடலில் அமைந்த நயங்கள் யாவை?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) அந்தாதி
விடை
அ) எதுகை
 
வினா 19.
பொருத்திக் காட்டுக.
i) தாதுகு சோலை – 1. ஆற்றுப்படலம்
ii) தண்டலை மயில்களாட – 2. நாட்டுப்படலம்
iii) வெய்யோன் ஒளி – 3. கங்கைப்படலம்
iv) ஆழ நெடுந்திரை – 4. கங்கை காண் படலம்
அ) 1, 2, 3, 4
இ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
ஈ) 1, 4, 3, 2
விடை
அ) 1, 2, 3, 4
 
 
குறுவினா
 
வினா 1.
கம்பரின் பெருமையைச் சுட்டும் தொடர்கள் யாவை?
விடை
 
கல்வியில் பெரியவர் கம்பர்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்.
வினா 2.
கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?
விடை
 
சரசுவதி அந்தாதி
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
வினா 3.
கம்பராமாயணம் குறிப்பு வரைக.
விடை
 
இராமனது வரலாற்றைக் கூறும் நூல்.
கம்பர் தம் எழுதிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
ஆறு காண்டங்களை உடையது.
சந்தநயம் மிக்கது.
வினா 4.
சரயு ஆறு எவ்விடங்களிலெல்லாம் பரவிப் பாய்ந்ததாக கம்பர் குறிப்பிட்டுள்ளார்?
விடை
 
மகரந்தம் சிந்துகின்ற சோலைகள்
புதுமணல் தடாகங்கள்
அரும்புகள் மலரும் பொய்கைகள்
நெல்வயல்கள்
 
 
வினா 5.
கோசல நாட்டில் எவையெல்லாம் இல்லை? ஏன்?
விடை
 
வறுமை இல்லாததால் அங்கே கொடை இல்லை.
நேருக்கு நேர் போர் புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை.
பொய்மொழி இல்லாததால் மெய்மை தனித்து விளங்கவில்லை.
கேள்விச் செல்வம் மிகுந்திருப்பதால் அறியாமை இல்லை.
வினா 6.
இராமனின் வடிவை எவற்றிற்கெல்லாம் உவமையாக்கியுள்ளார் கம்பர்?
விடை
 
மை
நீலக்கடல்
பச்சை நிற மரகதம்
கார்மேகம்
வினா 7.
கங்கை காண் படலத்தில் வேடனின் கூற்றை எழுதுக.
விடை
 
யானைகள் கொண்ட சேனையைக் கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில் வீரனல்ல நான்.
இராமனுடைய தோழமையை எண்ணாமல் ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றை அவர்கள் தனியே கடந்து போக விடலாமா?
அவ்வாறு செய்தால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என்று உலகத்தார் என்னைப் பழிசொல்ல மாட்டார்களா? என்று கூறினான்.
 
சிறுவினா
 
வினா 1.
கம்பர் குறிப்பு வரைக.
விடை
ஆசிரியர் பெயர் : கம்பர்
பிறந்த ஊர் : சோழ நாட்டில் உள்ள திருவழுந்தூர்
ஆதரித்தவர் : திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்
பெற்ற சிறப்புகள் : கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்
இயற்றிய நூல்கள் : கம்பராமாயணம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏர்
எழுபது, சிலை எழுபது.
 
வினா 2.
இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் கவி எவ்வாறு காட்டுகிறது. (அல்லது) மருதம் எவ்வாறு வீற்றிருக்கிறது?
விடை
 
குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆடின.
விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்றின.
சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழுந்தன.
மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல் காட்சியளித்தன.
நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிந்தன.
மகர யாழின் தேன் ஒத்த இசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருந்தது.
வினா 3.
சரயு ஆறு பாய்ந்து வருவதைக் கம்பர் எவ்வாறு காட்சிப்படுத்துகின்றார்?
விடை
 
மகரந்தம் சிந்தும் சோலைகள்,
மரங்கள் மிகுந்த செண்பகக் காடுகள்,
அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள்,
புதுமணல் குளங்கள்,
குருக்கத்தி வேலியுள்ள பாக்குத் தோட்டங்கள்
நெல் வயல்கள் – இவை அனைத்தும் பரவிப் பாய்கிறது. சரயு ஆறு, ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கின்றது.
 
வினா 4.
கும்பகருணனைக் கம்பர் தம் கவிநயத்தால் எவ்வாறு எழுப்புகிறார்?
விடை
 
உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது.
அதனைக் காணபதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த எமனுக்குத் தூதரானவர் கையில் இனிப்படுத்து உறங்குவாயாக!
 
நெடுவினா
 
வினா 1.
கம்பரின் கவிக்காட்சிகளை (வருணனைத் திறம்) விளக்குக.
விடை
சரயு ஆறு:
 
மகரந்தம் சிந்தும் சோலைகள்,
மரங்கள் மிகுந்த செண்பகக் காடுகள்,
அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள்,
புதுமணல் குளங்கள்,
குருக்கத்தி வேலியுள்ள பாக்குத் தோட்டங்கள்
நெல் வயல்கள் – இவை அனைத்தும் பரவிப் பாய்கிறது. சரயு ஆறு, அது ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கின்றது.
மருதம் வீற்றிருத்தல்:
 
குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆடின.
விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்றின.
சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழுந்தன.
மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல் காட்சியளித்தன.
நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிந்தன.
மகர யாழின் தேன் ஒத்த இசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருந்தது.
 
கும்பகருணனை எழுப்புதல்:
 
உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது.
அதனைக் காணபதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த எமனுக்குத் தூதரானவர் கையில் இனிப்படுத்து உறங்குவாயாக!

0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 6. கம்பராமாயணம் - கவிதைப்பேழை - வினா விடைகள் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel