சொல்லைத்
தனிச்சொல் என்றும், தொடர்ச்சொல் என்றும்
பகுத்துக்கொள்வது நம் தமிழ் மரபு. தொடர்ச்சொல்லில்
தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் எனக் கொள்ளப்படும் மொழி நிலைகள் உள்ளன. தொல்காப்பியம் தொகைநிலைத் தொடரைத் தொகைமொழி என்று
குறிப்பிடுகிறது. தொகாமல் வரும் அத்தொடரைத் தொகாநிலைத் தொடர் என்றும் தொக்கு வரும் நிலையைத் தொகைநிலை என்றும்
குறிப்பிடலாம் என்கிறார் முனைவர்
ச.அகத்தியலிங்கம். மேலும் இரண்டாவதில்
உம்மைச் சொற்கள் தொக்கு (மறைந்து)
வருவதால் அத்தொடரைத் தொகைநிலைத்தொடர், அல்லது ‘தொகை’ என்றும்
அந்நிலையைத் தொகைநிலை என்றும்
குறிப்பிடுகிறார்.
சொல் ஒன்றனோடு ஒன்று பொருட் பொருத்தமுறத்
தொடர்வது தொடர் என விளக்குகிறார் தனது நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
என்ற நூலில் அ.கி.பரந்தாமனார்.
இரு சொற்கள் இருந்து நடுவில் எச்சொல்லும், பொருள்
கொள்ளும்போது மறையாதிருந்தால் தொகா நிலைத் தொடர் எனப்படும். தொகா நிலைத்தொடரில்
இரு சொற்களின் நடுவில் ஒன்றும் மறைந்திருக்காது. தொகைநிலைத் தொடரில் ஏதாவது
மறைந்திருக்கும். இரண்டும் தொடர்களாக இருப்பதால் வேறுபாடு காட்டும் பொருட்டுச்
சுருக்கமாகத் தொகாநிலைத் தொடரைத் தொடர் என்றும் தொகைநிலைத் தொடரைத் தொகை என்றும்
கூறுவர் என்கிறார் அ.கி.பரந்தாமனார்
தொகைநிலைத்
தொடரானது
1.வேற்றுமைத்தொகை,
2.
வினைத்தொகை,
3.
பண்புத்தொகை,
4.
உம்மைத்தொகை,
5.
உவமைத்தொகை,
6.
அன்மொழித்தொகை என ஆறு வகப்படும்.
வேற்றுமை
வினைபண்பு உவமை உம்மை
அன்மொழி
எனஅத் தொகைஆறு ஆகும். (நன்னூல் - 362)
இந்த
ஆறில் உம்மைத்தொகை மட்டும் சில இடங்களில் இருசொல் நடை உடையது.
ஏனையவை ஒருசொல் நடை கொண்டவை.
பெயரொடு
பெயரும் வினையும் வேற்றுமை
முதலிய
பொருளின் அவற்றின் உருபு இடை
ஒழிய
இரண்டு முதலாத் தொடர்ந்து ஒரு
மொழிபோல்
நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல் (நன்னூல் 361)
வேற்றுமைத்
தொகையே,
உவமத் தொகையே,
வினையின்
தொகையே,
பண்பின் தொகையே,
உம்மைத்
தொகையே,
அன்மொழித் தொகை, என்று
அவ்
ஆறு'
என்ப,- தொகைமொழி நிலையே'. (தொல்காப்பியம் 2-412)
'உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே
பலர்சொல்
நடைத்து'
என மொழிமனார் புலவர். (தொல்காப்பியம் 2-421)
எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய (தொல்காப்பியம் 420)
என்பனவற்றின்
மூலம் இதனை நாம் அறியலாம்,
தொகைநிலைத் தொடர்
தொகைநிலைத்தொடர்
என்பது,
வேற்றுமை உருபுகள் முதலிய உருபுகள் நடுவே மறைந்து நிற்க, இரண்டு முதலிய சொற்கள் ஒரு சொல் தன்மையில் தொடர்வதாகும். ஒரு சொல் தன்மை
என்பது பிளவுபடாது நிற்பதாகும்.
தொகைநிலைத்
தொடரில்,
1)
பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல் தொடரும்.
2)
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல் தொடரும்.
3)
வினைச்சொல்லோடு பெயர்ச்சொல் தொடரும்.
4)
வினைச்சொல்லோடு வினைச்சொல் தொடராது.
5)
இடை, உரிச் சொற்கள் தொடரா.
6)
ஒரு சொல்லோடு மற்றொரு சொல், பொருள்
புணர்ச்சியில் தொடரும்.
7)
சொற்களுக்கு இடையே உருபுகள் மறைந்து வரும்.
8)
இரண்டு முதலாகப் பல சொற்கள் தொடரும்.
9)
பல சொற்கள் தொடரினும் ஒரு சொல்போல் விளங்கும்.
10)
உருபோடு சொல்லும் மறைந்து வரும்.
11)
தொகை என்னும் சொல் உருபு மறைதல் எனப் பொருள்படும்.
பெயரொடு
பெயரும் வினையும் வேற்றுமை
முதலிய
பொருளின் அவற்றின் உருபுஇடை
ஒழிய
இரண்டு முதலாத் தொடர்ந்துஒரு
மொழிபோல்
நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல். (நன்னூல்-361)
1.வேற்றுமைத்
தொகை
வேற்றுமை
எட்டு வகைப்படும். அவை,
1)
முதல் வேற்றுமை
2)
இரண்டாம் வேற்றுமை
3)
மூன்றாம் வேற்றுமை
4)
நான்காம் வேற்றுமை
5)
ஐந்தாம் வேற்றுமை
6)
ஆறாம் வேற்றுமை
7)
ஏழாம் வேற்றுமை
8)
எட்டாம் வேற்றுமை
இவற்றில்
முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனப்படும்.
எட்டாம் வேற்றுமை, விளி வேற்றுமை எனப்படும். எழுவாய்
வேற்றுமை, விளி வேற்றுமை இரண்டிற்கும் உருபுகள் இல்லை. ஏனைய
ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உள்ளன.
ஆறு
வேற்றுமை உருபுகளும் வெளிப்பட்டு நின்றும் மறைந்து நின்றும் சொற்றொடரில் தம்
பொருள் உணர்த்தும். உருபுகள் தோன்றாமல் மறைந்து நின்று சொற்றொடரில் பொருள்
உணர்த்தும் தொடர்களே வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்கள் எனப்படும். வேற்றுமைகளும்
அவற்றிற்குரிய உருபுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1)
இரண்டாம் வேற்றுமை - ஐ
2)
மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு
3)
நான்காம் வேற்றுமை - கு
4)
ஐந்தாம் வேற்றுமை - இன், இல்
5)
ஆறாம் வேற்றுமை - அது, ஆது
6)
ஏழாம் வேற்றுமை - கண்
தொகை
என்பது உருபு மறைதல் என்பதால் தொகைநிலைத்தொடரில் வேற்றுமைத்தொகை என்பது இரண்டாம்
வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைத்தொகைகளையே குறிக்கும்.
இரண்டு
முதலாம் இடைஆறு உருபும்
வெளிப்படல்
இல்லது வேற்றுமைத் தொகையே (நன்னூல் - 363)
இவ்வேற்றுமைத்தொகைநிலைத்தொடர்,
வேற்றுமை உருபு மட்டும் மறைந்து வருதல், வேற்றுமை
உருபும் பயனும் சேர்ந்து மறைந்து வருதல் என இரண்டு வகைப்படும்.
சான்று :
பால்
குடித்தான் -இரண்டாம் வேற்றுமைத் தொகை
பால்
குடம் -இரண்டாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்க தொகை
தலை
வணங்கினான் -மூன்றாம் வேற்றுமைத் தொகை
பொன்
வளையல்-மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
என்
மகள்-நான்காம் வேற்றுமைத் தொகை
குழந்தைப்
பால்-நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஊர்
நீங்கினான்-ஐந்தாம் வேற்றுமைத் தொகை
வாய்ப்பாட்டு -ஐந்தாம் வேற்றுமைத் உருபும் பயனும்
உடன்தொக்க தொகை
நண்பன்
வீடு -ஆறாம் வேற்றுமைத் தொகை
மலைக்
கோயில்-ஏழாம் வேற்றுமை
தண்ணீர்ப்
பாம்பு-ஏழாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன் தொக்க தொகை
ஆறாம்
வேற்றுமை,
உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்; உருபும்
பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை.
2.
வினைத்
தொகை
வினைத்தொகை
என்பது,
பெயரெச்சத் தொடராகும். பெயரெச்சமாக வரும் வினையில், பெயரெச்சத்தின் விகுதியும், காலம் காட்டும்
இடைநிலையும் கெட்டு, வினையின் முதல்நிலை மட்டும் நின்று
அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும். அதனால் வினைத்தொகையைக் காலம் கரந்த பெயரெச்சம்
என்பர். கரந்த என்றால் மறைந்த என்பது பொருள்.
சான்று : வீசு தென்றல்
இத்தொடரை
விரித்துக் கூறும்பொழுது, வீசிய தென்றல்,
வீசுகின்ற தென்றல், வீசும் தென்றல் என
முக்காலத்திற்கும் பொருந்திவரக் காணலாம். இவ்வாறு வினைத்தொகை முக்காலமும் குறித்து
வருமானால் அவை முக்கால வினைத் தொகைகள் எனப்படும்.
வீசிய,
வீசுகிற, வீசும் என்னும் பெயரெச்சங்களின்
விகுதியும் காலமும் கெட்டு, வீசுதல் என்னும் தொழிலின்
முதல்நிலையான வீசு என்பது மட்டும் நின்று, தென்றல் என்னும்
பெயரொடு வந்து வினைத்தொகை ஆயிற்று.
சில
வினைச் சொற்களின் வினைப் பகுதியான முதல் நிலை விகாரப்பட்டும் வினைத்தொகை வரும்.
சான்று : வருபுனல்
இவ்வினைத்தொகையில்
வா என்னும் வினைப் பகுதியான முதல்நிலை வரு எனத் திரிந்து புனல் என்னும் பெயரோடு
வந்தது.
கூடுதலாக
சில சான்றுகள் – கடிநாய், சுடுகாடு, கொல் களிறு, ஆடுகளம்,
ஓடு தளம்
காலம்
கரந்த பெயரெச்சம் வினைத்தொகை (நன்னூல் - 364
3.
பண்புத் தொகை
பண்புத்
தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு
மறைந்து நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப் பெயர் தொடர்வதாகும். இவ்வாறு பண்புப் பெயருக்கும், அது
தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையில் ‘மை’ என்னும் பண்பு விகுதியும் ,
ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து
வருவது பண்புத் தொகை எனப்படும்.
பண்புத் தொகையையும் வண்ணம்,
வடிவம், அளவு, சுவை
ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து நிற்பர் இலக்கணிகள் எனச் சுட்டுகிறார் முனைவர் ச.
அகத்தியலிங்கம்.
பண்பு
என்பது வண்ணம், வடிவம், அளவு,
சுவை முதலியனவாகும்.
பண்பை
உடையது எதுவோ அது பண்பி எனப்படும்.
ஆகிய
என்பது,
பண்புக்கும் பண்பிக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதற்காக வரும்
இடைச்சொல். இதனைப் பண்பு உருபு என்பர்.
சான்று :
செந்தாமரை
- வண்ணப் பண்புத் தொகை
வட்ட
நிலா -
வடிவப் பண்புத் தொகை
முத்தமிழ் -
அளவுப் பண்புத் தொகை
இன்சொல் -
சுவைப் பண்புத் தொகை
இவை
விரியும்பொழுது, செம்மையாகிய தாமரை, வட்டமாகிய நிலா, மூன்றாகிய தமிழ், இனிமையாகிய சொல் என விரியும்.
மேலே
கூறிய எடுத்துக்காட்டுகளில் செந்தாமரை என்பது செம்மை ஆகிய தாமரை என விரியும் எனப்
பார்த்தோம். இவற்றுள் செம்மை என்பது பண்பு; ஆகிய
என்பது பண்பு உருபு; தாமரை என்பது பண்பி. இதேபோல மற்ற
எடுத்துக்காட்டுகளைப் பிரித்து அறிந்து கொள்க.
பண்புத்தொகையில்
ஒருவகை இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது,
ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப்
பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ ஒரு பொருள் குறித்து
வருவதாகும்.
சான்று :
தலைவர்
அப்துல்கலாம்
பலா
மரம்
முதல்
தொடரில் தலைவர் என்னும் சொல் பொதுப் பெயர். அப்துல்கலாம் என்னும் பெயர் சிறப்புப்
பெயர். இத்தொடர் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயர் தொடர வந்த இருபெயரொட்டுப்
பண்புத்தொகை. பொதுப் பெயரும் சிறப்பு பெயரும் ஒருவரையே குறித்து வந்தது
கவனிக்கத்தக்கது.
இரண்டாம்
தொடரில் பலா என்பது மர வகைகளில் ஒன்றின் சிறப்புப் பெயர். மரம் என்பது பொதுப்
பெயர். இத்தொடர் சிறப்புப் பெயரொடு பொதுப் பெயர் தொடர வந்த இருபெயரொட்டுப் பண்புத்
தொகை. சிறப்புப் பெயரும் பொதுப் பெயரும் ஒரு பொருளையே குறித்து வந்தன.
தலைவர்,
பலா என்னும் சொற்கள் பண்புப் பெயர் ஆகாவிடினும் பண்புத் தொகை போல
ஆகிய என்னும் உருபு பெற்று ஒரு பொருளைச் சிறப்பிப்பதனால் இத்தொடர்கள் பண்புத்
தொகைத் தொடர்களாகக் கருதப் பெறுகின்றன.
வட்டத்தட்டு
– வடிவம்
இத்தொடர் ‘வட்டமானதட்டு’ எனப் பொருள் தருகிறது.
வட்டம் என்னும் பண்புப் பெயர் வடிவத்தைக் குறிப்பதால் இதனை வடிவப் பண்புத் தொகை
எனக் கூறுவர்.
முத்தமிழ் – எண்
இத்தொடர் மும்மையாகிய தமிழ் என விரியும். மும்மை
என்னும் பண்புப் பெயர் எண்ணிக்கையாகிய அளவைக் குறிப்பதாகும். எனவே இதனை அளவுப்
பண்புத் தொகை என வழங்குவர்.
பண்பை
விளக்கும் மொழிதொக் கனவும்
ஒருபொருட்கு
இருபெயர் வந்தவும் குணத்தொகை (நன்னூல்-365)
இரு
பெயரொட்டுப் பண்புத்தொகை
தமிழ்மொழி
இத்தொடர் தமிழாகிய மொழி என விரிகிறது. மொழி
என்பது அனைத்து மொழிகளையும் சுட்டும் பொதுப் பெயராகும். தமிழ் என்பது பல மொழிகளுள்
ஒன்றாகிய தமிழைக் குறிப்பாகச் சுட்டுவதால் சிறப்புப் பெயராகும். இவ்விரு
சொற்களுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு
சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று,
இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கு வருவது இரு பெயரொட்டுப்
பண்புத் தொகை எனப்படும்.
4.
உவமைத் தொகை
உவமைத்
தொகை என்பது, போல முதலிய உவமை உருபுகள்
மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல் தொடர்வதாகும்.
போல என்பதோடு புரைய, ஒப்ப, உறழ,
அன்ன, இன்ன முதலியனவும் உவம உருபுகளாகும்.
சான்று : பவளவாய்
இது
பவளம் போலும் வாய் என விரியும். இவற்றுள், பவளம்
என்பது உவமானம்; போலும் என்பது உவமை உருபு; வாய் என்பது உவமேயம். (உவமானம் - உவமையாகும் பொருள்; உவமேயம் - உவமிக்கப்படும் பொருள்.) இவ்வுவமைத் தொகை வினை, பயன், மெய், உரு என்பன பற்றி
வரும். (மெய் - வடிவம்; உரு - வண்ணம்.)
சான்று :
புலி
மனிதன் - வினையுவமைத் தொகை
மழைக்கை - பயனுவமைத்
தொகை
துடியிடை - மெய்யுவமைத் தொகை
பவளவாய் - உருவுவமைத் தொகை
இவை
விரியும் பொழுது, புலி போலும் மனிதன்,
மழை போலும் கை, துடி போலும் இடை, பவளம் போலும் வாய் என விரியும்.
உவம
உருபிலது உவமத் தொகையே (நன்னூல் - 366)
5.
உம்மைத் தொகை
அளவுப்
பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய
உருபு மறைந்து நிற்பது உம்மைத் தொகை எனப்படும். அவ்வளவுகள் எண்ணல்,
எடுத்தல், முகத்தல், நீட்டல்
என்னும் நான்கு ஆகும்.
சான்று :
ஒன்றேகால் -எண்ணல் அளவை உம்மைத் தொகை
தொடியேகஃசு -எடுத்தல் அளவை உம்மைத் தொகை
மரக்கால்
படி-முகத்தல் அளவை உம்மைத் தொகை
அடி
அங்குலம்-நீட்டல் அளவை உம்மைத் தொகை
இவற்றை
விரித்துக் கூறும் பொழுது, ஒன்றும் காலும்,
தொடியும் கஃசும், மரக்காலும் படியும், அடியும் அங்குலமும் என விரியும்.
மற்ற
தொகைநிலைத் தொடர்களில் காணப்படாத தனிச் சிறப்பு இவ்வும்மைத் தொகைக்கு உண்டு. மற்ற
தொகைநிலைத் தொடர்களில் உருபு இரண்டு சொற்களுக்கு இடையில் மட்டுமே மறைந்து வரும்.
உம்மைத் தொகையில் இரண்டு சொற்களுக்கு இடையிலும் இரண்டாம் சொல்லின் இறுதியிலும் உம்
என்னும் உருபு மறைந்து வருவதைக் காணலாம்.
எண்ணல்
எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனும்
நான்கு அளவையுள் உம்மிலது அத்தொகை (நன்னூல்- 368)
6. அன்மொழித்
தொகை
அன்மொழி
என்பது அல் + மொழி எனப் பிரியும். அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள். மொழி
என்றால் சொல் என்று பொருள். கூறப்படும் தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத)
சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை
எனப்பட்டது. இது, வேற்றுமைத்தொகை
முதலிய ஐவகைத்தொகை நிலைத் தொடர்மொழிகளுக்கு உரிய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து
நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய
பிறசொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தல் ஆகும். இது,
1)
வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
2)
வினைத்தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை
3)
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
4)
உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
5)
உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
என
ஐந்து வகைப்படும்.
1.வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
வேற்றுமைத்
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகை முதல் ஏழாம்
வேற்றுமைத் தொகை வரை சேர்த்து ஆறு வகைப்படும்.
சான்று : பூங்குழல் வந்தாள்
பூங்குழல்
என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர்,
‘பூவையுடைய குழலை உடையாள்’ என விரியும்போது இரண்டாம் வேற்றுமைத்
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
சான்று : பொற்றொடி வந்தாள்
பொற்றொடி
என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைநிலைத் தொடர்,
‘பொன்னாலாகிய தொடியினை உடையாள்’ என விரியும்போது மூன்றாம்
வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
சான்று : கவியிலக்கணம்
கவியிலக்கணம்
என்னும் நான்காம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கவிக்கு
இலக்கணம் சொல்லப்பட்ட நூல்’ என விரியும்போது, நான்காம்
வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
சான்று : பொற்றாலி
பொற்றாலி
என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர்,
‘பொன்னின் ஆகிய தாலியினை உடையாள்’ என விரியும்போது, ஐந்தாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
சான்று : கிள்ளிகுடி
கிள்ளிகுடி
என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கிள்ளியினது
குடியிருக்கும் ஊர்’ என விரியும் போது, ஆறாம் வேற்றுமைத்
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
சான்று : கீழ் வயிற்றுக் கழலை
கீழ்
வயிற்றுக் கழலை என்னும் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை நிலைத்
தொடர்,
‘கீழ் வயிற்றின் கண் எழுந்த கழலையைப் போன்றவன்’ என விரியும்போது,
ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
2.வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
சான்று : தாழ்குழல் பேசினாள்
தாழ்குழல்
என்னும் வினைத்தொகை, ‘தாழ்ந்த குழலினை
உடையாள்’ என விரியும்போது, வினைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை எனப்படும்.
3.பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
சான்று : கருங்குழல்
கருங்குழல்
என்னும் பண்புத் தொகைநிலைத் தொடர் ‘கருமையாகிய குழலினை உடையாள்’ என விரியும்போது,
பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
4.உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
சான்று : தேன்மொழி
தேன்மொழி
என்னும் உவமைத் தொகைநிலைத் தொடர் ‘தேன் போன்ற மொழியை உடையாள்’ என விரியும்போது,
உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
5.உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
சான்று : உயிர்மெய்
உயிர்மெய்
என்னும் உம்மைத் தொகைநிலைத் தொடர் ‘உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த எழுத்து’ என
விரியும்போது, உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை எனப்படும்.
ஐந்தொகை
மொழிமேல் பிறதொகல் அன்மொழி (நன்னூல்-369)
வணக்கம்
ReplyDeleteமிகவும் எளிமையாக விளக்கமாக எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி
மிக்க நன்றி ஐயா...மகிழ்ச்சி
Deleteநன்றி பயனுள்ளதாக இருந்தது
ReplyDeleteபயனுள்ள அருமையான இலக்கண நுட்பங்கள் நிறைந்த கட்டுரை. நன்றி.
ReplyDelete