அது மனித நாகரிகம் வளராத காலம்.
மனிதனுக்கு குதிரை என்றாலே என்ன என்று தெரியாது. அப்படிப் பட்ட கால கட்டத்தில்
தான் ஒரு குதிரை ஒரு காட்டில் சுகமாக சுற்றித் திரிந்து வந்தது. ஆனால்,
அந்தக் குதிரையிடம் பொறாமைக் குணமும், எல்லாம்
தனக்கே வேண்டும் என்கிற சுயநல எண்ணமும் தலை தூக்கி இருந்தது.
அந்தக் காலம் மனிதன் இயற்கைக்கு
கட்டுப்பட்ட காலம். இதன் காரணமாக அந்தக் காட்டில் நீரோடைகளுக்கு மத்தியில் ஒரு
வளம் மிக்க பிரதேசம் இருந்து வந்தது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று புல் வெளிகள்
காண்போரின் கண்களைப் பறித்தது. பார்ப்பதற்கு அந்தப் பிரதேசம் மரகதக் கம்பளம்
விரித்தாற் போல் காட்சி தந்தது.
சுயநலத்தையே தன்னலமாக நினைத்து
வாழ்ந்து வந்த அந்தக் குதிரை அந்தப் பிரதேசத்து புல்லைத் தின்று நன்றாக கொழுத்து
இருந்தது. மேலும், அந்தப் பிரதேசத்தில்
தன்னைத் தவிர எந்த ஒரு மிருகமும் வந்து விடக் கூடாது என எண்ணியது. அப்படியே,
ஏதேனும் அப்பாவி விலங்கு அவ்விடத்துக்கு வந்தாலுமே கூட இந்தக்
குதிரை அதனை அதட்டி, மிரட்டி இறுதியில் விரட்டியே விடும்.
இப்படித் தான் பல நாட்கள் நடந்து வந்தன.
ஒரு நாள் சில மான்கள்,
அவ்விடத்துக்கு வந்து மேயத் தொடங்கின. அதனைக் கண்ட அந்தக் குதிரை
கோபத்துடன் ஓடி வந்து, "மரியாதையாக இந்த இடத்தை காலி
செய்து விடுங்கள். இது நான் மட்டுமே வாழும் இடம். இந்தப் புல் வெளிகள் அனைத்தும்
எனக்கு மட்டுமே சொந்தம்" எனக் கூறி அந்த மான்களை ஓடச்சொல்லி மிரட்டியது.
ஆனால்,
அந்த மான்கள் ஒரு பெரும் கூட்டத்துடன் வந்திருந்ததால். அவைகளில் ஒரு
மான் கூட அந்தக் குதிரையைக் கண்டு பயந்து ஓடவில்லை. மாறாக அனைத்து மான்களும் ஒன்று
சேர்ந்து அந்தக் குதிரையை பரிகசித்தன. அந்த மான்களில் ஒரு வயதான மான் அந்தக்
குதிரையை நோக்கி," ஏ! முட்டாள் குதிரையே! காடானது
மிருகங்கள் வாழ கடவுளால் உருவாக்கப்பட்டது. எனவே, இந்தக்
காட்டில் வாழும் அனைத்து மிருகங்களும் எங்கும் செல்லலாம். அதை யாரும் தடுக்க
முடியாது. இந்தச் சின்ன விஷயத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் நீ இந்தக் காட்டிற்கே
ராஜாவைப் போல பேசுகிறாயே!" என்று கூறி அதட்டியது.
பிறகு அனைத்து மான்களும்,
அந்தக் குதிரையை அலட்சியம் செய்துவிட்டு தங்கள் போக்கில் அங்கேயே
மேயத் தொடங்கியது. இறுதி வரையில் அந்த மான்களின் பெரும் கூட்டத்தை குதிரையால்
விரட்டி அடிக்க முடியவே இல்லை. இப்போது அந்தக் குதிரையின் மனதில், "இந்த மான்களைப் போலவே மற்ற மிருகங்களும் இங்கு வந்து மேய வந்து விட்டால்
நாம் என்ன செய்வது?" என்று யோசித்தது.
அப்போது சற்று தொலைவில் ஒரு
மனிதன் நிற்பதைக் கண்ட குதிரை, மான்களை
விரட்டி அடிக்க அவனுடைய உதவியை நாட முடிவு செய்தது. அடுத்த நிமிடம் அந்தப் பொல்லாத
குதிரை மனிதனை நோக்கிச் சென்றது. அப்போது குதிரை அவனிடம்.
"ஐயா! எனக்கு
நீங்கள் ஒரு பேர் உதவியைச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டது.
"நான் உனக்கு
என்ன உதவி செய்ய வேண்டும்?" என்று கேட்டான் மனிதன்.
"ஒன்றும் பெரிதாக
அல்ல. அதோ, அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் மான்களை இந்தப்
பிரதேசத்தில் இருந்தே விரட்டி அடிக்க வேண்டும். அவ்வளவு தான். அது போதும்"
என்றது அந்தக் குதிரை.
“மனிதர்கள் எப்போதுமே
பயன் கருதாமல் உதவ முன் வர மாட்டார்கள். ஆகவே, நான் உனக்கு
உதவி செய்து அந்த மான்களை விரட்டி அடிப்பதால் எனக்கு என்ன பிரயோஜனம்?” என்று கேட்டான் அந்த மனிதன்.
உடனே அந்தக் குதிரை நன்கு
ஆலோசித்தது. பிறகு அது ஒரு முடிவுக்கு வந்தது. உடனே அந்த மனிதனைப் பார்த்து,
"ஐயா, இந்தப் பிரதேசம் முழுவதும் எனக்குச்
சொந்தம் என்றாகி விட்டால், எனது முதுகின் மேல் ஏறி அமர்ந்து,
எனது வாயில் கடிவாளம் மாட்டி, அதைப்
பிடித்துக் கொண்டு சவாரி செய்ய உதவுகிறேன். மேலும், எனது
வேகமான ஓட்டத்தால் உம்மையே மெய் சிலிர்க்க வைக்கிறேன்" என்றது.
உடனே அந்த மனிதன் மான்களை
இப்போதே விரட்டுவதாகக் கூறி அந்தக் குதிரையின் வாயில் கடிவாளம் இட்டு,
அதன் முதுகில் ஏறி அமர்ந்தான். குதிரையும் அவனை சுமந்து கொண்டு வெகு
தூரம் ஓடியது. அந்த நிமிடம் அம்மனிதன் தன்னையே மறந்தான். அவனுக்கு குதிரை சவாரி
ஆச்சர்யத்தைக் கொடுத்தது. கண நேரத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தூரத்தை
அந்த மனிதன் அக்குதிரையின் உதவியால் கடந்து விட்டான். அத்துடன் இனி நடந்து
செல்லாமல் தொலை தூரப் பயணங்கள் செய்ய குதிரைச் சவாரி பயன் மிக்கது என்பதைக் கண்டு
கொண்டான்.
உடனே,
அம்மனிதனின் சுயநல எண்ணம் ஆழ்மனதில் விழித்துக் கொண்டது. குதிரை
சவாரியில் அவனுக்குக் கிடைத்த அந்த சுகானுபவத்தை அவன் விட்டு விட விரும்பவில்லை.
அதனால், அந்தக் குதிரையை விட்டு இறங்காமல் அதற்கு அவன் போட்ட
கடிவாளத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டான். அத்துடன் தனது கிராமத்தை நோக்கி அந்தக்
குதிரையை செலுத்தினான்.
அந்தக் குதிரை இப்போது மனிதனின்
செயலைக் கண்டு திகைத்தது. அத்துடன் அவனைக் கீழே தள்ள முயற்சி செய்தது. ஆனால் அந்த
மனிதன் அக்குதிரையை குரங்குப் பிடி பிடித்துக் கொண்டான் (குரங்கில் இருந்து
வந்தவன் அல்லவா!). அத்துடன் அதனை சாட்டையால் அடித்துத் துன்பப் படுத்தினான்.
இதனால் மிரண்டு போன அந்தக்
குதிரை, "மனிதனே! நீ எனது முதுகை
விட்டுக் கீழே இறங்கு. நீ நமது உடன்படிக்கையை மீறுகிறாய். எனக்கு நீ கொடுத்த அந்த
வாக்கின் படி எனது பிரதேசத்தில் மேயும் மான்களை விரட்டி அடித்து எனது பிரதேசத்தை
எனக்குக் கொடு" என்றது அந்தக் குதிரை.
ஆனால் அந்தக் குதிரையை விட அதீத
சுயநலம் எண்ணம் கொண்ட அந்த மனிதன் சிரித்துக் கொண்டே,
"மான்கள் இனிமேல் அங்கேயே மேயட்டும் நீ எனக்கு அருமையான
வாகனமாக அமைந்து விட்டாய். நான் இனி உன்னை விடமாட்டேன். அப்படி நான் உன்னை விட்டு
விட்டால் என்னை விடப் பெரிய மடையன் இந்த உலகத்தில் இல்லை” என்று கூறினான்.
“என்னை ஏமாற்றாதே,
நான் உனக்கு அடிமையாக மாட்டேன்” என்று அந்தக் குதிரை சண்டித்தனம் செய்தது.
ஆனால் அந்த மனிதனோ சிறிதும்
யோசிக்காமல் அந்தக் குதிரையை சாட்டையால் அடித்து விளாசினான். அதனால் அந்தக் குதிரையின்
வாயில் நுரை தள்ளியது. அது வேதனை தாங்க முடியாமல் அவனுக்குக் கட்டுப்பட்டது. அவனது
சொல்படி கேட்டது.
இவ்வாறு அந்தக் குதிரை அந்த
மனிதனுக்கு அடிமையாகே மாறியது.
நீதி : தனக்கே எல்லாம் வேண்டும்
என்று சுயநலமாக நினைப்பவர்களுக்கு இறுதியில் அந்தக் குதிரைக்கு நேர்ந்த கதி தான்
நடக்கும். அதனால் இந்த உலகத்தில் பொது நலத்துடனே வாழப் பழக வேண்டும். நாம்
பிறருக்கு எதைச் செய்கிறோமோ அது தான் நமக்கும் திருப்பிச் செய்யப்படும். அதனை
என்றும் மறக்கக் கூடாது.
0 Response to "மனிதன் முதன் முதலில் குதிரை சவாரி செய்த கதை "
Post a Comment