உணர்ச்சி மேலிட வைக்கும் தந்தை மகளின் பாசமே விஸ்வாசம்

Trending

Breaking News
Loading...

உணர்ச்சி மேலிட வைக்கும் தந்தை மகளின் பாசமே விஸ்வாசம்

உணர்ச்சி மேலிட வைக்கும் தந்தை மகளின் பாசமே விஸ்வாசம்


தூக்குத்தொரனா அடாவடி,  தூக்குத்தொரனா அலப்பற,  தூக்குத்தொரனா தடாலடி என்ற வசனத்தோடு இந்த ஆண்டு பொங்கலுக்குத் திரைக்கு வந்துள்ள படமே அஜீத்தின்  ’விஸ்வாசம்’  என்பதாகும். இப்படத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, ஜெகபதி பாபு, பேபி அனிகா, ரமேஷ் திலக், நாராயண் லக்கி, விஜய், விவேக் போன்றோர்  நடித்துள்ளனர்.  சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தைத்  தயாரித்துள்ளனர்.  டி.இமான் இசையில் , வெற்றி ஓளிப்பதிவில் சிவா இயக்கத்தில்., சிவா - அஜீத் கூட்டணியின் வீரம் , வேதாளம் ... விவேகம்,படங்களுக்கு அடுத்து இப்படம் வெளிவந்துள்ளது.

மகளைக் காக்க பாடுபடும் அப்பா பற்றிய கதைதான் விசுவாசம் படத்தின் மையக்கருத்து. இதில் காதல், காமெடி, சென்டிமெண்ட், அடிதடி என அஜித் ரசிகர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவையான அளவு சேர்த்து படமாக்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர் சிவா. தூக்குத்துரை.கதாபாத்திரத்தில்  அஜீத் நடித்துள்ளார். அவர் பேச்சைக் கேட்கும் அளவிற்கு முக்கியமான நபராக அவர் இருக்கிறார். திருவிழா நடத்தக் கூடாது என்று ஒரு தரப்பு சொல்ல, நடத்தவேண்டும் என்று இன்னொரு தரப்பு சொல்ல, அங்கே தூக்குத்துரை (அஜித்) என்ட்ரி ஆகிறார். திருவிழா நடத்த  முகூர்த்தக்கால் நடும்போது எல்லோரும் தம்பதி சமேதராக வந்து பூஜையில் கலந்து கொள்கின்றனர். அஜித் மனைவி இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார். இதனால் துறையை மட்டும் தனியே நிற்கிறார். குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் சொல்ல திருவிழாவில் கலந்துகொள்ள மனைவி நிரஞ்சனாவை (நயன்தாரா) அழைக்க மும்பைக்குப் பயணம் ஆகிறார் அஜீத். அந்தப் பயணத்தின்  வழியாக இப்படம் நமக்கு விரிகிறது.


 டாக்டராக இருக்கும் நயன்தாரா தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி என்ற கிராமத்திற்கு மருத்துவ முகாம் நடத்த வருகிறார். அஜித் எப்போதும் தன் கிராமத்து மக்களுக்காக வரிந்துகட்டிக்கொண்டு சந்திக்கச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.  நயன்தாரா செல்லும் வழியிலேயே தூக்குத்துரை சிலரைப்  போட்டு அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து போலீசில் புகார் கொடுக்கிறார்.  ஆனால் பின்னர் அவரே வழக்கை திரும்ப வாங்கிக் கொள்கிறார். இப்படி மோதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது. அவர்களுக்குத் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. பின்னர் சிலக் காரணங்களால் அஜித்தை விட்டு பிரிய முடிவெடுக்கிறார் நயன்தாரா.   குழந்தையுடன் மும்பை  சென்ற நயன்தாராவைப்  பார்க்க பல வருடங்கள் கழித்து செல்கிறார்  அஜித். மீண்டும் தன் குடும்பத்துடன் சேர்ந்தாரா? என்பதை மிக உணர்ச்சிப்பூர்வமாக காட்சிப்படுத்துகிறது விசுவாசம்.


 அஜித் இந்த படத்தில் இருவேறு கெட்டப்புகளில் வந்து கலக்கியிருக்கிறார். வழக்கமான சால்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் பெரிய மீசை தாடியுடன் வரும் அஜீத் மாஸ் என்றால் முழுதும் கருப்பு முடி அழகில் வரும் அஜீத் கிஸாஸ். என் ஊரு கொடுவிலார்பட்டி எனக்கு குடும்பம் குழந்தை குட்டி இருக்குபொண்டாட்டி பேரு நிரஞ்சனா , பொண்ணு பேரு அனிகா  ஆம்பளையா இருந்தா  ஒத்தைக்கு ஒத்த வாடா என்று அதிரடி மதுரை பேச்சுடன் கூடிய உருட்டல் மிரட்டல் வசனங்கள் அள்ளி விடுகின்றார் அஜித்.  தம்பி ராமையா, ரோபோ சங்கர், காமெடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனப் படம் நகர்கிறது. அஜித் மகளாக நடிக்கும் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததைவிட அனிகா இப்படத்தில் ஒருபடி மேலே சென்று நம்மை கவர்கிறார்.அவருக்கும் அஜீத்துக்குமான கெமிஸ்ட்ரி பெரிய பலமாக இருக்கிறது.
தூக்குத்துரை அஜித், ரசிகர்களுக்கு நிச்சயம் புதுசாகத்தான் தெரிகிறார்.. படம் முழுக்க வேஷ்டி, முறுக்கு மீசை, மதுரை ஸ்லாங் என புது மாடுலேஷனும் பாடி லாங்வேஜுமாக வெளுத்து வாங்குகிறார். ரோபோ சங்கருடனும் தம்பி ராமையாவுடன்  நடுவே  யோகிபாபுவுடனும் சேர்ந்து செய்யும் அலப்பறைகளுக்குத்  தியேட்டரில் விசில் சத்தம் நம் காதைக் கிழிக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் படம் பார்க்கிறவர்களுக்கும் தூக்குத்துரையைப்  பிடித்துப் போய்விடும் விதத்தில் படம் எடுத்துள்ளார் இயக்குநர் சிவா .

முக்கியமாக, படம் நெடுக அவர் பேசுகிற இங்கிலீஷுக்குத் தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது. முதல் பாதி முழுக்க அடிதடி, காமெடி, காதல் ரவுசு என அதகளம் பண்ணும் தூக்குத்துரையாகவும்  பிற்பாதியில் மகளுடனே இருந்துகொண்டு பாசத்துக்கு ஏங்கி மருகுகிற அன்பான அப்பாவாகவும் நடிப்பிலும் வெளுத்து வாங்கியுள்ளார்  அஜித்.  தூக்குத்துரையின் மனைவி டாக்டர் நிரஞ்சனாவாக, நயன்தாரா. ஆரம்பத்தில் தூக்குத்துரையின் மீது போலீசில் புகார் கொடுப்பதும் பிறகு அவரைப் புரிந்துகொள்வதும் அவருடைய அப்பாவை அழைத்து வந்து, மாப்பிள்ளை கேட்பதும் மகளைக் கொஞ்சுகிற கணவனைப் பார்த்து வியந்து நெகிழ்வதும் ஒருகட்டத்தில் கணவரை விட்டுப் பிரிந்து, மகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்லும் தருணத்திலும் என கனமான நாயகி வேடம் நயனுக்கு. கிடைக்கும் தருணங்களிலெல்லாம் நடிப்பில் அசத்துகிறார்.


ஒரு படம் வெற்றி பெறுவதற்கு என்னென்ன வேண்டுமோ அந்த இலக்கணங்களில் இருந்து இம்மியளவும் மாறாமல், அதேசமயம், ஆபாசமோ அருவருக்கத்தக்க இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாமல், அச்சுப்பிச்சு காமெடிகள், பில்டப்வசனங்கள் என எதையும் தொடாமல்,  படத்தைச் சிறப்பாக சிவா அண்ட்டீம் செய்து முடித்திருக்கிறது. ரசிகர்கள் பலவகை. .காமெடி இருந்தால்தான் பிடிக்கும், காதல் இருந்தால்தான் பிடிக்கும், சண்டைக்காட்சிகள் இருந்தால்தான் பிடிக்கும், பேமிலி ஓரியண்டட் என்றால்தான் பிடிக்கும், மெசேஜ் சொன்னால்தான் பிடிக்கும், அந்தப் பலவகை ரசிகர்களுக்கும் சேர்த்து, அஜித் கோட்டிங் கொடுத்து, ஜகஜகவென பக்கா வணிக குடும்ப  சென்டிமென்ட், என்டர்டெய்ன்மென்ட் டிரீட்டாக இப்படம் இருக்கிறது.

படத்திற்கு கூடுதல் பலமாக  ஒளிப்பதிவாளர் வெற்றி இருக்கிறார். திருவிழாவில் தொடங்கும் கதை என்பதாலோ என்னவோ, படத்தின் முதல் பாதி முழுக்க திருவிழா தோரணையில் வருவது போல், வண்ணங்கள் கூட்டி, ஜாலங்கள் செய்திருக்கிறார். கிராமத்து வயல்களையும் வாய்க்கால்களையும் பாலங்களையும் அழகாக, கேமரா வழியே புகுத்தி, நமக்குள் அந்த அழகைக் கடத்திவிடுகிறார் வெற்றி.  பிற்பாதியில் மும்பையின் அழகையும் மக்கள் கூட்டத்தின்  நெரிசலையும் சாலைகளையும் பிறந்தநாள்  கொண்டாட்ட குதூகலங்களையும் வெகு அழகாகப் படமாக்கியிருக்கிறார். அதேபோல் ரூபனின் எடிட்டிங்கும் கச்சிதம். பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் இவரின் பங்கு பிரமிக்க வைக்கிறது.


அடாவடி அலப்பறை மாஸ் என தூக்குத் துரை கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்தி உள்ளார் அஜித் முதல் பாதி முழுவதும் இளமையான அதிலும் இரண்டாம் பாதியில் வயதான அதிகம் வந்து காட்டுகின்றனர் முதல் பாதியும் இரண்டாம் பாதியில் உணர்ச்சிபூர்வமான நடிப்பையும் தந்து அதில் தன்பங்கை இந்த படத்தில் செய்துள்ளார் வீரத்தில் அண்ணன் தம்பி பாசம் நேரத்தில் அண்ணன் தங்கை பாசம் வேகத்தில் கணவன் மனைவி பாசம் தான் அதிகமாக இருந்தது அந்த வரிசையில் இதில் அப்பா மகள் பாசம் தான் அதிகமாக இருக்கின்றது முற்றிலும் வேறுபட்ட கிராமத்திலிருந்து அப்பாவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார் அஜித்

நயன்தாராவுடனான காதல், மற்றும் திருமணம், மகள் மீதான பாசம் என தன் அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான இடங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார். அஜித் தோன்றும் முதல் காட்சி, "பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா ? "எனத் தொடங்கி ., "என் கதையில் நான் ஹீரோடா "எனும் வில்லன் ஜெகபதி பாபுவிடம் ., "என் கதைல்ல நான் வில்லன்டா "என அஜித் முஷ்டி மடக்கி பேசும் பஞ்ச் வசனங்களில் அஜித் ரசிகர்களால் தியேட்டர் அல்லோலகல்லோலப்படுகிறது. 


டி.இமான் இசையில் "கண்ணான கண்ணே ... " போன்ற பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன. பின்னணி இசையும் அருமையாக அமைத்துள்ளார்.  மொத்தத்தில் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள், படக்குழு என அனைவரின் உழைப்பும் அழகாகத் தெரிகிறது. இந்தப் பொங்கல் தல அஜீத் ரசிகர்களுக்கும் மட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் படமாக விஸ்வாசம் இருக்கும். தமிழக மக்களின் நாடியைப் பிடித்து உணர்ச்சிப் பொங்க தந்தை மகள் பாசத்தைத் தொடர்ந்து நம் இயக்குநர்கள் எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்தப் பொங்கலை மகிழ்வாகக் கொண்டாட விஸ்வாசம் உதவி செய்யும். ஒரு முறை குடும்பத்துடன் சென்று ரசித்துக் கொண்டாடலாம். எத்தனை முறை எடுத்தாலும் இப்படிப்பட்ட படங்கள் தோல்வி அடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்  சிவா உள்ளளிட்ட திரைக்கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.

மயிலம் இளமுருகு,
கைப்பேசி – 9600270331,
10.01.2019, இரவு 11 மணி


0 Response to "உணர்ச்சி மேலிட வைக்கும் தந்தை மகளின் பாசமே விஸ்வாசம் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel