நூல் மதிப்புரை
முனைவர் இரா.மோகனா
நூல்- தொடர்ந்து தோற்கும்
புலிக்கடவுள்
ஆசிரியர்- பிரேமபிரபா
முதல் பதிப்பு – ஆகஸ்ட்,2017
பதிப்பகம்- பாரதி புத்தகாலயம்,சென்னை.
பக்கம்- 80, ரூபாய்- 75
கவிதை,கட்டுரை ,சிறுகதை என தொடர்ந்து
எழுத்துலகில் தன் ஆளுமைகளை செலுத்திவரும் பிரேமபிரபா “ தொடர்ந்து தோற்கும் புலிக்கடவுள்
“ என்னும் இந்நூலில் பல்வேறு எண்ணங்களை பதிவு
செய்து கருத்துக் கோர்வையாக்கித் தந்துள்ளார். இக்கருத்துக் கடலில்
25 முத்துகள் மிளிர்கின்றன. முதல் எண்ணத்தையே
நூலின் பெயராக்கி உள்ளமை சிறப்புடையது. இப்பதிவில் கடவுளிடம்
மனிதர்கள் அதிகப்படியான வேண்டுதல்களை முன்வைக்கின்றனர்.
அச்செய்திகளை ஆசிரியர் “ மக்களின் சோகங்களை
கேட்டறிந்து அதற்கான தீர்வையும் கொடுக்க நான் அதே மக்களால் பணிக்கப்பட்டிருந்தேன் . ஒருபுறம் எதிர்பார்ப்புடன்
என்னைப் படைத்தவர்கள் மறுபுறம் என்னை நம்பி என் உதவி கோரி வந்தவர்கள் மனிதர்களுக்கு
இவ்வளவு பிரச்சனைகளா ? “ என்று மனதுள் கேட்ட கடவுள் ஒரு நாள் இருந்த
இடத்தை விட்டு வெளியேறி உண்மைநிலையை கண்டறிய செல்வதும் ,வழியில் சிறுவனிடம்
நட்பு கொள்வதும் ,இறுதியில் தான் இருந்த இடத்திற்கு வந்து
பார்த்தால் அரசாங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் கோயில் இருந்ததால் அது இடிக்கப்படுவதையும்
காணுகிறார். இது போனாலும் இன்னொரு இடத்தில் கோயில் மறுபடியும்
கட்டப்படும் என்ற நம்பிக்கையில் கடவுள் நகர்ந்து செல்கிறார் என்ற செய்தியைக் கூறி எதுவும்
நிலையற்றது என்ற போதும் நம்பிக்கையிலே இவ்வுலகம் நகர்கிறது என்பதை ஆசிரியர் இக்கட்டுரையில்
பதிவு செய்துள்ளமை பாரட்டத்தக்கது .
‘”பூமியின் வடிவம்
சதுரம் என்னும் பகுதியில் உடல் ஊனமான ஒருவனின் குறைகளைச் சொல்லி அவனை ஒதுக்காது அவனுடைய
திறமைகளை வியந்துரைக்கும் தந்தையின் குணம்,தன் தந்தைக்காக
தன் பிடிவாதக் கருத்தினையும் (பூமியின் வடிவம்
சதுரம்) விட்டுக்கொடுத்து தந்தையை மகிழ்விக்கின்ற
( பூமியின் வடிவம் வட்டம் ) மகனின் பாசம் இரண்டையும்
எடுத்துக்கூறி இறுதியில் மகனின் பிடிவாத கருத்து வலுவூட்டத்தினையும் பதிவு செய்துள்ளார்.
“சொல்லாளனும் நானும்
“ என்ற தலைப்பில் பணமுதலைகள் பாட்டாளிகளை தன்
பணத்தால் விலைக்கு வாங்குகின்றனர் என்பதை புதுமையான முறையில் கூறி அதற்கு அரசியல் கட்சிகள்
ஆதரவு தருகின்ற செய்தியினையும் சொல்லியுள்ளார் . “டாக்டர் ஷிவாகோ “ என்பதில் இரு மாணவர்கள்
தங்களுக்கு இசையைக் கற்பித்த ஆசிரியை உடல்நலம் குன்றியிருக்கும் தருவாயில் அவர்களைக்
கண்டு தாம் கற்றுக்கொண்ட இசையால் அவர்களை மகிழ்வித்த செய்தியை எடுத்துரைத்துள்ளார்.
“உறுமாற்றம் “என்னும் பகுதியில்
எவ்வளவு தான் கோபம் ,வெறுப்பு ,சிடுசிடுப்பு இருக்கும்
போதும் ஒருவன் சில தருவாயில் அதை மறைத்து மறந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பலசமயங்களில் நாம்
நமக்காக வாழ்வதைவிட பிறருக்காக நம் குணங்களை மாற்றி வாழ வேண்டி உள்ளது என்பது ஆணித்தரமாக
எடுத்துரைக்கப்பட்டுள்ளது. “அந்த இளைஞன் “ இத்தலைப்பில் தந்தையின்
மகிழ்ச்சியை அழித்து மகன் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் செய்தியும் தந்தையோ
விமான நிலையத்திற்கு வரும்வழியில் தான் விற்ற வீட்டிலிருந்து ஒரு பிடி மண்ணை தன் இடுப்பில்
பத்திரமாக இருக்கிறதா என்று தடவிப் பார்க்கும் நிலையில் படிப்பவரை உணர்ச்சியின் விளிம்பில்
ஆழ்த்துகிறார் ஆசிரியர்.
“ மறுபடியும்” என்பதில்
வேலைக்குச் செல்லும் மகன்,மருமகள் பெற்றக்
கடமைக்காக பேரனைப் பார்த்துக்கொள்ளும் குமரேசன்,அம்புஜம் போன்றோரைச்
சொல்லி முதியவர்கள் தம் இறுதி நாட்களில் வாழ்க்கையின் இறுக்கத்தை தாங்கமுடியாமல் வீட்டைவிட்டு
வெளியேறும் போது குமரேசனின் மறுபடியும் என்ற சிறுகதை வெளிவந்து அவர்களின் இருண்ட வாழ்க்கையில்
நம்பிக்கை நட்சத்திரமாக அமைகிறது.
“ வெளிச்சத்தை தேடி, அழகி” என்ற பகுதிகளில்
காலவோட்டம் வாழ்க்கையை புரட்டிப்போடும் விதம்
காதல் வேறு வாழ்க்கை வேறு என்ற புரிதல் அவரவர் வாழ்க்கையை அவரவரே வாழ வேண்டும் என்ற
யதார்த்த நிலை சொல்லப்பட்டுள்ளது. அப்பர் மிடில் கிளாஸ்
மாலினி எனும் பகுதியில் தனக்கு கீழ் உள்ளவரை துச்சமாக நினைக்காதே உனக்கு மேல் இருப்பவர்
உன்னை ஒரு எச்சமாக நினைப்பர் என்ற கருத்தினை சவுக்கால் அடித்தது போல் சொல்லியுள்ளார்.
வடகிழக்கு மூலை
என்பதில் வாஸ்து பற்றிய நம்பிக்கை இன்மையையும் பிராஜெக்ட் X எனும் தலைப்பில்
அமுல்படுத்தக்கூடிய கொள்கைகள் ,அமுல்படுத்த இயலாத
கொள்கைகள் ,தற்காலிக கொள்கைகள் ,தேர்தல் கால கொள்கைகள்
என பல கொள்கைகளைச் சுட்டி அவற்றை விலைக்கு விற்கும் போக்கையும் விவரித்துள்ளார்.
“வேண்டாமணி” யில்
உடலுறுப்பு தானம் குறித்தும் , இலட்சுமி என்ற தலைப்பில்
அவள் வறுமையில் உழன்றாலும் பெயருக்கு ஏற்றாற்போல மனதளவில் இலட்சுமியாகவே வாழ்கிறாள்
என்று பதிவு செய்துள்ளார். ஜன்னல் என்பதில்
எதார்த்தத்தை மீறி பேய் பிசாசு என்ற கருத்துகளை பதிவு செய்துள்ளார். கணக்கு வாத்தியாரில்
ஆசிரியர் மாணவர் உறவு பேசப்பட்டுள்ளது. ஆசிரியரின் மறைவு
காலங்கள் பல உருண்டோடினும் கலையாத கனவாக உள்ள செய்தி கூறப்பட்டுள்ளது.
“வாசுதேவன் கொலம்பஸ்”
என்பதில் மக்களிடம் உள்ள முதலாளி , தொழிலாளி என்ற அடிமைத்தனத்தை
மாற்ற வந்த வாசுவை விஞ்ஞானிகள் தன் சுயநலத்திற்காக அடிமையாக மாற்றிய செய்தி சொல்லப்பட்டுள்ளது. அப்பாவின் பிரம்பு
நாற்காலியில் உயிரற்ற நாற்காலியினை உயிருள்ள தன் கணவனாக நினைக்கும் பெண்ணின் மனவுணர்வு
சுட்டப்படுகிறது . மகன் , மருமகள் , பேரன் அனைவரும்
நாற்காலியை தேவையற்ற பொருளாக எண்ணி ஆசிரமத்தில் ஒப்படைக்கின்றனர். அதனால் மனமுடைந்த
தாய் அப்பாவைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று ஆசிரமத்திற்கு செல்லுகிற செய்தி படிப்பவரின்
நெஞ்சில் முள்ளாய் தைக்கிறது.
“ஊசோ தாத்தா”வில்
நம்ம வெற்றி நம் பலத்தில் இருந்தாலும் அதைத் தீர்மானிப்பது எதிராளியின் பலஹீனம் என்ற
செய்தியைச் சொல்லி தாத்தா குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்கிற தன்மையும் சொல்லப்பட்டுள்ளது. முதியவரும் தோமாவும்
என்ற தலைப்பில் முதியவர் மீது தோமா ( செல்லப்பிராணி) கொண்டுள்ள பாசம்
சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. முதுமை காரணமாக
ஒருநாள் முழுவதும் காணாத தோமாவை மறந்ததை அறியாமல் அவரையே சுற்றிச்சுற்றி வருவதாக கூறியுள்ளார். சாக்லேட் கடவுளில்
பிறந்த நாளிற்கு பரிசாகக் கிடைத்த சாக்லேட்டை கடவுளாக எண்ணி வணங்கும் செய்தி தரப்பட்டுள்ளது.
“ மலைக்கோயில்” என்பதில்
குழந்தையின் மனதில் சாதிவேறுபாடு ஏற்படக் கூடாது என்பதற்காக மதத்தை தூக்கி எறிந்த பெற்றோரின்
செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன. பாம்பாட்டிச் சித்தர் ,ஒரு வேப்பமரத்தின் தை என்ற இரு பகுதிகளிலும்
மரம் மையப்பொருளாக உள்ளது. முதல் பகுதியில்
மனித உறவின் மேன்மை மென்மையாக கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில்
வெட்டப்பட்ட வேப்பமரம் இருபது நாள்களில் துளிர்விட்டவுடன் மனம் மகிழ்ந்த குடும்பத்தாரின்
செயல்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனவும் கத்திரி
மழையும் என்பதில் ஏழையின் கனவு புல்லின் பனித்துளி போல் மறைவதை அழகாக எடுத்துரைத்துள்ளார். இந்நூல் படிக்கின்ற
போது சோர்வினைத் தராததாகவும் ,வெவ்வேறு செய்திகளை
தருவதால் பரந்து பட்ட நூல்களை வாசித்த நிறைவும் கிடைக்கிறது. இந்நூலை எழுதிய
ஆசிரியருக்கும் , பதிப்பித்த பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள் ..
0 Response to " நூல் மதிப்புரை - முனைவர் இரா. மோகனா, எண்ணச்சிதறல்களில் தொடர்ந்து தோற்கும் புலிக்கடவுள்"
Post a Comment