ஏழாம் வகுப்பு - தமிழ் - இலக்கணம் - இயல் 1 - குற்றியலுகரம், குற்றியலிகரம்

Trending

Breaking News
Loading...

ஏழாம் வகுப்பு - தமிழ் - இலக்கணம் - இயல் 1 - குற்றியலுகரம், குற்றியலிகரம்

ஏழாம் வகுப்பு -  தமிழ் - இலக்கணம் - இயல் 1 - குற்றியலுகரம்,  குற்றியலிகரம்

 

  


              

தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். சார்பெழுத்து பத்து வகைப்படும். அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும். சார்பெழுத்துகளில் ஒன்றான குற்றியலுகரம் பற்றி இனிக் காண்போம்.

குற்றியலுகரம்

  குழந்தை, வகுப்பு, பாக்கு, ஆகிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள். மூன்று சொற்களிலும் ‘கு என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை உணரலாம். அவ்வெழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கிறது. சொல்லின் இறுதியில் வரும்பொழுது ஒருமாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது.

கு, சு, டு, து, பு, று  ஆகியன வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரங்களாகும். இவை சொல்லின் இறுதியில் வரும்போது, தனிக்குறிலை அடுத்து வரும் இடம் தவிர பிற இடங்களில் ஒரு மாத்திரைக்குப்  பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.  குறுமை+இயல்+உகரம் = குற்றியலுகரம்.


(எ.கா,)  காசு, எஃகு,  பயறு, பாட்டு, பந்து,  சால்பு.

உகர ஈற்றுச் சொற்களை ஒலிக்கும்போது, ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை ‘முற்றியலுகரம் என்பர். 

(எ.கா.)  புகு, பசு, விடு, அது, தபு, வறு

 குற்றியலுகரத்தின் வகைகள்

குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள  எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படும்.

  1. நெடில்தொடர்க் குற்றியலுகரம்

தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.

 (எ.கா.)  பாகு, மாசு, பாடு, காது, ஆறு .

2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.                           

(எ.கா.) எஃகு, அஃது

3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும்  குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.            

(எ.கா.) அரசு        (ர = ர் + அ)       கயிறு         (யி = ய் + இ)

வரகு         ( ர=ர்+அ)

ஒன்பது       ( ப= ப்+அ)

வரலாறு      (லா=ல்+ஆ)

4. வன்தொடர்க் குற்றியலுகரம்

வல்லின (க்,ச்,ட்,த்,ப்,ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று

        5. மென்தொடர்க் குற்றியலுகரம்

மெல்லின (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

(எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று

6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

இடையின (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.  

 (எ.கா.) எய்து, மார்பு,  சால்பு, மூழ்கு














    குற்றியலிகரம்:  

வரகு+யாது - இந்த இரு சொற்களையும் சேர்த்து விரைவாக ஒலித்துப் பாருங்கள். வரகியாது என ஒலிப்பதை அறியலாம். முதல் சொல்லின் இறுதியில் உள்ள கு என்னும் எழுத்து கி என்று ஒலிக்கிறது. அதுவும் முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் ‘குற்றியலிகரம் எனப்படும். குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம். 

குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும்.


இடம் 1

                குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும். அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.

(எ.கா.) கொக்கு + யாது = கொக்கியாது ,         தோப்பு + யாது= தோப்பியாது

               (க் +  உ)       (க் + இ)             (ப் + உ)    (ப் + இ)

களிறு +   யானை= களிற்றியானை

(ற் + உ)    (ற் + இ)

இடம் - 2

                மியா என்பது ஓர் அசைச்சொல்(ஓசை நயத்திற்காக வருவது). இதில் ‘மி யில் (மி = ம் + இ) உள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும். இது சொற்களில் இடம்பெறும் போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.

(எ.கா.) கேள் + மியா = கேண்மியா                                                 

செல் + மியா = சென்மியா

குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.

 

தெரிந்து தெளிவோம்:  தமிழில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு கரம், காரம், கான், கேனம் ஆகிய அசைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.  குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்  (எ.கா.) அகரம், இகரம், உகரம், மகரம்  நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்  (எ.கா.) ஆகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்  ஆய்த எழுத்துகளைக் குறிக்க கான், கேனம்  (எ.கா.)  மஃகான், அஃகேனம்

 

தெரிந்து தெளிவோம்  ‘வ் என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை. மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும். இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

0 Response to "ஏழாம் வகுப்பு - தமிழ் - இலக்கணம் - இயல் 1 - குற்றியலுகரம், குற்றியலிகரம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel