ஏழாம் வகுப்பு - தமிழ் - இயல் 9 - கவிதைப்பேழை - இயேசு காவியம் - மலைப்பொழிவு - கண்ணதாசன்

Trending

Breaking News
Loading...

ஏழாம் வகுப்பு - தமிழ் - இயல் 9 - கவிதைப்பேழை - இயேசு காவியம் - மலைப்பொழிவு - கண்ணதாசன்

ஏழாம் வகுப்பு - தமிழ் - இயல் 9 - கவிதைப்பேழை - இயேசு காவியம்  - மலைப்பொழிவு - கண்ணதாசன்

 



உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர். இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும்.  இவ்வுண்மைகளை இயேசுநாதர் கூறியவாறு அறிவோம் வாருங்கள்!

 

சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார் – இந்தத்

தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர் என்றார்!

 

மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது

சாந்தம் தான்என்றார் – அது

மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்

மகத்துவம் பார்என்றார்!

 

சாதிகளாலும் பேதங்களாலும்

தள்ளாடும் உலகம் – அது

தர்மம் ஒன்றை நம்பிய பிறகே

அடங்கி விடும் கலகம்!

 

ஓதும் பொருளாதாரம் தனிலும்

உன்னத அறம் வேண்டும் – புவி

உயர்வும் தாழ்வும் இல்லா தான

வாழ்வினைப் பெறவேண்டும்.

 

இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் என

இயேசுபிரான் சொன்னார் – அவர்

இரக்கம் காட்டி இரக்கத்தைப் பெறுவர்

இதுதான் பரிசு என்றார்

 

வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்

வாழ்க்கை பாலைவனம் – அவர்

தூய மனத்தில் வாழ நினைத்தால்

எல்லாம் சோலைவனம்!

 

தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும்

சண்டை சச்சரவு – தினம்

தன்னாடு என்றும் பிறர்நாடு என்றும்

பேசும் பொய்யுறவு!

 

இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி

எத்தனை வீண்கனவு – தினம்

இவை இல்லாது அமைதிகள் செய்தால்

இதயம் மலையளவு !

- கண்ணதாசன்

 

சொல்லும் பொருளும்

 

சாந்தம்                                அமைதி                  தாரணி                                உலகம்

மகத்துவம்                          சிறப்பு                      தத்துவம்             உண்மை

பேதங்கள்                           வேறுபாடுகள்        இரக்கம்              கருணை

 

பாடலின் பொருள்

 

(தம் சீடர்களுக்கு அறிவுரைக் கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஈறி நின்று பேசத் தொடங்கினார்.)


அமைதியான குணம் கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.


இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது. அது அறம் என்கிற ஒன்றினை நம்பிய பிறகு சண்டைகள்  நீங்கி அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.


இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு என்று கூறினார். மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது  வாழ்வு பாலைவனம்போல் பயனற்றதாகிவிடும். அவன்  நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன்  வாழ்க்கை மலர்ச்சோலையாக  மாறிவிடும்.


மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும் அவர்கள் தன்னாடு என்றும், பிறர்நாடு என்றும் பேசி  உண்மையில்லா உறவுகளாவாழ்கின்றனர்.


கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு  உயர்ந்ததாக மாறும்.

 

நூல்வெளி

                கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார். காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற  இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.  ஏராளமான  திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.  இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.

                இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும். இந்நூலில் உள்ள மழைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

 

0 Response to "ஏழாம் வகுப்பு - தமிழ் - இயல் 9 - கவிதைப்பேழை - இயேசு காவியம் - மலைப்பொழிவு - கண்ணதாசன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel