ஏழாம் வகுப்பு - இயல் 5 - கவிதைப்பேழை - இன்பத்தமிழ்க் கல்வி - பாரதிதாசன்

Trending

Breaking News
Loading...

ஏழாம் வகுப்பு - இயல் 5 - கவிதைப்பேழை - இன்பத்தமிழ்க் கல்வி - பாரதிதாசன்

ஏழாம் வகுப்பு - இயல் 5 - கவிதைப்பேழை - இன்பத்தமிழ்க் கல்வி -   பாரதிதாசன்

 

 


பாரதிதாசன் கையில் ஏடும், எழுத்தாணியும் கிடைத்தன. அதில் கவிதை ஒன்றைத் தீட்ட விரும்பினார். என்ன எழுதுவது? எனச் சிந்தித்தார். வானம், ஓடை, தாமரை, தென்றல், மயில் என இயற்கைப் பொருட்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன. எனினும் புரட்சிக்கவியாம் பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார். அதை நாமும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
 
 
ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று சொன்னது வான்
ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க என்றார்.
 
 
 சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்
தோகை மயில் வரும் அன்னம் வரும்;
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சி தரும்;
வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக என்னும்
கோலங்கள் யாவையும் மலை மலையாய் வந்து
கூவின என்னை ! - இவற்றிடையே.
  
 
இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால் -
துன்பங்கள் நீங்கும்; சுகம் வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகிடும் ; வீரம் வரும் !

-  பாரதிதாசன்

சொல்லும் பொருளும்

எத்தனிக்கும்  -     முயலும்           பரிதி           -     சூரியன்
வெற்பு        -      மலை             அன்னதொர்     -     அப்படிஒரு
கழனி        -     வயல்               கார்முகில்            -     மழைமேகம்
நிகர்          -     சமம்               துயின்றிருந்தார் -     உறங்கியிருந்தார்.

பாடலின் பொருள்

கவிதை  எழுத ஏடு ஒன்று எடுத்தேன். என்னைக் கவிதையாக எழுது என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை மலர்களும் எங்களை கவி ஓவியமாகத் தீட்டுக என்றன. காடும் வயல்களும்  கரு நிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம்பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள் அன்பினைக் கவிதையாக எழுதுக என்றனர்.

சோலையில் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்னம் வந்தது. மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்ற கதிரவனும் வந்தது. வேலைச் சுமந்திடும் வீரர்கள் மலை போன்ற எங்களின் தோள்களின் அழகினை எழுதுங்கள் என்றனர். இவ்வாறு  அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக   வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின.

ஆனால் துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் கருணை  உண்டாக்கி என் உயிரில் வந்து  கலந்து விட்டது.  இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். வீரம் வரும்.
 
 
நூல்வெளி

கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன். இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர். இவர் எழுதிய ‘பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்கு 1969 இல் ‘சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

பாரதிதாசன் கவிதைகள்  என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள  இப்பாடல்  இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

0 Response to "ஏழாம் வகுப்பு - இயல் 5 - கவிதைப்பேழை - இன்பத்தமிழ்க் கல்வி - பாரதிதாசன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel