நயம்பட உரை, ஆர். நூருல்லா - நூல் மதிப்புரை: முனைவர் இரா.மோகனா

Trending

Breaking News
Loading...

நயம்பட உரை, ஆர். நூருல்லா - நூல் மதிப்புரை: முனைவர் இரா.மோகனா

நயம்பட உரை, ஆர். நூருல்லா - நூல் மதிப்புரை:  முனைவர் இரா.மோகனா

இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து

 அதனை அவன்கண் விடல்

         எனும் குறட்கிணங்க நூருல்லா நயம்பட உரை  என்ற தொகுப்பு நூலை எழுதியுள்ளார். அனைவரிடமும் இனிமையாக உரையாடும் திறன் உடைய இவர்  அனைத்திடங்களிலும்  சிலேடை சொற்களைப் பயன்படுத்தி படைப்பைப் படைத்திருக்கும் திறத்தைப் படிக்கும்போது நம்மால் உணர முடிகின்றது . பலவிடங்களில் தான் பயன்படுத்திய சொற்களைப் பிறருடைய தூண்டுதலின் காரணமாக தொகுத்து நயம்பட உரைத்துள்ளார்.

        46 தலைப்புகளில் சிலேடை சொற்களை அழகாகப் பயன்படுத்தி தன் நினைவுகளை வாசகர்களுடன் பகிர்ந்துள்ள போக்கு சிறப்புடையது. நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சில தலைப்புகள் அமைந்துள்ளன. சான்றாக தொட்டுக்க கோந்து என்ற பகுதியில்  ஒரு உரையாடலைத் தந்துள்ளார்.

கணவன்ஏன்டி சாப்பாட்டுத்தட்டுல தொட்டுக்கிறதுக்குக் கோந்து வெச்சிருக்க .     மனைவி- வேறொன்றும் இல்லிங்க நீங்க சாப்புடற சாப்பாடு ஒடம்புல ஒட்டவே மாட்டேங்குதேன்னு மாமியாரு வருத்தப்பட்டுக்கிட்டாங்க. அதுதான் கோந்து வச்சிருக்கேன். போகிற போக்கில் ஒரு நகைச்சுவையைப் பதிவு செய்துள்ள திறம் பாராட்டுதற்குரியது. அதைப் போல தாவரம் என்ற பகுதியையும் கூறலாம். நகைச்சுவை போக்கு மட்டுமின்றி சமூக ஆர்வமும் இவர் தம் படைப்புகளில் மேலோங்கி நிற்கிறது. திருநங்கைகளைக் குறித்து   முதன்முதலாக தினமலர் நாளிதழில் தொடராக எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை இவரையே சேரும்.

        நெய்யில் சாம்பிராணித்தூளை ஊற வைத்து அதைத் திருமணத்திற்கு மறுநாள் காலை மாப்பிள்ளைக்குத் தரும் சடங்கு முறையையும் கூறியுள்ளார். இரா. கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுத் தேடல்களையும் அவர் தமிழக வரலாற்றின் இருண்ட பகுதிக்கு ஞான ஒளி பாய்ச்சிய செய்தியையும் பதிவு செய்துள்ளார். டாக்டர் கே.வி.ராமன், டாக்டர் பி.சண்முகம் என இருபெரும் அறிஞர்கள் பற்றிய செய்தியினைத் தந்துள்ள தன்மை சிறப்புடையது.

       சோம்பு சாப்பிட்ட பின்னும் சோம்பி விடாதேஎன்ற பழமொழியை முன்வைத்து உணவே மருந்து மருந்தே உணவு எனும் கருத்தைக் கூறியுள்ளார். பத்திரிக்கைத்துறைக்கே உரிய ராம் (  அவர் கத்தியில் குத்தினார் என்பதில் உண்மை இருந்தாலும் அவர் கத்தியால் குத்தினாராம் ) என்று சேர்த்து எழுதுவதன் புதுமையை ஆசிரியர் கையாண்டுள்ளார் . மேற்சொன்ன முறையை பத்திரிக்கையாளர் என். ராம் அவர்களிடம் கூறியபோது அவர் மகிழ்ந்த செய்தியையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

        ஆகாரம் என்ற பகுதியில்  ஆகாரம் என்றால் உணவு என்று பொருள் தரும் சூழலில் உணவு காரம் என்பதையையும் …..காரம் என்று கூறியுள்ள முறை படிப்பவரிடையே பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. வார்த்தை விளையாட்டுகளில் அரசியல் மேதைகளையும் தம் பக்கம்  ஈர்த்துள்ளார் ஆசிரியர். சான்றாக பொடியனின் கல்லூரிக்குத் தடியனின் வருகை , ரிஷிகேஷ் போவதாக கூறிய ரிஷியிடம் ரிஷிகேஷ் போக கேஷ் உண்டா, பிரியாணித் தீர்ந்தால் என்ன? பிரியா…. நீ இருக்க பிரியாணி எதற்கு , விண்ணப்பம் வரும்போது விண்ணப்பத்தோடு வாருங்கள் , சரஸ்வதிக்குத் தொண்டு செய்யும் லட்சுமிக்கு நினைவுப் பரிசு , சூரிய பவன் காபி கேட்டோம் ஆறிய பவன் தந்துவிட்டாரே போன்றவற்றைக் கூறலாம் .

         சிரஞ்சீவி எனும் பகுதியில் ஜல்லிக்கட்டு மீட்புப் போராட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பை எடுத்துக் கூறி நடப்புச் செய்தியைப் பதிவு செய்துள்ள விதம் அருமை. மணக்கும் மல்லிகை எனும் பகுதி கணவன் மனைவிக்கு இடையேயான புரிதலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. பலச் செய்திகளையும் வாசகர் விரும்பும் விதத்தில் எழுதிய ஆசிரியர் திருநங்கையர் பற்றிய கருத்தை மடச்சாம்பிராணி , சாதிக்கப் பிறந்தவர் என்ற இரு தலைப்புகளிலும் சொல்லியுள்ளார். ஒரே கருத்தை மீண்டும் கூறியத்தன்மையை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் பல்வேறு செய்திகளை அழகாக தொகுத்தளித்த ஆசிரியரின் உயரிய பணி பாராட்டுதற்கு உரியது. ஆசிரியருக்கும் இந்நூலைச் செம்மையாக பதிப்பித்த பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள்.     

                                                                                                                                                        நயம்பட உரை

ஆர்நூருல்லா

பாரதி புத்தகாலயம்

ஜூலை – 2017

ரூ – 70, பக்கம் -96.

0 Response to "நயம்பட உரை, ஆர். நூருல்லா - நூல் மதிப்புரை: முனைவர் இரா.மோகனா "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel