நீட் தேர்வு - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Trending

Breaking News
Loading...

நீட் தேர்வு - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீட் தேர்வு - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

 



 

நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.
 
நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என, அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
அந்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையைப் புறந்தள்ளும் வகையில், தமிழக அரசு குழு அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
 
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
 
ஆனால், நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
 
இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

0 Response to "நீட் தேர்வு - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel