10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2- கவிதைப்பேழை - முல்லைப்பாட்டு - நப்பூதனார்

Trending

Breaking News
Loading...

10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2- கவிதைப்பேழை - முல்லைப்பாட்டு - நப்பூதனார்

10  ஆம்  வகுப்பு - தமிழ் - இயல்  2- கவிதைப்பேழை - முல்லைப்பாட்டு - நப்பூதனார்


நுழையும் முன்:

அன்புமயமானது வாழ்க்கை. அன்புகாட்ட அருகில்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. பிரிவும், பிரிவினால் ஏற்படும் பரிவும் அன்பைச் சொல்லும். பிரிவை எண்ணும் மனம் துயரத்தை உணரும். அத்தகு அன்பு மனத்தை உணரச் செய்கின்ற ஒரு சங்கப்பாட்டு முல்லைப்பாட்டு.

இயற்கைச் சூழல் நமக்குள் இனிய உணர்வுகளைத் தூண்டுகிறது. தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்தனர். மழைக்காலத்தில் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிற இயல்பு இலக்கியத்தில் பதிவு பெற்றிருக்கிறது. மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைச் சங்க இலக்கியம் காட்டுகிறது.

முல்லைப்பாட்டு

நல்லோர் விரிச்சி கேட்டல்


நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,

அருங்கடி மூதூர் மருங்கில் போகி,

யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,

நாழி கொண்ட, நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,

பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப

தலைவியைத் தேற்றுதல்

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம் 

- நப்பூதனார்.

அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம்,  ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

 துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப்பொழுதில், முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள் மலர்ந்த முல்லைப் பூக்களுடன் நாழியில் கொண்ட நெல்லோடு சேர்த்து தெய்வத்தின்முன் தூவினர். பிறகு தெய்வத்தைக் கையால் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

அங்கு, சிறுதாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி அவள், “புல்லை மேய்ந்து உம் தாய்மார் எம் இடையர் செலுத்துதலால் இப்போது வந்துவிடுவர், வருந்தாதீர்” என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நிற்பர்.

(நின் தலைவன் பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவது உறுதி. மாயோளே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே! என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர். )

பொருள் றிக:

நனந்தலை உலகம்                             _                     அகன்ற உலகம்

நேமி                                                          _                      வலம்புரிச்சங்கு

மாஅல்                                                       _                      திருமால்

சுவல்                                                           -                       தோள்

வலன் ஏர்பு                                              _                      வலப்பக்கமாக எழுந்து

கொடுஞ்செலவு                                     -                           விரைவாகச் செல்லுதல்.

எழிலி                                                         _                      மேகம்

பெரும்புயல்                                          _                      பெருமழை

சிறுபுன்மாலை                                      _                      துன்பம் மிகுந்த சிறு மாலை

தூஉய்                                                          _                      தூவி

நறுவீ                                                           _                      நறுமணமுடைய மலர்கள்

விரிச்சி                                                        _                      நற்சொல்

 


இலக்கணக் குறிப்பு :

மூதூர்                                  _                      பண்புத்தொகை

உறுதுயர்                            _                      வினைத்தொகை

கைதொழுது                    _                      மூன்றாம் வேற்றுமைத் தொகை

தடக்கை                            _                      உரிச்சொல்

 

பகுபத உறுப்பிலக்கணம் :

பொறித்த  _                      பொறி+த்+த்+அ

பகுதி, சந்தி, இறந்தகால இடைநிலை, பெயரெச்ச விகுதி

நூல்வெளி

                        முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. 103 அடிகளைக் கொண்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட நூல். முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது. பத்துப்பாட்டிலேயே குறைந்த அடிகளை உடைய நூல் இது. இதை எழுதியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது.  1- 17அடிகள்  பாடப்பகுதியாக  இடம்பெற்றுள்ளன.

 

விரிச்சி கேட்டல் :

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ, தீதாய் முடியுமோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

 

திணை :   முல்லை -  காடும் காடு சார்ந்த இடமும்

பெரும்பொழுது – கார் காலம் – ஆவணி, புரட்டாசி

சிறுபொழுது – மாலை

உரிப்பொருள் : இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)

கருப்பொருள் : நீர் – குறுஞ்சுனை நீர், காட்டாறு

மரம் – கொன்றை, காயா, குருந்தம்

பூ – முல்லை, பிடவம், தோன்றிப்பூ

0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2- கவிதைப்பேழை - முல்லைப்பாட்டு - நப்பூதனார்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel