9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - கவிதைப்பேழை - பட்டமரம் - கவிஞர் தமிழ் ஒளி

Trending

Breaking News
Loading...

9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - கவிதைப்பேழை - பட்டமரம் - கவிஞர் தமிழ் ஒளி

9 ஆம்  வகுப்பு - தமிழ் - இயல்  2 - கவிதைப்பேழை  - பட்டமரம் - கவிஞர் தமிழ் ஒளி


நுழையுமுன்

நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தினார்கள். அவர்கள் மரம், செடி, கொடிகளை மிகவும் நேசித்தனர். கால மாற்றத்தால் இயற்கையையோடு இயைந்த வாழ்வு என்பது சிறிதுசிறிதாக அழிந்துகொண்டே வருகிறது. காடுகளை அழித்து வீடுகளாகவும் , மரங்களை வெட்டிக் காகிதங்களாகவும் மாற்றி இயற்கையை அழித்தான் மனிதன். மரம் என்பது மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மரங்கள் இல்லை என்றால் நமக்கு உயிர்வளி கிடைக்காமல் போய்விடும். எதிர்காலத் தலைமுறையினருக்குப் பொருளைச் சேர்க்காவிட்டாலும் உயிர்வாழத் தேவையான இயற்கையைக் கட்டிக்காப்போம். 

அவ்வகையில் பட்டுப்போன மரமொன்று ஒரு கவிஞரின் உள்ளத்தில் ஏற்படுத்திய குமுறல் இக்கவிதை வாயிலாக வெளிப்படுகிறது. மரங்களைப் பட்டுப்போகாமல் பேணிக்காத்திட வேண்டும் என்ற உணர்வு இக்கவிதையைப் படிப்பதன்மூலம் ஏற்படுகிறது.

 

மொட்டைக் கிளையோடு

                நின்று தினம்பெரு

                மூச்சு விடும்மரமே !

வெட்டப் படும்ஒரு

                நாள் வரு மென்று

                விசனம் அடைந்தனையோ ?

குந்த நிழல்தரக்

                கந்த மலர்தரக்

                கூரை விரித்தஇலை !

வெந்து கருகிட

                இந்த நிறம்வர

                வெம்பிக் குமைந்தனையோ ?

கட்டை யெனும்பெயர்

                உற்றுக் கொடுந்துயர்

                பட்டுக் கருகினையே !

பட்டை யெனும் உடை

                இற்றுக் கிழிந்தெழில்

                முற்றும்  இழந்தனையே !

காலம் எனும்புயல்

                சீறி எதிர்க்கக்

                கலங்கும் ஒருமனிதன்

ஓலமி டக்கரம்

                நீட்டிய போல்இடர்

                எய்தி உழன்றனையே!

பாடும் பறவைகள்

                கூடி உனக்கொரு

                பாடல் புனைந்ததுவும்

மூடு பனித்திரை

                யூடு புவிக்கொரு

                மோகங் கொடுத்ததுவும்

ஆடுங் கிளைமிசை

                ஏறிச் சிறுவர்

                குதிரை விடுத்ததுவும்

ஏடு தருங்கதை

                யாக முடிந்தன!

                இன்று வெறுங்கனவே!

                                - கவிஞர் தமிழ் ஒளி

 

சொல்லும் பொருளும்

 

குந்த – உட்கார ,மிசை – மேல் ,

ஏடு - புத்தகம்

 

 

இலக்கணக்குறிப்பு

 

வெந்து , வெம்பி ,

எய்தி – வினையெச்சம் ,

மூடுபனி, ஆடுகிளை –வினைத்தொகைகள் ,

வெறுங்கனவு – பண்புத்தொகை.


கவிஞர் தமிழ் ஒளி புதுவையில் பிறந்து பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் இருந்து கவிதைகள் படைத்தவர். மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். கவிஞரின் காதல், நிலைபெற்ற சிலை,வீராயி , மேதின ரோசா, கண்ணப்பன் கிளி, தமிழர் சமுதாயம் போன்றன இவரின் படைப்புகள்.

 

 

0 Response to "9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - கவிதைப்பேழை - பட்டமரம் - கவிஞர் தமிழ் ஒளி"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel