
புதுடில்லி : ''விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளில்
போலீஸ் சார்பில் ஆஜராக, டில்லி அரசு தேர்வு செய்த
வழக்கறிஞர்கள் குழுவை கவர்னர் நிராகரித்தது டில்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்,'' என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
கூறினார்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி
நடக்கிறது. டில்லியில், கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள்
நடத்திய டிராக்டர் பேரணியில் பயங்கர கலவரம் வெடித்தது. இது தொடர்பாக விவசாயிகள்
சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் போலீஸ் சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் குழு ஒன்றை டில்லி
அரசு தேர்வு செய்தது. ஆனால் டில்லி அரசு தேர்வு செய்த வழக்கறிஞர்கள் குழுவை
நிராகரித்த துணைநிலை கவர்னர் அனில் பைஜால், போலீசார் தேர்வு செய்த வழக்கறிஞர்கள்
குழுவுக்கு
ஒப்புதல் அளித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லி மக்கள்
தான் எங்களை ஆட்சி செய்ய தேர்வு செய்தனர். நாட்டை பா.ஜ., ஆளட்டும்; டில்லியில் நாங்கள் ஆட்சி செய்கிறோம்; இதில் தலையீடு இருக்கக் கூடாது. ஆனால்
தினமும் ஒவ்வொரு பணியிலும் கவர்னர் வாயிலாக மத்திய அரசு தலையிடுகிறது; இது டில்லி மக்களுக்கு இழைக்கப்படும்
அவமானம். ஜனநாயகத்தை பா.ஜ., மதிக்க வேண்டும். வழக்கறிஞர்களை கூட
மத்திய அரசு தான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் டில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு?இவ்வாறு அவர் கூறினார்
0 Response to "டில்லி மக்களுக்கு அவமானம் :முதல்வர் கெஜ்ரிவால் கோபம் "
Post a Comment