கேரள மாநிலத்தின் அரசு
துறைகளில் பணிபுரியும் ஆண்கள் தாங்கள் பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை
பெறவில்லை என்று அரசிடம் உறுதி அளிக்க வேண்டும் என்று அதிரடியாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வரதட்சணை
கொடுமை
இந்தியாவில் காலம் காலமாக
பெண் வீட்டினராக இருப்பவர்கள் மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணை வழங்கி
வருகின்றனர். இதனை கவுரவமாக கருதும் மாப்பிள்ளை வீட்டார் ஒரு காலத்திற்கு பின்பாக, தகுந்த
வரதட்சணை கொண்டு வராத பெண்ணை கீழ்த்தரமாக நடந்த ஆரம்பித்தனர். இந்த சூழல் தற்போது
வரை நீடிக்கிறது என்பதற்கு சான்றாக சமீப நாட்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த
மூன்று பெண்கள் வரதட்சணை கொடுமையால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த
நிகழ்வு கேரளாவை மட்டுமல்லாது பல மாநிலங்களில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
இதனை குறைக்கவும், இதனை மொத்தமாக
மக்கள் மத்தியில் இருந்து அழிக்கவும், அந்த மாநிலத்தின் ஆளும் அரசு பல விதங்களில்
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படியாக இருக்க, தற்போது இதனை தடுக்கும்
பொருட்டு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், கேரள அரசு
துறைகளில் பணிபுரியும் ஆண்கள் அனைவரும் தாங்கள் பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை
வாங்கவோ, கேட்கவோ அல்லது
வற்புறுத்தவோ இல்லை என்று ஒரு உறுதி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த உறுதி பத்திரத்தில் ஊழியரின் பெயர், அவரது
குடும்பத்தினர் பெயர் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படிவத்தினை அந்தந்த
துறையினர் தங்களது மேல் அதிகாரிகளிடம் வருடத்திற்கு 2 முறை, அதாவது ஏப்ரல்
மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்க வேண்டும். மேல் அதிகாரிகள் அதனை மாவட்டத்தில்
இருக்கும் வரதட்சணை தடுப்பு ஊழியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரதட்சணை பெற்றால் 15 ஆயிரத்திற்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும்
என்றும், சிறை தண்டனை
வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ‘வரதட்சணை தடுப்பு சட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் வரதட்சணை தடை சட்டத்தினை அமல்படுத்தும் அதிகாரிகளாக செயல்படுவார்கள்’ இவ்வாறாக தெரிவித்துள்ளார்
0 Response to "அரசு ஊழியர்கள் இனி 'வரதட்சணை' பெறக்கூடாது - மாநில அரசு அதிரடி அறிவிப்பு! "
Post a Comment