ஏற்கனவே தொடங்கப்பட்ட 4 கல்லூரிகள் தவிர கோயில் நிதியில் புதிய கல்லூரிகளை தொடங்க கூடாது: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:
தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில்
4 கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து
உயர்கல்வித்துறை செயலாளர் கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணை பிறப்பித்தார். இந்த அரசாணைக்கு
தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்து, கோயில் சொத்துகளை உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ்
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,
இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி
கல்லூரிகள் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட மாநில
அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கோயில் அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேலான கோயில்களில் அறங்காவலர்கள் இல்லை. கொளத்தூரில்
கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக சொத்து எதுவும் இல்லை.
எனினும் அங்கு அவசரமாக
கல்லூரி தொடங்க படுகிறது என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு
அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கல்லூரிகளை
தொடங்குவது தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு ஆட்சேபங்களை
பெற்ற பிறகே அனுமதி வழங்க வேண்டும். கோயில் நிர்வாகத்தில்
இருந்து எந்த விண்ணப்பமும் அளிக்கப்படாமல் கல்லூரிகள் துவங்க
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகங்களும் கல்லூரி தொடங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. கோயில்களில்
இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் கல்லூரிகள்
அமைக்கப்படுகிறது. உபரி நிதியை, போதிய நிதி இல்லாத
பிற கோயில்களின் சீரமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த
வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட்
ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இது அரசின்
கொள்கை முடிவு என்றும், இந்து சமய அறநிலையத் துறை
சட்டத்தை பின்பற்றியே கல்லூரிகள் தொடங்கப்படுகிறது.
பல கோயில்களில் இருந்து பொது நிதிக்கு பெறப்பட்ட பங்களிப்பு
நிதியில் இருந்து தான் கல்லூரிகள் தொடங்கப்படுகிறது. மத வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. இன்னும் 2,3 வாரங்களில்
அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர். கடந்த 11 ஆண்டுகளாக அறங்காவலர்கள் இல்லை. எட்டு
கல்லூரிகள் தொடங்க முடிவெடுக்கப்பட்டு, கொளத்தூரில்
ஒரு கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக
பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோயில் நிதியை பயன்படுத்துவதால் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். சட்டப்படி தான்
கல்லூரிகள் தொடங்க வேண்டும். அடிப்படை நடைமுறைகள் பின்பற்றாமல்
தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளின்
செயல்பாடு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு
கட்டுப்பட்டது.
அதேசமயம், நான்கு
கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை அறங்காவலர்களை
நியமிக்காமலும், நீதிமன்ற அனுமதியின்றியும் தொடங்க கூடாது. நான்கு கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் தொடங்க வேண்டும். கல்லூரி தொடங்கப்பட்ட ஒரு
மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால்
கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது. இந்த மனுவுக்கு 3 வாரங்களில்
பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு
விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
0 Response to "ஏற்கனவே தொடங்கப்பட்ட 4 கல்லூரிகள் தவிர கோயில் நிதியில் புதிய கல்லூரிகளை தொடங்க கூடாது: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு "
Post a Comment