லட்சத்தில் கட்டணம் செலுத்தியும் மழலைகளுக்குக் கிடைக்காத பள்ளிக் கல்வி - என்னவாகும் எதிர்காலம்?

Trending

Breaking News
Loading...

லட்சத்தில் கட்டணம் செலுத்தியும் மழலைகளுக்குக் கிடைக்காத பள்ளிக் கல்வி - என்னவாகும் எதிர்காலம்?

லட்சத்தில் கட்டணம் செலுத்தியும் மழலைகளுக்குக் கிடைக்காத பள்ளிக் கல்வி - என்னவாகும் எதிர்காலம்?


என் ஐந்து வயது மகன் இன்னும் பேசவேயில்லை.. என் மகள் யாரைப் பார்த்தாலும் பயப்படுகிறாள்.. என் குழந்தைக்கு ஆசிரியர் என்றால் யார் என்றே தெரியவில்லை.. என்பது போன்ற புலம்பல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

 

தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக பல மாநிலங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக செயல்படவில்லை. கடந்த ஆண்டு சில மாதங்கள், சில வகுப்புகளுக்கு ஒரு சில நாள்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு, மீண்டும் ஜனவரியில் மூடுவிழா பார்த்து, பெரிய மனுது வைத்து பிப்ரவரியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், மழலையர் வகுப்புகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளில் பயிலும் பிள்ளைகள் தொடர்ச்சியாக ஆன்லைன் முறையிலேயே கல்வி பயின்று வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், கடும் மழைக்கோ, வெயிலுக்கோ கூட பள்ளியின் பக்கம் ஒதுங்கவில்லை என்பதே நிதர்சனம்.

 

 

மழலையர் பள்ளிதானே என்றும், கரோனா பேரிடர் காலத்தில் மழலைகளை வெளியே பள்ளிக்கு அழைத்துவருவதும், அவர்களை கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வைப்பதும் கடினம் என்பதால் இந்த முடிவை மாநில அரசுகள் எடுத்துள்ளன.

 

ஆனால், மழலைகள் தொடர்ந்து ஆன்லைன் மூலம் கல்வி பயில்வது என்பது அவர்களது உடல்நலனையும், மனநலனையும் பெரிதும் பாதிக்கும் என்று கவலை தெரிவிக்கிறார்கள் ஆசிரியர்களும் மனநல நிபுணர்களும்.

 

பல குழந்தைகளுக்கு கற்றலில் குறைபாடு ஏற்படுவதோடு, டிஜிட்டல் பள்ளியிலேயே தொடர்ந்து இருப்பதால் சமூகத்துடன் தொடர்பு இல்லாமல், அவர்களது பல்திறன் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

 

பள்ளிக் கல்விக்கு முந்தைய மழலையர் கல்வி என்பது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும், வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களுக்கும் மிகவும் அடிப்படை. அ முதல் ஃ வரை எழுதி, ஆசிரியரிடம் கையில் நட்சத்திரக் குறி வாங்குவது, சக நண்பர்களுடன் சேர்ந்து பாடங்களை கவனிப்பது, எழுத்துக் கூட்டிப் படிப்பது,  ஒன்றாக குதித்து குதித்து கையை தலையை ஆட்டியபடி பாடல்களைப் பாடி மகிழ்வது, தனது நண்பர்களுடன் இணைந்து உணவருந்துவது, வரிசையாகச் சென்று கழிவறையைப் பயன்படுத்துவது, தனது பொருள்களை சேகரித்துக் கொண்டு கிளம்புவது என எத்துனை எத்துனை விஷயங்களை இந்த மழலையர் பள்ளிகள் சொல்லித்தர வேண்டியுள்ளது. இதுவரை அம்மா, அப்பாவிடம் மட்டுமே பேசிய குழந்தைகள் முகம் தெரியாத ஆசிரியரிடம் பழக்கமாகி, சக நண்பர்களில் நமக்குப் பிடித்த தோழன், தோழியை தேர்வு செய்து அவர்களுடன் பேசிப் பழகி, தனது ஒற்றைச் சாக்லேட்டை பகிர்ந்து நண்பருக்குக் கொடுத்து உண்பது, குப்பையை அப்படியே போட்டுவிடாமல் குப்பைத் தொட்டியில் போடுவது என வெறும் களிமண்ணாக இருக்கும் மழலைகள், பாத்திரமாக உருமாற்றம் அடைந்து, பள்ளி மாணவன் என்ற தகுதியை பெறுவது இந்த மழலையர் வகுப்பில்தானே?"

 

ஆனால், இவ்வளவையும் ஆன்லைன் வகுப்பு என்ற ஒற்றைச் சொல் இல்லாமல் பொய்யாக்கிவிட்டதே.

 

மழலைகளின் பேச்சு வழக்கு, சக நண்பர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் போய்விட்டதாக, மழலையர் பள்ளியை நடத்தும் தலைமையாசிரியர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களைக் கற்றுக் கொள்வது போல ஆன்லைன் வகுப்புகளில் கற்க முடியவில்லை என்றும், பல வீடுகளில், பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஆர்வமில்லாத நிலையில், பெற்றோரே கட்டாயப்படுத்தி பிள்ளைகளை ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வைக்கிறார்கள். ஆனால், மழலையர் வகுப்புகள் அனைத்தும், பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டி, அவர்களே விரும்பி பள்ளிக்கு வரவழைக்கும் விதத்தில் அமைய வேண்டும். ஆனால், ஆன்லைன் வகுப்புகளால் அது சாத்தியப்படாமல் போயிற்று என்கிறார் மழலைர் வகுப்பு ஆசிரியர் பத்மினி.

 

பிள்ளைகள் எப்படியாவது படித்தால் போதும் என்று பெற்றோரும், பள்ளிகளும் நினைக்கிறார்கள். ஆனால், ஆன்லைன் வகுப்புகள், பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதைவிட, கெடுபயனையே அதிகம் கொடுப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.ஒரு மழலையாக இருக்கும் போது, சக தோழர்களிடம் பேசிப் பழகும் முறையை கற்றுக் கொள்ளாமல் போனால், பிறகு பெரியவர்களாக வளரும் போது அது அவர்களது பழக்க வழக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 

இது மட்டுமல்ல, ஏற்கனவே, பெரும்பாலான பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட முடியாமல் செல்லிடப்பேசியை கையில் கொடுத்து விளையாட விட்டுவிட்டனர். இப்போது அதிலேயே கல்வியும் என்றாகிவிட்டதால், செல்லிடப்பேசியையும் அவர்களையும் இனி பிரிப்பது பெரியப் போராட்டமாகிவிடும் என்றும் கவலை தெரிவிக்கிறார்கள்.

 

இப்போது மீண்டும் மழலைகளின் பெற்றோரின் மனக்குறைகளுக்கு வருவோம். ஐந்து வயதாகும் தங்களது பிள்ளை, நாம் என்ன சொன்னாலும் திருப்பிச் சொல்வதாகவும், ஆனால் தானாக எதையும் கேட்கவோ, பேசவோ இல்லை என்று கவலைப்படும் பெற்றோரும், வீட்டில் நன்றாக ஓடியாடி விளையாடும் குழந்தை, வீட்டை விட்டு வெளியே வந்தால் யாரைப் பார்த்தாலும் பயந்து மிரள்வதால் கவலையடையும் பெற்றோரும் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் நினைத்து பெரிதும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

 

சில சின்னஞ்சிறு குழந்தைகள் மழலையர் வகுப்பின் அனுபவத்தையே பெறவில்லை. புத்தகங்கள் இன்றி பள்ளிச் செல்லும் ஒரு சில நாள்களைக் கூட அவர்கள் அனுபவிக்கவில்லை.

 

பள்ளியில் மதிய உணவு முடிந்ததும், படுத்துறங்குவதும், தாயும், தந்தையும் பள்ளி வாயிலில் நிற்பதைப் பார்த்து ஓடிச் சென்று அணைத்துக் கொள்ளும் அனுபவமும் கிட்டாமலேயே போய்விட்டது பல மழலைகளுக்கு..

 

அவர்களுக்குத் தெரிந்தது செல்லிடப்பேசி.. தூங்கி எழுந்ததும் அம்மா தன் கையில் திணிக்கும் செல்லிடப்பேசியில் யாரோ ஒருவர் எதையோ சொல்லிக் கொண்டிருக்க.. அதை நாம் ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.. அவர் அப்படி என்னத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் மழலையர்களின் வாயில் அப்போது அம்மா திணிக்கும் காலை உணவு கூட என்னவென்று தெரியாமல் அரை உறக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு என்று விடியப்போகிறது?

நன்றி - தினமணி

.


 

0 Response to "லட்சத்தில் கட்டணம் செலுத்தியும் மழலைகளுக்குக் கிடைக்காத பள்ளிக் கல்வி - என்னவாகும் எதிர்காலம்? "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel