தமிழ் அறிவோம்! 179. வைகறைத் துயிலெழு ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 179. வைகறைத் துயிலெழு ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  179.   வைகறைத் துயிலெழு  ஆ.தி.பகலன்

 


"வைகறைத் துயிலெழு "
 

விடியற்காலையில் உறக்கத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்பதைத்தான் " வைகறைத் துயிலெழு " என்று ஆத்திசூடியில் அறிவுறுத்துகிறார் ஔவையார். 

வைகறை என்பது விடியற்காலை 2 மணி முதல் 6 வரையுள்ள  காலமாகும்.  இது ஆறுவகை சிறுபொழுதுகளுள் ஒன்றாகும். இந்த வைகறைக்  காலத்தில் 4 மணிக்கு எல்லாம் நாம் தூங்கி  எழுந்திருக்க வேண்டும். இந்த நேரத்தில்தான் சூரியக் கதிர்  தாக்கமில்லாத நம் உடலுக்குத் தேவையான, தூய்மையான உயிர்வளி  கமழி ( ஓசோன்)  அடுக்கில் இருந்து கிடைக்கிறது. இந்த நேரத்தில்தான் நம் நுரையீரல் முழு ஆற்றலுடன்  செயவ்படுகிறது. உயிர்வளியை உள்வாங்கி குருதியைத் தூய்மை செய்கிறது. இந்த நேரத்தில் மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஓகக்கலை செய்தால்  சிறப்பாக இருக்கும். 

முழு ஆற்றலோடு நம் நுரையீரல்  உயிர்வளியை உள்வாங்குவதால் நம் குருதி தூய்மையாகும். அதனால் பல நோய்களில் இருந்து நம் உடல் விடுதலை ஆகும். நாள் முழுவதும் நம் உடல் சுறுசுறுப்புடன் இயங்கும். சிந்தனை தெளிவாகும். நல்ல எண்ணங்கள் உருவாகும். மனம் தெளிவாக இருப்பதால் அன்றைய வேலைகளைத் திட்டுமிடுவதும் எளிதாக இருக்கும். மனம் நம் கட்டுக்குள் இருக்கும். விடியற்காலையில் எழுந்திருப்பதால் புத்தி மனத்துடன் பொருந்தும். நரம்புகள் எல்லாம் சரியான நிலையை அடைந்து தூய்மை அடையும்.  விடியற்காலையில் எடுக்கும் முடிவு நம் வாழ்க்கைக்கு விடியலைத் தரும்.  வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே விடியற்காலையில் விழித்தெழுகின்ற பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். 

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நம் முன்னோர்கம் நம்மை  விடியற்காலையில் எழுந்திருக்கச் சொன்னார்கள். புதுமனைப் புகுவிழா,  திருமணம் உள்ளிட்ட எல்லா நல்ல நிகழ்ச்சிகளையும் விடியற்காலையிலேயே வைத்தார்கள். உழவுப்பணிகளைக் கூட அந்த நேரத்திலேயே தொடங்கினார்கள். விடியற்காலையில் கிழக்குத் திசையில் வெள்ளி விண்மீன் உச்ச ஒளிநிலையை அடையும். அதை " விடிவெள்ளி " என்பார்கள். அதைக் கண்டதும் தங்கள் பணியை வேகமாகத் தொடங்குவார்கள். விடிவெள்ளியைப் பார்த்துவிட்டாலே தங்கள் வாழ்க்கைக்கான விடிவெள்ளி பிறந்து விட்டதாக மகிழ்வார்கள். 

நரி முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா? 

நரியை விடியற்காலையில்தான் பார்க்க முடியும். நரியைப் பார்க்க வேண்டும் என்றால் விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும். அப்போதுதான் வயல்காட்டில் அதைப் பார்க்க முடியும். விடியல்காலையில் எழுந்து வயல்காட்டுக்குச் சென்று சுறுசுறுப்பாக வேலையைச் செய்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். அதை வலியுறுத்தவே நரி முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்று சொல்லி மக்களை நம்ப வைத்தார்கள். நரியைப் பார்த்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையிலாவது விடியற்காலையில் எழுந்து வயல்காட்டுக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படிச் சொன்னார்கள்.  இதுதான் உண்மை. மற்றபடி நரிக்கும் நம் வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

" வைகறை யாமம் துயில்எழுந்து தான்செய்யும்

நல்அறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்

 தந்தையும் தாயும் தொழுதுஎழுக என்பதே

முந்தையோர் கண்ட முறை. ( ஆசாரக்கோவை - 04) 

 விடியற்காலையில் எழுந்து முதலில் தாய்தந்தையரை தொழ வேண்டும். அன்று செய்ய வேண்டிய அறச் செயல்களையும் , வருவாய்க்கான செயல்களையும் சிந்திக்க வேண்டும் . இதுவே நாள்தோறும் ஒருவன் செய்ய வேண்டிய செயல் என்று அறிவுடையோர் சொல்லிய முறையாகும். 

நம் முன்னோர் முன் மொழிந்ததை நாம் வழிமொழிந்து நம் வாழ்க்கையை அவ்வாறு அமைத்துக் கொள்வோம். 

" விடியற்காலையில் எழுவோம்!

வாழ்வில் விடிவெள்ளியைக் காண்போம்!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

 

0 Response to "தமிழ் அறிவோம்! 179. வைகறைத் துயிலெழு ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel