"பூனையைக் கண்ட கிளி "
சிலர் கிளி வளர்ப்பார்கள். சில சொற்களைக் கற்றுக்கொடுத்துப் பேச
பழக்கப்படுத்துவார்கள். அதுவும் ஒன்றிரண்டு சொற்களைப் பேசக் கற்றுக் கொண்டதும்
அந்தக் கிளிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி வந்துவிடும்.
தனக்கு எல்லாமே தெரிந்துவிட்டது என்று எண்ணிக் கொள்ளும். தன் அறியாமையை உணராமல் வெட்கமின்றி தனக்கு
தெரிந்த அந்தச் சொற்களையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும்.
ஆனால், அந்த நேரத்தில் ஒரு பூனை வந்து நின்றால்
போதும். அவ்வளவுதான், கிளியின் பேச்சு நின்றுவிடும். தன் நிலைமை அப்போதுதான்
அதற்கு வெளிப்படும்.
உடனே, தன் இயல்பான தன்மை தோன்றக்
"கீச்சுக்கீச்சு" என்று கத்தத்
தொடங்கி விடும்.
" காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் ;
கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே ; - நாணாமல்
பேச்சுப்பேச்சு என்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச்சு என்னும் கிளி. " ( ஔவையார் தனிப்பாடல் திரட்டு - 06)
கல்வி கற்ற பெரியோர்களைக் காணாதபோது அரைகுறை
அறிவுடையோர் தாம் விரும்பியபடி எல்லாம்
கத்தலாம். ஆனால், உண்மையான ஞானம்
கொண்ட கற்றவர்களைக் காணும் போது பணிவின்றி வாய் திறக்கக் கூடாது.
கிளி தனக்குக் கற்பித்தவற்றை எல்லாம் அஞ்சாமல்
பேசும். தனக்குப் பகையான பூனையொன்று அந்தப் பக்கம் வருமானால் தன் பேச்சை
மறந்து, தன் உயிருக்குப் பயந்து
கீச்சுக்கீச்சென்று கத்தும் .
அறிவுடையோர் அவையில், அறியாமையில் உள்ள செருக்குடையோர் நிலையும்
அந்தக் கிளியைப் போன்றதுதான் .
கம்பரை வெல்ல யார் இயலும்? எனச் சோழன் வினவியபோது
ஔவையார் பாடிய பாடல்தான் இது.
"கவிச்சக்கரவர்த்தி " கம்பருக்கே இந்த
நிலைமை என்றால்,
நம் நிலைமை?
அடக்கி வாசிப்பது
அனைவர்க்கும் நலம்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(அலைப்பேசி - 9965414583).
0 Response to "தமிழ் அறிவோம்! 205. பூனையைக் கண்ட கிளி ஆ.தி.பகலன் "
Post a Comment