தமிழ் அறிவோம்! 206. " உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 206. " உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 206.  " உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே  ஆ.தி.பகலன்

 


"உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே  "

 

உரிமையான பொருளானாலும்

உரிய காலத்தில் அதை

 உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.

உரிமையாக்காவிட்டால்

உங்களுக்கு

உரிமையானப் பொருளை

உரிமையாக்கிக் கொள்ள

ஊரார் விரும்புவர் என்ற

உயர்ந்த கருத்தைக்

உலகிற்கு

உணர்த்துகிறது இப்பாடல். 

ஒருநாள்  இரவு நேரத்தில் தலைவன் தலைவியைச்  சந்திக்கிறான். சந்தித்திவிட்டு செல்லும் தலைவனிடம் " தலைவியின் காதல் நோய் மிகப்பெரியது. அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகவே, அவளை விரைவில்  திருமணம் செய்துகொள் " என்று தோழி வேண்டுகிறாள். 

" வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி

யார்அஃது அறிந்திசி னோரே சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்

உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே " ( குறுந்தொகை - 18) 

" மூங்கில் வேலிகளையும், வேரில் பழுத்த பலாப் பழங்களையும் கொண்ட மலைச்சாரல் நாடனே!  சிறுகாம்பில் மிகப்பெரிய பழம் தொங்குதலைப் போல இவள் உயிரின் வலிமை சிறுது. ஆனால்,  உன்மீது இவள் கொண்ட காமமோ ( அன்போ) மிகப்பெரியது. இதை அறிந்தவர் யார்? உன்னைத் தவிர வேறு யாருமிலர். ஆகவே, இரவுதோறும்  இப்படி சந்திப்பதை விட்டுவிடு. ஊரறிய அவளைத் திருமணம் செய்து கொண்டு இவள் உயிரைக் காப்பாயாக " என்கிறாள் தோழி. 

தலைவனுடைய ஊரில் வேரில் பழுக்கும் வேர்ப்பலா மரங்கள் மூங்கில் வேலியுடன் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. அந்தப் பழங்கள் வேரில் பழுப்பதால் , அவை பார்வைக்கு மறைவாகவும், கீழே விழுந்து உடைந்து சிதறும் வாய்ப்பு இல்லாதனவாகவும் உள்ளன. 

ஆனால்,  தலைவியின் ஊரில் மலைப்பக்கத்தில் உள்ள பலா மரங்களிலோ பலாப் பழங்கள்  கொம்புகளில்   பழுத்துத் தொங்கும்  . அந்த மரங்களுக்குப் பாதுகாப்பாக வேலி இல்லை. அந்த மரங்களில் உள்ள பழங்கள் எல்லாம் கொம்புகளில் இருந்து கீழே விழுந்து உடைந்து சிதறக் கூடியவை. 

தலைவனின் காதல், வேலிக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் வேர்ப்பலாவின் பழம் போன்றது. அவன் பாதுகாப்பானவன் . அவன் செயல் யாருக்கும் தெரியாது. 

ஆனால் , தலைவியின் காதலோ சிறிய கிளையில் இருந்து தொங்கும் பாதுகாப்பில்லாத பெரிய பலாப்பழத்தைப் போன்றது. பாதுகாப்பில்லாத பழத்தை யார் வேண்டுமானாலும் கவர்ந்து செல்லக் கூடும். அதைப் போலவே  தலைவியை வேறு ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடும். 

பழத்தின் சுமை தாங்காமல் சிறிய கிளை முறிவதைப் போல அவள் உன்மீது கொண்ட அளவற்ற காதலால்  இறக்கவும் கூடும். முதிர்ந்த  பழம் கீழே விழுந்து சிதறினால் அதன் மணம் எல்லா இடங்களிலும் பரவும். அதைப் போல தலைவியின் காதல்  நாளடைவில் ஊரறியும். அப்போது அவளை ஊரார் பழிகூறுவர். அதற்கு எல்லாம் இடம்கொடுக்காமல் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள் " என்பதை நயமாக எடுத்துரைக்கிறாள் தோழி. 

எந்த ஒரு நல்ல செயலையும் தள்ளிப்போடக் கூடாது. அதிலும் காதலியைத் திருமணம் செய்வதை ஒருபோதும் தள்ளிப் போடக்கூடாது. இல்லையேல் அடுத்தவன் தள்ளிட்டுப் போய்விடுவான் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது இப்பாடல்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

(அலைப்பேசி - 9965414583).

 


0 Response to "தமிழ் அறிவோம்! 206. " உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel