தமிழ் அறிவோம்! 209. செல்வத்துப் பயனே ஈதல் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 209. செல்வத்துப் பயனே ஈதல் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 209.  செல்வத்துப் பயனே ஈதல் ஆ.தி.பகலன்

 


"செல்வத்துப் பயனே ஈதல் "
 

ஒரு பெரிய மரம். அதனருகே ஒரு சிறிய செடி. இரண்டில் எது

பெரியது? என்று கேட்டால் உருவத்தின் அடிப்படையில் மரம்தான் பெரியது என்போம்.  

அந்த மரம் நிழலை மட்டுமே தருகிறது. வேறு எந்த பயனையும் தரவில்லை. ஆனால், அந்த  செடியோ மூலிகைச் செடியாக இருந்து பல உயிர்களைக் காக்கிறது. இப்போது எது உயர்ந்தது?

செடிதானே.

மரமோ, செடியோ அதன் அடிப்படைத் தேவை மூன்றுதான். நிலம், நீர், காற்று இம்மூன்றும் இருந்தால்தான் அவற்றால் வாழ முடியும். மற்றவர்களுக்கு உதவும் வகையில்தான் அவை உயர்ந்த இடத்தை அடைய முடியும். 

மனிதர்களும்  அப்படித்தான். அரசனோ , ஆண்டியோ அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் மூன்று. உணவு, உடை, உறைவிடம். இவற்றில் எளிமையாய் வாழ்வதிலும், ஆடம்பரமாய்  வாழ்வதிலும்தான் அவர்கள் வேறுபடுகிறார்கள். தன் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு தேவைக்கு அதிகமாக உள்ள செல்வத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதில்தான், அவர்கள் உயர்ந்த இடத்தை அடைகிறார்கள். 

தான் ஈட்டிய செல்வங்கள் அனைத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அந்தச் செல்வத்தின் பயனை ஒருபோதும் அடைய முடியாது. தான் ஈட்டிய செல்வங்களை எல்லாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்பவர்கள் மட்டுமே செல்வத்தின் பயனையும் அடைவார்கள். மக்கள் போற்றும் செல்வாக்கையும் அடைவார்கள். 

" தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுபாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி ; உடுப்பது இரண்டே ;

பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே ;

அதனால் செல்வத்துப் பயனே ஈதல் ;

 துய்ப்பேம் எனினே , தப்புந பலவே " ( புறநானூறு - 189)

" தெளிந்த கடலால் சூழப்பட்ட இவ்வுலகம்  மற்றவர்களுக்கும் பொதுவானது என்று எண்ணாமல் , நிலம் முழுவதும் தனக்கு மட்டுமே உரியது என்று எண்ணிக் கொண்டு,  வெண்கொற்றக் குடையின் நிழலில் அமர்ந்து கொண்டு ஆட்சி செய்யும் அரசர்க்கும் , இரவும் பகலும்  தூங்காமல், விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியறிவு இல்லாத ஒருவனுக்கும் உண்ணுகின்ற உணவு ஒருபடி அளவுதான். அவர்கள் உடுப்பது இரண்டு ஆடைகள்தான். அதுபோல , மற்ற தேவைகளிலும் இருவரும் ஒப்பானவரே ஆவர். ஆகவே,  எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதை ஓரளவுதான் அனுபவிக்க முடியும். 

அதனால்  செல்வத்தினால் ஒருவன் பெறக்கூடிய பயன் அதைப் பிறர்க்கு அளித்தலேயாகும். அவ்வாறு பிறர்க்கு அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் எண்ணினால் அவன்  செல்வத்தினால் வரும் பயன்கள் அனைத்தையும் இழந்தவனாவான்.

"எதையும் சேர்த்து வைக்க எண்ணாதீர்கள்!

எல்லோருடனும் சேர்ந்து வாழ எண்ணுங்கள்!

வாழும் காலம்

வசந்த காலமாகும். "

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

(அலைப்பேசி - 9965414583).

 

0 Response to "தமிழ் அறிவோம்! 209. செல்வத்துப் பயனே ஈதல் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel