குரங்கு பொம்மை திரைப்பட விமர்சனம்

Trending

Breaking News
Loading...

குரங்கு பொம்மை திரைப்பட விமர்சனம்

குரங்கு பொம்மை திரைப்பட விமர்சனம்
றெக்க  கட்டி பறக்கிறது குரங்கு பொம்மை
 
தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய கதை , புதிய இயக்குனர் , ஹீரோயின் என  அறிமுகமாகியுள்ள படமே குரங்கு பொம்மை என்ற படமாகும். இயக்குனர் நித்திலன் அவர்கள் ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து தமிழ் இண்டஸ்ரிக்கு கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட கதையில் விதார்த் தன் இயல்பான நடிப்பால் கூடுதல் அர்த்தம் கொடுத்துள்ளது மேலும் சிறப்பு. பாரதிராஜா இப்படத்தில் நடித்திருப்பது கூடுதல் பலம். இவரின் நடிப்பு படம் பார்ப்பவர் அனைவரிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கதிரின் ( விதார்த்) அப்பாவாக (சுந்தரமாக ) நடித்துள்ளார் பாரதிராஜா. இவருடைய தேர்ந்த நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு ரோல்மாடலாக அமைகின்றது.
   தான் வேலை செய்கின்ற மர வியாபாரி ஏகாம்பரத்திடத்து ( தேனப்பன் ) காட்டுகின்ற விசுவாசத்திலும் , மகனுடனான பாசத்திலும் அந்தக் கதாப்பாத்திரத்தின் அருமையை காணமுடிகின்றது.
  இப்படிப்பட்ட கதையைத் தேர்ந்தெடுத்து நடித்திருப்பதே ஒரு சவால்தான். அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாகவே அசத்தியுள்ளார் விதார்த். தன் அப்பா ஒரு கெட்டவரை நம்புகிறாரே என்ற இடத்திலும் சரி, தன் காதலியிடம் பேசுகின்ற போதும் என தன்னுடைய ரோலை சிறப்பானதாகவே செய்துள்ளார் விதார்த்.
தொடக்கமான இந்தப்படத்திலேயே தான் ஒரு நல்ல நடிகர் என்பதை வில்லனாக நடித்துள்ள தேனப்பன் நிரூபித்துள்ளார்.
இப்படத்தில்  குமரவேலின் நடிப்பும் பேசும்விதமாக திகழ்கிறது. ஒவ்வொரு படத்திலும் சிறந்த அனுபவத்தைப் பெற்று  இவர் மிளிர்ந்துள்ளதை படம் பார்க்கின்ற போது உணரமுடிகின்றது.
   ஹீரோயினாக நடித்துள்ள டெல்னா டேவிஸ் தனக்குக் கொடுத்த குறைவான நேரத்தையும் சிறப்பாகவே பயன்படுத்தி உள்ளார். திரைக்கதை அமைத்துள்ள விதம் அருமை. ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருளை கைமாற்றுவதற்காக பாரதிராஜா சென்னை செல்வதும் , அதைப் பெற்றுக்கொள்பவர் , தனக்கு வந்து சேரவில்லை என டபுள்கேம் ஆட படம் விறுவிறுப்பு பெறுகின்றது.
  கால் டாக்ஸி டிரவைராகவுள்ள விதார்த் மற்றும் பாரதிராஜா எப்படி சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர் , பின் கிளைமாக்ஸ் என படத்தின் திரைக்கதை சூப்பராக அமைக்கப்பட்டுள்ளது.  சின்ன சின்ன விஷயங்களும் மிகத்தெளிவாக காட்டப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் உதயகுமாரின் உழைப்பை பாராட்டியே ஆக வேண்டும். போலிஸ் ஸ்டேஷன் , சென்னையை படம் பிடித்தவிதம் , வீடு என பல்வேறு இடத்தில் அவருடைய திறமை பேசப்படுவதாகவே உள்ளது.
   கதை வரிசையாக அமைக்காமல் முன், பின் தாவிச்செல்கின்ற கதையோடு நாம் இயல்பாகவே பொருந்திப் போகிறோம் , என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். நம்மை அறியாமலே நாம் கதையோடு பயணிப்பதை தவிர்க்க முடியாமல் போகிறது. ஒவ்வொரு ப்ரேமும் நமக்கு பிடித்ததாக அமைகின்றது.  இப்படத்தில் வருகின்ற அனைத்துக் கதாமாந்தரும் ஏதோ ஒரு செய்தியை சொல்லிவிட்டு செல்கின்றனர். பிக்பாக்கெட்டாக வருகின்ற கல்கி , போலிஸ் ஸ்டேஷனில் வருகின்ற குறவன் , குறத்தி , சாணை பிடிப்பவர் , கஞ்சா கருப்பு , பேருந்துப் பயணத்தில் வருகின்றவராகட்டும் ,  என அனைவரும் ஏதோ ஒரு சில செய்தியை சொல்பவராகவே நம்மை கவர்பவராகவே உள்ளனர்.
மனிதநேயம் , குற்றம், திரில்லர் என கதை நம்முள் பயணிப்பது அருமையான அனுபவத்தை தருகின்றது.  குரங்கு பொம்மை போட்ட பை யார் யாரிடம் செல்கின்றது அது எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பதே கதை. இதனூடாக பல்வேறு செய்திகளை இயக்குனர் சொல்லிச் சென்றுள்ளார்.
தீ நட்பு எப்படிப்பட்டது என்பதை இப்படம் கூறியுள்ளது. எதார்த்தமான கதை , நடிப்பு என எல்லாவற்றாலும் சிறப்புற்று விளங்குகிறது குரங்கு பொம்மை. ஆக அனைத்திலும் றெக்க கட்டி பறக்கிறது குரங்கு பொம்மை. இப்படிப்பட்ட படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பது மேலும் இது போன்ற படங்கள் வளர்வதற்கு உறுதுணையாக அமையும்.
பொதுவாக எல்லா இயக்குநருக்கும் முதல்படம் வெற்றிப்படமாக அமைந்து விடுவதில்லை. நாளைய இயக்குநர் சீசன் டைட்டில் வின்னர் நித்திலன் இயக்கியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் நல்லப் பயணத்தை அவருக்கும் தமிழ் சினிமாவிற்கும் கொடுத்துள்ளது. மேலும் தேர்ந்த இயக்குனராக வளர்வதற்கு பாராட்டுகளும் , வாழ்த்துகளும் , இப்படத்தில் நடித்த , உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.#குரங்குபொம்மை
மயிலம் இளமுருகு
mailamilamurugu@gmail.com

0 Response to "குரங்கு பொம்மை திரைப்பட விமர்சனம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel