நமக்கான குடும்பம் ,அரசியல்,எதிர்காலம்
ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் நூலிலிருந்து சமூகத்திற்கு தேவையானவற்றைத் தொகுத்து தந்திருக்கிறார் எழுத்தாளர் கமலாலயன் அவர்கள்…குடும்பம் என்ற தலைப்பில் இன்றைக்குப் பெண்ணைப் பார்க்கின்ற விதம், ஆரம்ப காலத்திலேயே பெண் குறித்து கற்பிக்கப்பட்டு வருகின்ற செய்திகளைக் கேள்விகுட்படுத்தி பதில் தந்திருப்பது அருமை.
ஆணுக்கு மகிழ்ச்சியையும் , பெண்களுக்கு சுமைகளையும் தருவதாக திருமணம் இருக்கின்ற சூழலை தெளிவாக புலப்படுத்தியமை சிறப்பு.
பெண் குறித்தான கற்பிதங்களை வீட்டில் தொடங்கி பாடப்புத்தகம் வரை என பலவிடத்து அடையாளப்படுத்திய முறைகள் சமூகப்பிரக்ஞையோடு விளக்கம் பெறுகிறது. பெண்ணை உடம்பாகப் பார்க்கின்ற போக்கு ,குழந்தை பெற்றுக்கொள்வதில் கூட உரிமை மறுக்கப்படுபவை , பிறகு குழந்தை வளர்ப்பு ,குழந்தை பெறல் குறித்த சமூகப்பார்வை என பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்துவதாக இந்நூல் அமைகிறது.
சுயமரியாதைத் திருமணம் , கணவர் குறித்தான பழமொழிகள் , பெண்களுக்கு எதிராக உள்ள பழமொழிகள் என பல்வேறு செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் என்னும் பகுதியில் சோசலிசம், முதலாளித்துவம்,ரஷ்யாவின் பழைய நிலை, சீனாவின் அரசியல் என பல்வேறு செய்திகளை விளக்கும் வகையில் எழுதியுள்ளார் ஆசிரியர்.
இதனூடாக சோசலிச அரசு எப்படி இருக்கும், அதன் சிறப்பியல்புகள் , சோவியத் புரட்சி, சோசலிச நாடுகளின் பட்டியல் என அரசியலை அறிந்து கொள்ள முடிகின்றது. பண்பாடு, கலாச்சாரம் முதலாளித்துவ அரசில் கல்வி எப்படி அமைகின்றது , வர்க்க முரண்பாடு, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் , அதன் விளைவு, என அச்செய்திகளைச் சமூகப்பொறுப்போடு கூறியமை அருமை.
நாம் சாதிகளாகப் பிரிந்திருப்பது முதலாளிகளுக்குத்தான் லாபம். சினிமா எடுக்கப்படும் முறை ( கருப்பொருள்) சங்கம் , தொழிற்சங்கம் குறித்து கற்பிக்கப்படும் நிலைகளை விமர்சனத்திற்கு உட்படுத்துகின்றார். கூட்டங்களில் பாட்டாளிவார்க்கம் குறித்து பேசிவிட்டு வீட்டில் முதலாளித்துவ பாடம் படிப்பது சரியா? வினா எழுப்புகின்றார். இந்தியாவில் கேரளம், திரிபுரா அரசின் செயல்பாடுகள் மற்ற மாநிலங்களில் இருக்கும் எதிர் நிலைமையை தெளிவாக எடுத்துரைத்தமை ஆகச்சிறப்பு.
இந்நூல் ஒரு சிறிய புத்தகம் தான் ஆனால் பேசும் பொருள் காத்திரமானவை…உரியவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து கொடுத்த கமலாலயன் அவர்களின் சமூகப்புரிதலையும் , தமிழ்ச்செல்வன் அவர்களின் சமூகநிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளவும் …அவர் எழுதிய புத்தகங்களை படிக்க ஆர்வம் ஏற்படுத்தியதாக இந்நூல் உள்ளது.
வாய்ப்பு இருந்தால் படியுங்கள் தோழர்களே…
மயிலம் இளமுருகு
0 Response to "நமக்கான குடும்பம் ,அரசியல்,எதிர்காலம"
Post a Comment