சோலோவாக வந்த சோலோ
திரைப்பட டிக்கெட் அதிகரிப்பினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இச்சூழலில் சோலோவாக மலையாளத்திலும் ,தமிழிலும் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது சோலோ என்ற திரைப்படம்.
பொதுவாகவே தமிழைக்காட்டிலும் ,தமிழ் இயக்குநர்களைக் காட்டிலும் பரிசோதனை ,வித்தியாசம் என மாறுபட்ட திரைப்படங்களை கேரள இயக்குநர்கள் எடுத்துக்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் புதிய முயற்சியாக 5 சுந்தரிகள் , நான்கு கதைகளைக் கூறும் பாணியிலான திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
ஆரோக்கியமான சூழல் ,படைப்பாளர்களின் பங்களிப்பு, ஒற்றுமை,திரைப்பட புரிதல் என பலவற்றை இத்திரைப்படத்தின் மூலமாக நம்மவர்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது.
வசீர், டேவிட், ஸைத்தான் என்று படங்களின் மூலமாக வித்தியாசமான முறையில், புதுமையான முறையில் , டெக்னிக்கல் பயன்பாடு என பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் பிஜாய் நம்பியார் .அவருடைய நான்காவது திரைப்படமே சோலோ ஆகும். நான்கு சக்திகளை மையமாக வைத்து சொல்லப்பட்ட வெவ்வேறு கதைகளே இப்படம்.
தன்னுடைய முமு ஈடுபாட்டையும் செலுத்தி நடித்துள்ளார் துல்கர் சல்மான். நான்கு வித விதமான கதாபாத்திரத்திலும் அசத்தியுள்ளார். நான்கு வருட சம்பவங்களின் தொகுப்பாக இத்திரைப்படம் உள்ளது. ஆந்தாலஜி என்ற வகையில் தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.சிவனின் நான்கு பாகங்களாக நான்கு கதாபாத்திரத்தின் வழி கூறியுள்ளார் இயக்குனர். இத்திரைப்படம் காதல், கோபம், சண்டை,காத்திருத்தல், பழிவாங்கல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
முதல் கதையாக நீர் …சேகராக துல்கர் தன்ஷிகாவை காதலிப்பது , அழகான ரொமன்ஸ் காட்சிகள், திக்கிக்கொண்டு துல்கர் பேசுவது பின் சிக்கலிருந்து திருமணம் செய்து கொள்வது…என பயணிக்கிறது கதை .இரண்டாவதாக காற்று ..இதில் கால்நடை மருத்துவராக திரிலோக்காக நடித்துள்ளார் துல்கர். ஆர்த்தி வெங்கடேஷ் உடனான வாழ்க்கை என நீள்கிறது இக்கதை.. தான் தந்தை ஆகப்போகிறேன் என்ற மகிழ்ச்சியில் இருக்க , சில நிமிடங்களில் விபத்தில் மனைவி இறக்க தனித்து விடப்படுகின்றார் துல்கர். விபத்தில் மனைவி உயிர் போக காரணமானவர்களை எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதாக கதை தொடர்கின்றது.
கால்நடைகளின் உயிர்களைக் காப்பற்றும் திரிலோக் இரண்டு கொலை செய்கிறார்.
மூன்றாவதாக நெருப்பு.. தன் தாயை பிரிந்த அண்ணன்,தம்பி ,அண்ணன் கேங்ஸ்டார் ஆதல் . தந்தை கொல்லப்பட பிறகு அண்ணன் தம்பி கதையாக இப்பகுதி தொடர்கிறது.. டான் ஷிவாவாக துல்கரும் , ருக்குவாக ஸ்ருதி ஹரிஹரனும் நடித்துள்ளனர். குடும்பம், உறவுகள், சிக்கல்களை இக்கதை நமக்கு காட்சிப்படுத்துகின்றது. அருமையாக இப்பகுதியில் துல்கர் நடித்துள்ளார்.
நான்காவதாக நிலம் என்ற இக்கதையில், முக்கியமான கமாண்டோவாக ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் துல்கர் நடித்துள்ளார். உயரதிகாரியின் மகள் நேஹா சர்மாவை காதலித்தல். நாசர் சொல்வதைக்கூட கேட்காமல் இருத்தல். மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் நேஹா …நேஹாவின் அப்பாவிடம் கிண்டலாக பேசுகிறார் துல்கர். பிறகு தந்தை சொல்பவரை திருமணம் செய்தல் , காதல் ஏமாற்றம் ,எதிர்பாராத திருப்பங்களைப் பெறுபவராக ருத்ராவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வரும் ரொமான்டிக் காட்சிகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்வதைப் பார்க்க முடிகின்றது.
இத்திரைப்படத்திற்காக துல்கர் சல்மான் உழைத்துள்ளமையைத் திரைப்படம் பார்ப்பவர் அறிந்து கொள்ள முடியும்.
இசையை அபினவ் பன்சால் முதலான 11 பேர் அமைத்துள்ளனர். இது இப்படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது. கிரிஷ் கங்காதரன் உட்பட மூவரின் ஒளிப்பதிவு சிரத்தையை படம் நமக்கு காட்டிவிடுகின்றது. எடிட்டிங் பணியை ஶ்ரீகர் பிரசாத்தும் அருமையாக செய்துள்ளார்.
துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தை வேறுபடுத்திக் காட்ட தாடி வைத்தும். ட்ரிம் செய்தும், கண்ணாடி அணிந்தும், நீளமான முடி வைத்தும் வேறுபடுத்திக் காட்டியுள்ளனர். கதாநாயகிகளில் தன்ஷிகாவும் , நேஹாவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கின்றனர். தன்ஷிகாவின் கதாபாத்திரம் சற்று நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக அமைக்கப்பட்டிருந்தது.
திக்குவாய் சேகர் , அதிகம் பேசாத திரிலோக் , கண்களால் மிரட்டும் சிவா, சுறுசுறுப்பான இளைஞராக ருத்ரா என நான்கு கதாபாத்திரங்களில் மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளார் துல்கர். இயக்குனர் கதாநாயகனின் பெயரை எல்லாம் ஏன் சிவனாக வைத்தார் என்று தெரியவில்லை. இந்துத்துவத்தை திரைப்படத்தில் கட்டமைக்கிறாரோ என யோசிக்க முடிகின்றது. முதல் பாதியில் காட்டியிருந்த ஆர்வத்தை பிற்பாதியில் காட்டியிருக்கலாம் .கிளைமாக்ஸ் எதிர்பாராததாக ஏமாற்றம் அளித்துள்ளது.
இருப்பினும் துல்கர் சல்மானின் நடிப்பு , அசத்தலான இசை , வித்தியாசமான லோகேஷன்,அழகான ஒளிப்பதிவு , பரிச்சார்த்தமான முயற்சி, Non Liner முறை என்பதற்காக இப்படத்தை பார்க்கலாம்.
மயிலம் இளமுருகு
நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்
0 Response to "சோலோவாக வந்த சோலோ திரைப்படம் விமர்சனம்"
Post a Comment