வெகுசன வெற்றியில் கலகலப்பு 2
வெகுசன மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து வெற்றி படமாக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர். சி. மாஸ் ,கிஸாஸ் என்ற பிரிவில் நகைச்சுவையை முக்கியச்சரடாக வைத்து மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது கலகலப்பு 2 ..2012 ஆம் ஆண்டு கலகலப்பு என்ற படத்தை சுந்தர்.சி எடுத்தார் .அப்படம் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றதால் மீண்டும் அதைப்போன்று பாகம் 2 என்ற வகையில் கலகலப்பு 2 என்ற படத்தை எடுக்கத் துணிந்தார். கதை இல்லை ,லாஜிக் இல்லை,பாகம் 1 இல் நடித்த விமல் இல்லை,சந்தானம் இல்லை ஆனால் படம் பார்ப்பவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. திரைக்கதையும் அழுத்தமில்லாமலே இருக்கிறது.
சுந்தர்.சி இயக்கியுள்ள படத்தைப் பார்க்க போனால் சிரித்துவிட்டு வரலாம் என்பதை இப்படமும் வெளிப்படுத்தியிருக்கிறது. ரசிகர்கள் எந்த இடத்தில் சிரிப்பார்கள் என்று தெளிவாக புரிந்துவைத்திருப்பது அவருடைய வெற்றியின் ரகசியமாகவே பார்க்கப்படுகின்றது. ஒரேயடியாக சிரிக்கவிடாமல் இடை இடையே சிரிக்க வைக்கிறது இப்படம். சிலவிடங்களில் நாம் நம்மை மறந்து பயங்கரமாக சிரிப்போம். இளைஞர்களைக் கவர வேண்டுமே என்ற நோக்கத்தில் சில காட்சிகளை இரட்டை பொருள் படும்படியாக வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
காசியைக் காண்பித்தவிதம்,சேசிங்,இரயில்வே ஸ்டேஷன்,மேன்சன்,போன்ற இடங்களில் ஒளிப்பதிவாளர் யூ.கே.செந்தில்குமார் கவனிக்க வைக்கிறார். கலைஇயக்குனர் பொன்ராஜ் அவர்களின் உழைப்பும் குறிப்பிடத்தக்கது. பத்ரி நாராயணனின் வசனம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கிறது. இசையை ஹிப்ஹாப் தமிழா அமைத்துள்ளார். சற்று வித்தியாசமாக கொடுத்திருக்கலாம்.ஆனால் நகைச்சுவை படத்திற்கு உரிய இசையைக் கொடுத்துள்ளார். ஒருகுச்சி ஒரு குல்பி …செல்பி என்று வருகிற பாடல் மட்டுமே மனதில் பதிகின்றது. வித்தியாசமான இப்படத்தை படத்தொகுப்பாளர் நன்றாகவே எடிட்டிங் செய்துள்ளார்.
கலகலப்பு 1 இல் நடித்த சிவா, மனோபாலா,ஜார்ஜ் போன்றோர்கள் இப்படத்திலும் அசத்தியுள்ளனர். எண்ணற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களிடம் சிறப்பாக வேலையும் வாங்கியுள்ளார் இயக்குனர். இரண்டு கதாநாயகர்களாக ஜீவா,ஜெய் நடித்துள்ளனர். கதாநாயகியாக முறையே கேத்தரின் தெரசா ,நிக்கி கல்ராணியும் நடித்துள்ளனர். ( சென்ற படத்தில் விமல் -அஞ்சலி ,சிவா-ஓவியா ) ராதாரவி,சந்தானபாரதி,சதிஷ்,முனிஷ்காந்த்,நிஷா,விச்சு,தளபதி தினேஷ்,ஜார்ஜ்,ரோபோ சங்கர்,யோகிபாபு,சிங்கமுத்து ,சிங்கம்புலி என பலர் நடித்துள்ளனர். அனைவருமே அவரவர்க்கான பாணியில் நம்மை சிரிக்க வைக்கின்றனர். படத்தின் முதல்பாதியைக்காட்டிலும் இரண்டாவது பாதி நம்மை கவர்கிறது. மீண்டும் இன்னொரு கலகலப்பு கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
படத்தின் கதை….
முன்னாள் அமைச்சர் தர்மராஜ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துகின்றனர். விவரம் தெரிந்தவுடன் அவர் உஷாராகி விடுகின்றார். அவருடைய ஆடிட்டர் அவருடைய லேப்டாப்பை தூக்கிச்சென்று 5கோடி பணம் கொடுத்தால் திருப்பித் தந்துவிடுவதாக சொல்கிறார். அதற்கு சம்மதித்து ராதாரவிடம் பணம் கொடுத்தனுப்புகின்றார். அவருடன் ஜார்ஜூம் காசிக்குச் செல்கின்றார். சென்னையில் ஜெய் வருமானம் இன்றி இருக்கும்போது அவருடைய பூர்வீக சொத்து காசியில் இருப்பதாக அறிந்து இவரும் காசிக்குச் செல்கின்றார்.
காசியில் ஜெய்க்கு சொந்தமான மேன்சனை வாடகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தி வருகின்றார் ஜீவா குடும்பத்தினர். அங்கு வரும் ஜெய்யை அவருடைய மேன்சனுக்கு அழைத்துச் சென்று அறையை வாடகை விடுகின்றார். அப்போது காட்டப்படுகின்ற காட்சிகள் சிரிப்பைத் தருகின்றன. கரண்ட் இல்லை ,ஏசி இல்லை,பெட்டும் உடைந்துவிடும் என காட்சிகள் நகர்கின்றன. நிக்கி கல்ராணியைப் பார்க்கும் ஜெய் அவரைப் பின்தொடர்ந்து காதல் செய்கிறார். இவர் அங்கு தாசில்தார் வேலையை செய்கிறார். (பழைய படத்தில் அஞ்சலி )ஆனால் அங்கிருப்பவர்கள் தமிழ் பேசுவர்.நாம் லாஜிக் பார்க்கக்கூடாது. இதைக்கூட சிவா படத்தின் இறுதிக்காட்சியில் சுந்தர் படம்மென்றால் லாஜிக் பார்க்க கூடாது என்று சொல்லிச் சென்றுள்ளார்.
ஜெய் தன் இடத்தின் பத்திரம் ,மேப் கேட்டு தாசில்தார் நிக்கியிடம் விண்ணப்பம் செய்கிறார். உண்மையைத் தெரிந்தவுடன் நிக்கி ஜீவாவிடம் சொல்ல அவர் தயவுசெய்து இதை கொடுத்துவிடாதே என் தங்கைக்கு இப்பதான் திருமண ஏற்பாடு இருக்கிறது என்கிறார். சதீஷ் ஜீவாவின் தங்கையை பெண்பார்க்க வருவது, திருமணம் வேண்டாமென்று சொல்வது , பிறகு திருமணத்திற்கு சம்மதிப்பது ,என அசத்துகின்றார். இவருடைய தங்கையே கேத்தரின் தெரசா இவர்மீது காதல் கொண்டு ஜீவா வழிகின்றார். இப்படத்தில் பழைய ஜீவாவை நாம் பார்க்க முடிகின்றது. ஜெய் தன் பூர்வீக இடம்தெரியாது வருந்தி கோயிலின் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும்போது ஜீவா அவரைக் காப்பாற்றுகின்றார். அப்போது ஜீவாவை அணைத்து தன் காதலை வெளிப்படுத்துகின்றார் கேத்ரின். உயிர்பிழைத்து இருக்கும்போது ஜெயைத் தழுவி அவரும் அவருடைய காதலை சொல்கிறார்.
ராதாரவி ஆடிட்டரைத் தேடிச்சென்று லேப்டாப்பை பெறும் முயற்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது. அமாவாசை நாளில் ஜார்ஜ் ராதாரவியை அடிப்பது செம ரகளை. தன்னுடைய மாமா ஒருவரை தத்தெடுப்பதாகக் கூறி அந்நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை புறப்பட்டு செல்கிறார் நிக்கி. அங்கே சென்று செல்பி எடுத்து ஜெய்க்கு அனுப்ப அதைப்பார்த்த ஜெய் மற்றும் ஜீவா அதிர்ந்து போகின்றனர். ஏனெனில் இருவரும் சிவாவிடம் பணத்தை பறிகொடுத்தவர்கள். பிறகு சென்னை புறப்பட்டு நிக்கியின் வீட்டிற்கு வருகின்றனர். சந்தானபாரதி சிவாவை தத்தெடுப்பதாக சொல்லப்படுகிறது. அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பித்து போக இருப்பதாகச் சிவா சொல்ல ஜீவா ,ஜெய் ஓகே சொல்கின்றனர்.
இடையில் யோகிபாபு சிங்கமுத்து செய்யும் காமெடியும் அமர்க்களம். வையாபுரி ,ரோபோ சங்கர் ,சந்தான பாரதி என பலரும் நகைச்சுவை செய்கின்றனர். சந்தான பாரதியின் சுண்டுவிரல் கூட இதுவரை என்மீது படவில்லை. ஆனால் என்னை மலடி என்று சொல்லி ஒருவரை தத்தெடுப்பதாகக் சொல்வது பிடிக்கவில்லை என தன்தம்பி ரோபோ சங்கரிடம் அவருடைய அக்கா சொல்ல அவர் சிவாவை கொலைசெய்ய முயற்சி செய்கிறார். மறுபக்கம் நிக்கியின் அப்பா VTV கணேஷூம் காமெடியில் கலக்கியுள்ளார். சந்தான பாரதி அவர் வைத்துள்ள பொக்கிஷ அறையைக் காட்டுகிறார். அந்த அறைக்குள் சென்று பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிக்க நினைக்கும் சிவாவை அடித்து மயங்க வைக்கிறார் சங்கர்.
கணேஷ் ஜெயை தண்டிக்க நினைத்து செயல்புரிய சந்தர்ப்பவசத்தால் அவரே அதில் மாட்டிக் கொள்கின்றார். உள்ளே இருப்பது கணேஷ் என்று தெரியாமலே அவருடைய அடியாள் அவரை அடிக்கின்றனர். யோகிபாபுவும் சிங்கமுத்துவும் ஜீவா செய்த செயலால் அமைச்சரிடம் மாட்டிக் கொள்கின்றனர். அவர்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டில் யோகிபாபுவை ஸ்டெம்பாக நிற்க வைத்து அலப்பறை செய்கின்றனர்.
இப்படம் பிப்ரவரி14அன்று வெளிவந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அந்தளவு காதல்,கவர்ச்சி, துள்ளலாக இருக்கிறது. சிவா தப்பிச் செல்லும் காட்சிகளில் படம் பார்க்கின்ற அனைவரும் சிரிக்கின்றனர். குறிப்பாக ரோபோ சங்கர் கட்டிடம் விட்டு கட்டிடம் தாண்டும்போது கொம்பில் மாட்டிக் கொள்வார். உதவிசெய்கிறேன் என்று சொன்னவர்கள் காளைமாட்டின் கொம்பில் மாட்டிக்கொண்டு வரும் வையாபுரியைப் பார்த்து சங்கரை கீழே விட்டுவிடுகின்றனர். பிறகு கண்ணாடி இல்லாமல் இருக்க மாடு வந்து முட்டுகின்றது. இப்படியாக படம் நகைச்சுவையுடன் பயணிக்கிறது.
காசிக்கு வரும் கேத்ரின் செய்யும் செயலால் ஆடிட்டர் தன் சுயநினைவை இழக்கின்றார். அதனால் அவரை மேன்சனில் தங்க வைக்கிறார் கேத்ரின் . விஷயம் தெரிந்து அமைச்சர் ஆட்கள் அவரை தூக்கிச் செல்கின்றனர். அவரிடமிருந்த பெட்டி லேப்டாப் இல்லாமல் இருக்க அதிர்ச்சி அடைகிறார்கள். இதை கவனித்த சிவா 15( இலட்சம்) பணம் கேட்க அமைச்சர் 10 கோடி தருவதாக ஒத்துக்கொள்கின்றார். பிறகு பணம் கொடுத்து லேப்டாப் வாங்க நடக்க காட்சிகளில் அனைவருமே விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். முனிஷ்காந்த் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை நன்கு பயன்படுத்தி உள்ளார்.
இறுதிக்காட்சி ரயில்வே ஸ்டேஷனில் நடைபெறுகிறது. யோகிபாபு அமைச்சரை ஐந்து அடி அடிக்கும் காட்சிகள் அருமை. இப்படி நகரும் இறுதி 25 நிமிடங்கள் அசத்தல். இப்பகுதியில் படம் பார்ப்பவர்கள் வயிறுகுலுங்க சிரிப்பது உறுதி. நிக்கியும் ,கேத்ரினாவும் சண்டை போடுகின்றனர். இறுதியில் நந்திதா வந்து தன்னை சிபிஐ என்று சொல்லி சிவாவைக் காப்பாற்றி செல்கின்றார். ஆதார் கார்டை காட்டி சிபிஐ என்று சொன்னதை ஜீவா கண்டறிய அமைச்சர் குழுவினர் கோபமடைகின்றனர். மொத்தத்தில் எதையும் எதிர்பார்க்காமல் சென்றால் நன்றாக சிரித்து விட்டு வரலாம். அப்புறமென்ன தியேட்டர் சென்று நன்றாக சிரித்து விட்டு வாருங்கள். (ஆனால் கலகலப்பு 1 போல் இல்லை )
மயிலம் இளமுருகு
கைபேசி - 9600270331
0 Response to " கலகலப்பு 2 திரைப்படம் விமர்சனம் "
Post a Comment