மனிதர்கள் பெரும்பாலும் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு அதிகபட்சமாக சாலைவழியாகத்தான் செல்கின்றனர். சாலையில் பயணிப்பவர்கள் அதிவேகத்துடனும் வேகத்துடனும் சிலர் மெதுவாகவும் சிலர் நிதானமாகவும் செல்வதை நாம் பார்க்க முடிகின்றது . அதுவும் காலைவேளையில் பள்ளி,கல்லூரி,அலுவலகம் மற்றும் அவரவர் பணியாற்றும் இடங்களுக்குப் பயணிக்கின்றனர். பேருந்து,கார்,ஆட்டோ போன்றவற்றில் பயணிப்பவர்களைவிட இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் பல்வேறு நெருக்கடிகளுடனே பயணத்தைத் தொடர்கின்றனர்.
இவர்கள் பேருந்து,கனரகவாகனங்கள் ,வேன்,போன்றவற்றினால் பெரிதும் பாதிப்படைகின்றனர். குறிப்பாக லாரி மற்றும் கனரகவாகனங்களை ஓட்டுபவர்கள் நிதானமின்றி ஓட்டுவதைப் பார்க்க முடிகின்றது. ஒழுங்காக சிக்னல் கூட போடாமல் இஷ்டத்திற்கு வேகமாகச் சென்று பின்னால் வருபவர்களைப் பார்க்காமல் உடனே திரும்புகின்றனர். இப்படி நடக்கிற விபத்துகள் ஏராளம்.
இன்று கூட நான் ஒரு லாரியின் பின்னால் சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். முன்னால் சென்ற லாரி திரும்புவதற்கான எந்த சமிக்ஞையும் தராமல் உடனடியாகத் திரும்ப பின் சென்றவர் மீது மோதியது. என்ன நடக்கிறது என்று சுதாரித்து கொள்வதற்குள் கீழே விழுந்தார். எழுந்திருக்க நேரமாகியது. லாரி ஓட்டுநரை நான் திட்டிவிட்டு வந்தேன். ஏனெனில் எனக்கும் அலுவலகம் செல்ல வேண்டும். இப்படியாகவே சென்னை நகரவாசிகள் பயணிக்கின்றனர். ( நிகழ்வு நடைபெற்ற இடம் மதுரவாயல் )
ஒரு நொடியில் ஒருவரது குடும்பத்தையே பலிவாங்கப் பார்த்தார் அந்த லாரி டிரைவர். தயவுசெய்து செல்போனில் பேசிக்கொண்டும் உரிய சிக்னல் தரமாலும் கண்டமேனிக்கு வேகமாக ஓட்டாமலும் சற்று பொறுமையைக் கடைபிடியுங்கள். இது அவசியமாகிறது.
மனித வாழ்க்கையை ஒரு நொடியில் அழித்து விடாதீர்கள். அப்படி வேகமாகச் சென்று என்னதான் சாதிக்கப் போகிறீர்கள். உங்களுக்கு வாழ்க்கை இருப்பது போலவே அனைவருக்கும் வாழ்க்கை இருக்கிறது மறவாதீர்கள். எனவே நண்பர்கள் பொறுப்புணர்ந்து மனிதநேயத்தோடு பயணிக்கும்படி வேண்டுகிறேன். அரசும் தவறிழைப்பவர்களுக்கு ( மரணம் ஏற்படுத்துபவர் ) கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும். விபத்துகளால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க, நம்மால் முடிந்த விழிப்புணர்விற்கு ஆதரவு தருவோம்.
மனிதமே
நொடியில் மற்றவர் வாழ்க்கை பறிபோக
ஒருபோதும் நினைக்காதே
மயிலம் இளமுருகு
22.02.2018…. 4 PM.
0 Response to "தோழர்களே உங்களிடம் இந்த நிமிடம்"
Post a Comment