வீரியமிழந்த வீரா
சமீபகாலமாக வடசென்னையைக் கதைக்களமாக வைத்து அதிக படங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த பட்டியலில் வீராவும் சேர்ந்து கொள்கிறது. இயல்பைக் காட்டுகிறேன் என்று சொல்லி அப்பட்டமாக சொற்களைப் பயன்படுத்தி இருப்பதை சற்று நிதானித்து பார்க்க வேண்டியுள்ளது. இப்படத்தைக் குடும்பத்துடன் சென்று பாருங்கள் என்று சொல்லத் தோணவில்லை. இளைஞர்கள் வேண்டுமென்றால் பார்க்கலாம். அதுவும் வன்முறை ,கொலை சார்ந்த காட்சிகளும் தகவல்களுமாகவே இப்படம் காட்சிப்படுகின்றது. சிலர் இப்படியான படங்களைப் பார்த்து சிலவற்றை கற்றுக்கொள்ளவும் செய்கின்றனர்..
அறிமுக இயக்குனர் ராஜாராமன் இப்படத்தை இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் வெற்றிகரமாக ஓடிய படங்கள் போன்று இப்படத்தையும் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் இது சீரியஸான படமா அல்லது நகைச்சுவை படமா என்ற வரையறைக்குள் சிக்கி கழன்றோடியுள்ளது. பாக்கியம் சங்கர் இப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதியுள்ளார். சில முக்கியமான அரசியல் சார்ந்த செய்திகளை எழுதியுள்ளது கவனிக்கும்படியாக இருக்கிறது. ஆனால் வசனங்கள் சிலவிடங்களில் தாறுமாறாக உள்ளன. திரைக்கதையை இன்னும் செதுக்கி இருக்கலாம்.
அரசியல்,வன்முறை,நகைச்சுவை என்று பயணிக்கிற இப்படத்தை ஓரளவு காப்பாற்றுவதாக எடிட்டிங் உள்ளது. இப்பணியை டி.எஸ்.சுரேஷ் திறம்பட செய்துள்ளார். சண்டைக்காட்சிகள் மிகுந்த இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். உடாதடா உடாதடா என்ற பாடல் ஓகே ரகம். சண்டைக்காட்சிகளுக்கான இசை வித்தியாசமானதாக உள்ளது. இப்படத்தில் கிருஷ்ணா , கருணாகரன் , ஐஸ்வர்யா மேனன், ராதாரவி,ஆடுகளம் நரேன்,கண்ணா ரவி,நான்கடவுள் ராஜேந்திரன்,RNR மனோகர் ,தம்பி ராமையா ,யோகிபாபு, லிவின் போன்றோர் நடித்துள்ளனர்.
கிருஷ்ணா வழக்கம் போலவே மிகைப்படியான நடிப்பைக் கொடுத்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அமர்க்களப்படுத்துகின்றார். ஆனால் ரவுடி கெட்டப்பில் தமிழ் ஹீரோவுக்கான டெம்ப்ளேட்டாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வசனம் ,கதை என்பன யாதார்த்தமாக இருப்பதாக நினைத்தால் ஹீரோ,ஹீரோயின் உருவாக்க பிம்பத்தில் தோற்றுள்ளதாகவே தோன்றுகிறது. தம்பி ராமையா பலவிடங்களில் அரசியலைப் பேசுகிறார். குறிப்பாக ஜாலியாக இருப்பதற்காக குடிக்க ஆரம்பித்தேன் ஆனால் இன்றைக்கு குடித்தால்தான் ஜாலியாக இருக்குமென்ற நிலை வந்துவிட்டது என்று சொல்கின்ற காட்சி செம. தமிழகத்தில் இன்று விடிந்தால் ஏதோ டீ குடிக்கின்ற மாதிரி மது அருந்துவது வழக்கமாக்கிவிட்டதை ,அரசியலைப் பேசுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் தொடக்கத்திலேயே இது கற்பனை களம் இல்லை என்று சொல்லப்படுகின்றது. புதுப்பேட்டை,கொக்கிகுமாரு ,மெட்ராஸ் படங்களைப் இப்படம் நினைவிற்கு கொண்டு வருகிறது. சென்னையில் இரண்டு கேங் உள்ளது. அதில் ஒரு கேங்கில் கதையின் நாயகர்கள் உள்ளனர். ஆமாம் கிருஷ்ணாவும் கருணாகரனும் தான் அவர்கள். வீரமுத்து ,பச்சமுத்து என்ற பெயரில் சிங்கார வேலர் மனமகிழ் மன்றத்தில் உள்ளனர். சுறா முருகன் ( கண்ணா ரவி) என்பவர் அம்மன்றத்தின் தலைவராக இருக்கிறார். அரசியல் தலைவர்கள் அம்மன்ற விழாக்களில் பங்கேற்று சுறா முருகனைப் பாராட்டுகின்றனர். இதைப்பார்த்த கிருஷ்ணாவும் கருணாகரனும் மன்றத்தின் தலைவராக மாற ஆசைப்படுகின்றனர். அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதை சொல்வதாக இப்படம் உள்ளது.
தீவிரமான அரசியலைப் பேசப்போகின்றது என்று நினைத்து பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சுறா முருகனைப் பாராட்டும் அரசியல்வாதியிடம் சென்று தன்னை மன்றத்தின் தலைவனாக நியமிக்கும்படி கேட்கிறார். ஆனால் அவர் சிரித்து ஏளனம் செய்து அனுப்புகிறார்.. மன்றத்தில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் ஒருவர் வந்து கொருக்குப்பேட்டையில் அசால்ட்டு பண்ணிட்டேன் என்று சொல்கிறார். அதைக்கேட்டு கருணாகரன் அவன் ரவுடின்னா அப்ப நாமெல்லாம் யாரு என்று கேட்டு சிரிக்க வைக்கிறார் .
ஆட்டோவில் கிருஷ்ணா செல்லும் போது அந்த ஆட்டோவில் ஹீரோயின் ரேணுகா ( ஐஸ்வர்யா மேனன்) அறிமுகம் ஆகுகின்றார். அவரைப் பார்த்து வழிகின்றார் வீரா. அசால்ட்டு பண்ண ஸ்கெட்ச் வேண்டி வருபவருக்கு ஸ்கெட்ச் போட்டுத் தருகிறார் வீரா. தன் நண்பன் காதலிக்கும் பெண் தன்னை ஏமாற்றி விட்டு வேறொருவனைப் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்கிறார் என்று சொல்கிறார். இதைக்கேட்ட வீரா ,பச்சமுத்து ( கருணாகரன்) இருவரும் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்கின்றனர். ஆனால் அங்கு ஏற்கெனவே பார்த்த ரேணுகா இருக்க அவரிடம் விசாரிக்கும்போது இவர்கள் இருவரும் காதலித்துதான் திருமணம் செய்து கொள்ளுகின்றனர் என்று சொல்ல பெண்ணைத் தூக்க நினைத்த நண்பனை வந்து திட்டுகின்றனர்.
மன்றத்தில் தனியாக செயல்பட நினைக்கும் இருவரைக் குறித்து சுறா முருகன் அரசியல்வாதியிடம் குறை கூறுகிறார். வீரா ,பச்சமுத்துவை மாட்டி விட திட்டம் தீட்டி சுறா முருகன் செயல்படுகின்றார். தன் மச்சானிடமே மாமூல் வசூலித்து வருமாறு சுறா முருகன் சொல்ல இவர்கள் சென்று நிலவரத்தை தெரிந்து கொள்கின்றனர். எப்படி கொலை செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் வீராவுக்கும் சுறா முருகனுக்கு சண்டை ஏற்படுகிறது. செம காண்டாயிடுச்சி என்று வீரா சொல்ல வீராவும் பச்சமுத்துவும் குடிக்கச் செல்கின்றனர். அங்கே தம்பி ராமையா அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றார்.
கொலை ,கொள்ளை ,போலீஸ் ,மாவட்டம் என்று பல்வேறு விஷயங்களைத் தெளிவாகச் சொல்லி தருகிறார் . ஸ்கெட்ச் சேகரிடம் சென்று தொழில் கத்துகிட்டு வாங்க என்று சொல்லி அனுப்புகிறார். பெரியபாளையத்தில் ஆன்மிக குருவாக இருக்கும் ராதாரவியைப் (ஸ்கெட்ச் சேகர்) பார்த்து ஆச்சர்யப்படுகின்றனர். மக்களுக்கு அப்போது அவர் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். நம்மை ஒருவர் கத்தியால் குத்த வந்தால்கூட அவர்களை அன்பால் மாற்றிவிடலாம் என்று கதையின் நீதிக்கருத்தைக் கூறுவது கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் மூலமாக ரவுடிகள் திருந்தி ஆன்மிகத்தில் ஈடுபடுகின்றனர் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது. சிலகாட்சிகள் முடிந்து இருவருக்கும் தொழில் கற்றுத் தருகிறார் ராதாரவி.
இவர்கள் இங்கும் சுறாமுருகன் அங்கும் என காட்சிகள் காட்டப்படுகின்றன. எப்படி கொலை செய்து விட்டு தப்பிக்க வேண்டும் என்றும் ராதாரவி இருவருக்கும் கற்றுத்தருகின்றார். ஒவ்வொரு கத்தியையும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் கற்கின்றனர். தம்பி நிஜாரு உஷாரு என பாடல்கூட சென்னை தமிழாகவே வருகிறது. தொழிலைக் கற்றுக்கொண்டு சென்னை திரும்பி சம்பவம் செய்வதற்கு சேட்டுவிடம் சென்று பணம் கேட்கின்றனர். ஆனால் சேட்டு நீங்கள் சம்பவம் செய்கிற ஆளில்லையே என்று ஏளனம் செய்து அனுப்புகிறார் .
இந்த தகவலை தம்பி ராமையாவிடம் சொல்ல அவர் ஆலோசனைத் தருகிறார். ஒரு பெரிய ஆளை அசால்ட்டு செய்ய சொல்கிறார். இதைக்கேட்ட இருவரும் தனக்கு தொழில் கற்றுக்கொடுத்த ராதாரவியையே கொலை செய்ய செல்கின்றனர். இவர்களைப் பார்த்தவுடன் ராதாரவி ஹார்ட்அட்டாக் வந்து கீழேவிழுந்து இறந்து விடுகின்றார்.கருணாகரன் நாம்தான் இவரை கொலை செய்யனும் என்று சொல்ல வீரா அவரை கத்தியால் குத்துவதை ஒருவர் பார்த்து விட இருவரும் தப்பிக்கின்றனர். போலீசார் சுறா முருகனை வந்து விசாரிக்கின்றனர். இருவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதைப் பார்த்து இவர்கள் ரவுடிகள் ஆகிவிட்டார்களே என்று சுறாமுருகன் கோபம் கொள்கிறார்.
சிறையில் குமார் என்ற ரவுடி இருக்கிறார். அவர் இவர்களின் திறமையைக் கேட்டு ஒரு வேலை கொடுக்கிறார் .இருவரும் ஒப்புக்கொண்ட பிறகு அவர்கள் வெளியே வருகின்றனர். அதாவது தான் காதலித்த பெண்ணை நீ கடத்திவருவேண்டும் என்று வேலை கொடுக்கிறார் . அது யார் என்றால் வீரா காதலிக்கின்ற ரேணுகா ..மேலும் அவர் ஆடுகளம் நரேனின் மகள் ஆவர். இவர் சுறாமுருகனுக்கு வேண்டிய ஆள். இப்படத்தில் ரவுடிகள் பயன்படுத்துகின்ற ஆபீஸ் ,ரிப்போர்ட்,கேஸ்,ரெக்கார்ட்,என இவர்களின் உலகத்தைப் படம்பிடித்து காட்டுகிறது . நான் கடவுள் ராஜேந்திரன்,யோகிபாபு இருவரும் அறிமுகம் ஆகுகின்றனர்.
இவர்கள் வீரா ,பச்சமுத்து இருவருக்கும் உறுதுணையாக இருக்க குமாரால் அனுப்பி வைக்கப்பட்டவர். ரேணுகாவைத் தூக்கச்செல்லும் இவர்கள் பயப்படுகின்றனர். தூக்கினா பாஸ் நம்மை போட்டுடுவாரு தூக்கவில்லை என்றால் குமார் போட்டுடுவான் என்று கருணாகரன் அஞ்சுகிறார் . ராஜேந்திரன் யோகிபாபு செய்யும் நகைச்சுவை அவ்வளவாக எடுபடவில்லை. இவர்கள் ரேணுகாவைத் தூக்கச் செல்ல ஆனால் ரேணுகாவே தானாக வந்து காரில் உட்கார்ந்து கொள்கின்றார். கருணாகரன் அப்போது நாம இந்தப் பொண்ணைத் தூக்க வந்தா இந்தப் பொண்ணு நம்பள தூக்கிட்டு போகிறது என்று காமெடி செய்கிறார். ரேணுகாவை கடத்திவிட்டதாக கருணாகரன் சொல்ல சிறையில் இருக்கும் குமார் மகிழ்ச்சி அடைகின்றார் . ஆனால் ரேணுகா தப்பிச் சென்றுவிட இருவரும் பயப்படுகின்றனர். குமார் விஷயம் கேள்விபட்டு நீங்கள் இன்னைக்கு இரவு உயிரோடு இருப்பது கடினம் என்று சொல்கின்றார். ஒருபக்கம் நான் இன்னொரு பக்கம் பாஸ் ,அப்புறம் சுறாமுருகன் அதனால் நீ இன்றைக்கு செத்த என்று கூற இருவரும் மரணபீதி அடைகின்றனர்.
சுறா முருகன் லாட்ஜில் இருக்கும் ரேணுகா மற்றும் இருவரையும் பார்த்து கொலை செய்ய துரத்தி ஓடுகின்றார். இக்காட்சி அருமையான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு அருமை. மாடிவிட்டு தாண்டுவது சண்டை என அமர்க்களம். சுறாமுருகனிடமிருந்து ராஜேந்திரன் வந்து காப்பாற்றி அழைத்துச் செல்கின்றார். குமார் சொல்படி கொலை செய்ய முற்படுகையில் வீரா ரேணுகாவிடம் பேசுங்கள் என்று கான்பரன்ஸ் கால்போட்டு குமாரிடம் கொடுக்கிறார். ரேணுகா அப்போது உஷாராகி குமாரை கடுப்பேத்துகின்றார். அதாவது வீரா தான் ஆம்பள நீயில்லை என்கிறார். நீ வந்து என்னை தூக்காம ஏன் வீராவை அனுப்பின என்று கேட்கிறார்.
நீ சரியான ஆம்பிளையாக இருந்தால் ஜெயிலிருந்து வந்து வீராவை போடுடா பார்க்கலாம் என்று சொல்ல, குமார் அப்படியே நானே வந்து வீராவை முடிக்கிறேன் என்று சபதம் செய்கிறார். உண்மையில் படம்முழுக்க ஒருவித பயத்தோடே பயணம் செய்கிறார் கருணாகரன். இறுதியில் வீரா ஸ்கெட்ச் போட்டு சுறாமுருகனையும் குமாரையும் மன்றத்திற்கு வரவழைக்கிறார் . அங்கு வரும் குமார் சுறாமுருகனை கொலை செய்கிறார். கருணாகரன் பயந்து கொண்டிருக்க வீரா குமாருடன் சண்டைபோடச் செல்வதைப் பார்த்து கருணாகரன் தடுக்க மீறா குமாரிடம் சென்று சண்டை போடுகின்றார் வீரா.
எச்ச பாடுகளா என்னான்டே வேலைய காட்றீங்களா என்று குமார் சண்டை போடுகின்றார். பின்னால் இருந்து கருணாகரன் ராதாரவி சொல்லிக் கொடுத்த மாதிரியே கத்தியால் தலையின் பின்பகுதியில் அடிக்க நிலைதடுமாறி குமார் நிற்க அந்த சமயத்தில் வீரா அவரை கத்தியால் குத்தி கொலை செய்கிறார். பிறகு மன்றத்தின் தலைவர்களாக வீராவும் கருணாகரனும் இருக்கின்றனர். மன்றத்தின் விழாவில் மாவட்ட அரசியல் தலைவர் பங்கேற்று வீராவைப் புகழ்ந்து பேசுகின்றார். இறுதியில் வீரா, பச்சமுத்துவிடம் இருவர் வந்து தொழில் கற்றுக்கொடுங்கள் என்று கேட்கின்றனர். அதற்கு அவர்கள் கற்றுத்தர முடியாது என்று சொல்லி அனுப்பி விடுகின்றனர்.
இருவரும் தம்பி ராமையாவிடம் பேசுகின்றனர். எப்படியாவது மன்றத்தின் தலைவராக நாங்கள் ஆகவேண்டும் என்கின்றனர். அதற்கு அவர் வழக்கம் போலவே உங்களுக்கு தொழில் தெரியாது கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல படம் முடிவடைகிறது.
ரவுடிகளைக் கொலை செய்தே மற்றவர்கள் தன் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள ஆசைப்படுகின்றனர். ரவுடிகளைப் பற்றியதாகவே இப்படம் உள்ளது. இன்னும் சரியான பாதையில் சென்றிருந்தால் உரிய கவனம் பெற்றிருக்கும். இருப்பினும் வெற்றி பெற வேண்டி உழைத்துள்ளார்கள். இப்படம், குழுவினருக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது….அனைவரும் ரசிக்கும்படியான திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்ய வாழ்த்துகிறோம்…
மயிலம் இளமுருகு
கைபேசி- 9600270331
0 Response to "வீரா திரைப்பட விமர்சனம்"
Post a Comment