பந்தயக் குதிரைகளா மாணவர்கள்- நூல் மதிப்புரை

Trending

Breaking News
Loading...

பந்தயக் குதிரைகளா மாணவர்கள்- நூல் மதிப்புரை

பந்தயக் குதிரைகளா மாணவர்கள்- நூல் மதிப்புரை


ஆசிரியர்- இரத்தின புகழேந்தி
இளவேனில் பதிப்பகம்
முதல் பதிப்பு -2017
ரூ.100 பக்கம் – 112
ஆசிரியர் இரத்தின புகழேந்தி அவர்கள் 10.9.1989 இல் தன் ஆசிரியப்பணியைத் அரசு நிதியுதவிப் பள்ளியில் தொடங்கினார். 19.01.1999 அன்று அரசுப்பள்ளி பணியில் சேர்ந்தார். இன்று கடலூர் மாவட்டம் மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். நாட்டுப்புறவியல், கலை, குழந்தை இலக்கியம், படைப்பிலக்கியம் என்று பல்துறைகளில் தொடர்ச்சியாக பங்காற்றி வருகின்றார். பதினான்கு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இதில் நூலாசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர் என்பன அடங்கும்.
இந்நூல் ஆசிரியரின் பொன்விழா சிறப்பு வெளியீடாக வந்துள்ளது. தன் சொந்த பதிப்பகமான இளவேனில் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அரசு , கல்வித்திட்டம், கல்விக்கொள்கை, எனப் பலவற்றின் மீதான கோபத்தின் வெளிப்பாட்டை விளக்குவதாக நூலின் அட்டைப்படம் உள்ளது. ஆசிரியர் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக தன் கருத்தினைப் பதிவு செய்து வந்துள்ளார். அக்கட்டுரைகளின் தொகுப்பே  இந்நூல். குங்குமச்சிமிழ், கல்வி வேலை வழிகாட்டி, சுட்டிவிகடன் போன்றவற்றில் கல்வி சார்ந்த இவரது கட்டுரைகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் பதினெட்டு கட்டுரைகள் உள்ளன . ஆசிரியர் பணியில் சேர்ந்த விவரங்களைக் கூறி தன் தந்தை, தன்னுடன் பணியாற்றும் பழைய ,இந்நாளைய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் போன்றோரின் நட்பைப் பகிர்ந்து அவர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார். பள்ளியில் பணிபுரியும்போது பள்ளிக்குச் செல்லாதநாடோடி சமூகமான சாதிப்பிள்ளை மாணவனைப் பள்ளியில் சேர்த்ததுஇவருடைய பண்பினை, சமூகவெளிப்பாட்டினைக் காட்டுகிறது. பள்ளியில் இருக்கும் சாரணர் இயக்கம், தளிர் என்ற இதழ் , ஓவியப்பயிலரங்கை நடத்துதல் என இவருடைய பணிகள் ஆகச்சிறந்த ஒன்றாகவே வளர்ந்து வந்துள்ளன. இவரது பணியைப் பார்த்து உதவி செய்த , செய்துவருகின்ற முகநூல் மற்றும் நண்பர்களுக்கு நன்றியைக் குறிப்பிட்டிருப்பது இவரது குணத்தைக் காட்டுவதாக உள்ளது. ஒரு நிதியுதவிப் பள்ளி, ஆறு அரசுப்பள்ளி என இவருடையப் பணி தொடர்கிறது .
மத்தியக் கல்விக்கொள்கை சில புரிதல்கள் என்ற கட்டுரையில்  சிறப்பு வகுப்புகள், கட்டாயத்தேர்ச்சி என்பன குறித்து விரிவாக தன் கருத்தினைக் கூறியுள்ளார். அச்சுறுத்தும் தேர்வு முறையினைக் குறிப்பிட்டு அவை எப்படி அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். குவிசிந்தனையாளர்களைவிட விரிசிந்தனையாளர்களையே நாம் உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தரம் என்ற பெயரில் அயல்நாட்டு கல்விக்கொள்கையை இங்கு புகுத்துவது முறையன்று என்றும் சொல்லப்பட்டுள்ளது. கல்விக்குழுக்களில் உள்ள அரசியலைக் குறிப்பிட்டு சொல்லியுள்ளவை ஏற்புடையதே.
கல்விக்கொள்கை உருவாக்கும் முன் நடந்த கருத்துக்கேட்பு கூட்டங்கள் குறித்தும் நடந்த இயல்பினையும் கூறி எப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது . கல்வியை இன்று யார் நடத்துகின்றனர் கல்வித்தந்தையாக விளங்கும் சூழல் குறித்து குறிப்பிட்டமை எண்ணத்தக்கது.
     அரசுப்பள்ளிகளில்  இன்று அதிகாரிகள் தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே எதிர்பார்க்கின்ற சூழல் துரதிஷ்டமானது என்கிறார். பல்வேறு காலக்கட்டத்தில் சதவீதத்தை அதிகரிக்க அதிகாரிகள் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தனர் என்பது சொல்லப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆளுமைப்பண்பை வளர்ப்பதற்குப் பதில் தேர்ச்சியை மட்டுமே எதிர்பார்ப்பது, அதற்காக ஆசிரியர்கள் ஈடுபடுவதும் போன்ற செய்திகள் விவாதத்தை ஏற்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கின்ற பல்வேறு தேர்வு முறைகளைக் குறிப்பிட்டு  அதற்காக ஆசிரியர்கள் படும் வேதனைகள் விவரமாக கூறப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் விலையில்லா பொருட்கள் குறித்து கூறியும், பாடநூல்,சீருடை தவிர்த்து மற்ற பொருட்களில் நடைபெறும் ஊழல்களையும் எடுத்துரைத்திருப்பது சிறப்பு.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஒரு கல்விமுறையும் பத்தாம் வகுப்பிற்கு வேறொரு கல்விமுறையும் இருப்பதைச் சொல்லி மாணவர்கள் படுகின்ற தேர்வு அச்சத்தையும் தெளிவாக இக்கட்டுரையின் வழி அறிந்து கொள்ளலாம். CCE  குறித்தும் தனியாள் வேற்றுமைகள் என இம்முறை மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கின்ற விதம் சொல்லப்பட்டுள்ளது.       வளரறி மதிப்பீடு, தொகுத்தறி மதிப்பீடு பற்றி உரைத்து அதன் இயல்பும் கொடுக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பிற்கும் CCE முறையை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பதும் கூறப்பட்டுள்ளன. மொழிப்பாடம் உள்ளிட்ட பாடங்களுக்கும் அறிவியல் பாடம் செய்முறைத்தேர்விற்குக் கொடுத்ததது போன்று 25 மதிப்பெண்கள் கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது .


கல்வி அடைவுத்திறன் தேர்வுகளான  NAS, SLAS குறித்து குறிப்பிட்டு அவை எதற்காக நடத்தப்படுகின்றன என்பதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் உலகளவில் நடக்கும் முக்கியத் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.BRC, SSA,  RMSA, போன்ற கல்வி சார்ந்த திட்டங்கள் குறித்தும், அதன் சாதக பாதக விடயங்களை சிரத்தையோடு குறிப்பிட்டமை கவனத்திற்குரியது. அரசுப்பள்ளி மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் TAN EXCEL  பயிற்சித்திட்டம், அதன் செயல்பாட்டின் முக்கியத்துவம்,  இன்னும் எப்படி அத்திட்டத்தை வளர்த்தெடுக்கலாம் என்றும் தன் கருத்தினை ஆசிரியர் கூறியுள்ளார். மேலும் அரசு அலுவலர்கள் அவர்கள் செய்த நற்செயல்களைப் பாராட்டவும் செய்கிறார். அதேசமயம்  அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்துள்ளார்.
ஒரு  வருடத்தில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் பல்வேறு பயிற்சிகள் குறித்து விளக்கியும் தேர்தல் பணி, பல்வேறு காலகட்டங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி எனப் பலவற்றைக் குறிப்பிட்டு இக்காலகட்டத்தில் கல்வி பாதிக்கப்படுவதையும் ஆதங்கத்தோடு பதிவு செய்தமை எண்ணத்தக்கது. இப்பயிற்சிகள் சிலநேரங்களில் கற்பித்தலுக்கு இடையூறாக உள்ள இயல்புநிலையையும் சொன்னது அருமை. நலத்திட்டங்களை வழங்கிட தனி அலுவலர்கள் நியமிக்க வேண்டும். சார்ந்த வல்லுநர்களைப் பயிற்சிக்குக் கருத்தாளராக நியமிக்க வேண்டும் என்பதும் இவருடைய கருத்தாக உள்ளன.
2015 ஆம் ஆண்டு கல்வித்துறையில் நடைபெற்ற மாற்றங்களைப் பட்டியலிட்டு அதன் சிறப்பம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன. இதனுள் நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பாக மட்டுமே இருக்கின்ற சூழலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. SSA இயக்கம்  செயல்படும் விதமும், பள்ளிகளுக்குப் பராமரிப்பு செய்ய கொடுக்கும் நிதியைப் பற்றியத் தகவலும் ஆனால் அவைகள் எப்படி விரயமாகிறது என்பதும் விளக்கப்பட்டுள்ளன. யதார்த்தத்தை ஆசிரியர் இப்பகுதியில் குறிப்பிட்டுள்ளார். செயல்படுத்தப்படாதத் திட்டங்களைக் குறிப்பிட்டு அதனுள் ஒன்றான கல்விச்சுற்றுலாவை அரசு செலவில் செயல்படுத்துவது நன்மைத் தரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வு சமயத்தில் மாணவர்கள் என்னென்ன உணவினை உண்ண வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனைத் தரும் கட்டுரை ஒன்றுள்ளது. கல்வி நிறுவனங்களை அரசுடமை ஆக்குவதில் இருக்கும் தயக்கத்தைக்  குறிப்பிட்டு சொல்லியுள்ள கருத்துகள் நன்று. பெற்றோர் தன் பிள்ளைகளை அருகைமை பள்ளிகளில் சேர்க்காமல் தொலைவிலுள்ள பள்ளியில் சேர்ப்பது ஏனென்று ஆதங்கப்படுவதை அறிய முடிகிறது. அவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தை விட வாகனக்கட்டணங்கள் அதிகமிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பந்தையக் குதிரைகளா மாணவர்கள் என்று கேட்டு இன்று கல்வித்துறை போட்டியாளர்களையே உருவாக்கி கொண்டிருக்கிறது என்ற கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்சிந்தனைகளை ஒருநாளில் வளர்த்துவிட முடியாது. தன் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க மாணவர்களுக்கு கற்றுத்தருவதே சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 11 ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு , 10, 12 ஆம் வகுப்புகளுக்கு தரப்பட்டியல் நீக்கியிருப்பது போன்றவற்றை வரவேற்றமை இவரது பார்வையைக் காட்டுகிறது. தேர்வு அச்சத்தை போக்க நல்ல நடவடிக்கை தேவையென்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்வு சமயத்தில் மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும் என்ற ஒரு கட்டுரை கூறுகிறது. நேரத்திட்டமிடல், சுயபரிசோதனைஅவசியம் என்று கூறப்படுவது உண்மையானதும்கூட. மாணவர்களிடத்து இருக்கின்ற உள்ளார்ந்தத் திறனை வளர்க்க ஆசிரியர் செய்த ஒரு சான்றினைக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் . அனைத்து மாணவர்களையும் சமமாக நினைக்கின்ற மனப்பான்மை வளர வேண்டுவது நல்லதுதான். சபரி என்ற மாணவனைக் குறிப்பிட்டு அவருடைய வளர்ச்சிக்கு செய்த செயல்களையும் கூறியுள்ளமை சிறப்பு.

இயற்கைச் சீற்றங்கள், பேரிடர் காலங்களில் ஆசிரியர்கள் மாணவர்களிடத்து பேசி அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுவது அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஆசிரியரின் பள்ளிக்கு உதவி செய்த .மு.மு. தோழர்களுக்கு நன்றினைத் தெரிவித்துள்ளார்.
நூலாசிரியரின் பள்ளி நூலகம் தோற்றம், வளர்ச்சி என்பது வியப்பைத் தருகிறது. இது சிறந்த செயலும் கூட. இதன் வளரச்சிக்கு  உதவியவர்களை பின்வருமாறு கூறுகிறார். ‘ கொஞ்சம் கொஞ்சமாக நூல்களைச் சேகரிக்கத் தொடங்கி ஒரு நூலகத்தைப் பள்ளியில் உருவாக்கினோம். இதற்கு மகுடம் சூட்டியது போல் இப்போது மறைந்த எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களின் வாழ்நாள் சேமிப்பு நூல்களையும் எம் பள்ளிக்கு வழங்கி எம் பள்ளி நூலகத்தை விரிவுபடுத்த அவர்கள் குடுப்பத்தினர் ஊக்கமளித்தனர்என்று குறிப்பிட்டுள்ளார்.

        பள்ளியில் நூலகம் செயல்படும் விதம்,திட்டமிடுதல், என முன்மாதிரியாக இவரது (மாணவர்கள்) செயல்பாடுகள் உள்ளன. மாணவர்களுக்கு வழங்கும் பயிற்சிகள், திறனாய்வு, படைப்பாற்றல் வளர்த்தல் என இவரது ஆக்கப்பூர்வமான பணிகள் நீள்கின்றன. பல நல்லக் கருத்துகளை  இந்நூல் சொல்லிச் செல்கிறது. நூலாசிரியர் அவர்களுக்கும் பதிப்பித்த இளவேனில் பதிப்பகத்தார்க்கும் வாழ்த்துகள்.

மயிலம் இளமுருகு
கைபேசி- 7010694695



0 Response to "பந்தயக் குதிரைகளா மாணவர்கள்- நூல் மதிப்புரை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel