புதுக்கவிதை உளவியல்- கட்டுரை

Trending

Breaking News
Loading...

புதுக்கவிதை உளவியல்- கட்டுரை

புதுக்கவிதை உளவியல்- கட்டுரை






 மனிதன் கண்டுபிடித்தவைகளில் விந்தையானது மொழி. மொழியைக் காட்டிலும் படைப்பை வெளிப்படுத்தியது அதனினும் விந்தை. புதிய வடிவம் நெறி உள்ளடக்கம் என வளர்ந்துகொண்டே மாற்றம் அடைந்து கொண்டே வருவதில் புதுக்கவிதையும் ஒன்று. மனிதனின் புறச்செயல்களை உற்று நோக்கி முறையாக ஆராய்ந்து அதன் மூலம் அவை எங்ஙனம் அகத்தே நிகழும்  சிந்தனை ஓட்டங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் நிகழ்வுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்றும் விளக்குவதே உளவியலாகும். புதுக்கவிதையும்  உளவியலும் மிகப்பெரிய துறைகளாகும்  அதனுள் ஒருசில கருத்துகளை எடுத்தியம்புவதாகவே இக்கட்டுரை அமைகின்றது.   
உளவியல்
            உளவியல் (PSYCHOLOGY) என்னும் சொல் கிரேக்க மொழிச் சொற்களான ஸைக்கி (Psyche) என்ற உயிரைக் குறிக்கும் சொல்லையும் லோகஸ் (logus) என்னும் அறிவியலைக் (science) குறிக்கும் சொல்லையும் மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஒரே தூண்டல் எல்லோரிடமும் ஒரே வகையான துலங்கலை ஏற்படுத்துவதில்லை. அவரவர் அனுபவத்திற்கேற்ப துலங்கலை வெளிப்படுத்துகின்றனர். பாம்பைக் கண்டால் பயந்து ஓடுவோரும் உண்டு துணிந்து அதைப் பிடித்து அடக்குவோரும் உண்டு. மனித நடத்தையை ஆய்வது உளவியலாகும். இது இரண்டு கூறுகளைக் கொண்டது.
1. நனவு அனுபவங்கள் (conscious experiences) எ.கா - பசி வலி காயமடைதல் பொருள் வாங்குதல் பணம் கொடுத்தல் போன்றவை. 2. நனவிலி அனுபவங்கள் (un conscious process) எ.கா. - சிலரிடம் காரணமின்றி கோபப்படுதல்  சிலரிடம் உடனே நட்பு கொள்ளுதல் போன்றவை. இனி புதுக்கவிதைகளில் உளவியல் சார்ந்த கருத்துகளை அறிவோம். இயல்புநிலை, மயக்கநிலை, உணர்ச்சி நிலை, தனிநிலை, ஐயநிலை, கூட்டுநிலை, காலவளர்ச்சி நிலை, சமூகநிலை, சுற்றுச்சார்பு நிலை, உறவுநிலை எனப் பலக் கோணங்களில் உளவியல் சார்ந்து புதுக்கவிதைகளை அணுகலாம்.


பாரதிதாசனின் தெளிவு  
            பாரதியாரின் கருத்து நெறி சார்ந்த வாழ்வியல், வீரம், கவிதை போன்றவற்றில் ஈர்க்கப்பட்ட பாரதிதாசன், பாரதியார் குறித்து கூறும் போது
                  ‘சாதி ஒழித்திடல் ஒன்று
                   நல்லதமிழ் வளர்த்திடல் மற்றொன்று
                   ஓன்றினை நாடு மறந்தால்
                   மற்றொன்று துலங்குவ தில்லைக் காண்
                   சாதிகளைந் திட்ட ஏரி
                   தண்டமிழ் நீரினை ஏற்கும்’
என்பதாக பாரதிதாசனின் உள்ளத் தெளிவினையும் பாரதியார் மீது அவர் வைத்திருந்த  பண்பினையும் காட்டுவதாக உள்ளது.
மனித வாழ்க்கையின் அவலம்
               கவிஞர்கள் தன் வாழ்வுக் குறித்து தாங்களே உரைப்பதாகப் பல உள்ளன. மனிதனின் நோக்கம் வெற்றி பெறாமல் போகும் போது அவனுள் வெறுப்பு ஏற்படுகின்றது. கல்யாண்ஜி கவிதைகளில்
                   ‘இருந்து என்ன ஆகப்போகிறது
                    செத்துத் தொலைக்கலாம்
                    செத்து என்ன ஆகப் போகிறது
                    இருந்து தொலைக்கலாம்’
என தான் பார்த்த அல்லது தன்னுடைய நிலையாகக் கூட இருக்கும் சூழலை இக்கவிதை படம் பிடித்துக்காட்டியுள்ளது. பாரதியார் தன் சுய வரலாறில்
                                     ‘வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
                                      மறையலோர் தம் உரைபிழை யன்றுகான்
                                       தாழ்வுபெற்று புவித்தலக் கோலங்கள்
                                       சாத மன்றெனல் யானும் அறிகுவேன்’
என வாழ்க்கையைக் கனவாகக் கண்டு, அந்த ஆபத்தான வாழ்க்கையை வேறு வழியில்லாது, வாழ்ந்தாக வேண்டிய நிலையைக் கூறுவதோடு  உண்மை தன்னில் உணர்ந்துவிட்டதையும் பாடியுள்ள நிலையை அறியமுடிகின்றது.
வைரமுத்துவின் தன்னம்பிக்கை     
            நிகழ்வுகளைப் பலமுறை கண்ணுற்ற பிறகு இன்னதுதான் நிகழப் போகிறது என்பதை முன்கூட்டியே கூற முடியும். வைரமுத்துவின் தண்ணீர்தேசம் நூலில் தன்னம்பிக்கை சார்ந்த கருத்துக்கள் விரவிக் கிடப்பதனைக் காணமுடிகின்றன.


              ‘தன் மேல் விழும் மண்ணை சோதனை
              என்று சொன்னதுண்டா விதை?
              உளியின் உரசலைச் சோதனை
              என்று சொன்னதுண்டா சிலை?
              இது பயிற்சி முளைக்க வைத்து
             முழுமையாக்கும் முயற்சி
             சோதனை என்று சொல்லாதே பெண்ணே
             சொடுக்கு விரலுக்குச் சோதனை அல்ல.’
எனும் வைரமுத்துவின் வரிகள்  தமிழ் ரோஜாவின் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றது என்று சொன்னால் மிகையன்று.
தீபம் முத்துவின் தன்னம்பிக்கை
            பல்வேறு எண்ணங்களுடன் மனிதர்கள் வாழ்கின்றனர். அவரவர்க்கான முகமூடியைச் சரியாகப் பொருத்தி எடுக்கிறார்கள். முகமூடியில்லாதவர்கள் கூட ஒரே முகமூடியினை அணிந்து கொண்டு திரிகிறார்கள். கவிஞர் தன்நிலை சொல்வதாகவே பின்வரும் கவிதை அமைகின்றது.
‘இன்றிலிருந்து என் பாத்திரத்தில்
சில மாற்றங்கள்செய்து
கூச்சமில்லாமல் காயப்போடப்போகிறேன்
சிக்கல் கனவு’
நனவில் சிறைவேறாத விருப்பங்கள் கனவின் வழியாக வெளிப்படும். இக்கருத்தினை  
‘விரட்டி விரட்டி
துரத்துகின்ற யானைகள்
நாகம் இறங்கி வருகிறது
எங்கள் வீட்டு மச்சுப்படிகளில்’
என வரும் பாடலடிகளின் மூலம் சிக்கல் நிறைந்த கனவினைக் காணமுடிகின்றது.


தன்னுணர்வு
            மனிதப் பருவங்களில் பிறப்பு முதல் இறப்பு வரையில் பல்வேறான பருவநிலைகள் தோன்றுகின்றன. கவிஞர்கள் மனித வளர்ச்சியினையும் பருவ மாற்றத்தையும் தமது கவிதைகளில் பதிந்துள்ளனர்.
கவிஞர் நா.காமராசன் முதுமைக் குறித்தான கருத்து இங்கு எண்ணத்தக்கது.
  ‘தண்ணீரில் இருக்கும்
  மீனைத் தேடி
  தூண்டில் வந்ததுபோல்
  காட்டில் இருக்கும் மானைத் தேடி
  வேட்டைக்காரன்
  வந்தது போல்
  என்னைத்தேடி
  முதுமை வந்தது’
காமராசர் முதுமை வந்தால் அதனால் ஏற்படும் விரக்தியைப் பதிவு செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது,
மடைமாற்றம்
இயல்பூக்கத்தின் வழியாக ஏற்படும் மனவெழுச்சிகளையும் ஊக்கிகளையும் சமூகத்தால் ஒப்புக்கொள்ளக் கூடிய வகையில் நிறைவேற்றிக் கொள்ள வழியில்லாத சூழ்நிலைகளில் மன இறுக்கமும் மனமுறிவும் ஏற்படுத்திக் கொள்வதற்குப் பதில் அவ்வூக்கிகள் அனைத்தையும் சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய உயர் ஊக்கிகளாக மாற்றுதலே மடைமாற்றம் எனப்படும். அதீத பாலுணர்வை சமூகம் ஏற்றுக் கொள்ளும் வழிமுறைகளான கவிதை இயற்றுதல், சிற்பம் வடித்தல், ஓவியம் வரைதல் போன்ற ஆக்கப்பூவமான நுண்கலைகளில்  திசை திருப்பிவிடுதல் சிறப்புடையதாகும்.
மடைமாற்றம் பெற்ற கவிதைகளினைக் கல்யாண்ஜியும் வடித்துள்ளார்;.
‘சரியான செம்புலிங்கமா
வந்து சேர்ந்துட்டானேம்மா இவன்
என்பாள் ஆச்சி
இன்றைக்கும் இருக்கிறது
கோபம் திட்டு
கேலி கொஞ்சல் எல்லாம்
அந்த மாதிரி அடிவயிற்றிலிருந்து
அக்கறையோடு சொல்வதற்குத்தான்
ஆளில்லாமல் போய்விட்டது இப்போது’
என்ற கவிதையின் வழி உய்த்துணரலாம்.


பாரதிதாசன் நம்பிக்கை
கணவரை இழந்த பெண்கள் தனித்து வாழ வேண்டும் எனக்கூறிய சமுதாயம் அவர்கள் மனத்தை நினைக்காமலும் உணர்ச்சிகளை மதிக்காமலும் கொடுமை இழைத்து வந்தது. அவர்களுக்குப் புதிய வாழ்வளிக்க வேண்டிய செய்தியினை அவர் தம் பாடல்களில்,
‘காதல் அடைவது உயிரியற்கை அது
கட்டில் அகப்படும் தன்மையதோ? ஆடி
சாதல்வுடையதும் காதலிலே ஒரு
தடங்கல்அடைவதும்ஒன்று கண்டாய்’
என்று கூறியுள்ளதைப் பார்க்க முடிகின்றது.
          காதல் செய்யும் வேடப்பன் நகைமுத்துவின் காதலைப் பெற்றோர் எவ்வித மனவருத்தமின்றி சேர்த்து வைப்பதாக  அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதாக அமைத்துள்ளார் பாரதிதாசன்.
‘தன் மகனும் என்றன்
இணையிலா மகளும் இணைந்தார் என்றால்
பெற்றவர் இதிலும் பேரின்பம் எது
என்பதாக வந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது.

கவர்ச்சிகளை வெளிப்படுத்தல்’
கவர்ச்சி என்பது ஒன்றினால் ஈர்க்கப்படுதல் என்று வரையறுக்கப்படுகிறது. ஒருவர் சிறுகதை எழுதுவதிலும் மற்றொருவர் மாதிரி விமானம் ஒன்றை உருவாக்குவதிலும் இன்னொருவர் நண்பர்களோடு கலந்துரையாடுவதிலும் ஆர்வம் காட்டுவர். என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் என்ற நூலில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கால்களின் ஆல்பம் என்ற கவிதையைப் படித்துவிட்டு அடுத்த கவிதைக்கு நகர மனம் தடுமாறுகின்றது. கவிஞர் தான் நம் கண் முன் நிற்கிறார்.
‘யாரைப்பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்
ஓட்டுவேன்
என் கால்களின் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும்
பெட்டிக்கடியில்
ஓளித்துவைத்து விடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்.’
இக்கவிதை ஏற்படுத்திய அதிர்வு முக்கியமானது. உண்மையில் சிதைந்த உடலை வாழ்வினது வினோதத்தின் ஒரு பகுதியாக அடையாளம் காணும் பொருட்டே எழுதினேன். ஆனால் மிகை உணர்ச்சி கொண்ட தமிழ் வாசகப் பரப்பில் அக்கவிதைகள் தனிப்பட்ட ஒருவரின் வேதனைக் குரலாக இனம் காணப்பட்டு என்னை நோக்கி அன்பும் ஆறுதல்களும் வந்து சேர்ந்தன. இது எனக்கு ஆழ்ந்த சங்கடங்களை ஏற்படுத்தியதுண்டு எனக் குறிப்பிட்டுள்ளது எண்ணத்தக்கது.


அடக்குதல்
வலியை கொடுக்கக் கூடிய தன்மையும் துயரத்தைக் கொடுக்கக் கூடியதுமான அனுபவங்களும் நினைவுகளும் நனவு மனநிலையில் தோன்றும் போதே அவைகளை வலுக்கட்டாயமாக தடைசெய்தலே அடக்குதலாம். இவ்விதம் தடைசெய்தல் நனவுநிலையில் குறிக்கோளுடன் வலுக்கட்டாயமாக நடைபெறுகிறது. இவ்விதப்போக்கினை
“எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்
எழுத்தெல்லாம் சுடராகிஎரிய வேண்டும்
போகாத ஊர் கூடப்போக வேண்டும்
பொறி ஐந்தும் அறிவாலேநிரம்ப வேண்டும்
பலரோடும் ஒன்றாகப் பழக வேண்டும்
பனித்துளிக்குள் உலகத்தைப் பார்க்க வேண்டும்
பொய்ச் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்
போராடி வெல்கின்ற புலமை வேண்டும்
கையிரண்டும் உழைக்கத்தான் கவனம் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்
மெய்யிந்த வாழ்வென்று நம்ப வேண்டும்
மேகம் போல் பொழிந்துவிட்டுக் கலைய வேண்டும்”
என வைரமுத்துவின் கவிதையின் வழி பெற முடிகின்றது. மனிதனுக்கு மனிதன் நடத்தை பண்பு சூழ்நிலையில் வேறுபட்டு உள்ளான். அவ்வாறே கவிஞருக்குக் கவிஞர் அவர்களின் உளவியல் சார்ந்த ஓட்டங்களும் வித்தியாசப்பட்டுள்ளதை இக்கட்டுரை எடுத்துரைத்துள்ளது.

மயிலம் இளமுருகு
mailamilamurugu@gmail.com

2 Responses to "புதுக்கவிதை உளவியல்- கட்டுரை"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel