சினிமா என்பது எப்போது தோன்றியதோ அக்காலத்திலிருந்தே புதிய கதைகளையும் புதிய கதைமாந்தர்களையும் புதிய பாணியையும் புதிய கலைவடிவத்தையும் கூட தோற்றுவித்து வருகிறது. எல்லோரும் எல்லாமும் எப்படியெப்படி இருக்கிறதோ அப்படியே காட்சிதருவது கலையின் அடிப்படையும் சாத்தியப்பாடும் ஆகும்.
குழந்தைப்பருவத்தில் திரைப்படம் என்பது தமிழ்த்திரைப்படம்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான் சினிமாவில் தமிழ்சினிமாவும் ஒன்று என்று புரிந்து கொண்டேன். அன்றைக்கு எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை. நண்பரின் வீட்டில் சென்று பார்க்கும் சூழலில் முதன்முதலில் நான் பார்த்த உலக சினிமாவாக புருஸ்லீ, ஜாக்கிஜான் படங்கள்தான் இருந்தன. இப்படி ஒரு பார்வை வியப்பைத் தந்தது. காலம் செல்லச்செல்ல ஆங்கிலப் படங்கள் பார்க்கின்ற வாய்ப்பும் கிட்டியது. மொழி விரைவாக புரியாவிட்டாலும் அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து ரசித்து வந்தேன்.
ஸ்பீடு, பிரிடேட்டர், ஈவிள்டெட் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. இவை தமிழ் சினிமாக்களில் இருந்து வேறுபட்டு வித்தியாசமானதாகவும் ஆச்சரியத்தை அளிக்கக்கூடியனவாகவும் அமைந்தன. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது 1997 ஆம் ஆண்டு டைட்டானிக் படம் வெளிவந்தது. காதல் படமான இப்படம் குறித்து பேசாதவர்கள் இல்லை எனலாம். நானும் என் நண்பனும் சேர்ந்து தேவி தியேட்டரில் இப்படத்தைப் பார்த்து அதிசயத்துப் போனோம். அப்படத்தின் பிரமாண்டமும் காட்சிப்பதிவும் இசையும், இரண்டு நாள்கள் என்னுள் பயணப்பட்டுக் கொண்டே இருந்தது.
![]() |
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் போது இலக்கியம் சார்ந்தும் சினிமா சார்ந்தும் பல்வேறு புரிதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக நண்பர்களோடு சேர்ந்து ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற படத்தை இரண்டு முறை பார்த்தேன். சார்லி சாப்ளின் மொழியின்றி உணர்ச்சிகளை மட்டுமே நம்பினார். ஹிட்லர் வேடத்தில் அவர் காட்டிய நல்லுணர்வும் கருணையும் எந்தளவு முக்கியமென்பதைத் தன் பாத்திரத்தின்வழி வெளிப்படுத்தினார். ஹிட்லரின் காலத்திலேயே எடுக்கப்பட்ட முதல் நாஜி எதிர்ப்பு படம் அப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத் தென்னிந்திய திரைப்பட சங்கத்திலும் மற்றொரு முறை ரஷ்யன் கலாச்சார மையத்திலும் பார்த்தது இன்றைக்கும் நினைவில் பசுமையாகவே உள்ளது.
அடுத்தாக நான் பார்த்த முக்கிய படம் ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘ஸ்பார்ட்டகஸ்’என்ற மாபெரும் படமாகும். இப்படத்தைப் பார்த்துவிட்டு ஒருவாரத்தில் ஹேவார்டு பாஸ்ட் எழுதிய ஸ்பார்ட்டகஸ் என்னும் நாவலைப் படித்து பெரும்மகிழ்ச்சி அடைந்தேன். பெரும்பாலும் அயல்சினிமாக்கள் நம்மூர் சினிமாக்கள் போன்று இல்லை. அவர்கள் நாவல்களையே திரைப்படமாக எடுத்தனர்,எடுக்கின்றனர். இந்த இடத்தில் ஒன்று நினைவிற்கு வருகிறது. சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் அவர்கள் பார்த்த முக்கிய படமாக ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ இருக்கும். இத்தாலிய படமான இப்படம் வெளியாகி உலகமொழிகளில் அதிர்வலைகளையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது.
ஜாவட்டினி என்பவர் ரோமன் கஃபே என்ற ஹோட்டலில் காபிகுடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட நிகழ்வை நான்கு நாளில் கதையாக எழுதி இயக்குனர் டி.சிகா விடம் கொடுத்தார். அவர் அதை அப்படியே படமாக எடுக்காமல் தன் நண்பர் லூயி பர்டோனியிடம் கொடுத்து அதை நாவலாக எழுதச் சொன்னார். அதன்பிறகே அப்படம் எடுக்கப்பட்டது என்பது வரலாறு. இப்படம் நடிகர்கள், படப்பிடிப்பு, இசை என யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதைப் படம் பார்க்கும் அனைவரும் அறிவர். இப்படத்தைப் பார்த்த சத்யஜித்ரே இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் வரும்வழியிலேயே அவர் அட்டைப்படம் வரைந்த நாவலான ‘பதேர்பாஞ்சாலி’ திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தார் என்பதும் படமெடுத்து ஆகச்சிறந்த சாதனை புரிந்தார் என்பதும் கூடுதல் தகவல்.
சினிமா குறித்த பார்வையும் என்னுள் விசாலம் அடைந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். அமெரிக்கா,இத்தாலி, பிரான்ஸ், ஸ்வீடன், ஜப்பான், சீனா , ஸ்பெயின், போலந்து, ஈரான் என பலமொழி சினிமாக்கள் எடுக்கப்பட்டு உள்ளனவற்றில் சிலவற்றைப் பார்க்க முனைந்தேன். மூன்றாம் உலக சினிமாக்கள் என்று சொல்லப்படுகின்ற கியூபா, அல்ஜீரியா, செனகல் படங்கள் குறித்த தேடுதலும் தீவிரமாகியது. அகிரா குரோசோ இயக்கிய பலபடங்களுள் நான்கு படங்கள் உலக சினிமா பட்டியலில் தவிர்க்க இயலாத இடத்தைப் பெற்றன. அவை ரோஷமான் , செவன் சாமுராய், இகிரு, ரெட்பியர்ட் என்பனவாகும்.
சினிமாவைப் பார்ப்பதோடு இன்று அதன் தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் சமீபத்தில் ஜா.தீபா மொழிபெயர்த்த ‘ஒளிவித்தகர்கள்’ என்ற புத்தகம் திறமையான ஒளிப்பதிவாளர்களின் நுட்பங்களையும் அனுபவங்களையும் எளிய தமிழில் சொல்வனவாக இருக்கின்றன. குறிப்பாக ஹிட்ச்சாக்கின் ஒளிப்பதிவு வியப்பளிக்கிறது. மேலும் மாய உலகத்தை ஏற்படுத்தி நம்மை பிரமிக்க வைக்கிறது. அதனாலேயே அவர் சினிமாகாப்கா என்றும் அழைக்கப்படுகிறார். இந்த இடத்தில் நான் பார்த்த பல படங்களில் என்னைக் கவர்ந்த மூன்று திரைப்படங்கள் குறித்து பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
1999 இல் ஷாங்யுமு இயக்கிய ‘தி ரோட் ஹோம்’ என்ற சீன திரைப்படம் பெற்றோரின் காதலைப் புரிந்து கொள்ள முயலும் ஒரு மகனின் கதையைச் சொல்கிறது. இப்படத்திற்குப் பெர்லின் திரைவிழாவில் வெள்ளிச்சிங்கம் விருது தரப்பட்டது. மலைகிராமம் ஒன்றில் ஆசிரியர் பணிசெய்ய ஷாங்யூ என்பவர் வருகிறார். பள்ளியே இல்லாத அக்கிராமத்தில் ஊரே சேர்ந்து பள்ளிக்கட்டிடம் கட்டுகின்றனர். அவ்வாறு வேலை செய்பவர்களுக்குப் பெண்கள் உணவினைக் கொண்டு சென்று வைப்பர். முதலில் வைப்பதையே வழக்கமாக கொண்டார் ஷாவோ. அதை உணர்ந்த ஆசிரியர்
ஷாவோவின் உணவினைச் சாப்பிடுகிறார். இவ்வாறாக காதல் மலர்கிறது.
கிராம வழக்கப்படி தன்னுடைய வீட்டில் ஒருநாள் விருந்து வைக்கிறார். தன்னுடைய அன்பளிப்பான ஹேர் கிளிப்பை ஷாவோவிடம் தந்து தன் காதலை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். இடையில் நகரத்திற்குச் சென்று பின் கிராமத்திற்கு வருகிறார். வந்தவருடன் இணைந்த ஷாவோ மகிழ்வுடன் இருந்தார். தன்னுடைய முதிர்ந்த வயதில் இறந்த தன் கணவனை நினைத்து வருந்துகிறார். 45 கி.மீ. தொலைவில் உள்ள நகர மருத்துவமனையில் இறந்தவரைத் தான் நெய்த சிவப்புநிற கம்பளியைப் போர்த்தி தன் காதல் தொடங்கிய மலைப்பாதை வழியாகவே இறுதி சடங்கு செய்ய உடலை நடந்தே தூக்கிவருகின்றனர்.
தமிழ்சினிமாக்களில் பிளாஸ்பேக் என்றால் கருப்பு வெள்ளையில் காட்டுவர். இப்படத்திலோ பிளாஸ்பேக் வண்ணத்திலும் நடப்புக்காட்சிகள் கருப்பு வெள்ளையிலும் காட்டப்பட்டுள்ளது. ஷிபாவோ என்ற எழுத்தாளர் எழுதிய ‘ரிமம்பரன்ஸ்’ என்ற நாவலை வைத்தே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு புரிதல்கள், உணர்வுகள் போன்றவற்றை இப்படம் சொல்லிச் செல்கிறது.
இயக்குனர் மோஸன் மக்மல்பஃப் இயக்கி 1987 இல் வெளிவந்த ‘தி சைக்கிளிஸ்ட்’ என்ற ஈரானிய திரைப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது. தீவிரசிகிச்சைப் பிரிவில் இருக்கும் தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக குதிரைப்பந்தயம் நடத்தும் ஏற்பாட்டாளருடன் ஆப்கன் அகதி நஸீம் ஒருவாரம் சைக்கிளைவிட்டு இறங்காமல் ஓட்டுவதற்கு ஒப்புக்கொள்கிறார். இவருக்குத் தெரியாமலேயே சூதாட்டம் நடக்கிறது. ஒரு கும்பல் அவரை கீழே இறங்க வைக்க முயற்சிக்கிறது. இன்னொரு கும்பலோ அவரது மகன் ஜாமியிடம் தன் அம்மாவைக் காப்பாற்றுவதற்காக பணத்தைக் கொடுத்து, சைக்கிளை ஓட்டி சாதனைச் செய்ய சொல்கிறது. ஒவ்வொரு நாளும் சோதனையாகவே நகர்கிறது.
நஸீம் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே சைக்கிள் ஓட்டுகின்றார். ஐந்தாம்நாள் இரத்த அழுத்தம் குறைந்து தூக்கத்திற்கு செல்லும் தன் தந்தையை வேகமாக முகத்தில் அடிக்கிறான் ஜாமி. இக்காட்சி பார்ப்பவர் கண்ணில் ஈரத்தை வரவழைக்கும். அக்காட்சி அவ்வளவு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நஸீம் தூங்காமல் இருக்க கண்ணில் குச்சிகளை வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுகின்றார். அப்போது சுடுதண்ணீர் கொண்டு முகத்தில் அடிக்கின்றனர் அதைத் தாங்கி கொண்டு சைக்கிள் ஓட்டி முடிப்பது என்று நஸீமின் வலியை பதிவுசெய்கிறது இப்படம். ஏழாவது நாளில் புகைப்படக்காரர்கள் பத்திரிக்கைக்காரர்கள் என நஸீமைச் சூழ்ந்துகொண்டு கவர் செய்கின்றனர். போட்டி முடிந்துவிட்டது என்று மகன் ஜாமி கூறியபின்பும் நஸீம் கீழே இறங்காமல் சைக்கிள் ஓட்டுவதாக படம் முடிவடைகிறது. இப்படம் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
ஜப்பான் இயக்குனர் யசுஜிரோ ஒசு இயக்கி 1953 இல் வெளிவந்த ‘டோக்கியோ ஸ்டோரி’ என்ற படமும் எனக்குப் பிடித்த படங்களுள் ஒன்று. ஒரு வயதான தம்பதியினர் தன் இளையமகள் கியாகோ வுடன் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினர் தன் மூத்த மகன், மகளைக் காண டோக்கியோ நகருக்குச் செல்கின்றனர். பெற்றோரை முதலில் மாடியில் குடிவைக்கிறார். மூத்த மகள்,மகன் இவர்களால் பெற்றோருக்கு நகரைச் சுற்றிக்காட்ட முடியவில்லை. ஆனால் இளைய மருமகள் நோரிக்கா விடுப்பு எடுத்து வந்து டோக்கியோ நகரை முழுக்கச் சுற்றிக்காட்டிவிட்டு இரவிலும் பணிவிடை செய்வதைப் பார்த்து தம்பதியினர் நெகிழ்ந்து போகின்றனர்.
தன் பெற்றோரைக் குறைந்த வாடகையில் கடற்கரைச் சுற்றுலாத்தலத்தில் குடிஅமர்த்துகின்றனர். பெற்றோரோ தனிமையில் இருக்க விரும்பாது மறுநாளே மகளின் வீட்டிற்கு வர, மகள் கத்தவே இளையமருமகளின் வீட்டிற்குத் தன் மனைவியை அனுப்பிவிட்டு தன் நண்பரின் வீட்டிற்குச் செல்கிறார் முதியவர். மகனும் மகளும் பெற்றோரை ரயிலேற்றி கிராமத்திற்கே அனுப்பி விடுகின்றனர். சிலநாள்கள் கழித்து மனைவி இறந்துவிட தனிமையில் வாடும் அவரை உடனிருந்து ஆறுதல் சொல்லிவிட்டு நோரிக்கா தன் நகரத்திற்குச் செல்கிறார். பள்ளியில் இருந்துகொண்டே நோரிக்காவை பார்க்கிறாள் கியாக்கோ.
அந்த ஊரில் ஓடும் நதியில் படகொன்று சென்றுகொண்டிருக்கும்போது ஹாரன் சத்தம் மெல்ல அடிக்க படம் நிறைவடைகிறது.உறவின் மகத்துவத்தை கலைநயத்தோடு உலகிற்குக் கற்பித்திருக்கும் படமே இப்படமாகும். இக்கதை உணர்வுபூர்வமாக அமைந்திருப்பதால் பார்ப்பவரை தன்வசப்படுத்தி அவர்களுக்குள்ளே பயணமாகும் என்பது திண்ணம். உலகின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை இப்படம் பெற்றுள்ளது. அயல்சினிமாக்களின் மீதான ஆர்வம் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழில் வெளிவரும் சினிமா இதழ்களில் அயல்சினிமாவிற்கு என்றே வெளிவரும் அயல்சினிமா இதழ் இத்தாகத்தை தூண்டிவிடும் என்றால் அது மிகையல்ல.
மயிலம் இளமுருகு,
கைப்பேசி – 9600270331,
30.11.2018,
0 Response to "ரசிகப் பார்வையில்"
Post a Comment