சமத்துவப் போராளிகள், பி. கந்தசாமி - நூல் மதிப்புரை மயிலம் இளமுருகு

Trending

Breaking News
Loading...

சமத்துவப் போராளிகள், பி. கந்தசாமி - நூல் மதிப்புரை மயிலம் இளமுருகு

சமத்துவப் போராளிகள்,  பி. கந்தசாமி - நூல் மதிப்புரை  மயிலம் இளமுருகு



கவனத்திற்குரிய சமத்துவத் தோழர்களின் வாழ்க்கை வரலாறுகள்

உலக வரலாறு ஆளும் வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற இரண்டு முரண்பாடுகளுக்கும் இடையிலேயே இயங்கி வந்துள்ளது. இவற்றை வரலாறும் நமக்குச் சொல்கிறது.  காலங்கள் மாற மாற விழிப்புணர்வு பெற்ற மனிதர்கள் ஆளும் வர்க்கமான அதிகார மையத்தைக் கேள்விக்குட்படுத்தி தான் சார்ந்திருக்கின்ற அல்லது தன் சமுதாய மக்களுக்கு நன்மை செய்ய முன்வந்தனர். உலக வரலாறும் இவற்றையே எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவிலும் ஆளும் வர்க்கம் குறிப்பாக தமிழகத்தில் எளிய மக்களை மிகவும் வஞ்சித்து வந்தது. இத்தகையக் கொடுமைகளைப் பார்த்த நல்மனம் கொண்டவர்கள் அவர்களை எதிர்த்தனர். அப்படி எதிர்த்தபோது அவர்களுக்குப் கிடைத்த இழப்புகளும் மான அவமானங்களும் ஏராளம் ஏராளம். தன்னோடு மட்டுமில்லாமல் தன் குடும்பத்தினரையும் அதிகாரவர்க்கங்கள் மிகவும் துன்புறுத்தினர்.

இத்தகைய நிலையில் இவர்களின் வரலாறு நம் வருங்கால சந்ததியினருக்குச் சொல்லப்பட வேண்டும், கற்பிக்கப்பட வேண்டும் என்பது கவனத்திற்குரியது. இந்த பணியினைச் சிலர் மட்டுமே முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளருமான தோழர் பி. கந்தசாமி அவர்கள் எழுதியுள்ள நூல்தான் சமத்துவப் போராளிகள் என்ற நூலாகும். இந்த நூல் 21 தோழர்களை அடையாளம் காட்டுகின்றது. ஆசிரியர் சிரத்தையோடு ஆவணப்படுத்தியுள்ளார். தலித் மக்களின் விடுதலைக்குப் போராடி அவர்களின் சமூக பொருளாதார வாழ்க்கை முன்னேற்றமடைய  பாடுபட்ட தோழர்களைக் குறித்து தான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்று கூறியுள்ளார். அதனைப் பின்வருமாறு சொல்கிறார், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டம், அனுபவங்களை நேரடியாக சொல்ல வேண்டும் என்கிற ஆவல் எனக்குள் இருந்தது. அதன் அடிப்படையில்தான் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள தலைவர்களின் வரலாற்று நிகழ்வுகளை அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் இருந்தும், நேரடி சந்திப்பிலிருந்தும் சமத்துவப் போராளிகள் என்ற இந்த நூலில் விவரங்களைக் கொடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள தலித் மக்களுக்களான கூலித் தொழிலாளர்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தலித்தல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 21 தோழர்களை அடையாளப்படுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார். இந்நூலிற்குத் தோழர்கள் லாசர் அவர்கள் வாழ்த்துரை அளித்துள்ளார். இரா. முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அவர்கள் அணிந்துரை அளித்துள்ளார். இந்த இரண்டுமே நூல் குறித்த தெளிவான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது. படிப்பவரை வழிகாட்டும் விதமாகவும் இது அமைந்துள்ளது. இவரின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டு அவர் முன்னெடுத்துள்ள இந்தச் செயலை பாராட்டிப் பேசுகின்றன. இதுபோலவே 21 தோழர்கள் மட்டுமன்றி ஏராளமான தலைவர்கள் இருக்கிறார்கள் என்றும் அது குறித்தான பட்டியலையும் தோழர் முத்தரசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் தேடல் இன்னும் விரிவடையும் என்று நம்பிக்கை தருவதாக இப்பகுதி அமைந்துள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் அவர்கள் அதற்கான காரணங்களையும் சொல்லி கந்தசாமியின் ஈடுபாட்டையும் பாராட்டி சொல்லியுள்ளார்.  96 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 21 தோழர்கள் நம்முடன் உரையாடுகின்றனர். சீனிவாச ராவ், மணலி கந்தசாமி, கோ.வீரய்யன், கோ பாரதிமோகன், என். வெங்கடாசலம், ஏ. எம். கோபு, வாட்டாக்குடி இரணியன், சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், மீனாட்சி சுந்தரம், எம். காத்தமுத்து, ஏ. ஜி. கஸ்தூரிரங்கன், மாசிலாமணி, மணலூர் மணியம்மை, அமிர்தலிங்கம், பட்டுராசு வெங்கடேஷ் சோழகர்,  தொப்பியாஸ் பாலன், டி. கோதண்டம், சண்முகம், ரங்கசாமி போன்றவர்களின் நியாயமான பகுதிகளையும் சொல்லி அவர்கள் செய்த போராட்டங்களையும் போராட்டக் குணத்தையும் சந்தித்த சிக்கல்களையும் நெருக்கமான மிக எளிய முறையில் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

ஒரு சுருக்கமான வரலாறு சொல்லும் முறையில் நச்சென்று நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். சீனிவாசராவ் பற்றிக் கூறும்போது  சாட்டையடியும் சாதி அரசியலையும் எதிர்த்து போராட்டம் செய்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் அடித்தால் திருப்பி அடி என்று ஆவேசத்தை மக்களிடத்து ஏற்படுத்தியவர். ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்ட பாதையைக் கொடுத்த முதல் மனிதர் சீனிவாசராவ் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர் செய்த மறியல் போராட்டங்கள் தலித் மக்களுக்காக செய்த சாதனைகளையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக மணலி கந்தசாமி குறித்துச் சொல்லும்போது அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக சொல்லி முக்கியமான செய்திகளை விரிவாக எழுதியுள்ளார். தங்கம் செய்யாததைக் கூட செங்கொடி சங்கம் செய்யும் என்று முழங்கிய செய்தி கவனிக்கத்தக்கது. அவர் செய்த சாதனைகளைக் குறிப்பிடும்போது பெண்கள் நாற்று நடும்போது ஒரு பாடலைச் சொல்லி பாடுவார்கள் அந்தப் பாடல் நூலில் இடம்பெற்றுள்ளது.

மணலி கந்தசாமியின் தலைமறைவு வாழ்க்கையைக் குறிப்பிட்டு அதனால் அவருக்கு நேர்ந்த சிக்கல்களும் அவரது மனைவிக்கு நேர்ந்த இடர்பாடுகளும் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது. அடுத்ததாக வீரய்யன் குறித்துச் சொல்லும்போது திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சித்தாடியில் 1932  இல் பிறந்தார் என்றும் முதலில் குடிதண்ணீருக்காக கல்கேணி கட்டித்தர வேண்டும் என்று  பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இப்படி ஆரம்பத்திலேயே தான் வாழ்ந்த சமுதாயத்திற்காக பாடுபட்டவர்தான் வீரய்யன். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சூழல் ஆண்டைகளை நம்பி இருந்த தலித் மக்களுக்காக  தடை விதித்ததை எதிர்த்து போராட்டம் செய்தது விளக்கப்பட்டுள்ளது. பாரதிமோகன்  மலேசியா கம்யூனிஸ்ட் கட்சியில் ராணுவப்படையில் போர் வீரராக பணியாற்றினார். மலேசியாவில் இருந்து வந்தவர் மாயவரம் சுற்றியுள்ள பல கிராமங்களுக்குச் சென்று கம்யூனிஸ்ட் பற்றியும் அடிமைப்பட்டு கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

 திருச்சி சிறையில் இருந்த போது வேதனை குரல் என்ற கையெழுத்துப் பிரதி நடத்தியது நூலில் சொல்லப்பட்டுள்ளது. கீழ்த் தஞ்சை மாவட்டத்தில் உழைப்பாளி மக்களுக்கும் குறிப்பாக தலித் மக்களுக்காக போராடிய மகத்தான தோழர் பாரதிமோகன் என்பது குறிப்பிடத்தக்கது. மாவீரன் வாட்டாக்குடி இரணியன் குறித்து கூறும்போது அவருடைய உருவ வர்ணனையைக் கூறி எங்கு பிறந்தார், எங்கே சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தினரால் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார். அங்கே சென்று காரல் மாக்ஸ் தத்துவத்தால் இழுக்கப்பட்டு சுபாஷ் சந்திரபோசின் நாட்டுப்பற்றினால் பெற்றோர்கள் வைத்த வெங்கடாசலம் என்ற பெயரை இரணியன் என்று மாற்றிக்கொண்டார். இந்தியா திரும்பிய இரணியன் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வாட்டாக்குடி ஜமீன்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்ந்தார்.  சேரி மக்களின் அடிமை வாழ்வை நீக்குவதற்காக ஜமீன்களிடம் சென்று உங்களுக்காக உழைக்கும் இவர்களுக்கு இருப்பிடத்தையும் கொடுக்க வேண்டும் என்று கூறினார். தன் தோழர்களிடம்,  தோழர்கள் எனக்கு யாராக இருந்தாலென்ன சுத்தமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சாதியை எதிர்த்தார்.

இங்கு எல்லா ஜாதி பிள்ளைகளும் ஆடு மாடுதான் மேய்குதுங்க உங்களுக்குத்தான் சாதி தெரியும் எனக்கு எல்லாருமே ஒன்றாகத்தான் தெரிகிறது என்று அனைவரையும் சமமாகவே பாவித்தார் இரணியன். இறுதியில் அவர் இறுதிக்காலத்தைச் சொல்லும்போது சுடப்பட்டு இறந்த ஆம்பலாப்பட்டு ஆறுமுகத்தையும் குறிப்பிட்டு பட்டுக்கோட்டை மருத்துவமனையில் இறந்த செய்தியையும் சொல்லி முடித்துள்ளார் ஆசிரியர்.

மாவீரன் என்று சிவராமன் அழைக்கப்பட்டார். தேச விடுதலைக்காகவும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய இவரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இவர் செய்த செயல்களுக்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பட்டியலில் சிவராமனுக்கும் இடம் உண்டு. இவர் செய்த ஒவ்வொரு செயலுக்கும் இவருடன் இருந்த தோழர்கள் நேர்மையோடு உதவி செய்தார்கள் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தலைமறைவு வாழ்க்கை என்றால் சாதாரணமானது அல்ல,  துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்த வாழ்க்கை பசி பட்டினி கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட வாழ்க்கை ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் தண்ணீர் மட்டுமே குடித்து விட்டு தலைமறைவாக இருந்த வாழ்க்கையைத் தோழர்கள் அனுபவித்தது கூறப்பட்டுள்ளது.

                ஆறுமுகமும் சென்றுவிட சவுக்குத் தோப்புக்குள் செல்கிறார் சிவராமன். அப்போது போலீஸ்காரர்கள் மணலி கந்தசாமி எங்கே? இரணியன் எங்கே? என்று கேட்க அதற்கு அவர் எனக்கு தெரியாது, தெரிந்தாலும் சொல்ல மாட்டேன். சுடத்தான் போகிறீர்கள் சுட்டாலும் காட்டிக்கொடுக்க மாட்டேன் சுடு சுடு என்று சொல்ல  குண்டு பாய்கிறது. சிவந்த உடல் சிவப்பாகிறது. செங்கொடி முழக்கம் அங்கு விண்ணைப் பிளக்க பூமியில் சாய்ந்தான் சிவராமன். இப்படி தோழர்களின்  வாழ்க்கையை கந்தசாமியின் எழுத்துக்களினூடாக நாம் அறிகின்றோம். அவர்களின் போராட்ட வாழ்க்கை நம்முள் பயணப்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மக்களுக்காக எப்படியெல்லாம் போராட்டம் செய்தார் என்பதையும் மிக நேர்த்தியான சொற்களோடு சொல்லி, இது குறித்தானப் புரிதலை நம்முள் ஏற்படுத்துகின்றார் நூலாசிரியர். இவரைக் குறித்து கூறும்போது வரிசையாக செய்திகளைத் தொகுத்து சொல்லியிருப்பது சிறப்பாக இருக்கின்றது.

 தஞ்சை மாவட்ட இயக்க வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மண் ஆம்பலாபட்டு என்பது குறிப்பிட்டத்தக்கது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் கம்யூனிஸ்டுகளின் போராட்ட வரலாற்றில் ஆம்பலாபட்டு நிலைத்து நிற்கும். மார்பை காட்டிய அஞ்சாநெஞ்சன் ஆறுமுகம் என்பது எண்ணத்தக்கது. தன்னலம் கருதாத மனிதரான காத்தமுத்து குறித்து கூறும்போது அவருடைய வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக சொல்லி தலைமறைவு வாழ்க்கையும் அவருடன் பணியாற்றிய தலைவர்களையும் குறிப்பிட்டு எத்தகைய சூழ்நிலையில் அவர் தலித் மக்களுக்காக போராட்டம் செய்தார் என்பது சொல்லப்பட்டுள்ளது. ஆண் உடையில் போராடிய வீராங்கனை மணலூர் மணியம்மை அவருடைய வீட்டில் யாருமே உதவி செய்யாத போதும் அடிமைப்பட்டு கிடக்கும் மக்களுக்காக தன் சுய இன்ப துன்பங்களையும் உதறிவிட்டு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட அந்த செயல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கின்றது. கடலூர், வேலூர் சிறைகளில் நீண்ட நாள்கள் அவர் சிறையில் இருந்தார். அவரின் பங்களிப்பு முக்கியமானது என்றும் மகத்தானது என்றும் ஆணுக்கு நிகராக தஞ்சை மண்ணில் போராடிய வீராங்கனை மணலூர் மணியம்மை என்பது கவனிக்கத்தக்கது..

தன்னுடைய சிறு வயதிலிருந்து இறுதிக் காலம் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயலாலும் சிந்தனையாலும் செயல்பட்டவர் அமிர்தலிங்கம் ஆவார். குறிப்பாக பிராமண ஆதிக்கத்தின் கீழ் இருந்த சேரன்குளம் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வெற்றி பெற்றார். பிராமணர்கள் செய்கின்ற இந்த அடிமைமுறை ஜாதி இந்துக்களுக்கு ஒருவிதமாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேறு விதமாக இருந்ததை வன்மையாக   கண்டித்ததோடு போராட்டமும் நடத்தி வெற்றியும் பெற்றார்.  வெங்கடேச சோழகர், சோழ பாண்டியர், அமிர்தலிங்கம் ஆகிய இவர்கள் ஒன்று கூடி கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லை உருவாக்கினர். சேரன் பகுதி அக்கரகாரம் பிராமணர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நடந்த போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் செய்த மோசடிகளையும் எடுத்துக்கூறி மக்களின் நன்மைக்காக நான்கு முக்கிய உடன்படிக்கைகள் ஏற்படுத்தி வெற்றி கண்டார்.

 கல்வி முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். தன் சமுதாயத்தை மட்டுமின்றி இப்படிப்பட்ட மக்களுக்காகவே இறுதிவரை வாழ்ந்தவராக அமிர்தலிங்கம் அறியப்பட்டுள்ளார். இவ்வாறு தலித்தல்லாத பிற்படுத்தப்பட்ட தோழர்கள் செய்த போராட்ட  வாழ்க்கையை இந்நூலின் வழியாக வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். இத்தகைய பணியில் தொடர்ந்து ஆசிரியரின் ஈடுபாடு இருக்குமானால் அது நம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக எழுதிய கந்தசாமி அவர்களுக்கும் நன்முறையில் பதிப்பித்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துக்கள்.


நூல்- சமத்துவப் போராளிகள்
 ஆசிரியர்- பி. கந்தசாமி
 பதிப்பகம்- பாரதி புத்தகாலயம்
பதிப்பு- மே 2018
ரூ 80, பக்கம்- 96
மயிலம் இளமுருகு
கைப்பேசி – 9600270331
mailamilamurugu@gmail.com


1 Response to "சமத்துவப் போராளிகள், பி. கந்தசாமி - நூல் மதிப்புரை மயிலம் இளமுருகு"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel