முதலியார் ஓலைகள் - அ.கா.பெருமாள், நூல் மதிப்புரை - மயிலம் இளமுருகு

Trending

Breaking News
Loading...

முதலியார் ஓலைகள் - அ.கா.பெருமாள், நூல் மதிப்புரை - மயிலம் இளமுருகு

முதலியார் ஓலைகள்  - அ.கா.பெருமாள், நூல் மதிப்புரை - மயிலம் இளமுருகு

ஏடது கைவிடேல்

ஒரு நாட்டின் வரலாற்றினை அறிந்துகொள்ள உதவியாக இருப்பவை பல உள்ளன. அதனுள் குறிப்பாகக் கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பழந்தமிழகத்தின் வரலாறு, பண்பாடு கோயில் சார்ந்த செய்திகள் எனப் பலவற்றினை எடுத்துரைக்கின்ற நூல்களின் வரவு குறைவாகவே உள்ள சூழலில் தற்போது இத்துறையில் ஆர்வத்தோடு செயல்பட்டு வருகின்ற ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள முதலியார் ஓலைகள் என்னும் நூல் மிகுந்த கவனத்தைப் பெறுவதாக உள்ளது

இன்றைய பல ஊடகங்களையும் தாண்டி மனிதச் செயல்பாடுகளில் ஒன்றான பழைய சொல்மரபில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றினைத் தொகுத்து ஆய்விற்குட்படுத்தி வெளிப்படுத்தும் முயற்சிகள் தேவைப்படுகின்றன
          பாடம் ஏறினும்ஏடது கைவிடேல்
          ஏடாயிரங்கொடி எழுதாது
          ஏடெடுத்தல் 
போன்ற சான்றுகள் ஓலைகள் குறித்து  அதற்குப் பயன்படும் பொருள்களையும் குறித்துள்ளது. அரிய ஆவணமான ஓலைகள் குறித்துச் செ.இராசு பின்வருமாறு கூறியுள்ளார்

பனை ஓலைகளை எழுதுவதற்குத் தக்கவாறு பாடம் செய்வர். பனை ஓலைகளை வெயிலில் உலர்த்தியும், நீரில் ஊறவைத்தும், வேகவைத்தும், பதப்படுத்துவர். பனியில் இட்டுப்பாடம் செய்வதும் உண்டு. இவ்வாறு பாடம் செய்யப்பட்ட ஓலைகளைச் சோழி அல்லது கூழாங்கற்கள் கொண்டு தேய்த்துப் பக்குவப்படுத்துவதும் உண்டு.

இந்நூலிற்குச் சிறந்ததொரு அறிமுகத்தைச் சுப்பராயலு அவர்கள் எழுதியுள்ளார். முகவுரை என்னும் பகுதியில் முத்தாய்ப்பான தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன. எங்கிருந்து ஓலைகள் பெறப்பட்டனஇந்நூலில் இடம்பெற்றுள்ள 66 ஓலைகளும் இதுவரை அச்சில் வராதவை என்றும் முதலியார் ஆவணங்கள் என்று தான் ஏற்கனவே எழுதியுள்ள நூலில் பயன்படுத்தப்பட்ட முக்கியத் தகவல்களைத் தேவை கருதி இந்நூலில் பயன்படுத்தி உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்

நாட்டார் வழக்காறுகளைத் தொகுப்பதுஆவணப்படுத்துவதுகோயில் வரலாறுகளைச் சேகரிப்பது என இருந்தபோது கவிமணியின் முதலியார் ஓலை கையெழுத்துப் பிரதியின் ஒரு பகுதி கிடைத்ததாகவும், அதனை ஆவணப்படுத்தும்போது சிரத்தையோடு ஆய்வு நெறிமுறைகள், விளக்கம் என ஆகச்சிறந்த நூலாக மாற்றியுள்ளமை தமிழாய்விற்குப் பேருதவியாக உள்ளது. தனக்கு உதவிசெய்த செந்தீ நடராசன் போன்றோரை நினைவு கூறியுள்ளார். ஓலையில் பின்பற்றியுள்ள நடை குறித்தான செய்தியினையும் குறிப்பிட்டுள்ளது  எண்ணத்தக்கது

முதலியார்களும் பழைய ஆவணங்களும் என்ற பகுதியில் ஆறு நூற்றாண்டுகள் தொடர்பு கொண்டிருந்த முதலியார்கள் பற்றிய ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் குறைவாகவே கிடைத்துள்ளதாகவும் அதனைப் பதிவு செய்வது முக்கியமான தென்கிறார்

அழகிய பாண்டியபுரம் முதலியார்கள் சைவ வேளாள மரபைச் சார்ந்தவர்கள். முதலியார்கள் என்பது சாதிப்பெயர் இல்லையென்றும், அரசர்கள் கொடுத்த பட்டமே என்றும் நாட்டில் நிர்வாகப் பொறுப்பினைப் பெற்ற சூழல் குறித்துக் கவிமணியும், சங்குண்ணிமேனனும் கூறிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முதலியார் ஓலைகள் என்னும் இத்தொகுப்பில் உள்ள மிகப் பழைய ஆவணம் 1349 ஆம் ஆண்டினது. நெல்விலையை முடிவு செய்தல், கோயில்கள், மடங்கள், குத்தகைக்காரர், நீராதாரம் பேணல், மடங்கள் தொழில்நுட்பம் போன்ற செய்திகளை அறியமுடிகிறது. கோயிலின் நிரந்தரப் பணியாளர்கள் நெல் அல்லது சோற்றுக்கட்டிகளைச் சம்பளமாகப் பெற்றனர். குத்தகைக்காரர் முரண்பட்டபோது பிராமணப் போஜனம் தடைப்பட்ட செய்தியும், அதற்கு அதிகாரிகள் வெகுண்டு குத்தகைக்காரர்களைச் சாடிய செயலும் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். நீராதாரங்களான குளம், ஆறு, மனை, வீடு, விலை ஒற்றி, எனக் கடனாகப் பெற்ற செய்தி, விலை பதிவு செய்த செய்தி, வட்டி கொடுத்த முறை போன்றவையும் இதன்மூலம் அறியமுடிகிறது

சாதிகள், சடங்குகள் பகுதியில் கைக்கோளர் குறித்தும், பாண்டி வேளாளர்-  வேளாளர், செட்டி என அழைக்கப்பட்ட செய்தி 1458 ஆம் ஆண்டு ஆவணச்செய்தியாய் குறிக்கப்பட்டமை, ஒவ்வொரு சாதிகள் குறித்தும் எந்த ஆண்டு நிலம் ஒப்பந்தமாக வைத்தனர் என்பதும் கூறப்பட்டுள்ளன. அடிமைகளாகப் பெரும்பாலும் பறையர்கள் விற்கப்பட்டனர் என்றாலும் இவர்களில் சிலர் நிலவுடைமையாளர்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர். இது ஹேவர்ட்டு பாஸ்ட் எழுதிய ஸ்பார்ட்டகஸ் என்ற நாவலை நினைவுபடுத்துவதாக அமைகின்றது. கோயில் விழாக்களும் சடங்குகளில் சுசீந்திரத்திலுள்ள சிவன் கோயில் தேர்குறித்தும், ஸ்ரீதனம் குறித்த 5 ஆவணங்கள் தரும் செய்தியும், ஆவணங்களில் ஒன்றான 1458 இல் கொடுக்கப்பட்ட செய்தியையும் நாம் அறிகின்றோம்.

தேவபுத்திரர்களும் தேவதாசிகளும் என்ற பகுதியில் பிறவியிலே யாரும் அடிமையாகப் பிறப்பதில்லை, அவர்கள் அடிமைகளாக ஆக்கப்படுகின்றனர் என்று அடிமைமுறை குறித்து ஆழமான குறிப்பினைத் தெளிவிக்கின்றார் ஆசிரியர். மேலும் இது கொடுமையான வழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் அடிமைமுறை குறித்தும், கிறிஸ்துவர்களில் அடிமை, கேரளம் அடூர் ராமச்சந்திரன், கே.கே குஸீமன் ஆகியவர்கள் கூறிய பெரும்பாலும் அடிமை முறை பிறப்பால் தீர்மானிக்கப்பட்டது எனச் சொன்ன செய்திகளையும் தொகுத்துரைத்தமையைக் காண முடிகின்றது. அடிமைகள் எண்ணிக்கை, அடிமைக்குத் திருமணம் செய்து வைத்திருக்கும் பொறுப்பு முதலாளிகளுக்கு உரிமையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாஞ்சில் நாட்டு அடிமைமுறை குறித்து 17 ஆம் ஆவணமாகக் கிடைத்துள்ளதாகக் கூறி அத்தொடர்பான தகவல்களையும் விளக்கியுள்ளமை பாராட்டுதற்குரியது. இதனுள் அடிமையாகக் காரணம், வெள்ளாட்டி கடன் வறுமை, அடிமைச் சொற்கள் குறித்து விரிவாக விளக்கம் தந்துள்ளமை கவனத்திற்கு உரியது. அடிமை ஒழிப்பிற்கு ஆங்கில அதிகாரிகளும் உதவினர். பின்னர் 18.6.1853 இல் திருவிதாங்கூர் அரசர் உத்திரம் திருநாள் அடிமை ஒழிப்பு பிரகடனத்தை வெளியிட்ட செய்தியும் ஆவணப்புடுத்தியுள்ளார் ஆசிரியர்

நூலின் தலைப்பான மூல ஆவணங்கள் ஆண்டு அடிப்படையில் தரப்பட்டுள்ளன. ஆண்டு, மாதம், கிழமை, கி.பி.வருடம், நூற்றாண்டு என நிரலாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆவணத்தின் வகை, சிறப்பு, எதைப்பற்றியது, எழுத்துமுறை குறிப்புகள் போன்றவையும் தரப்பட்டு ஆவணக்  கவனத்தைத் தந்துள்ளார் ஆசிரியர். 67 ஆவணங்கள் இதனுள் உள்ளன.

ஆவணத்தில் இடம்பெற்றுள்ள சொற்களை விளக்க அருஞ்சொற்பொருள் என்னும் பகுதியை அமைத்துப் படிப்பவர்களுக்கு எளிமை செய்துள்ளமை சிறப்பு. ஊர்கள், மடங்கள், ஆறுகள் குறித்துச் சொல்லி ஆவணப்படுத்தப்பட்டமை கூடுதல் தகவல். மேலும் சுட்டெழுத்துகள் , குறியீடுகள், மலையாள மாதத்திற்குச் சமமான தமிழ் மாதங்கள் போன்றவற்றினையும் சிரத்தையோடு கொடுத்துள்ளார் ஆசிரியர்.

நூலில் இறுதியாகக் கவிமணி முதலியாரிடத்துக் கிடைத்த ஓலைச்சுவடியான இரவிக்குட்டி பிள்ளைப்போர் என்ற வில்லுப்பாட்டு அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான தகவலையும் கொடுத்துள்ளமை ஆகச்சிறப்பு. சிறந்த வரலாற்று ஆவணமாகத் தந்த ஆய்வாளர் அ.கா.பெருமாளிற்கு தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது. வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்திற்கும் பாராட்டுகள். இதுபோன்ற பிற ஆவணங்களைத் தொகுக்க, விளக்கம் செய்ய முன்னோடியாக இந்நூல் விளங்கும் என்பது வெள்ளிடைமலை.

முதலியார் ஓலைகள்
                                                                .கா.பெருமாள்
                                                                காலச்சுவடு பதிப்பகம்
                                                முதல் பதிப்புடிசம்பர் -2016
                                                பக்கம் – 175 , விலை.ரூ.195
மயிலம் இளமுருகு
கைப்பேசி – 9600270331
mailamilamurugu@gmail.com

காலச்சுவடு, பிப்ரவரி- 2018


0 Response to "முதலியார் ஓலைகள் - அ.கா.பெருமாள், நூல் மதிப்புரை - மயிலம் இளமுருகு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel