கொரோனா காலத்தில்....

Trending

Breaking News
Loading...

கொரோனா காலத்தில்....

கொரோனா காலத்தில்....

 இப்போதெல்லாம் காலையில் எழுந்தவுடன் வழக்கமான பரபரப்பு இல்லை . சீக்கிரமே குழந்தைகளை எழுப்பிவிட்டு அவர்களைப் பள்ளிக்கு அனுப்பவேண்டிய தொடர்பயணம் இல்லை. காலையில் நாலு மணிக்கு எழுந்திருப்பது தோழியின் பழக்கம். இப்போது அதற்கான அவசியம் இல்லை. மெதுவாக எழுந்து அன்றைய பணிகளைச் செய்கிறார். ஆனால் சிலநேரம் பணிக்கே சென்றிருக்கலாம் என்று கூறி புலம்புகின்றார். அப்போதெல்லாம் வழக்கமாக எல்லா வேலைகளும் காலை 7 மணிக்கே முடிந்துவிடும். ஆனால் இப்போது காலம் கடந்துதான் நடக்கிறது என்று கஷ்டப்பட்டு வருந்துகிறார்.

 செல்லக்குட்டிகள் மெதுவாக எழுந்து அன்றாடப் பணிகளைச் செய்கின்றனர் . சிலநேரம் தொலைக்காட்சி பார்த்தும் சிலநேரம் விளையாடியும் காலம் கடத்துகின்றனர். அவரது பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்கு தினந்தோறும் வாட்ஸாப் வழியாக கொடுக்கும் பணிகளைப் படிப்பு சார்ந்தும் எழுதியும் என காலம் கடத்துகின்றனர்.

  மகனுக்குச் சண்டை மற்றும் உலகத் தரம்வாய்ந்த குழந்தைகள்படமும் மகளுக்கு அவளுக்குப் பிடித்தமான படங்களைத் தருவதும் அவர்கள் பார்ப்பதுமாக நேரம் போகின்றது. எங்களது வழக்கமான படிப்பு, எழுத்து எனக் காலம் கழித்தாலும் ஏதோ கண்ணுக்குத் தெரியாத கிருமியால் அடைபட்டு கிடக்கும் சிறைவாழ்க்கையாக  இந்தக் கொரோனா ஊரடங்கு காலம் தொடர்கிறது. 

 வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ஏதோவொன்றை  உணர்த்திவிட்டே நகருகின்றது. வாசிப்பில் கடக்கும் நேரங்கள் எப்போதும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. ஒவ்வொரு நூலைப் படிக்கும்போது சொல்லொணா புதிய உலகத்திற்கு நம்மை அவை அழைத்துச் செல்கின்றன.    அப்போது காலங்கள்   விசாலமாகி   வசியம் செய்வதை உணர முடிகின்றது..

 இணையவெளியில் ஆங்காங்கே கருத்தரங்குகள் கவியரங்குகள் என நடக்கிறது.   என் இலக்கிய நண்பர்கள் அவ்வப்போது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தாலும் தக்க நேரத்தில் என்னால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுகின்றது. இதில் கவனம் செலுத்த விருப்பம் இல்லாததும் காரணமாக அமைகின்றது. 

நூலகத்துப் புத்தகங்களைப் படிப்பதுமாக நாட்கள் மெதுவாக நகர்கின்றன. கொள்ளைநோய் குறித்த புத்தகங்கள் இப்போது என் கவனத்தை ஈர்க்கின்றது.  நூல் குறித்து நான் ஏற்கனவே எழுதிய சிலக் கட்டுரைகளை என்னுடைய வலைப்பூவில் பதிவிடுகிறேன்.  சில நேரங்களில் அவ்வப்போது கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

அனுபவிக்க முடியாத காலமுமாக ஆக்கம் தருகின்ற காலமுமாக  இந்தக்காலம் கொரோனா காலம் தொடர்கின்றது. என்னிடம் கைப்பேசியிலும் வாட்ஸ்அப் வழியாகவும் பேசும் நண்பர்கள் மூலமாக உற்சாகம் அடைகின்றேன். இந்த உற்சாகம் தொடர்ந்து இயங்கத் தூண்டுகிறது. 

  ஆய்வு மாணவர்கள் அவ்வப்போது புத்தகங்கள் குறித்து கேட்பதும் அவர்களுக்கு நான் உதவி செய்வதுமாக இந்தக் காலம் நகர்கிறது.  நேரில் பார்க்க முடியாத நண்பர்கள்  தொடர்புகொண்டு பேசும் ஒவ்வொரு தருணமும்  வியப்பில் ஆழ்த்துகின்றது. இது ஒரு புதிய அனுபவத்தைத் தருவதாகவும் உள்ளது.  உண்மையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் இந்த உலகம் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது.  பல நேரங்களில் இது நன்மையில் முடியவும் செய்கின்றது. சில நேரங்களில் இது துன்பத்தைத் தருவதாகவும் அமைகின்றது. 

பொறுமை என்பது எத்தகையது?  அதன் மகத்துவம் என்ன என்பதை இப்போது உணர முடிகின்றது.  நமக்குத் தெரியாமலே நாம் ஒன்றைக் கட்டமைத்துக் கொண்டு வருகின்றோம் என்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது.  காலங்காலமாக இந்த உலகில் யார் வல்லமை பெற்றவர்கள் என்பதைக் காட்ட  உலக நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு வந்துள்ளன. இது காலங்காலமாக தொடர்கின்றது. இதனை   ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு உலகப் போர்கள் நமக்கு  உணர்த்தி இருக்கின்றன.  இப்போது
அதன் ஒரு செயல்பாடாக இதனைப்    பார்க்க முடிகின்றது.  கொடுமை என்னவென்றால் எதனையும் உணராத எளிய மக்களும் இதனுள் ஆட்பட்டு இறக்கின்றனர்.  எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தனது இருப்பைக் காட்ட மனிதம் துறந்து தொடர்ந்து செயல்படும் சில உலக நாடுகள் செயல்களை என்னவென்று  சொல்வது. 

 இந்தத் தருணத்தில் நம் பாரத பிரதமரின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தது.  அவரது செயல்பாடுகள் சிலவற்றில் முரண்பாடு இருந்தாலும் சிலவற்றை ஏற்கத்தான் முடிகின்றது.  அவரது நடவடிக்கைகள் யோசிக்க வைக்கின்றது. மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நமது இருப்பை உணர்த்தியது கவனிக்கத்தக்கது. உலகம் இப்போது கண்ணுக்குத் தெரியாத நோயை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. இயற்கை அதனதன் போக்கில் நகருகின்றது. 

வானத்திற்குச்சென்று குடித்தனம் செய்யப்போகிறேன் என்று சொன்னவர்கள் இன்று வீட்டிற்குள் பயந்து ஒளிந்து கொண்டிருப்பது  என்பது வித்தியாசமாக இருக்கின்றது. காலமும் இயற்கையும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. குழந்தைகளுடன் விளையாடுவதும் படிப்பதுமாகவும் வழக்கத்திற்கு மாறாக இரவு நீள்வதையும்  உணர்கிறேன். பலப் படிப்பினைகளை இந்தக்காலம் போதித்துள்ளது.   தொடரும் காலங்கள் அனைவருக்கும் நல்ல காலமாக அமையட்டும்..... ...


 மயிலம் இளமுருகு
19.04.2020 மதியம் 1 மணி

0 Response to "கொரோனா காலத்தில்...."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel