வல்லின ஒற்று மிகும், மிகா இடங்கள் - இலக்கணம்

Trending

Breaking News
Loading...

வல்லின ஒற்று மிகும், மிகா இடங்கள் - இலக்கணம்

வல்லின ஒற்று மிகும், மிகா இடங்கள் - இலக்கணம்



1. , , உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.

2. அந்த, இந்த, எந்த என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

3. அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பெயர்களின் பின்னால் வல்லினம் மிகும்.

4. அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

5. அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

6. எட்டு, பத்து என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

7. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் ஒற்று மிகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் வருமொழி பெயர்ச்சொல்லாக இருந்தாலும் ஒற்று மிகும் (உதாரணம்: பாக்குக் கடை)

8. இரண்டாம் வேற்றுமை விரி அல்லது இரண்டாம் வேற்றுமை தொகாநிலைத் தொடரில், வல்லின ஒற்று மிகும். (உதாரணம்: அவனைக் காப்பாற்று)

9. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்குப் பின்னால் வல்லினம் மிகும் (உதாரணம்: நீர்க்குடம். நீரை உடைய குடம் என்று விரியும்)

10. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்குப் பின்னால் வல்லினம் மிகும். (உதாரணம்: வெள்ளித் தட்டு - வெள்ளியினால் செய்யப்பட்ட தட்டு என்று விரியும்.)

11. நான்காம் வேற்றுமை விரி (அல்ல்லது நான்காம் வேற்றுமை தொகாநிலைத் தொடரில்) வல்லின ஒற்று மிகும். (உதாரணம்: தந்தைக்குக் கடமை)

12. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அ·றிணையாயின் வல்லினம் மிகும். (உதாரணம்: வேலிக் கம்பி - வேலிக்குக் கம்பி என்று விரியும்)

13. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் - நிலைமொழி அ·றிணையாயின் வல்லினம் மிகும். (உதாரணம்: கூலிப்படை - கூலிக்குப் போர்புரியும் படை என்று விரியும்)

14. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அ·றிணையாயின் பெரும்பாலும் வல்லினம் மிகும். (உதாரணம்: புலமைச் சிறப்பு - புலமையது சிறப்பு என்று விரியும்)

15. ஏழாம் வேற்றூமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்குப் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்ப்பாம்பு - நீர்க்கண் வாழும் பாம்பு என்று விரியும்.)

16. நிலைமொழியின் இறுதியில் ய், ர், ழ் என்னும் எழுத்துகள் இருக்க, வருமொழி பெயர்ச்சொல்லாயின் இடையில் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்க் கோலம், தாய்ப் பாசம், தமிழ்க் கட்டுரை)

17. பண்புத் தொகையில் வல்லினம் மிகும் (உதாரணம்: பெருமைக் குணம், அருமைத் தம்பி, நகைச்சுவை, வெள்ளைக்குதிரை)

18. இருபெயரொட்டு பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (உதாரணம்: மழைக்காலம், செவ்வாய்க் கிழமை, சாரைப் பாம்பு)

19. உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (உதாரணம்: மலர்க்கண் - மலர் போன்ற கண், சர்க்கரைத் தமிழ்)

20. போல என்னும் உவம உருபின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: பாம்பு போலச் சீறினான்)

21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.

22. இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: தேடிச் சென்றான், நாடிப் போனான்)

23. அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: காணக் கூடாது, படிக்கப் பயப்படாதே.)

24. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நன்றாய்க் கூறினான், போய்ப் பார்)

25. ஆக, போக என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நன்றாகக் கேள், போகக் கூடாது.)

26. செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: கேளாக் கொடு, காணாச் சிரித்தான்.)

27. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

28. சித்திரை முதலான மாதங்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

29. நிலைமொழி ஈற்றில் உயிர் எழுத்து வரின் வல்லினம் மிகும். ஓரெழுத்து ஒரு மொழிக்கும் இது பொருந்தும். (உதாரணம்: கல்விக் கடல், அறிவுச் சுடர், தீப் பற்றியது, கைப்பிடி)

30. இனி, என என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

31. எழுவாய்த் தொடரானாலும் நிலைமொழி ஓரெழுத்து ஒரு மொழியாயின் வருமொழி முன் வல்லினம் பெரும்பாலும் மிகும். (உதாரணம்: தீச்சிறியது, நாக்குழறியது)

32. எழுவாய்த் தொடரில் குறில் நெடிலுக்குப் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: இராப் பகல்)

33. எழுவாய்த் தொடரில் இரு நெடில்களில் பின் வல்லினம் மிகும். (தாராப் பறந்தது, ஆமாத் துரத்தினான்)

34. கடு, விள என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும். (கடுச் சிறிது, விளத் தீது)


வல்லின ஒற்று மிகா இடங்கள்:

1. அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

2. எது, யாது என்னும் வினாச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

3. அவை, இவை, எவை, அத்தனை, இத்தனை, எத்தனை என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

4. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

5. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

6. அன்று, இன்று, என்றூ என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

7. மென்றொடர்க் குற்றியலுகரத்தில் வல்லினம் மிகாது.

8. எண்ணுப் பெயர்களான, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

9. ஒவ்வொரு என்பதன் பின் வல்லினம் மிகாது.

10. முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள்.)

11. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: நீர் குடித்தான்)

12. மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கை தட்டினான்)

13. மூன்றாம் வேற்றுமை விரியிலும் வல்லினம் மிகாது. (உதாரணம்: தந்தையோடு சென்றான்.)

14. சிறு, சிறிய, பெரிய என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

15. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வல்லினம் மிகாது. (உதாரணம்: தங்கை பெண், கண்ணகி கேள்வன்)

16. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையிலும் உயர்திணையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தக்கோர் சால்பு)

17. ஐந்தாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

18. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வல்லினம் மிகாது. (உதாரணம்: காளி கோயில்)

19. ஆறாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கண்ணனது கை)

20. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தரை படுத்தான்.)

21. எட்டாம் வேற்றுமை என்னும் விளி வேற்றுமையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தலைவா கொடும், நாடே தாழாதே.)

22. வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தாழ்குழல், காய்கதிர்)

23. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கபிலபரணர், செடிகொடி, வெற்றிலை பாக்கு)

24. வினைமுற்றுத் தொடர்களில் வல்லினம் மிகாது. (உதாரணம்: ஓடின குதிரைகள், போயின பசுக்கள்)

24. படி என்னும் இறுதியுடைய சொல் வினையுடன் சேர்ந்து வரும்போது வல்லினம் மிகாது. (உதாரணம்: வரும்படி சொல், போகும்படி சொல்லாதே.)

25. பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: வந்த கன்று, சென்ற தாய், ஓடிய சிறுவன்)

26. உகர ஈற்று வினையெச்சத்தின்பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: சென்று கண்டான், தின்று கொழுத்தான்)

27. ஆ என்னும் எழுத்தை இறுதியில் கொண்டுள்ள வினாச்சொல்லுக்குப் பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: அவனா சொன்னான், அப்படியா சொன்னான்)

28. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது.

29. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது.

30. நனி, கடி, மா என்னும் உரிச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

31. ஒரு, இரு, அறு, எழு என்னும் விகார எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

7 Responses to "வல்லின ஒற்று மிகும், மிகா இடங்கள் - இலக்கணம்"

  1. என்றும் வழிகாட்டும் சிறப்பு. வாழ்க உம் தமிழ்த்தொண்டு

    ReplyDelete
  2. மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி ஐயா... தமிழோடு தொடர்வோம்..

    ReplyDelete
  3. ஆத்திசூடி ஒற்று வருமா வராதா ?

    ReplyDelete
    Replies
    1. வராது.ஆத்தியைச் சூடியவன் என்பது இரண்டாம் வேற்றுமை விரி ; இங்கு ஒற்று மிகும்.ஆத்திசூடி என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. எனவே,இங்கு ஒற்று மிகாது.

      Delete
  4. தொடர்புக்கொள்ள

    .....க்.....வருமா வராதா

    ReplyDelete
    Replies
    1. மிகாது. இடைத்தொடர் குற்றியல் உகரத்தின்பின் ஒற்று மிகாது.

      Delete
  5. அடி பணிந்தார். ஒற்று மிகுமா?

    ReplyDelete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel