இக்கட்டுரையில் ஆகுபெயர் என்றால் என்ன?
அதன் விளக்கம் மற்றும் வகைகள் பற்றியும் விளக்கமாகச் சொல்லப்பட உள்ளன.
ஆகுபெயர் எனப்படுவது,
ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக்
குறிப்பது. ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றிற்கு
ஆகி வருவதே ஆகுபெயராகும். பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாகவும் வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். (குறிப்பு - பெயர்ச்சொல்
எல்லாம் ஆகுபெயராகாது)
நன்னூல் நூற்பா..
"பொருள் முதல் ஆறோடு
அளவைசொல் தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே" -நன்னூல்
-290
பொருள், இடம், காலம்,
சினை, குணம், தொழில் என்னும் ஆறுடன் சொல், தானி, கருவி, காரியம் வினைமுதல் என்னும்
இவை முதலாக வரும் பெயர்களுள் ஒரு பொருளினது இயற்பெயரால் அதனோடு தொடர்புடைய பிறபொருளைத்
தொன்றுதொட்டுக் கூறி வருபவை ஆகுபெயராகும்.
Ø நெல்
அறுத்தான் - உண்மையில் அறுக்கப்பட்டது கதிர். நெல் என்பது இங்கு ஆகுபெயரானது.
உலகம்
சிரித்தது.
என்
பள்ளி வென்றது.
மயிலத்திற்கு
வாருங்கள்.
விழுப்புரம்
அழைக்கிறது,,
இவற்றில் உலகம்,
பள்ளி, மயிலம், விழுப்புரம் என்னும்
இடப்பெயர்கள் இடத்தை உணர்த்தாமல் முறையே உலகில் உள்ள மக்களையும் பள்ளியில் உள்ள
மாணவர்களையும் உணர்த்துகின்றன. எனவே இவை ஆகுபெயர் எனப்பட்டன.
Ø வெற்றிலை
நட்டான் - நடப்பட்டது வெற்றிலைக் கொடி. இங்கு வெற்றிலைக் கொடிக்காக வெற்றிலை
ஆகுபெயரானது.
Ø கண்
என்னும் சொல் ஆகுபெயராய்க் கண்ணின் பார்வையை உணர்த்தும்.
Ø பெண்
இயலார் எல்லாம் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன்
பரத்த நின் மார்பு
இந்தத் திருக்குறளில் கண்ணால்
உண்பர் என்பது கண் பார்வையால் உண்ணுதலை உணர்த்தி நிற்கும் ஆகுபெயர்.
ஆகுபெயர்கள்
வகைகள் - பதினாறு
2. இடவாகு பெயர்
3. காலவாகு பெயர்
4. சினையாகு பெயர்
5. பண்பாகு பெயர்
6. தொழிலாகு பெயர்
7. எண்ணலளவையாகு பெயர்
8. எடுத்தலளவையாகு பெயர்
9. முகத்தலளவையாகு பெயர்
10. நீட்டலளவையாகு பெயர்
11. சொல்லாகு பெயர்
12. தானியாகுபெயர்
13. கருவியாகு பெயர்
14. காரியவாகு பெயர்
15. கருத்தாவாகு பெயர்
16. உவமையாகு பெயர்
பொருள் முதல் ஆறு ஆகுபெயர்கள்
பொருள்பெயர்,
இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர்,
பண்புப் பெயர், தொழில்பெயர் என்னும் அறுவகைப்
பெயர்களை அடிப்படையாகக் கொண்டு வரும் ஆகுபெயர்களைப் பொருள் முதல் ஆறு ஆகுபெயர்கள்
என்பர்.
1. பொருளாகுபெயர்
முதல் பொருளின் பெயர்,
அதனோடு தொடர்புடைய இன்னொரு (சினைப்) பொருளுக்கு ஆகி வருதல்.
(எ.கா) மல்லிகை போன்ற வெண்மை.
இங்கு மல்லிகைப் பூவுக்காக மரம்
வந்தது.
முக்கனிகளுள்
பலா அளவிலும் பெரியது, சுவையிலும் இனியது
(இது சினைக்காகப்
பொருள் ஆகியது) மரத்தின் பெயர் இங்கே அதன் உறுப்பான கனியைக் குறித்தது.
2. இடவாகு
பெயர்
இடத்தின் பெயர் இன்னொன்றிற்காக ஆகி வருவது.
(எ.கா)
திண்டிவனம் வென்றது: இங்கு திண்டிவனம் என்பது திண்டிவனத்தக் குறிக்காமல், திண்டிவனத்திற்காக விளையாடும் திண்டிவனம் அணியைக் குறித்தது. (அணிக்கு ஆகி வந்தது) இது இடவாகுபெயர்.
· உலகம் வியந்தது: இதில் உலகம் என்பது மண்ணுலகத்தைக்
குறிக்காமல், அதில் வாழும் மக்களைக் குறித்தது (மக்களுக்கு
ஆகி வந்தது). இது இடவாகு பெயர்
3. காலவாகு
பெயர்
காலப்பெயர் அதனுன் தொடர்புடைய ஒன்றிற்குப்
பெயராக ஆகிவருவது காலவாகு
பெயராகும்.
(எ.கா)
மாரி
பொழிந்தது - மழை பொழிந்தது
சித்திரை
வந்தாள் - சித்திரையில் பிறந்தவள் வந்தாள்.
இங்கே வந்துள்ள மாரி, சித்திரை என்பது
அதனோடு தொடர்புடைய மழை, சித்திரை மாதம் என்பனவற்றைக் குறித்துள்ளது.
4. சினையாகு
பெயர்
ஒரு சினைப் பொருளின் பெயர் அதன்
முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) தலைக்குப்
பத்து ரூபாய் கொடு.
இதில் தலை என்னும் சினைப்
பொருளின் பெயர், பத்து ரூபாய் கொடு என்னும்
குறிப்பால் அந்தத் தலையை உடைய மனிதனுக்கு ஆகி வந்துள்ளது.
5. பண்பாகு
பெயர்
பண்பின் பெயர் பண்பை உடையவர்களுக்குப்
பெயராகி வருவது பண்பாகு பெயர்.
(எ.கா)
வீட்டிற்கு
வெள்ளை அடித்தான்:
'வெள்ளை'
என்னும் நிறத்தின் பெயர், அந்நிறத்தையுடைய
சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. இங்கு 'வெள்ளை' என்பது ஆகு பெயர். இதனைப் பண்பாகுபெயர் என்பர்.
6. தொழிலாகு
பெயர்
தொழிற்பெயர்கள் செயல் அல்லது தொழிலைக்
குறிக்காமல் அதனுடன் தொடர்புடைய ஒன்றிற்குப் பெயராக ஆகிவருவது தொழிலாகு பெயராகும்.
(எ.கா)
புழுங்கல்
காய்ந்தது
காய்ந்தது அரிசி புழுக்கியதால்(தொழில்)
புழுங்கல் என ஆகியுள்ளது.
எண்ணல் எடுத்தல்,
முகத்தல், நீட்டல் முதலிய அளவைப் பெயர்களும் ஆகுபெயர்களாக வரும்.
7. எண்ணல்
அளவையாகு பெயர்
ஓர் எண்ணல் அளவையின் பெயர் அந்த
எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) ஒன்று பெற்றால் ஒளி மயம்.
இரண்டுக்கும் மேல் எப்போதும் வேண்டா
இதில் ஒன்று,
இரண்டு என்னும் எண்ணல் அளவைப்பெயர் அந்த எண்ணுள்ள பொருளுக்கு
(குழந்தைக்கு) ஆகி வந்திருப்பதால் எண்ணல் அளவையாகு பெயர் எனப்பட்டது.
8. எடுத்தல்
அளவையாகு பெயர்
ஓர் எடுத்தல் அளவையின் பெயர்
அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவையாகு பெயர் எனப்படும்.
கிலோ, கால் கிலோ, அரை கிலோ,,,,என்று சொல்வது.
(எ.கா) மூன்று கிலோ வாங்கி வா.
இரண்டு கிலோ தின்றாள்.
இதில் கிலோ என்னும் எடுத்தல்
அளவைப் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
9. முகத்தல்
அளவையாகு பெயர்
திரவப் பொருளை முகந்து அளப்பது முகத்தல்
அளவை ஆகும். ஒரு முகத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு
ஆகி வருவது முகத்தல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) ஐந்து லிட்டர் வாங்கி வா.
நான்குபடி கறக்கும்
இதில் லிட்டர் என்னும் முகத்தல்
அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
10. நீட்டல்
அளவையாகு பெயர்
நீட்டி அளப்பது நீட்டல் அளவையாகுபெயராகும். ஒரு நீட்டல் அளவையின்
பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) இரண்டு மீட்டர் கொடுங்கள்.
ஐந்து முழம் வாங்கிவந்தான்.
இதில் மீட்டர் என்னும் அளவையின்
பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
11. சொல்லாகு
பெயர்....
ஏதோ
ஒன்றுக்காக சொல் கருவி ஆகி வருவது. சொல் என்னும் சொல் சொன்னவற்றிற்கும்
பிறவற்றிற்கும் ஆகுபெயராக வருவதால் அது சொல்லாகு பெயர் ஆகும்.
(எ.கா)
இந்தப்
பாட்டு என் சிந்தனையைத் தூண்டியது.
இங்கே பாட்டின் பொருள்தான்
சிந்தனையைத் தூண்டியது. பொருளுக்காக பாட்டு என்ற சொல் கருவி ஆகி வந்தது.
மேலும்- சொல் தவறாதே
சொல்லுக்குக் கட்டுப்படு
12. தானியாகு பெயர்...
தானி என்றால் இடம். இடம் என்பது
இங்கே ஒரு பொருள் இருக்கின்ற இடத்தைக் குறிக்கின்றது.
(எ.கா)
விளக்கு
முறிந்தது, விளக்கு அணைந்தது.
விளக்கு என்பது காரணப்பெயர்.
விளக்கம் தரும் சுடரினால்தான் விளக்கு. சுடர் முறியாது. விளக்கம் தருகின்ற தண்டு
முறிந்து விட்டது. விளக்குக்காக அந்த இடம் ஆகி வருகிறது.
பாலை
இறக்கு.
இதில் பாலின் பெயர்,
பாலைக் குறிக்காமல் பாத்திரத்தைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் உள்ள
ஒரு பொருளின் பெயர் (தானி), அது சார்ந்திருக்கும்
இடத்திற்குப் (தானத்திற்கு) பெயராகி வருவது தானியாகு பெயர் ஆகும்
13. கருவியாகு பெயர்
ஒரு கருவியின் பெயர்
அக்கருவியால் ஆகும் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும்.
(எ.கா) நான் குறள் படித்தேன்.
யாழ் இனிது குழல் இனிது
புல்லாங்குழல் கேட்டு
மகிழ்ந்தாள்
இதில் குறள் என்பது குறள்
வெண்பாவைக் குறிக்கும் சொல். ஆனால் இங்கே குறள் வெண்பாவால் ஆக்கப்பட்ட பாக்களைக்
குறிக்கிறது.
யாழும் குழலும் புல்லாங்குழலும் கருவிப்பெயர்கள். அந்தக் கருவியில் தோன்றும் இசைக்குப் பெயராக வந்துள்ளன.
14. காரியவாகு
பெயர்
ஒரு காரியத்தின் பெயர் அதன்
காரணத்திற்கு (கருவிக்கு) ஆகி வந்தால் காரியவாகு பெயர் எனப்படும்.
(எ.கா) நான் அலங்காரம் கற்றேன்.
பல
நாள்கள் தேடி இன்றுதான் அகத்தியம் வாங்கினேன்.
இதில் அலங்காரம் என்னும் சொல்
அலங்காரத்தைக் (அணியை) கற்பிக்கும் நூலுக்கு ஆகி வந்துள்ளது. அதைப்போன்று
அகத்தியம் என்னும் சொல் அகத்தியம் என்ற நூலிற்கு ஆகிவந்துள்ளது.
15. கருத்தாவாகு
பெயர்..
கருத்தன்
என்ற பெயர் படைத்தவரான கருத்தாவிற்கு ஆகி வருவது.
(எ.கா) வைரமுத்துவை
படி.
திருவள்ளுவனைப் படித்தேன்
இங்கு வைரமுத்து,
வள்ளுவன் எழுதிய கவிதைக்காக வைரமுத்து திருவள்ளுவன் என்கின்ற கருத்தா ஆகி வருகிறது.
16. உவமையாகு
பெயர்
உவமேயத்துக்காக உவமானம் ஆகி
வருவது உவமையாகு பெயர் ஆகும்.
(எ.கா) மயில் வந்தாள்.
குயில் பாடினாள்
இங்கே உண்மையில் வந்தது ஒரு
பெண். பெண் என்ற உவமேயத்துக்காக மயில் என்ற உவமானம் ஆகி வருகிறது. அதைப்போன்று
உண்மையில் பாடியது ஒரு பெண். பெண் என்ற உவமேயத்துக்காக குயில் என்ற உவமானம் ஆகி வருகிறது.
மயிலம் இளமுருகு
கைபேசி – 9600270331
01.07.2020
சிறப்பு
ReplyDeleteநன்றி
Delete