ஒரு
செய்யுளில் இருக்கின்ற சீர்களையோ, அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்ப அமைத்துக்கொள்வதே
பொருள்கோள் எனப்படும். அவ்வாறு இல்லாமல் செய்யுளில் இடம்பெறும்
சொற்களை அப்படியே பொருள் கொண்டால் பாடல்களுக்குச் சரியான பொருள் கிடைக்காது. யாப்பு முதலிய
காரணங்களுக்காகச் சொற்களை முன்பின்னாக மாற்றுதல் முதலிய பல நிலைகளில் சொற்களைச்
சேர்த்தும் பிரித்தும் பொருள் கொண்டால் அப்பாடலின் பொருள்
விளங்கும். இது எட்டு வகைப்படும். அவை,
1)ஆற்றுநீர்ப்
பொருள்கோள்
2) மொழிமாற்றுப்
பொருள்கோள்
3) நிரனிறைப்
பொருள்கோள்
4) பூட்டுவிற் பொருள்கோள் (விற்பூட்டு பொருள்கோள்)
5) தாப்பிசைப்
பொருள்கோள்
6) அளைமறிப் பாப்புப்
பொருள்கோள்
7) கொண்டுகூட்டுப்
பொருள்கோள்
8) அடிமறி மாற்றுப்
பொருள்கோள்.
யாற்றுநீர்
மொழிமாற்று நிரனிறை விற்பூண்
தாப்பிசை
அளைமறி பாப்புக் கொண்டுகூட்டு
அடிமறி
மாற்றுஎனப் பொருள்கோள் எட்டே
(நன்னூல் - 411)
1.ஆற்றுநீர்ப் பொருள்கோள்
சொற்களை
அங்கும் இங்கும் மாற்றுதல் முதலிய வழிகளில் பொருள் கொள்வதற்கு இடமின்றி, ஆற்றுநீர் இடையறாது ஒரே தொடர்ச்சியாக
ஒரு திசைநோக்கி ஓடுவதுபோன்று பாடலின் சொற்கள் முன்பின்
மாறாமல், உள்ளவாறே வரிசை மாற்றாமல், நேரே சென்று, தொடர்ச்சியாகப் பொருள்கொள்ளும் முறையினை ஆற்றுநீர்ப்
பொருள்கோள் என்பர்.
(எ.கா.)
சொல்லரும்
சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே
கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே
போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர்
மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே
(சீவகசிந்தாமணி - 53)
இப்பாட்டு,
சொல் என்னும் எழுவாயைத் தொடர்ந்து, அதன்
பல்வேறு செயல்கள், கருவிருந்து, ஈன்று,
நிறுவி, இறைஞ்சி எனச்
எச்சங்களாக இடம்பெற, காய்த்த என்னும் வினைப் பயனிலையை
இறுதியில் பெற்று முற்றுப் பெற்றது. இப்பாட்டில் எச்சொல்லையும் இடம் மாற்றியோ வேறுவகையில்
முன்பின்னாகக் கொண்டோ பொருள் கொள்ளாமல், சொற்கள் அமைந்துள்ள அந்நிலையிலேயே பொருள் கொண்டுள்ளமையைக் காணலாம். இப்பாடலில் சொற்களும், அவற்றின் பொருளும் ஆற்றுநீர்
போல் தொடர்ச்சியாகச் செல்வதால் இப்பாடல் ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்னும் வகையினுள்
அமைகின்றது.
மற்றைய
நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்றற்று
ஒழுகும் அஃதுயாற்றுப் புனலே
(நன்னூல் - 412)
2.
மொழிமாற்றுப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் உள்ள சொற்களை இருப்பதை இருப்பது போன்று
படித்தால் பொருள் தெளிவு கிடைக்காது. மாறாக
செய்யுளின் ஓர் அடியில் உள்ள சொற்களை மட்டும் முன்பின்னாக மாற்றிப்
பொருள் கொண்டால் செய்யுளுக்கு உரிய சரியான பொருள் கிடைக்கும். இவ்வாறு அச்செய்யுளின் சொற்களை வரிசைமுறை மாற்றிப் பொருள் கொள்வது, மொழிமாற்றுப் பொருள்கோள் எனப்படும்.
(எ.கா. 1)
சுரைஆழ
அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு
நீத்து முயற்கு நிலைஎன்ப
கானக
நாடன் சுனை
இப்பாடலில்
உள்ள சொற்கள் அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் பொருத்தமில்லாப் பொருள்தரும்
நிலை ஏற்படும். அதாவது ‘நீர்நிலையில் சுரை ஆழ்ந்து போகிறது என்றும் அம்மி
மிதக்கிறது’ என்றும் முதல் அடி பொருள்படும். அதேபோல் இரண்டாவது அடி, ‘அந்நீர்நிலையில் யானை நிலையாக நிற்க இயலாமல் நீந்துகிறது’ என்றும்,
‘முயல் நிலையாக நிற்கிறது’ என்றும் பொருள்படும்.
இவ்வாறு
பொருள் கொள்வது நடைமுறைப் பொருள்கொள்ளும் முறைக்கு பொருத்தமாக இருக்காது. அதனால், முதல் அடியில் உள்ள சுரை என்னும் சொல்லை
மிதப்ப என்பதனோடும் (சுரை மிதப்ப), அம்மி என்பதை ஆழ
என்பதனோடும் (அம்மி ஆழ) கொண்டு சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.
இவ்வாறே
இரண்டாவது அடியில் யானை என்பதை நிலை என்பதனோடும் (யானைக்கு நிலை),
முயல் என்பதை நீத்து என்பதனோடும் (முயலுக்கு நீத்து) சேர்த்துப்
பொருள் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஓர் அடியில் உள்ள சொற்களை முன் பின்னாக
மாற்றிச் சரியான பொருள் கொள்வதால் இது மொழிமாற்றுப் பொருள்கோள் ஆயிற்று.
(எ.கா. 2)
குன்றத்து
மேல குவளை குளத்துள
செங்கோடு வேரி மலர்
இதனைக்
குன்றத்து மேல வேரி மலர் என்றும், குளத்துள
குவளை மலர் என்றும் பொருள் கொள்ள வேண்டியிருப்பதால் மொழிமாற்று என்கிறோம். தொல்காப்பியம்
இதனைச் சுண்ணம் என்கிறது.
ஏற்ற
பொருளுக்கு இயையும் மொழிகளை
மாற்றியோர்
அடியுள் வழங்கல்மொழி மாற்றே
(நன்னூல்
- 413)
3.நிரல்நிறை
ஒரு
பாடலில் அமைந்துள்ள சொற்களை முறை மாற்றாமல் வரிசையாக அமைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை பொருள்கோள் ஆகும்.
(எ.கா.)
அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது
இல்வாழ்க்கை
அன்பு உடைத்தாயின் அது அதன் பண்பு. இல்வாழ்க்கை அறம் உடைத்தாயின் அது அதன் பயன். –
என்பது இதன் பொருள். இதில் “அன்பும் அறனும்”, “பண்பும்
பயனும்” – எனத் தனித்தனியே நிரல்நிறுத்திக் சொல்லப்பட்டுள்ளன. இவ்வாறு முதல் வரிசையில் முதலில்
உள்ளதோடு இரண்டாம் வரிசையில் முதலில் உள்ளதையும், முதல்
வரிசையில் இரண்டாவதாக உள்ளதோடு இரண்டாவது வரிசையில் இரண்டாவது உள்ளத்தையும்
பொருத்திப் பார்ப்பது நேர் நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும்.
பெயரும்
வினையுமாம் சொல்லையும் பொருளையும்
வேறு
நிரனிறீஇ முறையினும் எதிரினும்
நேரும்
பொருள்கோள் நிரனிறை நெறியே
(நன்னூல் - 413)
4)
விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்)
செய்யுளைச்
சொற்கள் உள்ளவாறே பொருள் கொள்ளாது, அதன்
இறுதியில் அமைந்துள்ள சொல்லைச் செய்யுளின் முதலில் உள்ள
சொல்லோடு கொண்டு வந்து இணைத்துப் பொருள் கொள்கின்ற முறைக்குப் பூட்டுவிற் பொருள்கோள் என்று பெயர்.
வில்லில்
கயிறு கட்டப்படும். அவ்வாறு கட்டும்போது வில்லின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள
கயிற்றைக் கொண்டுவந்து வில்லின் மேற்பகுதியில் இணைப்பர். அதுபோல் செய்யுளின் கடைசி
அடியின் இறுதியில் உள்ள சொல்லை அதன் முதல் அடியில் முதலில் உள்ள சொல்லோடு
கொண்டுவந்து சேர்த்துப் பொருள் கொள்வது, பூட்டுவிற்
பொருள்கோள் எனப்படும்.
(எ.கா.)
திறந்திடுமின்
தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்துபடின்
பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன்
தண்ணார
மார்பில் தமிழர் பெருமானைக்
கண்ணாரக்
காணக் கதவு (முத்தொள்ளாயிரம்)
இப்பாடலைச்
சொற்கள் உள்ள வரிசை முறையிலேயே பொருள் கொண்டால் ‘தீமைகளை வெளிவரச் செய்யுங்கள்’
என்பதாகப் பாடலின் பொருள்மாறுபடும். இப்பாடலின் இறுதியில் உள்ள கதவு என்னும் சொல்லை இச்செய்யுளின்
முதற் சொல்லாகச் சேர்த்துப் பொருள் கொள்ளும்போது இப்பாடலின் சரியான பொருள்
கிடைக்கிறது. அதாவது ‘கதவைத் திறந்து விடுங்கள். திறக்காவிட்டால் உறந்தையின்
மன்னனைக் காணாமல் பெண்கள் இறந்துவிடுவர். பெரும் துன்பம் ஏற்படும்.’ என்பது அப்பாடலின்
பொருள். கதவு என்னும் சொல்லைச் செய்யுளின் முதலில் கொண்டு சேர்த்துப் பார்த்தால்
மட்டுமே இப்பொருள் கிடைக்கும்.
எழுவாய்
இறுதி நிலைமொழி தம்முள்
பொருள்நோக்கு
உடையது பூட்டுவில் ஆகும்
(நன்னூல் -
415)
5.
தாப்பிசைப் பொருள்கோள்
தாம்புக்கயிறு
ஒருபுறம் மாட்டையும், மற்றொருபுறம்
மாட்டைக் கட்டும் முளையையும் பற்றிக்கொள்வது போலவும் ஒரு செய்யுளின் நடுவில் நிற்கும்
சொல் ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் சென்று சேர்ந்து பொருள் தரும் முறையினைத் தாப்பிசைப் பொருள்கோள் என்பர். தாம்பு என்னும் சொல்
தாப்பு என வந்துள்ளது. தாம்பு என்பதற்குக் கயிறு என்பது பொருள். இங்கு ஊஞ்சல் எனப்
பொருள்படுகிறது. இசை என்றால் சொல் என்பது பொருள். அணி வகையில் இதனை விளக்கணி(தீவக
அணி) என்பர்.
(எ.கா.)
உண்ணாமை
உள்ள(து) உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல்
செய்யாது அளறு – குறள் -
255
இத்திருக்குறளில் ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை என்றும்,
ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு என்றும் பொருள் கொள்ளும்போது ஊன்
என்னும் சொல் இருபுறமும் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது.
இடைநிலை
மொழியே ஏனைஈர் இடத்தும்
நடந்து
பொருளை நண்ணுதல் தாப்பிசை
(நன்னூல்
- 416)
6. அளைமறி பாப்புப் பொருள்கோள்
அளை
+ மறி + பாம்பு என்பது அளைமறி பாப்பு என வந்துள்ளது. அளை என்றால் வளை அல்லது
புற்று என்று பொருள். பாப்பு என்பது பாம்பு எனப் பொருள்படும். புற்றுக்குள் முதலில்
தன் தலையை நுழைக்கும் பாம்பு தன் உடல் முழுவதையும் இழுத்துக்கொண்டபின் தலையைப்
புற்றின் வாய்ப் பகுதியிலும் வாலைப் புற்றின் அடிப்பகுதியிலுமாக மாற்றி வைத்துக்
கொள்கிறது. இவ்வாறு தலை மேலாகவும் வால் கீழாகவும் நிலைமாறும் அது போலச் செய்யுளின் முதலில் உள்ள அடியை இறுதியிலும், இறுதியில் உள்ள அடியை முதலிலும் மாற்றிப் பொருள் கொள்ளும் முறைக்கு அளைமறி
பாப்புப் பொருள்கோள் என்று பெயர்.
(எ.கா.)
தாழ்ந்த
உணர்வினராய்த் தாளுடைந்து
தண்டூன்றித்
தளர்வார் தாமும்
சூழ்ந்த
வினையாக்கை சுடவிளிந்து
நாற்கதியில்
சுழல்வார் தாமும்
மூழ்ந்த
பிணிநலிய முன்செய்த
வினையென்றே
முனிவார் தாமும்
வாழ்ந்த
பொழுதினே வானெய்து
நெறிமுன்னி
முயலா தாரே
இப்பாடலில்
உள்ள ‘வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே’ என்னும் அடியை இப்பாடலில்
முதலில் அமைத்தும், முதலில் உள்ள
‘தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார்’ என்னும் தொடரை
இறுதியிலும் சேர்த்துப் பொருள் கொண்டால் மட்டுமே இப்பாடலின் பொருள் சரியாக
அமையும்.
இவ்வாறு
இறுதி அடியை முதலிலும் முதல் அடியை இறுதியிலும் இணைத்துப் பொருள் கொள்ளும் முறையே
அளைமறி பாப்புப் பொருள்கோள் எனப்படும்.
செய்யுள்
இறுதி மொழியிடை முதலினும்
எய்திய
பொருள்கோள் அளைமறிப் பாப்பே
(நன்னூல் - 417)
7.
கொண்டுகூட்டுப் பொருள்கோள்
ஒரு
செய்யுளில் பல அடிகளில் உள்ள சொற்களை அவை
அமைந்துள்ளவாறே பொருள் கொள்ளாமல், அதன் பல அடிகளிலும் உள்ள
சொற்களைத் தேவையான இடங்களில் சேர்த்துப் பொருள்கொள்ளும் முறைக்குக் கொண்டுகூட்டுப்
பொருள்கோள் எனப்படும்.
(எ.கா.1)
தெங்கங்காய்
போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
வெண்கோழி
முட்டை உடைத்தன்ன மாமேனி
அஞ்சனத்
தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச்
சென்றார் வரின்
இசெய்யுளில் உள்ள சொற்களை அவை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் ‘கூந்தல் தேங்காய்
போலத் திரண்டு உருண்டுள்ளது’ என்றும் ‘மேனி வெண்கோழி முட்டை உடைத்தது போல் உள்ளது’
என்றும், ‘அஞ்சனம் என்னும் கண்ணுக்குத் தீட்டும் மை போலக்
கருப்பாக உள்ள பசலை’ என்றும் பொருள் கொள்ள வேண்டிவரும். அவ்வாறு கொள்வதால் பொருள்
சிறக்காது.
மாறாக
‘வங்கத்துச் சென்றார் வரின், அஞ்சனத் தன்ன
பைங்கூந்தலை உடையாள் மேனி மேல், தெங்கங்காய் போலத் திரண்டு
உருண்ட கோழி வெண்முட்டையை உடைத்தது போல உள்ள பசலை தணிவாம்’ எனச் செய்யுளின் பல
அடிகளிலும் உள்ள சொற்களை வெவ்வேறு அடிகளுக்கு மாற்றிப் பொருள் கொண்டாலே பொருள்
சிறக்கும். இவ்வாறு பொருள் கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்.
(எ.கா.2)
ஆலத்து
மேல குவளை குளத்தன
வாலின்
நெடிய குரங்கு
இதில்
ஆலத்து மேல குரங்கு, குளத்தன குவளை –
என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கூட்டிய பொருள்கோள்
அமைந்திருப்பதால் இது கொண்டுகூட்டுப்பொருள்கோள்.
யாப்படி
பலவினும் கோப்புடை மொழிகளை
ஏற்புழி
இசைப்பது கொண்டு கூட்டே
(நன்னூல்
- 418)
8 .அடிமறி மாற்றுப் பொருள்கோள்
அடிமறி
மாற்றுப் பொருள்கோள் என்பது, பாடலில் உள்ள
அடிகளையே மேலும் கீழுமாக எங்கு வேண்டுமானாலும் மாற்றிப் பொருள்கொள்ளும்
முறையாகும். அவ்வாறு மாற்றிப் பொருள் கொண்டாலும் பாடலின்
பொருள் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.
(எ.கா.)
மாறாக்
காதலர் மலைமறைந் தனரே
ஆறாக்
கண்பனி வரலா னாவே
ஏறா
மென்தோள் வளைநெகி ழும்மே
கூறாய்
தோழியான் வாழு மாறே
இபாடலில் எந்த ஓர் அடியையும் மேலும் கீழுமாக எங்கே வேண்டுமானாலும் மாற்றிப் பொருள்கொண்டாலும்
இப்பாடலின் பொருளில் மாற்றம் ஏற்படாது. ஒவ்வோர் அடியிலும்
ஒரு கருத்து முற்றுப் பெற்றுள்ளதோடு அடுத்த அடிக்குப் பொருள் தொடர்பற்றுத் தனித்
தனிக் கருத்தாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.
(எ.கா. 2)
சூரல்
பம்பிய சிறுகான் யாறே
சூரர
மகளிர் ஆரணங் கினரே
சார
னாட நீவர லாறே
வார
லெனினே யானஞ் சுவலே.
இந்தப்
பாடலில் உள்ள 4 அடிகளை முன்னும், பின்னும், இடையிலும் எங்கு வைத்தும் பொருள்
கொள்ளலாம். இப்பாடலின் பொருளில் மாற்றம் ஏற்படாது.
ஏற்புழி
எடுத்துடன் கூட்டுறும் அடியவும்
யாப்பீறு
இடைமுதல் ஆக்கினும் பொருளிசை
மாட்சியும்
மாறா அடியவும் அடிமறி
(நன்னூல்
- 419)
மயிலம் இளமுருகு
05.07.2020
0 Response to "பொருள்கோள் - இலக்கணம் : மயிலம் இளமுருகு"
Post a Comment