வழுநிலையும் அதன் வகைகளும்

Trending

Breaking News
Loading...

வழுநிலையும் அதன் வகைகளும்

வழுநிலையும் அதன் வகைகளும்


மனிதர்கள் மற்றவர்களோடு பேசும்போது உணர்ச்சி வசப்படாமல், ஒரே நிலையில், தெளிவான அறிவோடு பொறுமையாகத் தாம் நினைத்தைப் பேசுவதில்லை. அப்படி பேசினால் வழு ஏற்படாது. அவ்வாறில்லாமல் உணர்ச்சிவயப்பட்டுப் பல்வேறு நிலையில் பேசுகின்றனர்.    நம் சான்றோர் வகுத்த விதிப்படி பேசாமல் முறை பிறழ்ந்து பேசுகின்றனர். அப்பேச்சு இலக்கண வரம்பை மீறுகின்றது. பேச்சிலும் முறையிலும் வழு ஏற்படுகின்றது. இதனை வழுக்கள் என்பர்.

சுருக்கமாக இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். வழு என்பது பிழையான அல்லது குற்றமுடைய பேச்சும் எழுத்தும் ஆகும். இலக்கண முறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். வழுவாக இருப்பினும் இலக்கணமுடையதைப் போல ஏற்றுக்கொள்ளும் இடம் வழுவமைதி என்படும்.

ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் அம்மொழியின் இலக்கண அமைப்புகளே முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. தொல்காப்பியரின் தொலைநோக்குச் சிந்தனையின் வழியில், நன்னூலாரின் நன்னூல் இலக்கண விளக்கம் வழு, வழாநிலை, வழுஅமைதி என்ற மூன்றையும் கூறி, காலந்தோறும் தமிழ் வாழ வழி வகுத்துத் தந்துள்ளது.  

திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றபோது வழுக்கள் சொற்றொடர்களில் ஏற்படுகின்றன அவற்றைக்குறித்து இங்கே காணலாம்.

வழாநிலை

 முன்னோர் ஒரு கருத்தை எப்படி எவ்வாறு கூறிவந்தனரோ அப்படியே அவ்வாறே தொன்றுதொட்டு வழு இல்லாமல் கூறி வருவது வழாநிலையாகும்.    

நான் நாளை வருவேன்.

நான்’ என்பது தன்மை பெயர். ‘நாளை ‘என்பது எதிர்காலம் காட்டும். இவைகளுக்கு ஏற்ற வினைமுற்று ‘வருவேன்’ என்பதாகும். இவ்வாறு இலக்கணமுறை பிறழாமல் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். (வழாநிலை – இலக்கணப் பிழையற்ற முறை)

எ.கா – குயில் கூவும்.

                நாய் குரைக்கும்.

வழு

  முருகன் நாளை வந்தேன்.   

  ‘நாளை’ என்னும் எதிர்காலத்தைக் குறிக்கும் சொல்லோடு ‘வந்தேன்’ என்னும் இறந்த கால வினைமுற்றுச் சேர்த்துக் கூறுவது இலக்கணப் பிழையாகும்.

  எ. கா. –

       அம்மா வந்தது.

       அவள் வந்தான்.

சொற்றொடர்களைப் பிழையின்றிப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிப்பது இலக்கண நோக்கங்களில் ஒன்று. சொற்றொடர்களில் ஏற்படும் பிழையை இலக்கணத்தில் வழு  எனக் குறிப்பிடுகின்றனர். வழுக்கள் யாவை என்றும் அவை எங்கெங்குச் சொற்றொடர்களில் வருகின்றன என்றும் அறிந்தால்தான் அவற்றை நீக்கிப் பயன்படுத்த முடியும்.

வழுவகைகள்

வழு ஏழு வகைப்படும். அவை

  1. திணைவழு,
  2. பால்வழு,
  3. இடவழு,
  4. காலவழு,
  5. வினாவழு.
  6. விடைவழு,
  7. மரபுவழு

என்பனவாம். பின்வரும் நன்னூல்  நூற்பா அதனை விளக்குகிறது.

திணையே பாலிடம் பொழுது வினாஇறை

மரபாம் ஏழும் மயங்கினாம் வழுவே   (நன்னூல் : 375)

1. திணை

திணை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். மக்கள், தேவர், நரகர் முதலியோர் ஆறறிவு படைத்தவர் ஆதலின் அவர் உயர்திணை ஆவர். இவர்களைத் தவிர்த்த உயிர் உள்ளவையும் இல்லாதவையும் அஃறிணையாகும்.

மக்கள் தேவர் நரகர் உயர்திணை

மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை   (நன்னூல் :261)

திணை வழுநிலை

சொற்றொடர்களில் ஒரு திணைக்கு உரிய பெயரைப் பயன்படுத்துகிறபோது அத்திணைக்குரிய வினையைக் கொண்டுதான் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால் அது திணை வழுவாகும். உயர்திணை, அஃறிணை என்னும் இருவகைத் திணைகளும் ஒன்றோடொன்று மயங்கி(மாறி) வருவது திணைவழுவாகும்.

(சான்று)

 அம்மா வந்தது.

இச்சொற்றொடரில் ‘அம்மா' என்னும் பெயர் உயர்திணைக்குரியது. இச்சொல் எழுவாயாக வந்துள்ளது. ‘வந்தது' என்பது வினைப் பயனிலை. இஃது அஃறிணைச் சொல், ம்மா என்னும் உயர்திணை எழுவாய்க்கு, முடிக்கும் சொல்லாக ‘வந்தது' இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயர்திணை எழுவாய்க்கு அஃறிணையும், அஃறிணை எழுவாய்க்கு உயர்திணையும் பயனிலையாக வருவது வழுவாகும்.

(சான்று)

1. பூங்கோதை வந்தது (உயர்திணை எழுவாய் அஃறிணைப் பயனிலையைக்     கொண்டு முடிந்தது)

2. பசு வந்தாள் (அஃறிணை எழுவாய் உயர்திணைப் பயனிலையைக் கொண்டு முடிந்தது) எனவே இவ்விரு தொடர்களும் திணைவழுவாயிற்று.

2. பால்

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐவகைப்பாலும் ஒன்றோடொன்று மயங்கி வருவது பால்வழுவாகும்.

ஆண்பால், பெண்பால், பலர்பால் என்னும் மூவகைப் பால்களும் உயர்திணைக்கு உரியன.

(சான்று)

முருகன்-ஆண்பால்

வள்ளி -பெண்பால்

அறிஞர்-பலர்பால்

ஆண்பெண் பலரென முப்பால் உயர்திணை   (நன்னூல் : 262)

(சான்று)

ஒன்றன்பால், பலவின்பால் என்பன அஃறிணைக்கு உரியன.

மயில்  -ஒன்றன்பால்

கற்கள்-பலவின்பால்

ஒன்றே பலவென்று இருபாற்று அஃறிணை   (நன்னூல் : 263)

பால் வழுநிலை

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து பால்களுக்கும்  உரிய பெயர்கள் எழுவாயாகவோ வினை நிகழ்த்தும் பொருளாகவோ வரும்பொழுது, இவற்றிற்கான வினை அவற்றிற்கு உரிய பாலில் அமையாமல் வேறு பாலில் அமைதல் வழுவாகும்.

(சான்று)

அவன் ஓடினாள்

அவள் பாடினான்

அறிஞர் வந்தான்

அது தாவின

அவை பறந்தது

  1. முதல் தொடரில் ‘அவன்’ என்பது ஆண்பால்; ‘ஓடினாள்’ என்னும் வினைமுற்றுப் பெண்பால்.
  2. இரண்டாம் தொடரில் ‘அவள்’ என்னும் சொல் பெண்பால்; ‘பாடினான்’ என்னும் வினைமுற்று ஆண்பால்.
  3. மூன்றாம் தொடரில் ‘அறிஞர்’ என்னும் சொல் பலர்பால்; ‘வந்தான்’ என்னும் வினைமுற்று ஆண்பால்.
  4. நான்காம் தொடரில் ‘அது’ என்னும் சொல் ஒன்றன்பால்; ‘தாவின’ என்னும் சொல் பலவின்பால் வினைமுற்று.
  5. ஐந்தாம் தொடரில் ‘அவை’ என்னும் சொல் பலவின்பால்; ‘பறந்தது’ என்னும் சொல் ஒன்றன்பால் வினைமுற்று.

இந்த ஐந்து தொடர்களிலும் எழுவாய் ஒரு பாலிலும் அதற்குரிய வினைமுற்று வேறு பாலிலும் வந்துள்ளன. இதனால் இவ்வைந்து தொடர்களும் இலக்கண முறைக்கு மாறான பிழையான தொடர்களாகும். இவையாவும் வழுவான தொடர்கள்.

(மேலும் சான்று)

  1. மாறன் வந்தாள் (ஆண்பால் எழுவாய் பெண்பால் பயனிலை கொண்டு  முடிந்ததால் வழுவாயிற்று)
  2. தேன்மொழி வந்தான். (பெண்பால் எழுவாய் ஆண்பால் பயனிலை கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
  3. மாணவன் தந்தார். (ஆண்பால் எழுவாய் பலர்பால் பயனிலை கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
  4. மாடுகள் மேய்ந்தது. (பலவின் பால் எழுவாய் ஒன்றன் பால் பயனிலை கொண்டு  முடிந்ததால் வழுவாயிற்று.
  5. ஆடு மேய்ந்தன. (ஒன்றன் பால் எழுவாய் பலவின் பால் பயனிலை கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

3. இடம்

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறிப்பிடுவது தன்மை. தனக்கு முன்னால் உள்ள ஒருவரையோ, பலரையோ குறிப்பிடுவது முன்னிலை, தன்மைக்கும் முன்னிலைக்கும் அயலாக உள்ளவற்றைக் குறிப்பிடுவது படர்க்கை.

தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகை இடமும் ஒன்றோடொன்று மயங்கி வருவது இடவழுவாகும்.

(சான்று)

நான், நாம்-தன்மை

நீ, நீங்கள்-முன்னிலை

அவன், அவள், அவர், அது, அவை-படர்க்கை

தன்மை முன்னிலை படர்க்கை மூவிடனே   (நன்னூல் : 266)

இட வழுநிலை

தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களில் ஒன்றின் இடத்திற்கு உரிய எழுவாய், சொற்றொடரில் இடம்பெறும் போது பயனிலை அதற்குரியதாக அமையாமல் வேறு இடத்திற்கு உரியதாக அமையுமானால் வழுவாகும்.

(சான்று)

நான் பேசினான்

நீ பேசினேன்

அவன் பேசினாய்

  1. முதல் தொடரில் ‘நான்’ என்பது தன்மை இடத்திற்குரிய எழுவாய். ‘பேசினான்’ என்பது படர்க்கை இடத்துக்கு உரிய வினைமுற்று.
  2. இரண்டாம் தொடரில் ‘நீ’ என்பது முன்னிலை இடத்திற்குரிய எழுவாய். ‘பேசினான்’ என்பது தன்மை இடத்திற்குரிய வினைமுற்று.
  3. மூன்றாம் தொடரில் ‘அவன்’ என்பது படர்க்கை இடத்துக்குரிய எழுவாய், ‘பேசினாய்’ என்பது முன்னிலை இடத்துக்கு உரிய வினைமுற்று.

இவ்வாறு ஓர் இடத்திற்குரிய எழுவாய்க்கு வேறு இடத்திற்குரிய பயனிலை வருவது வழுவாகும்.

( மேலும் சான்று)

1. நான் உண்டாய். (தன்மை ஒருமைப்பெயர் முன்னிலைப் பயனிலையைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

2.நீங்கள் உண்டோம். (முன்னிலை பன்மைப்பெயர் தன்மைப் பயனிலையைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

3.அவர்கள் உண்டீர்கள்.(படர்க்கை பன்மைப்பெயர் முன்னிலைப் பயனிலையைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

4. காலம்

காலம் மூன்று வகைப்படும். அவை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பன.

மூவகைக் காலமும் ஒன்றோடொன்று மயங்கி வருவது கால வழுவாகும்.

இறப்பெதிர்வு நிகழ்வெனக் காலம் மூன்றே    (நன்னூல் : 382)

கால வழுநிலை

ஒரு காலத்திற்குரிய வினையை வேறு காலத்தில் கூறுவது வழுவாகும்.

(சான்று)

நேற்று சாப்பிடுவான்

இப்பொழுது சாப்பிட்டான்

நாளை சாப்பிடுகிறான்

  1. முதல் தொடரில் ‘நேற்று’ என்னும் சொல் கடந்த காலத்தைக் குறிக்கிறது. ‘சாப்பிடுவான்’ என்பது எதிர்கால வினைமுற்று.
  2. இரண்டாவது தொடரில் ‘இப்பொழுது’ என்னும் சொல் நிகழ்காலத்தைக் குறிக்கிறது. ‘சாப்பிட்டான்’ என்பது இறந்தகால வினைமுற்று.
  3. மூன்றாவது தொடரில் ‘நாளை’ என்னும் சொல் எதிர் காலத்தைக் குறிக்கிறது. ‘சாப்பிடுகிறான்’ என்பது நிகழ்கால வினைமுற்று.

இவ்வாறு இந்த மூன்று தொடர்கள் ஒவ்வொன்றிலும் இடம்பெற்றுள்ள இரண்டு சொற்களும் ஒரே காலத்தில் இல்லாமல் வெவ்வேறு காலத்தில் உள்ளமை கால வழுவாகும்.

( மேலும் சான்று)

1. நான் நேற்று வருவேன். (நேற்று என்னும் இறந்தகாலப் பெயர் வருவேன் என்னும் எதிர்கால வினைமுற்றைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

 2. இன்று வருவேன். (இன்று என்னும் நிகழ்காலப் பெயர் வருவேன் என்னும் எதிர்கால வினைமுற்றைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

3. நாளை வந்தேன்.('நாளை என்னும் எதிர்காலப் பெயர் வந்தேன் என்னும் எதிர்கால வினைமுற்றைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

5. வினா

அறுவகை வினாக்கள் மயங்கி வருவது வினாவழுவாகும்.

 வினாவின் வகைகள்,

1) அறிவினா

2) அறியாவினா

3) ஐயவினா

4) கொளல்வினா

5) கொடைவினா

6) ஏவல்வினா

என்பனவாகும்.

வினா வழுநிலை

வினாவின் எழுவாயாக வரும்பெயர்களின் திணை, பால் ஆகியனவும் வினாப் பயனிலைகளில் வரும் திணை, பால் ஆகியனவும் மாறி வருதல் வழுவாகும்.

(சான்று)

திணைவழு வினாக்கள்

அங்கே கிடப்பது கட்டையா? மனிதனா?

பால்வழு வினாக்கள்

அங்கே வருகிறவர் ஆணா? பெண்ணா?

மேலே கூறிய முதல் எடுத்துக்காட்டில் ‘கிடப்பது’ என்னும் அஃறிணைப் பெயர் எழுவாய்க்கு, வினாப் பயனிலையாக வருவன ‘கட்டை’ என்னும் அஃறிணைப் பெயரும் ‘மனிதன்’ என்னும் உயர்திணைப் பெயருமாகும்.

இரண்டாவது பிரிவு எடுத்துக்காட்டில் ‘வருகிறவர்’ என்னும் ஆண்பால் பெயர் எழுவாய்க்கு வினாப் பயனிலையாக வருவன ‘ஆண்’ என்னும் ஆண்பால் பெயரும் ‘பெண்’ என்னும் பெண்பால் பெயருமாகும்.

இவ்வாறு வினாத் தொடரின் எழுவாய்க்கு உரிய திணை, பால் ஆகியவற்றிற்கு மாறாக வினாப் பயனிலைகள் வருமானால் அது வினா வழுவாகும்.

இதேபோல் ஒரு வினாத் தொடரில் முதலும் சினையும் கலந்து (மயங்கி) வருதல் கூடாது. மயங்கி வருமானால் வழுவாகும்.

(சான்று)

என்னைக் கண்டது கண்ணோ? கவிஞனோ?

இத்தொடரில் கவிஞன் என்பது முதல் குறித்த பெயராகும். கண் என்பது அம்முதலின் சினையாகும். இவ்விரண்டையும்  ஒரு வினாத் தொடரில் சேர்த்து வினவுவது வழுவாகும்.

வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல் (நன்னூல் : 387)

(சான்று)

கறக்கின்ற மாடு பசுவோ எருதோ?. (கறக்கின்ற என்னும் குறிப்புச்சொல்லால் கறக்கின்ற மாடு பசு என்பது உறுதியாகிய பின்னும் பசுவோ எருதோ? என ஐயம் கொண்டு வினவுவது வழுவாகும். மேலும் எருது கறப்பதில்லை எனவே ஐயவினா வினவியது வழுவாகும் )

6. விடை

விடை எட்டு வகைப்படும்.

(1) சுட்டுவிடை

(2) மறைவிடை

(3) நேர்விடை

(4) ஏவல்விடை

(5) வினாஎதிர்வினாதல் விடை

(6) உற்றதுஉரைத்தல்விடை

(7) உறுவதுகூறல்விடை

(8) ஏவல்விடை

வினாவிற்குப் பொருந்தா விடை பகர்தல் விடைவழுவாகும். இதனைச் செப்புவழு என்றும் கூறுவர்.

விடை வழுநிலை

விடையில் இடம்பெறும் எழுவாயின் திணையும் பாலும் மாறுபட்டு வரும் விடைத்தொடர்கள் விடை வழுநிலைத் தொடர்கள் எனப்படும்.

(சான்று)

இது மகள்

இது பறவைகள்

  1. முதல் தொடரில் எழுவாய் ‘இது’ அஃறிணைச் சுட்டுப் பெயர்; ‘மகள்’ என்னும் பெயர்ப் பயனிலை உயர்திணைக்கு உரியதாகும்.
  2. இரண்டாம் தொடரின் எழுவாய் ‘இது’ ஒன்றன்பால்; ‘பறவைகள்’ என்னும் பெயர்ப் பயனிலை பலவின்பால்.

இவ்வாறு ஒரு விடைத் தொடரில் திணை மயங்கி வருவதும், பால் மயங்கி வருவதும் விடை வழுநிலை ஆகும்.

இதேபோல் ஒரு விடைத் தொடரில் முதலும் சினையும் கலந்து (மயங்கி) வருவதும் கூடாது. மயங்கி வருமானால் வழுவாகும்.

(சான்று)

மரம் முறிந்தது; கிளை முறிந்தது.

இத்தொடரில் மரம் முறிந்ததோ? மரத்தின் கிளை முறிந்ததோ? என்னும் ஐயம் எழுவதால் இவ்வாறு கூறுதல் விடை வழுவாகும்.

வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல் (நன்னூல் : 387)

(சான்று)

 பருப்பு வாங்கி வருவாயா?. என்னும் வினாவிற்குச் செருப்பு விலை அதிகம் என்று விடை பகர்தல் விடைவழுவாகும்.

7. மரபு

அறிஞர் ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு கூறினரோ அப்பொருளை அச்சொல்லால் அவர் வழங்கியவாறு பயன்படுத்துவதே மரபு எனப்படும்.  மரபுத்தொடர்கள் மயங்கி வருவது மரபு வழுவாகும்.

(சான்று)

நாய் குரைத்தது

மரபு வழுநிலை

அறிஞர் ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினர் என அறியாமல், அதற்கு மாறுபட வழங்குவது மரபு வழுவாகும்.

(சான்று)

நாய் பேசியது

பசுவின் பிள்ளை

நாய் எழுப்பும் ஒலியை அறிஞர் குரைத்தல் என்பது மரபு. அதேபோல் மனிதர் கருத்து அறிவித்தலைப் பேசுதல் என்பது மரபு. முதல் தொடர் இவ்விரு மரபுக்கும் மாறுபட்டு அமைந்துள்ளது. நாய் பேசியது என்பது மரபு வழு.

பசு ஈன்றதைக் கன்று என்பது மரபு. மக்களின் குழந்தையைப் பிள்ளை என்பதும் மரபு. இவற்றிற்கு மாறாகப் பசுவின் பிள்ளை என்பது வழக்கன்று. மரபு வழுவாகும்.

( மேலும் சான்று)

யானை இடையன்

ஆட்டுப்பாகன்

யானைப்பாகன், ஆட்டிடையன் என்பதே மரபு.

1. குயில் குளறும். (குயில் கூவும் என்பதே சரியான ஒலிமரபுத்தொடராகும். குளறும் என்று வந்ததால் வழுவாயிற்று)

2. தென்னை இலை. (தென்னை ஓலை என்பதே சரியான சினைமரபுத் தொடராகும். இலை என்று வந்ததால் மரபு வழுவாயிற்று.)

 இக்கட்டுரையில் வழு என்றால் என்ன என்பதும் பற்றியும் அதன் வகைகளையும் சான்றுகளோடு கண்டோம்.

 மேலும் தொடர்வோம்………,

0 Response to "வழுநிலையும் அதன் வகைகளும்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel