சிறப்புரையே வாழ்த்துரையாக, ஆலோசனையுரையாக

Trending

Breaking News
Loading...

சிறப்புரையே வாழ்த்துரையாக, ஆலோசனையுரையாக

சிறப்புரையே வாழ்த்துரையாக, ஆலோசனையுரையாக




தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு (NMMS) மற்றும் தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத்தேர்வு (TRUST)  ஆசிரியர்களுக்கானத் தொடர் இணைய வழிப் பயிற்சி   துவக்கவிழா இணையவழியாக  23.08.2020 மாலை 6 மணிக்குத் தொடங்கியது. வரவேற்புரையை ஆசிரியர் கோ. செந்தில்குமார் அவர்கள் ஆற்றினார். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் அவர்கள் தான் மாணவர்களுக்குக் கொடுத்த பயிற்சி குறித்து விரிவாக கூறினார்.

பெற்றோர்கள், மாணவர்களின் ஒத்துழைப்பால் அதிகமான மாணவர்கள் வெற்றி பெற்ற செய்தியினை வெளிப்படுத்தினார். ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்ற தகவலையும் எடுத்துரைத்தார். நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைஇயக்குநர்  முனைவர் நா. அருள்முருகன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மாணவருக்கான இத்தகைய போட்டித்தேர்வு குறித்தான பயிற்சியைத்  மாநிலத்தில் மற்றும் திருச்சியில் ஆங்காங்கே உதிரியாக செயல்படும்   முன்னோடியாக இருக்கும் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு பாராட்டித் தன்னுடைய உரையைத் தொடங்கினார்.

இத்தேர்வில் மாணவர்களைத் தேர்ச்சிபெற வைக்கும்வகையில் இலவசமாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள ஆசிரிய நண்பர்களுக்குத் தன்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் முதலில் குறிப்பிட்டார். 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தத் தேர்வு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் செயல்பாடு வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார். ஆங்காங்கே உதிரிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இத்தகைய முயற்சியில் ஈடுபட்டது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

 மாணவர்களுக்குத் திறன் குறைபாடு இருக்கிறது என்று சொல்வது தவறு என்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தன்னுடைய மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டார். எந்த வகுப்பிற்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் இருக்கின்றன என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் இது குறித்தான விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கும் வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இத்தேர்வின் வினாத்தாள் வடிவமைப்பு, தேர்வுமுறை விழிப்புணர்வு போன்றவற்றை அனைவரும் பெற வேண்டும் என்றும் கூறினார். ஆண்டுதோறும் இத்தேர்வுகளை ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுவதாகவும் அதில் 6695 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் கூறினார். நான்கு, ஐந்து லட்சம் மாணவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கின்றனர். ஆனால் இத்தேர்வினை ஒன்றரை லட்சம் மாணவர்கள் மட்டுமே பதிவு செய்து எழுதுகின்றனர். அதுவும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலிலும் சிலத் தலைமை ஆசிரியர்களின்  தூண்டுதலாலும் விருப்பத்துடனும் அல்லது விருப்பமின்றியோ தெரிந்தோ தெரியாமலோ மாணவர்கள் பதிவு செய்து எழுதுகின்றனர்.

 இத்தேர்வினை அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும். அதற்கான தகுதி அவர்களுக்கு இருக்கின்றது. எனவே இது குறித்தான விழிப்புணர்வு ன்று தேவைப்படுகின்றது என்றும் பேசினார். மாவட்டத்தில் 50 மாணவர்கள் 50 மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்றும் இன்னும் கூடுதல் அக்கறையுடன் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.  எந்த மாணவரும் பிறக்கும்போது திறனுடையவர்களாகவே பிறக்கின்றனர். எனவே அவர்களின்  திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும்.  சான்றிதழ் அறிவு என்பது வேறு புத்திசாலித்தனம் என்பது வேறு என்றார். ஆரம்பத்தில் யானை 25 என்ற கணக்கினைச் சொல்லி ஆடு 25 என்று கணக்கினைச் சொல்லி இறுதியில் இரண்டுமே நூறு நூறு வரவேண்டும் என்ற அந்தக் கணக்கு முறையை எடுத்துக் கூறினார்.

பிறகு தாத்தா பாட்டி கணக்குப் போட்ட விதத்தையும் அதற்கான முறையையும் எடுத்துரைத்தார்.  நமக்குக் கற்றுத்தந்த ஆசிரியர்கள் குறித்தும் தொடக்கத்தில் மனக்கணக்கு போட்டுவிட்டு, பிறகே பாடத்திற்கு வந்த விதத்தையும் நினைவுப்படுத்தினார்.

அம்மா புடவையை மடிக்க முடியாது, அப்பா பணத்தை எண்ண முடியாது என்றும் இடம் சார்ந்த விடுகதைகள் குறித்தும் கூறினார்.  யோசிக்க வைப்பதாகவும் சிந்திக்க வைப்பதாகவும் கல்விமுறை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ப்ளூ பிரிண்ட், புக் பேக் வினாக்கள் என்று சொல்லிக்கொண்டு அதை மட்டுமே டிப்பது என்ற சூழ்நிலை வந்துவிட்டதாகவும் படிக்கும்முறை சுருங்கியதாகவும் இருப்பதாகவும் கூறினார்.  

பாடநூலில்  அல்லாத வினாக்கள் வந்தால் அது அவுட் ஆப் சிலபஸ் என்று கூறுகின்ற ஒரு தவறான போக்கு இருப்பதை  இணை இயக்குநர் குறிப்பிட்டார். நாம் இப்படி ஒரு தவறான முறையை உருவாக்கி விட்டோமே என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறினார். கவனிக்கும் திறன், சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் திறன் என அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும், மாணவர்களின் திறனை வெளிப்படுத்த  வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் திறனைப் பயிற்சியின் மூலமே நாம் வெளிக்கொண்டு வர முடியும் என்றார். புதிய பாட நூல்கள் வெளிவந்துள்ளன அதனை நாம் எத்தகைய முறையில் மாணவர்களுக்குக் கொண்டு செல்கின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிந்திக்க வைப்பதாக இந்தக் கல்வி முறையானது இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 வினாத்தாள் அமைப்பு எப்படி இருக்கின்றது என்பதையும் வினாத்தாள் அமைப்பு முறை குறித்தும் வடிவமைப்பு குறித்தும் விளக்கினார். குறிப்பாக செட் எக்ஸாம் டிரஸ்ட் தேர்வு வினாத்தாள் முறை குறித்தும் விளக்கினார். வினாக்களுக்கான  விடைகள் எவையாக இருக்க வேண்டும் என்றும் வை விடையாக இருக்கக்கூடாது என்றும் தீர்மானிக்கின்ற திறனை மாணவர்கள் பெற வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.  குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவந்த  சிவக்குமார் அவர்களைக் குறிப்பிட்டு அவரது பயிற்சி முறையினையும் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைத்த செய்தியையும் சிறப்பாக பதிவு செய்தார்.  செந்தில்குமார் அவர்கள் ஆற்றிய திறமையையும் வெளிப்படுத்தினார். அவர்களுக்குத் தன்னுடைய பாராட்டுகளையும் கூறினார்.

10 லட்சம் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் படிக்கின்றனர் என்றும் அப்படியெனில் வருடத்திற்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனர் என்ற தகவலைக் குறிப்பிட்டு அவர்கள் அனைவருமே திறன் பெற்ற குழந்தைகளாக பள்ளியைவிட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார்.  இந்தக் குழு அளிக்கும் முயற்சி, தயாரிப்புகள் முழு பரிமாணத்தை எட்ட வேண்டும் என்றும் கூறினார். ஆந்திரா, கேரளாவில் NMMS,  செட், நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர் என்று குறிப்பிட்டு அதற்கான முயற்சியை நாமும் எடுக்க வேண்டும் என்ற நிலையை வெளிப்படுத்தி உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

சந்தேகங்களைத் தீர்த்து வைக்க அவர் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் தான் அதிகமான போட்டித்தேர்வில் பங்கெடுத்ததையும்  குறிப்பிட்டு போட்டித்தேர்வின்  அவசியத்தையும் சொல்லி அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். 

இத்தகைய தேர்வுகள் தற்போது எழுத்துத் தேர்வாக மட்டுமே இருக்கின்றன.  அது வருங்காலத்தில் (ஆன்லைன்) இணைய வழித் தேர்வாக மாற்றம் பெறும்.  எனவே இப்போதே இணையவழியில்  எப்படி எழுத வேண்டும் என்ற ஒரு புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறினார்.   இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற ஆசிரியர்களின் எண்ணம் நிறைவேறட்டும் என்றுகூறி அவரது  உரையை முடித்தார். மிகச்சிறப்பான வழிகாட்டுதலையும் ஆசிரியர் மாணவர் புரிதலையும் ஏற்படுத்தியதாக இணைஇயக்குநர் அவர்களின் சிறப்புரை வாழ்த்துரையாகவும் ஆலோசனை உரையாகவும் அமைந்திருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.  

மயிலம் இளமுருகு
23.08.2020 இரவு 8 மணி


2 Responses to "சிறப்புரையே வாழ்த்துரையாக, ஆலோசனையுரையாக"

  1. Sir very very nice and cute wors all your comments were tonic excellent keep it up

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.... மகிழ்ச்சி

      Delete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel